சொல்ல வேண்டிய சில

This entry is part 8 of 8 in the series 20 ஜூலை 2025

லதா ராமகிருஷ்ணன்

FAIR AND LOVELYயும் GLOW AND LOVELYயும் 

வெகுஜன ஊடகங்களும் வேறு சிலவும்…

C:\Users\computer\Desktop\download.jpg
C:\Users\computer\Desktop\download.jpg
C:\Users\computer\Desktop\images (1).jpg

Association of Ideas என்பது இலக்கியத்தில் மட்டுமல்ல இயல்பு வாழ்க்கையிலும் இரண்டறக்கலந்த அம்சமாக இருக்கிறது. Memories, Down Memory Lane, Looking Back, Nostalgia, reminiscences – ஏன், வரலாறு கூட இந்த Association of Ideas தான். ஒன்றிலிருந்து ஒன்றாய் நம்மை வெவ்வேறு நிகழ்வுகளின் ஊடாகி இட்டுச்செல்லும் பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூரச் செய்யும் ஒரு தொடரியக்கம்.  இது தனித்தனி மனிதரில் நடந்தேறினாலும் இதை சமூகக் கட்டுமானம், சமூக ரீதியான பரிமாணங்கள் இவற்றிலிருந்து அறவே ஒதுக்கிவிடுதல் சரியல்ல.

தொலைக்காட்சி சேனல்களில் Glow & Lovely விளம்பரங்களை பார்க்கும்போதெல்லாம் அதன் முந்தைய பெயரும், அதற்கு எழுந்த எதிர்ப்பும் ஞாபகம் வரும். Fair & Lovely என்பதுதான் அதன் முந்தைய பெயர். அந்தப் பெயர் வெள்ளையாய் இருக்கும் பெண்கள் தான் அழகு என்ற எண்ணத்தை உருவேற்றுவதாக எதிர்ப்பு கிளம்பி, தீவிரமடைந்து, அது தொடர்பாய் போராட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் விளைவாய் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் Productன் பெயரை மாற்றியது. ஆனால், இன்றளவும் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் எல்லாவற்றிலும் வெண்ணிறப் பெண்களே கதாநாயகிகள் – வில்லிகள். நடிப்பவர்களின் நிஜ நிறம் மாநிறமாக இருந்தாலும் அவர்கள் திரையில் ரோஜாநிறமாகவே பெரும்பாலும் காண்பிக்கப்படுகிறார்கள். குடிசை வாழ் பெண் கதாபாத்திரம் என்றாலும் கதாநாயகி மட்டும் பெரும்பாலும் வெண்ணிறமாகவே. அபூர்வமாக கதாநாயகிகள் கருமைநிறம் தாங்கி வந்தால் அது பெரும்பாலும் ’கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னைக் காணாத கண்ணில்லையே’ என்றவிதமான துயருற்ரிருக்கும், புறக்கணிக்கப்படும் அபலையின் சித்திரமாகவே இருக்கும். வெகுஜன ஊடகங்களின் இந்தக் கண்ணோட்டம் மாறாத வரை FAIR & LOVELYஐ  GLOW & LOVELY யாக மாற்றுவது மட்டும் போதுமானதா? அது போதும் என்பது போல் இந்த பெயர் மாற்றத்திற்கான போராட்டம் அதைத் தாண்டி விரிவடையாது போது இந்தக் கேள்வி எழுவது தவிர்க்கமுடியாததாகிறது.

 சமீபத்தில் கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு மரணம் அடைந்தது, கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டது, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கும் அதுவே நேர்ந்தது, ’யார் அந்த சார்?’ என்ற கேள்வி இன்னமும் அந்தரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது, சில நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டியில் நான்காம் வகுப்பு பள்ளி மாணவி வழியில் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கும் செய்தி என தலைசுற்றவைக்கும், நம்மை உச்சபட்ச கையறுநிலையில் இருப்பதாக உணர வைக்கும் அவல நிகழ்வுகள் நாளும் நடந்தேறிய வண்ணம். போர்னோ வீடியோக்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பது இருப்பதும் பார்க்கக் கிடைப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம் எனலாம். 

திரைப்படங்களும் தொலைக்காட்சி மெகா சீரியல்களும் இளந்தலைமுறையின் நிகழ்காலம் வருங்காலம் எல்லாவற்றையும் காதல் கல்யாணம் என்று சுருக்கிவிட்டதும் காரணம் என்று கூற முடியும். இதனால் காதலைக் காதலித்து காதலுக்காகக் காதலிக்கும் இளந்தலைமுறையினர் அதிகமாகிக்கொண்டேபோகிறார்கள். இந்தக் காதல் சார்ந்த பரவசமும் பயமும் பதற்றமும் கூட பாலியல் வன்முறைக்கான காரணங்களா வதையும் பார்க்கமுடிகிறது. காதலின் இலக்கு திருமணம் என்பதாய் அவசர அவசரமாக காதலித்து திருமணம் செய்துகொண்டு பிள்ளையையும் பெற்று பின் அதே அவசரத்தோடு காதல் திருமணத்திலும் ஏமாற்றம் அடைந்து  பிரிவை நாடி பிள்ளைகளை அவர்கள் செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கின்றனர்.

 இரண்டு நாட்களுக்கு முன்பு  TIMES OF INDIAவில் படிக்கக் கிடைத்த செய்தி ஒன்றில் திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்து என்னோடு பாலுறவு கொண்டார் என்று காதலன் மீது குற்றம் சுமத்திய காதலியை பார்த்து ”நீங்கள் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தும் திருமண பந்தம் தாண்டிய இன்னொருவரோடு தொடர்பு கொண்டதை Adultery எனலாம் அல்லவா?” என்று நீதிபதி கேட்டதாக கூறப்பட்டிருந்தது.

C:\Users\computer\Desktop\images (2).jpg

சமீபத்திய ரிதன்யா தற்கொலை திருமண வாழ்க்கை இன்னொரு முக்கியமான, எனில், அதிகம் பேசப்படாத பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. Marital Rape பாலியல் பலாத்காரம் என்பதே மிக கொடூரமான விஷயம். அதிலும், Unnatural Sex  விரும்பும் காமுகன் கையில் ஒரு ’நார்மல்’ பெண் சிக்கிக்கொண்டால்? இரண்டு நாட்களுக்கு முன் யூடியூப் சேனல் ஒன்றில் ஒரு செக்ஸாலஜிஸ்ட் இது குறித்து ’கிளினிக்கலா’க நிறைய தகவல்களை அளித்திருந்தார்.

திரையுலகைச் சேர்ந்தவரும் சமூக செயல்பாட்டாளருமான திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ரிதன்யா மரணம் குறித்து சட்டக்கல்வி மாணாக்கர்களிடையே சமீபத்தில் ஒரு விழிப்புணர்வுச் சொற்பொழிவு ஆற்றியது யூடியூபில் வெளியாகி யிருக்கிறது. தெளிவான, தீர்க்கமான பேச்சு என்றாலும் ரிதன்யாவின் தற்கொலையை முற்ற முழுக்க வரதட்சணைப் பிரச்சனையாகவே அவர் பேசியது ஏற்புடையதல்ல. மூன்று கோடி வரை செலவழித்து திருமணம் செய்யப்பட்டிருக்கிறது. 300 பவுன் பெருமானமுள்ள நகைகள் ரிதன்யாவுக்குப் போடப்பட்டிருக்கிறது. இன்று தங்கம் ஒரு பவுன் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போய்க்கொண்டிருக்கிறது. வரதட்சணை  கேட்பதும் கொடுப்பதும் சட்டப்படி தவறு. ஆனால் இரண்டுமே நடந்துகொண்டுதனிருக்கிறது. வசதி படைத்தவர்கள் தங்கள் மதிப்பு மரியாதைக்காகவும், ஊர் மெச்சவும் இப்படி கொடுத்துக் கொண்டே போக இதன் பாதிப்பு நடுத்தர வர்க்கத்தினர் மீதும், அடித்தட்டு மக்கள் மீதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. எனவே, ரிதன்யாவின் தற்கொலையை வரதட்சணைக் கொடுமையாகப் பார்த்தோமானால் அதற்கு அவருடைய வசதி படைத்த பெற்றோர், உற்றார் உறவினர், அவர்கள் பார்த்த வசதி படைத்த மாப்பிள்ளை, அவர் சார்ந்த சுற்றம் என எல்லோருமே கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உட்பட்டவர்களே. மாறாக, இந்த இளம் பெண்ணின் தற்கொலையை திருமண பந்தம் தொடர்பான உடலுறவு சம்பந்தப்பட்ட ஒன்றாக பார்க்கத் தலைப்படுவதே மேல். இதன் மூலம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைப்பதில் சீர்செனத்தி, வரதட்சணைப் பிரச்சனை தவிர முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய பிரச்சனையையும் நாம் பொதுவெளியில் கவனப்படுத்த முடியும். ’குற்றமும் பின்னணியும்’ என்று தொலைக்காட்சி செய்தி சேனல்களில் மர்ம- திகில் பட கதை சொல்வது போன்ற தொனியிலும் தோரணையிலும் அல்லாமல், இளம் தலைமுறையினருக்கு அடிப்படைச் சட்டங்கள், சட்ட உதவி பெறுவதற்கான வழிகள், மேற்கொள்ளவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் முதலியவை குறித்த Sensitization Programmes, Awareness Programmes, அவை சார்ந்த கையேடுகள், உதவிமையங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டியது மிகவும் இன்றியமையாதது\

