Posted in

அசோகமித்திரன் சிறுகதைகள் – 3

This entry is part 7 of 8 in the series 20 ஜூலை 2025

பி.கே. சிவகுமார்

விபத்து – அச்சில் வந்த அசோகமித்திரனின் மூன்றாம் கதை. 1956-ல் எழுதப்பட்டது. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட அசோகமித்திரனின் இரு மொத்தச் சிறுகதைத் தொகுப்புகளில் முதல் தொகுப்பில் உள்ளது. பத்தரை பக்க அளவுள்ள கதை. 

மூன்றாவது கதையிலேயே சிறுகதையை எப்படி எழுதுவது என்பது அசோகமித்திரனுக்குக் கைவந்துவிட்டது என்பது இந்தக் கதையில் தெரிகிறது. முக்கியமாய், கதையில் வருகிற எல்லாரைக் குறித்தும் சில வார்த்தைகளிலோ பல வரிகளிலோ அவரால் ஒரு சித்திரத்தை எழுப்பிவிட முடிகிறது. சிறுகதைக்கு இது இன்றியமையாதது.

பிற்காலத்தில் சுஜாதா போன்றோர் எடுத்தாண்ட நடை இந்தக் கதையின் தொடக்கத்தில் உள்ளது. உதாரணமாக – “பள்ளிக்கூட மாணவர் அட்டவணை ஒன்றிற்கு மட்டும் அவன் பெயர் சி.ஆர். பார்த்தசாரதியாக இருந்தது”. தலையை நன்றாகத் துவைத்துக் கொள்வதற்கும் பூட்சுக்குப் பாலிஷ் போடுவதற்கும் என்ன தொடர்பு என புத்திசாலித்தனமாக யோசிக்கிற பாச்சா. 

அதே நேரம், பெண் ஜென்மமே சுத்த மக்கு அதிலும் அவன் அக்கா சந்திரா கடைந்தெடுத்த மக்கு என நினைக்கிற பாச்சா, ஒரு விபத்தின் மூலம் வயதடைவு (coming to age) அடைந்து தன்னை நேசிக்கிற அக்காவை மருத்துவமனை படுக்கையில் இருந்து புரிந்து கொள்கிற கதை. இதை அசோகமித்திரனின் பெயருக்குப் பதிலாக சுஜாதா எழுதிய ஶ்ரீரங்கத்துக் கதைகளில் ஒன்று என்று சொன்னால் பெரும்பாலோர் நம்பி விடுவார்கள். 

தன்னைச் சீண்டுகிற அக்காவைப் பொருத்தே பெண்கள் அனைவரும் மக்கு என நினைக்கிற பாச்சா, தனக்கு ஆதரவாக எப்போதும் பேசுகிற அம்மாவை வைத்துப் பார்க்கும்போது பெண்களை அப்படி நினைப்பது சரியில்லை என உணராதவனாக இருக்கிறான். அதே நேரம், நண்பன் பாலு சிகரெட் பிடிக்கலாமா எனக் கேட்டபோது அதை மறுத்து விலகி நடக்கும் முதிர்ச்சியும் கொண்டிருக்கிறான். ஆக பெண்கள் அனைவரும் மக்கு என்கிற அவன் நினைப்பு அவன் அக்காவின் மீதுள்ள உறவுக்கடுப்பால் மட்டுமே விளைந்ததாக இருக்கலாம் என்பதையும் அறியாதவன் தான். இரண்டும் கெட்டான் வயதில் இருப்பவர்கள் சில விஷயங்களில் புத்திசாலியாகவும் சில விஷயங்களில் உணர்வுபூர்வமாகவும் இருப்பார்கள் என்பதைப் பாச்சா பாத்திரத்தின் மூலம் அ.மி. காட்டுகிறார். பாச்சா கணக்கில் சிங்கம். ஆனால் அக்காவின் பாசத்தைக் குறித்த கணக்கில் கோட்டைவிட்டு விட்ட சிங்கம்.

இந்தக் கதையில் அக்காவின் கிண்டல்கள், கோள்மூட்டல்கள், தம்பி கொள்கிற கோபம், அக்காவின் உடலிலும் நடத்தையிலும் தெரியும் பருவ மாறுதல்கள், எண்ணெய்த் தேய்த்து குளித்து விடட்டுமா எனப் பையன் இருக்கிற குளியறையில் நுழையும் அம்மா, காய்கறி நறுக்கித் தரும் அப்பா, அப்பாவின் பேனாக்கத்தி, நண்பன் பாலு, கிரிக்கெட், சீட்டுக்கட்டு, கலர் குடிக்க ஆசைப்படுவது, சிகரெட் பிடிக்கலாமா என நண்பனால் தூண்டப்படுவது, கலர் குடிக்கிற காசுக்கு வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவது, அது பேருந்தில் சிக்கி விபத்துக்குள்ளாவது, காவல்காரர்கள், விபத்தைப் பார்த்தவர்களின் அனுதாபச் சொற்கள், மருத்துவமனை, என ஒரு சிறுவயதின் நினைவேக்கக் கதை (நாஸ்டால்ஜியா) இருக்கிறது. நாஸ்டால்ஜியாவை அவ்வப்போது ஊறுகாயாகவேனும் தொட்டுக் கொள்ளாதவர் உண்டா? அதனால் இந்தக் கதை அனைவருக்குமே பிடிக்கலாம். 

விபத்தில் சிக்கிய இரு சிறுவர்களைக் குறித்தும் வேடிக்கை பார்க்கிற ஒருவர் “இரண்டும் பாப்பாரப் பசங்க” என இயல்பாகச் சொல்வதாகக் கதையில் வருகிறது.  அடுத்தவரி அவர்களுக்காகப் பரிந்து இன்னொருவர் “சைக்கிளை (வாடகைக்குக்) கொடுத்த பேமானியை உதைக்கணும்” என்பதாக.

1956-ல் தமிழ்நாட்டில் பார்ப்பான் என்ற சொல் வசைச்சொல்லாக இல்லாமல், புழங்குசொல்லாக இருந்தது என்பதைப் பிராமணரான அசோகமித்திரன் ஆவணப்படுத்தியிருக்கிறார் என்று இதை எடுத்துக் கொள்ளலாம். 

இந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள் எல்லாவற்றையும் பத்தரை பக்கத்தில் வாசகர் புரிந்து கொண்டதாக உணரவைத்தது அசோகமித்திரனின் வெற்றி.  இந்தக் கதை குறும்படமாய் எடுக்க உகந்த கதை. அத்தகைய காட்சிகளின் விரிவு இருப்பதாலும் நல்ல கதை.

– பி.கே. சிவகுமார்

– ஜூலை 6, 2025

#அசோகமித்திரன்

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 2சொல்ல வேண்டிய சில

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *