-ஜெயானந்தன்
அவன் ஓடோடிச்சென்று, அந்த பேரழகியின் ஸ்பரிசத்தின் மடியில் வீழ்ந்து சுவர்க்க வாசல் கதவை திறக்க நினைத்து, அந்த கும்பகோண வீதியில், விடிந்தும் விடியா காலையில், சுவர்ணாம்மாள் வீட்டின் கதவை தட்டினான்.
அவன் நாடி வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. அவன்மேல் தவழ்ந்த மலேயா செண்டின் வாசம் அந்த வீதி முழுதும் நிரம்பி வழிந்தது.
அவன் பத்தாண்டுகளாக சேர்த்த பணக்கட்டுகள், அவன் போட்டிருந்த ஜிப்பா பையில் கனத்தது.
சுவர்ணாம்பாளை வாழ்வில் ஒரே ஒருமுறை அனுபவித்து விட்டால், இந்த பிறவியின் பயன் அதுதான் என்ற ஏக்க பெருமூச்சு, அவனை உயிர்வாழ வைத்த தருணம்.
கதவு திறந்தது.
அவன் தேவதையை தேடினான்.
சுவர்ணாம்பாள் எங்கே என அலைந்தான்.
அந்த பேரழகியின் கரங்களை, கன்னங்களை, சுவர்ணமாக மிளிரும் ஸ்தனங்களைத் தேடுகின்றான்.
அம்பாளை நோக்கி தவம் செய்தான்.
அந்த வயதானவள், அவனை உள்ளே அழைத்துச்சென்று, ஊஞ்சலில் அமர வைத்தாள்.
விடியா காலைப்பொழுதில் வந்த இளைஞனைப்பற்றி கேட்டு தெரிந்துக்கொண்டு சிரிக்கின்றாள் முதியவள்.
அவள் உடல் சோர்ந்து, உள்ளம் சோர்ந்து,நடைத்தளர்ந்து, வாலிப முறுக்கின் அடையாளங்கள் அழிந்து,
எந்த மிராசுகளின் வருகையற்ற, ஒரு அனாதையாக வாழும், நான் தான் அந்த
நீ தேடிவந்த “சுவர்ணம்மாள் “,என அந்த முதியவள் கூறிய வுடன்,
மலேசியாவிலிருந்து ஓடோடி வந்த இளைஞன், அதள பதாளத்தில் வீழ்ந்தான்.
இதற்காகவா, நான் பத்துவருட தவம் செய்தேன் என புலம்பினான்.
சுவர்ணக்கா சிரித்தாள்.
அந்த சிரிப்பு, தாசிகளுக்காக, மனிதர்கள் செய்யும் தவத்தின் உச்சந்தலையில் அடித்த அடி.
அந்த சிரிப்பு, அழிந்து போகும் தேகத்தை கட்டிக்காக்கும், காமதேவனை நோக்கி விடுத்த அம்பு.
அந்த சிரிப்பு, சிதையில் எரிந்து சாம்பலாகும் உடலின் மீது விழுந்த காமரட்சை.
அந்த சிரிப்பு, சதைப்பிண்டத்தை ஆராதனை செய்யும் கவிஞனைப்பார்த்து சிரிக்கும் சிரிப்பு.
அந்த சிரிப்பு, இனி வரப்போகும் தாசிகளுக்கான சிரிப்பு.
அந்த சிரிப்பு மிட்டா மிராசுகளின் முகத்தில் அடித்த ஆணவ செருப்பு.
அவன் அடையாளமற்ற ஆளாக அங்கிருந்து நடைப்பிணமாக, வீடு வந்து சேர்ந்தான்.
இதுவரை , தி.ஜா., என்ற இலக்கிய சிற்பி, அவர் செய்த சிறுகதை சிலையின் உச்சத்தை காட்டுகின்றார்.
கலையின் உச்சம்,அதன் சிகரத்தின்
உச்சியில் நிர்வாணம் காண்பது.
அந்த ரசவாத கும்பினிதான் தி.ஜா.,
குழந்தையின் சிரிப்பிலும், அழகின் நிர்வாணத்திலும், சிகரங்களில் ஒளிரும் ஒளிந்துள்ள ரகசியங்களை ஒரு தேர்ந்த கலைஞனால்தான் காணமுடியும்.
அங்கே காம ரூபத்தின் ஆட்டத்தையும், ரகசிய ராத்திரிகளின் ஓலங்களையும் பாடுவது சதாரண மனங்களின் சந்தடி வேலை.
இதற்காக தான், ஒரு ரசிகன் அவருக்காக தனது ஐந்து ஏக்கர் புஞ்சையை எழுதித்தர வந்தான்.
அவருடைய காலடியில் கடல்போல்,
இலக்கியம் அலை வீசுவதாக கண்டான். அந்த வித்தகர், பெளதீக உலகின் கலாராணிக்கு தன் கலையை விற்க சம்மதிக்க வில்லை.
“தவம்” கதையை சதாரண, சினிமாக்கதையாக மாற்ற ஒருவன் முன்வந்தால், கீழே உள்ளது போல், அந்த கதை உருமாறி போக வாய்ப்புண்டு.
“மனைவியைப்பார்த்தவுடன் கண்ணீர் விட்டான்.
சாவித்ரிக லட்சணம், அவன் மனைவி முகத்தில் தெரிந்தது.
அவள் மடிமீது தலைவைத்து, தவம் செய்தான்.
ஆனால் தி.ஜானகி ராமன் என்ற மாபெரும் கலைஞன், அந்த கதையின் உன்னதத்தை, காலம் முழுதும் பேசும்விதமாக மாற்ற தெரிந்த சகாவரம் பெற்ற கலாரசிகன்.
ஜெயானந்தன்.
(தி.ஜானகிராமன்-தவம் சிறுகதையைப்படித்த தருணம் எழுந்த அலைகள்)
- கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு
- தவம் ( இலக்கிய கட்டுரை)