கவியோகி சுத்தானந்த பாரதியார் காட்டும் தமிழ்  உணர்ச்சியும், தமிழ் வளர்ச்சியும்

This entry is part 3 of 6 in the series 18 மே 2025

முனைவர் மு.பழனியப்பன்

தமிழ்த்துறைத் தலைவர் 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 

திருவாடானை

தமிழ் என்னும் சொல் மொழியை மட்டும் குறிப்பதன்று. தமிழ் என்னும் சொல்  மக்களின் வாழ்க்கை,  பண்பாடு, மொழி, வரலாறு, நாகரீகம், கலை, இலக்கியம், அறிவியல், வணிகம்  ஆகிய அனைத்ததையும் உள்ளடக்கிய  இன அடையாளக் குறியீடாகும்.  தமிழ் உணர்ச்சி என்பதும் தமிழ்  வளர்ச்சி என்பதும்  மொழியின் தன்மையையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டது அன்று. தமிழ் இனத்தின் அடையாளங்களை உள்ளடக்கியது. 

தமிழ் மொழி வளரவும், ஓங்கவும் பல்வேறு சிந்தனைகள்  எழுந்த வண்ணம் உள்ளன. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டாம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழ் உணர்ச்சி என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றினை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை இராமச்சந்திரபுரத்தில் இருந்த அன்பு நிலையம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் வரலாறு, உணர்ச்சி, வளர்ச்சி பற்றிய பல அரிய சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னதான தமிழ்  நிலையை இந்நூல் எடுத்துரைக்கின்றது. பெரும்பாலும் அதே தமிழ் உணர்வு நிலைதான் தற்போது உள்ளது என்பதை நூலை வாசிக்கையில் உணரமுடிகின்றது. 

சிவகங்கையைப் பிறப்பிடமாகவும், சிவகங்கையை அடுத்த சோழபுரத்தைத் தனது நிறைவிடமாகவும் கொண்டு வாழ்ந்த துறவி ஆவார். இவர் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, வடமொழி அறிந்த பன்மொழி வித்தகரும் ஆவார். இவர் பல்வகை இலக்கிய வகைமைகளைப் படைத்தவர். இவரின் சிந்தனைகளைச் சிவகங்கை சார்ந்த சிந்தனைகளாகக் கொண்டு அவற்றைத் தமிழுலகச் சிந்தனைகளாக ஏற்பது சிறப்பாகும். 

தமிழ் உணர்ச்சி

தமிழின்  வளர்ச்சியே தமிழரின் வளர்ச்சி  என்று உரைக்கிறார் கவியோகி சுத்தானந்த பாரதிாயர்.  அவரின் தமிழ் உணர்வு கொள்ளச் செய்யும் கருத்துரைகள் கவனிக்கத்தக்கன. 

   ‘‘நான் தமிழன். தமிழ் எனது தாய்மொழி. நான் தமிழுக்கே, தமிழர் உயர்விற்கே, தமிழ்நாட்டின்  முன்னேற்றத்திற்கே வாழ்வேன். நான் எதைச் செய்தாலும்  தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய இவை பெருமை பெறவே செய்வேன். தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழருக்கும் கேடு சூழும் எதனையும் துணிந்தெதிர்த்து வெல்லுவேன்.  என்னுயிரை மறந்தாலும்  தமிழை மறவேன்.  என்னுடைலைச் செகுத்தாலும் தமிழைக் கைவிடேன். எனது தமிழ்‌ மொழிதான்‌ உலகில் முதன்முதல்‌ தோன்றிய முதுமொழி. தமிழ்‌ மொழியே இந்நாடெல்லாம்‌ பரவி விரிந்த பழமொழி. காலக்கோளால்‌ எமது தமிழரசி இன்று மூலையில்‌ ஒதுக்குண்டு, பிறமொழிகளால்‌ இடிப்புண்டு தனது அரியணையிழந்து, வெறுந்தரையில்‌ சிறுமையுற்றுக்‌ கிடக்கிறாள்‌. எனது அன்னையை மீண்டும்‌ மொழியரசியாக அரியணையேற்றவே நான்‌ உயிர்‌ வாழ்வேன்‌. என்னுயிர்‌ உள்ளமட்டும்‌ ஒவ்வொரு நாளும்‌, தமிழ்‌ முன்னேற்‌றத்திற்காகவும்‌, தமிழர் தலை நிமிர்ந்து உலகில்‌ ஓங்கவும்‌, இரண்டுமணி நேரமாவது ஏதாயினும்‌ பயனுள்ள ஒரு தொண்டு செய்வேன்‌. அத்‌தொண்டு செய்தாலன்றி, நான்‌ உணவு கொள்ளேன்‌. காலையும்‌ மாலையும்‌ எனது தமிழ்‌ நாட்டைத்‌ தமிழாலயமாகக்‌ கருதித்‌ தமிழ்‌ வாழவே திருவருளை வணங்குவேன்‌.. எனது தமிழகத்திற்‌ பிறந்த எல்லோரும்‌, எங்கிருப்‌பினும்‌ என்னவரே. சாதி, மத வேறுபாடுகளை நான்‌ பாராட்டமாட்டேன்‌. *நீயார்‌  என்றால்‌, அந்தச்‌ சாதி, இந்தச்‌ சாதி, அந்த மதம்‌, இந்தமதம்‌ என்னாமல் ‘‘ நான் தமிழன்‌!’’ என்றே பெருமையுடன்‌ சொல்லுவேன்‌. தமிழன்‌ எவனையும்‌ நான்‌ வெறுக்க மாட்டேன்‌. என்னை ஒரு தமிழன்‌ வெறுத்தாலும்‌, அவனை அன்புரை கூறி மாற்றுவேன்‌. எனது தமிழ்நாட்டில்‌ தோன்றிய நாவலரையும்‌, பாவலரையும் அருளாளரையும்‌, பெரியாரையும்‌ நான்‌ வணக்கமுடன்‌ போற்றுவேன்‌. ‘‘ எந்தாய்‌ வாழ்க!’’ என்ற மந்திரத்தை எப்போதும்‌ நினைப்பேன்‌. என்னை எதிர்த்த அன்னியருக்குத்‌ தமிழின்‌ பெருமையை, தமிழ்ப்‌ பெரியாரின்‌ சிறப்பை, தமிழ்‌ நாட்டின்‌ மாண்பை விளக்குவேன்‌. இன்றியமையாத சமயமன்‌றி, மற்றெப்போதும்‌ தமிழிலேயே பேசுவேன்‌,  எழுது வேன்‌… தமிழன்‌ பிற மொழியிற்‌ பேசினாலும்‌ நான்‌ தமிழிலேயே பதிற்‌ சொல்லுவேன்‌. தமிழ்ப்‌ பெரியார்‌ செய்யும்‌ அரும்பணிகளுக்கு என்னால்‌ ஆன உதவி செய்வேன்‌. தமிழன்‌ முன்னேற்றத்திற்காகத்‌ தோன்றிய எல்லா நிலையங்களையும்‌ நான்‌ மகிழ்வுடன்‌ போற்றுவேன்‌. தமிழர்‌ ஒற்றுமைக்காக நான்‌ வேண்டிய பணி புரிவேன்‌. ‘‘எந்தாய்‌ வாழ்க, எந்தாய்‌ வாழ்க.” இவ்வுறுதி தமிழன்‌ உயிர்ப்பாகுக’’ என்று தமிழன் பெறவேண்டிய தமிழ் உணர்வினைக் காட்டுகிறார் சுத்தானந்த பாரதியார். தமிழர் ஒவ்வொருவரும் இதனை ஏற்று உறுதி மொழியாகக் கைக்கொள்ளுதல் வேண்டும். இது எல்லாக் காலத்திற்கும் தேவையான தமிழ் உணர்ச்சிக் கொள்கையாகும். 

தமிழ் வளர்ச்சி

கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழ் உணர்ச்சிக்கான இருபத்தாறு வழிகளைத் தமிழ் உணர்ச்சி என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். அவற்றைத் திட்பமாக அறிந்தால் உணர்ந்தால் அவற்றின்படி நடந்தால்  தமிழ் வளர்ச்சி உறுதியாக ஏற்படும். 

தமிழில் பேசுவோம், எழுதுவோம்

தமிழன் தமிழனுடன் தமிழில் பேசுக, தமிழனுக்குத் தமிழன் தமிழில் கடிதம் எழுதுக, பிறமொழியாளருடன் பேசுகையில் தமிழின் பெருமையைச் சொல்லுக.  கொச்சைத் தமிழில் பேசவேண்டாம். தமிழைப் பிழையின்றிப் பேசிப் பயில்க!  பிறமொழிகளில் பேசும்போதும் எழுதும் போதும்  தமிழ்ப் பெரியார் திருமொழிகளை மேற்கோள் காட்டி உரைத்து விளக்குக. பேச்சு நடை எழுத்து நடை பேதமின்றி ஒன்றாக வேண்டும். ஆழ்ந்த கருத்து, இனிய சொற்கள், தெளிந்த நடை உள்ள தமிழே வெற்றிபெறும். 

தமிழ் இலக்கணக் கல்வி

காலத்திற்கேற்ற விதிகளைக் கூட்டி இனிய தமிழ் இலக்கணம் சிறுவர்களும் பயிலும் வகையில் எழுதப்பட வேண்டும். (இனிய தமிழ் இலக்கணம் என்ற பெயரில்  சுத்தானந்த பாரதியார் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த சிந்தனை இவர் காலத்திலேயே இவராலேயே நிறைவேறியுள்ளது. இது மறுபதிப்பாக வெளிவரவேண்டும்) . தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை  ஐரோப்பிய செய்யுளிலக்கணம் போன்று தெளிவாக எழுத வேண்டும். 

தமிழிசை வளர்ச்சி

புதிய தமிழிசை இலக்கணம்  வகுக்க வேண்டும். ஐரோப்பிய சங்கீதத்தில் வழங்குவதுபோல இசைக்குறிகள் தமிழில் உண்டாக வேண்டும். 

அகராதியியல் 

தமிழில் இலட்சம் வார்த்தைகளுக்கு பொருள் விளக்கும் அகராதிகளே உள்ளன.  வரலாறு, தரைநூல், வான நூல் , பௌதிகம், இரசாயனம், மருத்துவம், செடிநூல், பயிர் நூல், உயிர் நூல், உடல் நூல்  முதலிய பலவகையான இயற்கைச் சொற்களைப் படப் பொலிவுடன்  விளக்கும் அகராதிகள் வெளியிடப்பெற வேண்டும். தமிழர்  நடத்தும் நாடகங்களில்  இசை விருந்துகளில் தமிழ்ப்பாடல்களே முழங்க வேண்டும். நாடகங்களிலும், ஒலிப்படங்களிலும்  தமிழர் வரலாறும், நாகரிகமும், தமிழின் பெருமையும், தமிழருக்குப் புதிய உணர்வைத் தரும்  காட்சிகளும் துலங்க வேண்டும்.  இசை, சிற்பம், சித்திரம், கூத்து நாடகம் முதலிய நுண்கலைகளை வளர்க்கும் வண்ணம்  தமிழில் புதிய கலை நூல்கள் தோன்ற வேண்டும். 

புதியன படைத்தல் 

பிறநாட்டார் மெச்சிக் கற்கும்படியான காவியங்களும், கதைகளும் நாடகங்களும் தமிழில் தோன்ற வேண்டும். நம்முடன் உள்ள நாவலரையும், பாவலரையும், அருட்கவிகளையும்  ‘அதை யெழுதுங்கள், இதை யெழுதுங்கள்’’ என்று இடைவிடாது, தூண்டி, அவர்கள் மூலம்  தமிழிலக்கியங்களைப் புதிது புதிதாகச் செய்து குவிக்கவேண்டும்.  தக்க புலவர்கள் யாத்த நூல்களை அரங்கேற்றி வெகுமதி நல்க வேண்டும். தமிழறிஞர் சங்கம் ஒப்புக் கொண்ட நூல்களையே அரங்கேற்றி அச்சிட்டுப் பல  மொழிகளிலும் பெயர்த்து உலகளாவச் செய்யவேண்டும்.  பிற மொழியிற் சிறந்த புலவர் நூல்களை எளிய நடைத் தமிழில்  மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். மொழிபெயர்ப்புக்கென்றே சில தமிழன்பர் உழைக்க வேண்டும்.  எளிய நடையில் விரிவான தமிழர் வரலாறு ஒன்று தொகுக்கப்பட வேண்டும். 

ஆங்கிலக் கல்வி

ஒவ்வொரு தமிழனும் ஆங்கிலம் பயிலத்தான் வேண்டும்.  தமிழில் விளக்கமுடியாத சொற்களை ஆங்கிலத்திலேயே வழங்குதல் நலம். பல கலைப் புலவரின் கூட்டுறவோடு, காலத்திற்கேற்ற கலை நூல்களை உண்டாக்கல் மிகவும்  பெரிய வேலையாகும். அவ்வாறு உண்டாக்கிய சாத்திரங்களையே தமிழ்நாட்டு மாணவர்கள் பயில வேண்டும்.  இத்துறையில் வெற்றி பெற்றால்  தமிழ் ஆங்கிலம் போல விளங்கலாம். வெளிநாடுகள் சென்று பயனுள்ள தொழில் முயற்சிகளைத் தமிழர் பயின்று இங்கே நடத்த வேண்டும். 

தமிழ் எழுத்துக்கள்

உலக எழுத்துக்களில் தமிழ்  மிகவும் எளிதாக எழுதக் கூடியது.  ஹிந்துஸ்தானி, ஆங்கிலம் முதலிய  பிற மொழிகளையும்  தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுத வழியுள்ளது. இப்போதுள்ள எழுத்துக்களுடன் ஆங்காங்கு  புள்ளியும் கோடும் சேர்த்து உலக மொழிகளையெல்லாம்  தமிழில் எழுதலாம்.  தமிழ் மூலமே பள்ளிப் பாடங்கள் நடக்க வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள அரசியல் சபைகளிலும், கச்சேரிகளிலும், சட்டசபைகளிலும் தமிழிலேயே நடவடிக்கைகள் நிகழவேண்டும். தமிழ்க் கலையை உலகிற் பரப்ப தமிழ்ப் பத்திரிகைகள் உழைக்க வேண்டும். தமிழ்ச்சுடர் என்ற ஒரு மாசிகை படப்பொலிவுடன்  ’’மாடன் ரிவ்யூ’’ போல வெளிவரல் வேண்டும். 

தமிழ்க் கல்வி

  • 3 வயது முதல் ஆறு வயது வரை  -குழந்தைச் சாலை அமைத்துக் கல்வி வழங்கவேண்டும்
  • 6 வயது முதல் 12 வயது வரை – தமிழ்க்கணக்கு, சரித்திரம், செடி, உயிர், உடல் நூல் கல்வி வழங்கவேண்டும்
  • 12 வயது முதல் 15 வயதுவரை தமிழறிவு, ஆங்கிலம், இந்துஸ்தானி, கணிதம், அறிவியல்கல்வி      வழங்கவேண்டும்.
  • 15 வயது முதல் 18 வயது வரை தொழில்கல்வி, இராணுவக் கல்வி வழங்க வேண்டும். 
  • 18 வயது முதல் 20 வயது வரை கிராமங்களில் பொதுநலப்பணி வழங்க வேண்டும்.

அதன்பிறகு  இலக்கியப் புலவர்,தொழிற்புலவர், அருங்கலைப் புலவர்  பட்டங்கள் பெறவேண்டும் என்றும் அதன் பிறகே இல்லறம் என்று  ஒரு கல்வித்திட்டத்தைச் சுத்தானந்த பாரதியார் அறிவிக்கிறார். 

தொழில் வளம்

நாட்டில் ஓர் அங்குலம்கூட தரிசாக இல்லாது பொன்னும் பசுமையும் குலுங்கச் செய்ய வேண்டும். தமிழர் செல்வம் தமிழர் முன்னேற்றத்திற்குப் பயனாக வேண்டும்.  ஒரு தமிழனும் பசியால் வருந்துதல் கூடாது. தமிழர் பிற நாடுகள் சென்று கூலிகள் அடிமைகள் போல வாழும் இழிவை நீக்கவேண்டும். உப்பு முதல் கற்பூரம் வரை தமிழ்நாட்டில்  உண்டாக்கப்பட வேண்டும். 

தமிழர் படை

தமிழர் படை  ஒன்று ஊருக்கு ஊர்  இருக்க வேண்டும். தமிழர் சமுதாயம் திருக்குறள் வடிவாகவே  அமையவேண்டும். சாதி மத வேறுபாடுகள் எல்லாம் வீட்டுடன் கட்டிவைத்துவிட்டு நாட்டில் ஒரே குலமாகத் தமிழர் ஒன்றுபட்டு வாழ வேண்டும். தீண்டாமை, பாராமை, பெண்பழிப்பு, கைம்பெண் கண்ணீர், குழந்தை மணம், பொட்டுக் கட்டல் முதலிய தீமைகள்  எல்லாம் ஒழிய வேண்டும். தைப் பொங்கலை தமிழர் கூட்டத் திருவிழாவாகக் கொண்டாடலாம். தமிழர் தெருக்கள் பெரியார் பெயராலும் அறமொழிகளின் பெயராலும் விளங்க வேண்டும். 

தமிழ்நாடு

தமிழ்‌  நிறைவான வளர்ச்சிபெற வேண்டுமாயின் அதற்கு உரித்தான தமிழ்நாடு ஒன்று உண்டாக வேண்டும்‌. (இந்த சிந்தனை தமிழ்நாடு தோன்றுவதற்கு முன்னதானது) தென்னாடு, வடநாடு, பர்மா, மலேயா, தென்னாஃபிரிக்கா, இலங்கை முதலிய இடங்களிலெல்லாம்‌ உள்ள தமிழர் அனைவரும்‌ கூட்ட உணர்வுடன் ஒன்றுபட வேண்டும். தமிழன் எங்கிருந்தாலும், தமிழன்‌பையும்‌ தமிழரன்பையும் வளர்க்க வேண்டும். 

தமிழின் தாய்த்தன்மை

திராவிடர் பெருங்கூட்டமொன்று கூடி தமிழிற் பிறந்த தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய மொழியினர்  தமிழைத் தாயென மதிக்கச் செய்யவேண்டும். உண்மையான தமிழ் நாகரிகப் பான்மையைத் தாய்மொழி வாயிலாகவும் ஆங்கிலத்தின் வாயிலாகவும் ஹிந்தியின் வாயிலாகவும்  தென்னாட்டவரும் வடநாட்டவரும்  விளக்க வேண்டும். காலத்திற்கேற்ற முன்னேற்ற இயக்கங்களில் தமிழர் உரிய பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்’’என்று தமிழ் உணர்வு  முன்னேற பல கட்டளைகளை சுத்தானந்த பாரதியார் வெளியிட்டுள்ளார். இவ்வாறு உரைக்கப்பெற்ற இருபத்தாறு கட்டளைகள்  இன்றும் (2026) தொட்டுத் துலங்கிட வேண்டிய நிலையிலேயே உள்ளது  என்பது தமிழ் வளர்ச்சிக்கான சவால்களாக உள்ளது. 

தமிழ் வழிக் கல்வி, அகராதிகள் உருவாக்கம்,  ஆட்சி மன்றங்களில் தமிழ்,  அலுவலகங்களில் தமிழ், பிறமொழிச் செல்வம் தமிழுக்கு வருதல்,  தமிழ்ச் செல்வம் பிறமொழிகளுக்குச் செல்லல், சாதி இனம் வேறுபாடு அற்ற தமிழ்ச்சமுதாயம், தமிழில் பேசும் தமிழ்ச்சமுதாயம்,  கடிதங்கள் போன்ற தகவல் பரிமாற்றங்கள் தமிழில் செய்தல், தமிழ் இசைப் பெருக்கம், தமிழ் இதழ் வளர்ச்சி, தமிழ்ப்படை  என எல்லா நிலைகளிலும் பெருத்த தமிழ் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டிய நிலைதான் உள்ளது என்பதை  சுத்தானந்த பாரதியார் வழி உணரமுடிகின்றது. 

தொகுப்புரை

சிவகங்கையைச் சார்ந்த சிந்தனைத் துறவி சுத்தானந்த பாரதியார் ஆவார். இவர் பன்மொழிகளை பல்மொழி இலக்கியங்களைக் கற்றவர். இவர் இந்திய விடுதலைக்கு முன்னதான காலத்தில்  தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் உணர்ச்சிக்குமான சிந்தனைகளை முன்வைத்திருப்பது கருதத்தக்கது. இவர்  தமிழைத் தலைமை, சிறப்பு, பெருமை போன்ற பல தகுதிகளைப்  பெற பல அரிய சிந்தனைகளை வழங்கியுள்ளார்.  இருப்பினும் அவை இன்னமும் எட்டப்பட வேண்டிய நிலையில் இருப்பதை உணரமுடிகின்றது.  தமிழர் படை, தமிழ்நாடு, தமிழ்க்கல்வி, தமிழ் அகராதி, தமிழில் அறிவியல் நூல்கள், தொழில் வளர்ச்சி போன்றன குறித்த இவரின் தமிழ் வளர்ச்சிச் சிந்தனைகள் கருத்தில் கொள்ளத்தக்கன. படைப்பாளர்களையும், அவர்களின் படைப்புகளையும் ஊக்குவிக்கும் அவரது சிந்தனைகள் தமிழக மக்களால் அரசால்  ஏற்கத்தக்கனவாகவும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டியனவாகவும் உள்ளன. 

Series Navigationமறுக்க முடியாத உண்மை! முதுமை…காரைக்காலம்மையார் துதித்த தலையாய ஐந்தெழுத்து
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *