அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்

அரசுப் பள்ளிகளும், தரமான கல்விக்கான அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமையும்
This entry is part 5 of 5 in the series 1 ஜூன் 2025

C:\Users\computer\Desktop\download (1).jpg

 _லதா ராமகிருஷ்ணன்

C:\Users\computer\Desktop\images.jpg

எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி, கல்வி என்பது அவர்களின் அடிப்படை உரிமை அப்படி தரப்படும் கல்வி தரமானதாக இருக்க வேண்டியது அவசியம் அரசு பள்ளி ஆசிரிய பெருமக்களுக்கு தனியார் பள்ளி ஆசிரிய பெருமக்களை விட சம்பளமும் சலுகைகளும் மிக அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதேபோல், பள்ளி சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளும் அரசு பள்ளிகளில் மிகவும் நன்றாகவே உள்ளன

 அப்படி இருந்தும் தங்கள் வசதியின்மையையும் மீறி அடித்தட்டு மக்கள் வட்டிக்கு கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? பிள்ளைகள் ’டாடி’, ’மம்மி’ சொல்வார்கள் என்று அல்ப சந்தோஷம் என்று அதை ஒதுக்க முடியுமா?

 ஒரு பள்ளி என்ற கட்டமைப்பின் முதலும் முடிவுமான கவனக்குவிப்பு மாணாக்கர்களாகவே இருக்க வேண்டும். அப்படி இருக்கிறதா?

அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் பலர் இருக்கலாம். அதே சமயம், அரசுப் பள்ளிகளிலான பணி நியமனங்களில் லஞ்சம் தந்து பதவி பெறும் வழக்கமும் பரவலாக இருப்பதாக பேசப்படுகிறது – அது எவ்வளவு தூரம் உண்மை? ஆளுங்கட்சி அரசியல்வாதிகளின் சிபாரிசோடு உரிய பணத்தை தந்து பணியில் இணையும் ஆசிரியர்கள், மற்ற ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களை தலைமை ஆசிரியரோ மற்ற நிர்வாகிகளோ தட்டிக் கேட்க முடிவதில்லை என்கிறார்களே – அது உண்மையா?

 பள்ளி நேரங்களில் பல வகுப்புகளில் ஆசிரியர்கள் இருப்பதில்லை என்கிறார்கள் பெற்றோர்கள். ஆசிரியர்கள் இல்லாத சமயத்தில் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்; காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்,  மற்றும் அவர்களுடைய பெற்றோர்களிடம் பள்ளி சார் குறைகளை பற்றி கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தொடர்ந்து இடைவெளிகளான கலந்துரையாடல்கள். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுவதாகத் தெரியவில்லை.  அப்படி ஏதாவது குறைகளை கூற வரும் பெற்றோர்களிடம்  – இவர்களில் பெரும்பாலோர் அடித்தட்டு மக்கள், குறைந்தபட்ச கல்வியறிவு பெற்றவர்கள் – ”என்ன பெரிசா கேள்வி கேட்கிறீங்க? காசு கொடுத்தா உங்க புள்ளையை படிக்க வைக்கிறீங்க?” என்று மதிப்பழிப்பதாகப் பேசி கூனிக்குறுக வைக்கும் ஆசிரியர்களும் நிர்வாகிகளும் உள்ளனர்

 கூலி வேலைக்கு வீட்டு வேலைக்கு செல்லும் அடித்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் தான் ஏதேனும் எதிர்த்துச் சொல்லிவிட்டால் பள்ளிகளில் அதனால் தங்கள் பிள்ளைகளை ’கட்டம் கட்டி’ கண்டிப்பதும், தண்டிப்பதும் நடக்குமோ என்று அச்சப்படுவது வெளிப்படை.

 நிறைய பள்ளிகளில், வகுப்புகளில் அவசர அவசரமாக பாடங்களை நடத்தி முடிக்கும் நிலையே உள்ளதாகத் தெரிகிறது. பாடம் மாணாக்கர்களுக்கு புரிகிறதா, சுவாரசியமாக இருக்கிறதா என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. விடைகளை –  கணித பாடம் உட்பட –  மிகுந்த பிரயத்தனத்தோடு மனனம் செய்யப் பழகுவதே மாணாக்கர்கள் அறிந்த, அவர்களுக்கு அறிவுறுத்தப்படும், ஒரே கற்றல்வழியாக இருப்பதாகத் தெரிகிறது.

 அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை வருடாந்திர இறுதித் தேர்வு என்று எதுவும் இல்லாமல் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்படுவதால் அவர்க ளுடைய கற்றல் அளவையோ, கற்றல் தினையோ மதிப்பிட இயலாமல் இருக்கும் நிலை. தேர்வு என்பதை அவர்களுடைய கற்றல்திறனை மதிப்பிட மட்டும் பயன்படுத்தலாமே என்ற பேச்சு எழுந்ததற்கே ‘கூடவே கூடாது – அது அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்’ என்றெல்லாம் சொல்லி அநாவசியமாக அச்சுறுத்தி முட்டுக் கட்டை யிட்டார்கள் இங்கே.  

அதற்கு பிறகான வருடங்களில் பொதுத்தேர்வுகள் வரும்போது பள்ளி 100% தேர்ச்சியை காண்பிக்க வேண்டும் என்பதற்காக கல்வி கற்பதில் சற்று பின்தங்கியுள்ள மாநகர்களை பள்ளியிலிருந்து நின்று விடுமாறு வேறு பள்ளிக்கு போய்விடும் மறைமுகமாகவும் நேரடியாகவும் வற்புறுத்துவதாகவும் சில பெற்றோர்கள் சொல்ல கேட்டதுண்டு

 அரசுப் பள்ளிகளில் உள்கட்ட அமைப்புகளும் இடவசதியும் நன்றாகவே இருந்தாலும் அவற்றை சுத்தமாக பராமரித்தல் குறிப்பாக கழிப்பறைகளை பராமரித்ததில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை என்கிறார்கள் குழந்தைகளுக்கு சுத்தம் சுகாதாரத்தை அவற்றின் அவசியத்தை முக்கியத்துவத்தை போதிக்க வேண்டிய கல்விக்கூடங்கள் அவற்றில் அலட்சியமாக இருந்தால் எப்படி?

 ஆரம்ப வகுப்புகளில் உள்ள சின்னப் பிள்ளைகளுக்கு சிறுநீர் கழித்தல் மலம் கழித்தல் போன்றவற்றை அடக்கிக் கொள்ளவோ உரிய நேரத்திற்கு இயற்கை உபாதைகளை கழிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவும் வராது அதற்காக அந்த குழந்தைகளை அடிப்பதும் திட்டுவதும் குற்றவாளிகளாக உணரச் செய்வதும் அடக்கிக் கொள்ளச் சொல்வதும் கொடுமை.

 அரசுப் பள்ளிகளில் கணினிகள் கணினி கற்பிக்கும் அறைகள் நூலகங்கள் என்று இருந்தாலும் அவை எந்த அளவுக்கு மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்பது ஒரு கேள்விக்குறி. புத்தகங்களை கிழித்து விடுவார்கள் என்பதற்காகவே நூலகங்களை பூட்டி வைத்துள்ள பள்ளிகள் உண்டு என்று கூறுகிறார்கள். அதேபோலத் தான், கணினி கற்றுக் தரவும் நிறைய பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்கிறார்கள்.

 அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்கு சரியாகத் தமிழ் படிக்க தெரியவில்லை, தமிழ் உச்சரிப்பு தெரியவில்லை, அடிப்படை தமிழ் ஆங்கிலம் கணிதம் தெரியவில்லை என்று கடந்து சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றாய்வுகளின் புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன ஆனால் அது உண்மையா என்பதை சரிபார்த்து தெரிந்துகொள்ள முயலாமல் சுற்றாய்வுகளைப் பழிப்பதும், அவற்றுக்கு உள்நோக்கம் கற்பிப்பதும் இங்கே வாடிக்கையாக இருக்கிறது. அல்லது, நாட்டிலேயே எங்கள் மாநிலம் தான் கல்வியில் முதலிடத்தில் இருக்கிறது என்று பாமர மக்களுக்கு புரியாத தரவுகளை தந்து வாய டைத்து விடுகிறார்கள்.