சில நாட்களுக்கு முன்பு ஒரு நான்காம் வகுப்பு சிறுமி கும்மிடிப்பூண்டியில் பள்ளி செல்லும் சமயத்தில் தூக்கிச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பதாக செய்தி. ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இன்னமும் அந்தக் காமுகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை காவல்துறையினருக்கு என்று அவ்வூர் மக்கள் கொந்தளித்துப் போராடுகிறார்கள்.  இதில் ‘ப்ரைம் டிவி’க்களின் செய்திச் சேனல்களில் அந்த சிறுமி நடந்துசெல்வதும், வலுக்கட்டாயமாக தூக்கிச்செல்லப்படுவதும் தொலைதூரக் காட்சியாய் திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. சினிமாத் தனமான பரபரப்பு உண்டாக்குவதைத் தாண்டி இதனால் என்ன பயன்?  குற்றவாளி வட இந்தியனாக இருக்கலாம் என்று இந்த சேனல்களில் சில திரும்பத் திரும்பச் சொல்லவேண்டியதன் அவசியம் என்ன? இப்படித்தான் கொடூர விபத்துகளையும் திரும்பத் திரும்ப வீரசாகச காட்சிகளாக காண்பித்து பரபரப்பூட்டிக்கொண்டிருக்கின்றன முதன்மைத் தொலைக்காட்சி செய்திச் சேனல்கள். இதற்கெல்லாம் தணிக்கையே கிடையாதா?

 இத்தனை நாட்களாக ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற தங்களது நிலை மறந்து ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக இயங்கிவந்த தமிழ் அச்சு – ஒலி ஒளி ஊடகங்கள் பல தேர்தல் நெருங்க நெருங்க இப்பொழுது கொஞ்சங்கொஞ்சமாக ஆளுங்கட்சி எதிர் செய்திகளையும் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் முன் கைகட்டி வாய் புத்தி அடிபணிந்தி ருப்பதாக விலங்கிட்டு கேலிச்சித்திரம் வெளியிட்டிருந்த விகடன் இணைய இதழ் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற ஆணைப்படி அந்த கேலிச்சித்திரம் அகற்றப்பட்டும் விகடன் குடும்பத்தைச் சேர்ந்த ஜூனியர் விகடனில் அதை வெளியிட்டு தன் கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிக்கொண்டது. அந்தப் பத்திரிகையில் இப்போது முக்கால் பகுதி மார்பகங்களை வெளிக்காட்டும் நடிகைகளின் படங்களை ஒரு முழுப்பக்கம் வெளியிட்டு அவர்கள் கூறுவதாக அரசியலாவ்திகளின் கூற்றுக்களை, அரசியல்வாதிகள் பற்றிய கூற்றுகளை வெளியிடுகிறார்கள். இது பொதுவான அளவில் வெகுஜனப் பத்திரிகைகளின் இரட்டைவேடத்தையும், குறிப்பான அளவில் ஜூனியர் விகடனின் இரட்டை வேடத்தையும் அம்பலமாக்குகிறது.

அரை நிர்வாண பெண்களின் படங்களை வெளியிட்டு விற்பனையை அதிகரிக்க விழைந்தால் அதை நேரடியாகச் செய்யவேண்டியதுதானே? அரசியல்வாதிகளின் அசிங்கங்களை, அபத்தங்களை விமர்சிக்க விழைந்தால் அதை நேரடியாகச் செய்ய வேண்டியதுதானே? அரசியல்வாதிகள் என்றால் அவர்களை எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாமா? சொரணை உள்ள அரசியல்வாதிகள் இந்த அணுகுமுறையை  எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும்.  அரசியல்வாதிகளுக்காவது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையாவது மக்கள் நீதிமன்றத்தில் கூண்டிலேறி நிற்கவேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு பக்கத்தில் பெண் சார் பாலியல் வன்புணர்வு செய்திகளைப் பரபரப்பாக கண், காது மூக்கு வைத்து வெளியிட்டுக்கொண்டே இன்னொரு புறம் பெண்ணை போகப் பொருளாகக் காண்பிக்கும் போக்கை ஊடக அறமாகக் கொண்டுள்ள பல பெரிய பத்திரிகைகளுக்கு யாருக்கும் பதிலளிக்கவேண்டிய பொறுப்பேற்பு இல்லை போலும்.

***

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 3

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *