ரவி அல்லது
இரயில் கிளம்ப நேரம் சமீபித்திருந்தது. எனக்கு ஒதுக்கப்பட்ட கீழே உள்ள படுக்கையில் நான் உட்கார்ந்து இருந்தேன். ஆறாவது நபர் மேலே ஏறி படுத்து விட்டார். நான் ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்த புத்தகத்தை வாங்கி ஆறு மாதமாக படிக்க நேரம் இல்லாததால் இந்தப் பயணத்தில் படித்துவிட வேண்டும் என்று பாதிக்கு மேல் படித்து அந்த புத்தகத்திற்குள் நான் பயணித்துக் கொண்டு இருந்தேன்.
அவர்கள் அவசரமாக பெட்டி மற்றும் பைகளை கொண்டு வந்து கீழே தள்ளினார்கள் . குளிர்சாதன பெட்டியானாலும் அவர்களுக்கு நன்றாக வேர்த்திருந்தது.
“நம்ம சீட்டு தானே. பார்ந்துண்டேளா. “
“ஆமாம். ஆமாம். சித்த உட்காரு. சுந்தர் வெளியே நீட்டிகிட்டு இருக்கப் பேக்கை உள்ளார தள்ளிவிடு. போறவாளுக்கு தொந்தரவா இருக்கப் படாது. “
அந்தப் பையன் சரி செய்தான். அவன் பக்கத்தில் அவனது சகோதரி அமர்ந்து இருந்தாள். அவள் வீடியோ கேம் ஆடிக்கொண்டு இருந்தாள். இருவரும் பள்ளிகளில் படிக்கும் வயதில் இருந்தார்கள்.
இரயில் புறப்பட்டு விட்டது. அறிவிப்புகள் தூரமாக கேட்டது. தாம்பரம் தாண்டுவதற்குள் இந்தப் புத்தகத்தை படித்து விடலாம் என்று தோன்றியது.
“எக்கியூஸ்மி சார். “
நான் திரும்பி அவரைப் பொதுவாகப் பார்த்து பின்னர் கொஞ்சம் உள்ளார்ந்துப் பார்த்துபோதுதான் தெரிந்தது. இது நாம் திருவண்ணாமலையில் சந்தித்த சங்கரன் தானே. அவர்தான்.
என்னை அவரின் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. என் முக அமைப்பு மாறிவிட்டது. நான் அவரையேப் பார்த்துக்கொண்டு இருந்ததில் மீண்டும் என்னை அழைத்தார்.
“சொல்லுங்கள் சார். “
“பொம்மணாட்டியா இருக்கா. அப்பர்லே சீட்டு ஒதுக்கி இருக்கா. இப்பதானே பெண்களுக்கு லோயர் பர்த் அலாட்மெண்ட் கொடுக்கிறா. இந்த டிக்கெட் முன்னாடியே போட்டது. நீங்க சித்த பெரிய மனசு பண்ணி கொஞ்சம் ஹெல்ப் பண்றேளா. இவாளோடது அப்பர் சீட்டு.”
நான் பேசியதைக் கவனித்த படி பதில் சொல்லாமல் இருந்தேன்.
“ஸார். நான் எது கேட்டாலும் நீங்க என்னையே ஏன் சார் பார்ந்துண்டு இருக்கேள். மனுஷாலுக்கு மனுஷா ஒதவக்கூடாதா.”
“ஒண்ணும் பிரச்சினை இல்லை. நான் மேல போறேன். தாம்பரம் கிராஸ் பண்ணதும் மேலப்போயிக்கிறேன் சார். அதுக்குள்ள இதைப் படிச்சு முடிச்சுருவேன் சார். “
“பேஷா… படியுங்கோ. நீங்க செங்கல்பட்டுல இல்ல விழுப்புரத்தில கூட கொடுங்கோ. நோ பிராப்ளம் சார். “
படிக்கிறதுதானேடா படுபாவி. மேலே இப்பவே போனா என்னவாம் என்று அவர் நினைத்திருக்கலாம். நெற்றியில் திலகமிட்டு நேர்த்தியான அழகில் இருந்தார்.
“நான் சொன்னேனோ இல்லியோ. பகவான் நமக்கு உதவி செஞ்சுருவர். நாம நல்லவாளா இருந்தா. பகவான் நம்மை சுற்றி நல்லவாளா வைச்சுண்ருவார். உன் தோப்பனாருக்குதான் இது புரிய மாட்டேங்கிறது. நல்லவாளா இருந்து என்ன சாதிச்சேள்ங்கிறா. ஏன் தோப்பனார் இருக்கிறவரை மூஞ்சூறு வலையில ஒண்டுனது மாதிரி கிடந்தா. அவா இல்ல இவா துள்ளுறா. பகவான் எல்லாத்தையும் பார்த்துண்டுதான் இருக்கார். “
சங்கரனின் மனைவி அவர் அப்பாவின் மேல் பிரியமாக இருக்கவேண்டும். இல்லை பொதுவெளியில் அவரை இப்படி பேசியது பிடிக்காமல் இருக்க வேண்டும். அவர் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்தார். அதைப் பார்த்ததும் சங்கரனும் முகம் வாடிவிட்டார்.
ஒரு வித இறுக்கமான சூழல் மன நெருக்கடியை அளித்ததால் நான் மேலே செல்கிறேன் என்றேன். அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அது போதுமானதாக இருந்தது.
சங்கரன் மனைவியையேப் பார்த்துக்கொண்டு இருந்தார். அதில் மனைவியின் மேல் பாசம் பொங்கியது. அப்படி பேசி இருக்கக்கூடாதோ என்றும் தோன்றி இருக்கலாம். நோ… நோ…. நான் சொன்னதுதான் சரி. அந்தாள் ஒரு துஷ்டன். அந்தாளுக்காக இவளை முகத்துக்கு நேரே பேசியிருக்கப்படாது என்றும் நினைத்திருக்கலாம்.
‘ஸாரி டி.’ என்று சங்கரன் கேட்டது என் காதுக்கே கேட்டது. பிள்ளைகள் வீடியோ கேம்மில் மும்முரமாக இருந்தார்கள்.
நான் பேனாவை எடுத்து முதல் பக்கத்தில் எழுதிவிட்டு மீண்டும் படிக்கலாமென புத்தகத்தை பிரிந்தபோது திருவண்ணாமலை சிந்தனைகள் தொந்தரவு செய்தது. புத்தகத்தை வைத்து விட்டு கண்களை மூடிக்கொண்டேன். இரயில் மாம்பலத்தில் நிற்பதாக அறிவிப்புக் கேட்டது.
ஒவ்வொரு புதுவருடம் தொடங்கும்போதும் நான் ரமணா ஆஸ்ரமத்தில் தங்குவது வழக்கம். கடிதம் எழுதி அனுமதி வாங்கி டிசம்பர் 28 லிருந்து ஜனவரி 2ந்தேதிக்குள் இரண்டு நாள், மூன்று நாள், ஐந்து நாள் என்று சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அந்த பயண நாளின் அளவுகள் மாறும். நான் கடைசியாக சென்ற வருடத்தில் நான் சங்கரனைச் சந்தித்தேன்
எனக்குப் பெரும்பாலும் தங்குவதற்கான இடம் ஆஸ்ரமத்தின் எதிர்ப்புறம் உள்ள குடியிருப்புகளில் ஒரு வீடு ஒதுக்கித்தருவார்கள். இங்கு பெரும்பாலும் தங்கிறவர்கள் குறைவு. சிலமுறை அந்த வளாகத்திலையே நான் மட்டும் தங்கி இருக்கிறேன். அழகான அமைதியான இடம்.
நான்கு மணிக்கு எழுந்து டிசம்பர் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அப்படியே ரமணரின் சமாதி ஹால் பெரியதாக இருக்கும் அதில் கண்களை மூடி அமர்ந்தால் நேரம் போவது தெரியாது. ஆறு மணிக்கு காலை உணவு தருவார்கள். அதை முடித்து ஆஸ்ரமத்தின் பின்புறம் வழியாக நீண்ட தூரம் மேலே நடந்தால் ரமணர் தியானம் செய்த விருபாஷ குகை வரும் அங்கு மதியம் வரை தியானம் செய்துவிட்டு பனிரெண்டு மணிக்கு கீழே வந்து மதிய உணவுவை முடித்து கொஞ்ச நேரத் தூக்கம். மாலை குளித்துவிட்டு அவரின் சமாதி ஹாலுக்கு பக்கத்தில் அவர் இருந்த அறையில் தியானம் செய்ய அனுமதிப்பார்கள் அங்கு தியானம் செய்துவிட்டு இரவு உணவை முடித்து மீண்டும் தியானம் பிறகு தூக்கம் இப்படியாக அந்த நாட்கள் கழியும்.
விருபாஷ குகையிலிருந்து ஸ்கந்தாஸ்ரமம் சென்றால் அங்கு தியானம் முடித்து மதியம் வெளியே ஹோட்டலில் சாப்பிடுவதாக அன்றைய தினம் இருக்கும்.
இப்படியான நாள் ஒன்றின் காலையில் விருபாஷ குகைக்கு காலையில் நான் சென்று கொண்டிருந்தபோது வெண்மை நிற வேஷ்டி உடம்பில் வெண்மை நிற துண்டை சுற்றி இருந்த ஐம்பது வயது உள்ள சாமியார் என்னை அழைத்தார்.
“சாமீ…”
நான் தியானம் பயில வரும்போது குனிந்த தலை நிமிராமல் செல்லும் வழக்க முடையவன். யாரிடமும் தேவைகள் ஏற்படாதவரை பேசக்கூடாது என்ற கொள்கையுடையவன். தெரிந்தவர்கள் இருந்தால் முடிந்த மட்டும் தவிர்த்துவிடுவேன் இல்லை நானே அவர்கள் கண்ணில் படாமல் ஒளிந்துவிடுவேன். குறைந்தபட்சம் இன்றைய நாட்களில் வாய்ப்பேச்சையாவது குறைக்க வேண்டும் என்ற புரிதலில் இதை நான் வழக்கமாக்கி இருந்தேன்.
“சாமீ… ”
நாங்கள் இருவரும் மட்டுமே அங்கு இருந்ததாலும் இரண்டாவது முறை அவர் கூப்பிட்டதாலும் நான் திரும்ப வேண்டியதாகிவிட்டது. நான் அவர் நோக்கி மேலே கையைக் காட்டி செய்கை செய்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன்.
“சாமீ… ”
மூன்றாவது முறையும் அவர் அழைத்ததால் நான் பக்கத்தில் சென்றேன். என் வயதை விட இரண்டு மடங்கிற்கு அதிகமான வயதுடையவர் என்பதால் என்னால் தவிர்த்துவிட்டுச் செல்ல முடியவில்லை.
என் பெயர் மற்றும் ஊர் சொல்லிவிட்டு கிளம்ப நினைத்தேன். என்னை உட்காரச் சொல்லி வற்புறுத்தினார். அவர் உட்கார்ந்திருந்த குன்றானப் பகுதிக்கு சற்று தள்ளி உட்காருவது போன்றதாக சாய்ந்து நின்றேன். அது பார்ப்பவர்களுக்கு குருவிடம் சீடன் இருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். நான் போக வேண்டிய தூரமும் என் வேலையும் இதுபோன்ற நேர விரயங்களில் சிக்கவிடாமல் என்னை எப்போதும் துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. வெள்ளைத் தாடியில் வீதியில் இருப்பவர் எல்லாம் ஞானி என்ற புரிதல் மாறி வெகு காலமாகி இருந்தது. ஆத்ம விஷாரம் மற்றும் நான் யார் என்று ரமணர் சொல்வது எதுவென்ற தெளிவை நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்தவர்களும் எனக்குள் விதைத்திருந்தார்கள்.
நாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து திருவண்ணாமலையைப் பார்த்தால் இரண்டு மலைகளுக்கு முடிவில் நேர்த்தியாக அடுக்கப்பட்ட கட்டிடங்களாக நகரம் விரிந்து அழகாக தெரியும். கோயிலின் கோபுரங்கள் மேலும் அழகாக்கியது.
இந்த கோணத்தில் மணியன் செல்வன் படம் வரைந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். இதையே தேர்ந்த புகைப்படக்காரர் படம் எடுத்தால் எப்படி இருக்குமென்ற சிந்தனை மின்னல் வெட்டியதாக வந்து போனது.
“சாமி… எத்தனை ஆண்டுகளாக இங்கு இருக்கிறீர்கள். ”
“அண்ணாமலையார் புண்ணியத்தில் பதினைந்து ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன்.”
“இங்கு வந்து நீங்கள் என்ன அறிந்தீர்கள் இல்லை தெரிந்தீர்கள் என்பதை எந்த பாடல்கள் எதோட துணையும் இல்லாம. நாம் இப்போது பேசிக்கொண்டது போல எளிய தமிழில் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள்.”
அவர் ஆழ்ந்த யோசனையில்.
“நாம் என்பது ஆத்மா. ரமணர் இதை ஆத்ம விசாரம் என்று சொல்லுவார்.”
“ஆத்மா, வீடு பேற்றை அடைவது,ஞானமடையிறது,
ஆத்ம விஷாரம்,அஹம் பிரம்மாஸ்மிங்கிறதை எல்லாம் விட்டு. நான் கேட்கிறது. உங்கள் அனுபவத்தை அதற்கு முன் சொன்னவர்களின் எந்த மேற்கோளும் தேவையில்லை. இப்போது சொல்லுங்கள்.”
அவர் என் கேள்வியின் தீவிரத்தைப் புரிந்தாரா என் முகத்தின் உக்கிரத்தைப் புரிந்தாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அவர் முகம் சிறுத்து விட்டது. அதிகாலை குளிர்ந்த காற்றில் மலையின் மேல் பகுதி அலாதியான பூரித்தலைக்கொடுத்தது. அது இங்கு வந்து தங்கியதன் பலனாகவும் இருக்கலாம்.
என்னை இடைமறித்த கடுப்பு என்னிடமிருந்தாலும் அந்த மனிதரின் மேல் நான் கொண்ட அன்பு அலாதியானது. என் சக பயணி என்ற வாஞ்சைகள் மேலோங்கி இருந்தது.
“அதோ திருவண்ணாமலை தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. நாம் இருவரும் அது வேண்டாம் என்று இங்கு அமர்ந்திருக்கிறோம். உங்கள் அனுபவம் என்ன என்று கேட்டால் மௌனமாக இருக்கிறீர்கள். இந்த பதினைந்து வருடம் மனைவி,பிள்ளைகளோட இருந்திருந்தால் அவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்.”
“எத்தனைக் தெளிவு.இந்த சின்ன வயசில. எவ்வளவு தீட்சண்யம் உங்கள் பார்வையில. உங்கள் நாவில் அந்த அண்ணாமலையாரே
பேசுற மாதிரி இருக்கு.”
“ஏன் சாமி என்னைப் புகழ்றீங்க. இதனால உங்களுக்கு என்னக் கிடைக்கப்போவுது. நான் என்னக் கேட்கிறேன்னு புரியுதா உங்களுக்கு.”
என் குரல் மாறியதில் அவர் முற்றிலும் நிலை தடுமாறிப்போனார்.
“நான் இதுமாதிரியான ஆள் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் உங்களை கடந்து சென்றுவிட்டேன். நீங்கள் தான் என்னை வற்புறுத்தி அழைத்தீர்கள். இப்போது நான் செல்கிறேன். மறுமுறை நான் இங்கு வரும்போது இதேக் கேள்வியைத் கேட்பேன். இப்போது கேட்டது மாதிரி கேட்கமாட்டேன்.அப்போதும் இதேபோல் இருந்தீர்கள் என்றால்…”
அவர் கழுத்தில் போட்டிருந்த துண்டைத் தொட்டுக்காட்டி ‘அதைக் கழுத்தில் முறுக்கிக்கேட்பேன்’ என்றேன்.
“…”
“என் வழியில் குறுக்கிட்டு நீங்கள் தான் அழைத்தீர்கள். தவறு உங்களுடையது. அடுத் முறை என்னைப் பார்த்தால் அனுபவம் பெறவில்லை என்றால் ஒளிந்து கொள்ளுங்கள் இல்லை ஊருக்கு ஓடிப்போய் விடுங்கள். யாரை ஏமாத்துவதற்கு இந்த வேசம். உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா.”
அவரிடம் நான் எந்தப்பதிலையும் எதிர்பார்க்காமல் மலையின் மேலே ஏறத்துவங்கிவிட்டேன்.
“ஸார்…. இந்த புஷ்தகத்தைக் கொஞ்சம் தர்றேளா. நான் படிச்சிட்டு தர்றேன். நாங்க இராமேஸ்வரம் போறோம். நீங்கள் எங்க போறேள்.”
நான் சிந்தனையிலிருந்து இயல்பிற்கு வருவதற்குள் சங்கரன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.
நான் சிரித்துக்கொண்டே புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.
“ஸார். நீங்கள் எங்கே இறங்கிறேள்.”
“பட்டுக்கோட்டை.”
“ இவா அண்ணாவோட ஆத்துக்காரியும் பட்டுக்கோட்டை பக்கத்தில் ஏதோவொரு வில்லேஜ்தான். எனக்கு சரியா பிடிபடல. என் ஓய்ப் தூங்கிண்டிருக்கா.”
எனக்குப் பேச்சை தொடர விரும்பமில்லை என்பதாக திரும்பி படுத்துவிட்டேன். சங்கரன் கீழே ஒரு சிறிய சதுரமான கோரைப் பாயை விரித்து கண்கள் மூடி ஏதோ முணு முணுத்தார். பிறகு மூச்சுப் பயிற்சி செய்தார்.
இரவு தியானத்தை முடித்துவிட்டு நான் எனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்குள் நுழையும்போது எதிரில் இருந்த வீட்டில் இருவர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. நான் வரண்டாவில் நின்றபடி திரும்பிப் பார்த்தேன். ஒரு வயதான பெரியவரும் இன்னொரு பையனும் அந்த வீட்டின் வரண்டாவில் உட்கார்ந்து இருந்தார்கள்.
“ஸார். கோவிச்சுக்காம செத்த நாழி இங்க வந்துட்டுப் போறேளா. நோக்கு புண்ணியமா போவும். இந்த புள்ளையாண்டான் என் பிராணனை வாங்காம ஓயமாட்டான் போல.”
நான் எந்த மறுப்பும் சொல்லாமல் அங்கு சென்று அவர்களுக்கு எதிரில் இடுப்பு உயரம் இருந்த சுவரில் உட்கார்ந்தேன். அப்பா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இருவரும் வேதம் படித்தவர்கள். மகன் பி.காம் முடித்திருக்கிறார். இவர் ஒரே மகன் திருமணமாகி ஒரு வருடத்தில் துறவறம் பூணுகிறேன் என்று இங்கு வந்து இருக்கிறார். ரமணரிடம் சொல்லிவிட்டு இமய மலைப்பக்கம் போவதுதான் அவரின் திட்டமாம். சொந்தமாக வீடு நகை பணம் என ஓரளவு வசதிகளை அப்பா வைத்து இருக்கிறார். கல்யாணமே வேண்டாம் என்றவரை சமாதானப்படுத்தி கல்யாணம் கட்டி வைத்து இருக்கிறார்கள்.
அவர் படித்த புத்தகங்கள் மற்றும் அவர் தொடர்பு வைத்திருந்தவர்கள் பேசியவைகளை இவர் புரிந்ததன் விளைவால் துறவறம் பூண்டுவிடும் அவரின்
தனியாத ஆசையில் யாவையும் விட்விட்டு ஓடி வந்துவிட்டார்.
“இங்கு நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.அதற்குள் நான் போகா விரும்பவில்லை. புத்தர், மகாவீரர்,ரமணர் இதுபோன்ற இன்னும் எத்தனையோ பேர்களை முன்னுதாரணமாக எடுத்து பலபேர் சந்நியாசம் மேற்கொள்கின்றனர். எல்லாவற்றையும் துறத்தல் என்பது ஒரு உணர்வுத் தூண்டல் அதன் அடிப்படையில் நீங்கள் வரவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். நீங்கள் பயணித்தப் பாதையை விட்டு கொஞ்சம் வேறு மதத்தில் வேண்டாம் வேத காலங்களுக்கு
முன்பு உள்ள புத்தகங்கள் இல்லை சம்பவங்கள் தெரிந்தால் அதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அது மனைவி மக்களோடு சேர்ந்து பயணித்து நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் அல்லது இங்கு வந்தால் வாங்கிச் சென்று விடலாம் என்று தேடி வந்திருக்கும் ஒன்றை அறிந்து குடும்பத்துடன் வாழ்ந்து இருக்கிறார்கள்.”
“அப்போ… ரமணர் ஏன் சார் அவா குடும்பத்தை விட்டு இங்கு வந்தார்.”
“அதுதான் ஒரு உணர்வின் வெளிப்பாடுன்னு சொல்லிட்டேனே.”
“உங்களை சாப்பிடும்போது கவனித்தேன். அந்த ஆந்திராப் பெண்ணை அரை மணி நேரத்தில் எட்டு முறை பார்த்தீர்கள்.”
அவர் என்னை கண்களால் வேண்டாம் என்று கெஞ்சினார்.
“இலையில் தண்ணீர் தெளிக்கும் போது ஒரு முறை. உருளைக் கிழங்கு கூட்டு வாங்கும்போது ஒரு முறை..”
“நீங்கள் யாரு சார். இதை எல்லாம் கேட்கிறதுக்கு. பகவானே… நீங்க நம்பாதீங்கோ.”
அவரின் அப்பா அவரை முறைத்தார்.
‘கிராதகா. யாருடா நீ. எங்கேர்ந்துடா வந்தே. துஷ்டப்பயலே. பகவானே செத்த நாழி இவாளை ஊமையாக்கப்பிடாதா.’ அவரின் கண்கள் கலங்கியதை நான் கவனித்தேன்.
“ப்ளீஸ் சார். நீங்க சொல்லுங்கோ.”
“அது தவறில்லை.அது ஒரு இயற்கைத் தூண்டல். அந்த பெண் அழைத்து வந்த ஆந்திரா இளைஞர் சாமியார் ஆடையணிவதன் ஒழுக்கத்தைக்கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். நான் இருந்தாலும் ஒரு இரண்டு முறை பார்த்து இருப்பேன். ஏன் சாரை வேண்டுமானால் காலையில் அந்தப் பெண்ணிற்கு முன்னால் உட்கார வைப்போம் அவரும் பார்க்கத்தான் செய்வார்.”
அவர் என்னை அடிக்கப்பாய்ந்தார். அவரின் அப்பா அவரைத் தடுத்தார்.
“யாருய்யா. நீ. இவர் என் தோப்பனார். எனக்கு வேதம் கற்றுக்கொடுத்த குரு. சந்தியா வந்தனம் விடாம ஓதிண்டிருக்கிற ஆச்சார சீலர்.”
பட்டென்று அவரின் அப்பா காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார்.
“என்னைய மன்னிச்சுருங்கோ.
கண்டவா கிட்டே உங்களை கேவலப்பட வச்சுட்டேனே. பகவான் என்னைய மன்னிக்கமாட்டான்.”
ஏதோ மந்திரத்தை ஓதியவாறு தேம்பி தேம்பி அழுதார்.
‘பகவானே.ஏன் எனக்கு எதையுமே சரியாச்செய்யத் தெரியலே. நீ பார்த்துண்டுதானே இருக்கே.
எனக்கு ஒரு வழியைக்காட்டக்கூடாதா. கண்டாவா கிட்டே அசிங்கப்பட வைக்கனுமா.”
“நான் தான் சொன்னேனே.”
என்று சொன்னதும் அவர்கள் இருவரும் ஒரு சேர திரும்பி என்னைப்பார்த்து திகைத்து நின்றார்கள். அது நான் பேசுவதற்கு தோதாக அமைந்தது.
“இது என் தூக்க நேரம். நான் காலையில் நான்கு மணிக்கு ஆஸ்ரமம் செல்ல வேண்டும். அதற்கு மூன்று மணிக்கு பிறகு முழிக்க வேண்டும். அதை விடுங்கள். நான் நேரடியாக விசயத்திற்கு வந்துவிடுகிறேன்.”
அவர்கள் ஏன் எதுவுமே குறுக்கிடாமல் இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருந்தது.
“நான் சத்தியகாம் ஜபலைப்பற்றி சொல்லவா. இல்லை நான்கு வேதங்களுக்கு முன்பிருந்த தவசீலரைப் பற்றி சொல்லவா இல்லை புத்த மடாலயத்தில் இருந்த டோயோங்கிற சிறுவனைப்பற்றிச் சொல்லவா.”
அவர் பட்டென்று
“டோயோ…” என்றார்.
அவரின் அப்பா இரண்டு கைகளையும் தொங்கவிட்டபடி முன்பக்கம் கோர்த்த படி நின்றார்.
“அந்த மடாலயத்தின் குரு ‘ஒரு கை ஓசை’ பற்றி தன் சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட டோயோ தனக்கு கற்றுத்தருமாறு கேட்கிறான். அவர் மறுத்துவிட. அவன் ஆஸ்ரமத்தின் ஒரு இடத்தில் கண்களை மூடி அமர்ந்து விட்டு பிறகு ஓடி வந்து அது பறவைகளின் சத்தம் தானே என்கிறான். குரு இல்லை என்கிறார். கொஞ்சம் நேரம் கழித்து வந்து அது வண்டின் ரீங்காரம் தானே என்கிறான் குரு மறுக்கிறார். பிறகு அவன் கண்களை மூடி நீண்ட இருந்தபோது தூரத்தில் ஓடிய அருவியின் சத்தம் கேட்டது. குரு அதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். அந்த சிறுவனை நீண்ட நாட்களாக காணவில்லை. குரு கவலைகள் கொண்டார். பிறகு அவனைத் தேடலானார். அவனை ஒரு இடத்தில் பார்த்தார். அவன் அந்த ஒரு கை ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தான். இல்லை அவன் அந்த ஓசையாக இருந்தான்.”
கதையை அவர்கள் உள்வாங்கி உறைந்துபோனதை என்னால் காண முடிந்தது.
“இந்த கதை மற்றும் அதன் பெயர்களை ஆராய்வதை விட்டு விட்டு. அதன் அர்த்தத்தை தியானமாக்குங்கள். எதைப் படித்தாலும் பார்த்தாலும் அதன்
அர்தத்திற்குள் பயணிக்க பழகுங்கள். விளிம்புகள் உங்களை வீடடை விடாது. ஓஷோ ஒரு இடத்தில் சொல்வார். ‘வென் டிசிபில் ரெடி. மாஸ்டர் வில் அப்பியர். சீடன் தயாரானால் குரு அங்கு வந்துவிடுவார் ’ என்பார். அதனால் இனி நீங்கள் தேடி ஓடாதீர்கள். உங்களுக்குள் இருப்பதை அறிய இங்கு ஏன் ஓடிவர வேண்டும் என்பதை புரிந்து குடும்பத்துடனும் தனியாகவும் இதுபோன்ற இடங்களுக்கு வாருங்கள்.”
“சார்… நீங்கள் ரமண மகரிஷி மாதிரியே உட்கார்ந்து இருக்கீங்க.”
ஒரு காலைக் குத்துக்காலிட்டு ஒரு காலை மடக்கி நான் உட்கார்ந்திருப்பதை அப்போதுதான் நானும் கவனித்தேன். இதுதான் அவர்களை என்னை ஆச்சரியமாக பார்க்க வைத்து இருக்கிறது.
“இதெல்லாம் வச்சி என்னைய சாமியாரா ஆக்கிடாதீங்க. உங்கப்பா செயல் உங்கம்மாவிடம் இருக்கும் உங்கம்மாவின் செயல் உங்க அப்பாவிடம் இருக்கும் அவ்வளவு தான். இதை பெரிதாக எடுக்கத்தேவை இல்லை.”
இதைக் கேட்டதும் அவர்கள் என்னுடன் நெருங்கிப் பழகவும் நான் யாரென்று அறியவும் ஆசைப்பட்டார்கள். பிறகு கொஞ்ச நேரம் பேசிவிட்டு அவர்கள் பெயர் ஊர்களை அவர்களே சொன்னார்கள்.வழங்கம்போல இதுபோன்ற இடங்களில் சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்வது போல் இங்கும் நான் தூங்க கிளம்பிவிட்டேன்.
அதன் பிறகு சங்கரன் சாரை இப்போதுதான் இரயிலில் பார்க்கிறேன்.
இரயில் நான் இறங்க வேண்டிய ஊரில் வந்து நின்றதால் நான் இறங்கி விட்டேன். பெட்டியின் அடுத்த கதவுக்கு எதிரில் அவர் நின்று படித்துக்கொண்டு இருந்ததால் ஊர் பெயரைப் பார்த்ததும் என் இருக்கையில் தேடி நான் இறங்கிய கதவுக்கு பக்கம் வழி நிற்பவர்களை விளக்கி வருவதற்குள் இரயில் கிளம்பி விட்டது.
“சார். உங்க புஸ்தகம்.”
“சங்கரன். அது உங்களுக்கு தான்”என்றேன்.
அவர் ஏதேதோ சொல்லி கத்துவது எதுவும் கேட்காத தூரத்திற்கு இரயில் சென்று கொண்டிருக்க என்னை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே கை கூப்பி வணங்கியபடியே மறைந்து போனார்.
நான் எக்மோரில் அவரைப் பார்த்ததும் அந்த புத்தகத்தின் அட்டைக்கு அடுத்துள்ள வெற்று ஏட்டில்
‘நமஸ்காரம் சங்கரன் சார்.
ஒரு கை ஓசை கேட்டீங்களா.
கேட்டால்.
டோயோவை நான் விசாரித்ததாக சொல்லவும்.
அகம் பிரம்மாஸ்மி.
வாழ்த்துகள்
வாழிய நலம் சூழ.’ என்று எழுதி இருந்தேன்.
அவர் கும்பிட்டதைப் பார்த்தால் வினாடி நேரத்தில் இதை படித்திருப்பார் என்று தோன்றியது. ரமணா ஆஸ்ரமம் அன்று செல்லும்போது சங்கரன் சாரை சந்திப்பேன் என்று எனக்குத் தெரியாது. இந்தப் புத்தகம் வாங்கும்போதும் இதை சங்கரன் சாரிடம் கொடுப்பேன் என்றும் எனக்குத் தெரியாது.
என் பயணத்தின் போது இது போன்ற பல பேர்களை சந்தித்து இருக்கிறேன் . உலகம் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் யாரென்று தெரிவதற்கு அவர்கள் முன்பு ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் யாரும் அதைச் செய்யவே இல்லை. அதுதான் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பு. எனக்கு பெரிய ஆச்சரியம் இரண்டாவது முறையாக நான் சந்திக்கும் முதல் நபர் சங்கரன் சார் தான். அதனால்தான் நான் அந்த புத்தகத்தில் அங்கேயே எழுதினேன். இரவு முழுவதும் நான் இறக்கும்வரை சங்கரன் சார் நான் எழுதியதைப் படிக்காததற்கு நான் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்.
எஞ்சிய நாளின் வழித்துணைக்கு அந்த புத்தகமே அவருக்கு போதுமானது. என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு முன்னால் என் பெயரெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டில்லைதான். பேரன்பு கொண்டு நேசிக்க பெயர் எனக்கும் எப்பொழுதும் ஒரு பொருட்டில்லைதான்.
பிறகெப்பொழுதாவது பயணத்தில் நாம் சந்திக்க நேர்ந்தால் என்னை ஆராய முற்படாமல் உங்களை என் மீது அன்பு செலுத்த வைத்துவிடுவதில் நான் கில்லாடியாக இருப்பதை நிச்சயமாக நீங்கள் அப்போது மறந்துவிடுவீர்கள் என்பதை உங்களிடம் இப்பொழுதே என்னால் உத்திரவாதமாக சொல்ல முடியும்.
***
-ரவி அல்லது.
ravialladhu@gmail.com
***