அரசு பள்ளிகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும் மாணாக்கர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு பணிபுரியும் ஆசிரியர் பெருமக்களும் இருக்கிறார்கள். அவர்களை இனங் கண்டு அவர்கள் அவர்களை ஒவ்வொரு பள்ளிக்குமான ஆலோசனை குழுவினராக அதிகாரம் அளித்த பள்ளி நிர்வாகம் சீராக செம்மையாக நடந்தேறு அவர்களே சுதந்திரமாக கலந்த ஆலோசனைகள் மேற்கொள்ள செயல்பட ஊக்குவிக்கலாம்.  

மதிப்பெண்கள் அதிகம் வாங்கும் மாணாக்கர்களைப் புகழ்ந்து பேசி அதில் பெருமை கொள்வதைப் போலவே சரியாக படிக்காதம் நிலவும் பள்ளிச் சூழல், வகுப்புச் சூழலில் கற்கவியலாப் பிள்ளைகளுக்கும் உரிய அதிகார அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும். அதற்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகளை, நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.  அப்படியில்லாமல், எதற்கெடுத்தாலும் தனியார் பள்ளி மட்டும் மேலானதா?’ என்றவிதமாகப் பேசி, பிரச்சனையை திசைதிருப்புவது எந்த வகையிலும் அரசுப் பள்ளிகளின் பயனாளிகளான எதிர்காலக் குடிமக்களுக்குப்  பலன் அளிக்காது.

 பள்ளி நிர்வாகத்தில் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரசியல்வாதிகளின் ஆக்கப்பூர்வமான தலையீடு இருக்கலாம். எதிர்க்கட்சிகள் அரசுப் பள்ளிகள் நடக்கும் விதத்தை நேரில் சென்று பார்வையிடலாம். அதற்கு அரசு அவர்களுக்கு அனுமதி அளிப்பதே சரி. வாக்கு வங்கிகள் அல்ல என்பதால் மாணாக்கர்களை, குறிப்பாக அரசுப் பள்ளி மாணாக்கர்களின் கல்வி சார் அக, புற தாக்கங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியல்ல.

சில வருடங்களுக்கு முன், அரசுப் பள்ளி ஆசிரியர்களே அவர்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் தான் சேர்க்கிறார்கள் என்பது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. “என் பிள்ளை அங்கே படிக்கிறான்” என்று ஒரு பிரபல தனியார் பள்ளியின் பெயரை கர்வத்தோடு சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியர்களே அதிகம்.

சமீபத்தில் பேஸ்புக்கில் ஆசிரியராக பணிபுரியும் படைப்பாளி ஒருவர் அரசு ஊழியர்கள் ஏன் அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். கூடவே, அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு அரசுப் பணி தரலாம், வேறு சில சலுகைகளை அரசு தரலாம் என்று அபத்தமான ஆலோசனையையும் அளித்திருந்தார். இது என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான தீர்வு?

 சமீபத்தில் மறைந்த நடிகர் ஒருவர் அரசு ஆசிரியராக வேலை பார்த்ததாகவும் அந்த வேலையை அவர் தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் ஆசிரியப்பணியில் நிறைய விடுமுறை கிடைக்கும் திரைப்படங்களில் நடிக்க, நடிக்க முயற்சி செய்ய அது நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆசிரியர் பணி என்பது மிகுந்த அர்ப்பணிப்பு மனோபாவமும், சமூகப் பிரக்ஞையும் தேவைப்படும் ஒன்று. அதை வெறும் வாழ்வாதாரத்திற்கான இன்னொரு பணியாக பாவிப்பது மாணாக்கர்களை தான் பாதிக்கும்

 கல்விக்கூடம் என்பதில் ஆசிரியர் பெருமக்கள், நிர்வாகிகள், உதவியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் பணியாற்றினாலும் அதன் முதலும் முடிவுமான நோக்கமும் இலக்கும் மாணாக்கர்களாகவே, அவர்களின் நலம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்  என்பதில் இரு வேறு கருத்துக்கள் இடமில்லை.

***

Series Navigationமுயன்றுபார்ப்போம் மொழிபெயர்ப்பை தொகுதி 1  & தொகுதி 2

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *