அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
This entry is part 10 of 12 in the series 27 ஜூலை 2025

பி.கே. சிவகுமார்

மஞ்சள் கயிறு என்கிற அசோகமித்திரன் கதையைக் குறித்து எழுதுவதை ஏற்கனவே ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டேன். இப்போதும் இதை எழுதினால்தான் அடுத்த கதைக்குப் போகமுடியும் என எழுதுகிறேன்.

காரணம், கதை அல்ல. கதையின் கரு. எனக்கு ஏழைகள் படும் பாட்டைக் குறித்த கதைகளை வாசிப்பது ஒரு மன உளைச்சல் என்றால் அதைக் குறித்து எழுதுவது இன்னொரு மன உளைச்சல்.

சாதி வேற்றுமை பாராட்டும் கொடுமைகளை நாம் பார்க்கிறோம். அதே அளவுக்குக் கொடுமை – ஒரே சாதிக்குள் செல்வம் மிக்கவர் செல்வம் இல்லாதவரை நடத்தும் விதம். இதை நான் என் அனுபவத்திலும் பார்த்திருக்கிறேன். என் தந்தையாரும் பெரிய பாட்டானாரும் இவற்றை அகங்காரத்தாலும் கோபத்தாலும் எதிர்கொண்டு சண்டையிடுவார்கள். அவர்கள் அப்படி எதிர்கொண்டே, செல்வத்தில் குறைந்தபோதும், தங்களுக்கான மரியாதையைச் சம்பாதித்துக் கொண்டார்கள். ஜெயகாந்தன் ஒருமுறை அற்பத்தனங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிறேன் என்று சொன்னபோது என்னால் அதை இந்த உதாரணம் வைத்தே புரிந்து கொள்ள முடிந்தது.

ஒடுக்க்ப்படுகிற சாதிகள் போராடும்போதும், எதிர்த்துக் கேள்வி கேட்கும் போதும், என்ன திமிர் பார்த்தாயா என்ற வாதம் சாதியவாதிகளால் வைக்கப்படுகிறது. அது திமிர் இல்லை. ஒடுக்கப்பட்ட சாதியினர், அவமானங்களை அகங்காரத்தால் எதிர்கொள்கிற செயல் அது. அதுவே அவர்கள் காட்டுகிற எதிர்ப்பின் முதல் வடிவம். அது சாதியவாதிகளை நிலைகுலைய வைக்கக் கூடிய சக்தி கொண்டது.

ஆனால் – அப்படி எதிர்கொள்கிற மனவுறுதி இல்லாதவர்கள் பணிந்து போகிறார்கள். அல்லது பொய் சொல்கிறார்கள். அப்படிப் பணிந்துபோய், வேறுவழியின்றிப் பொய் சொல்கிற ஒருவரின் கதை இது.

குண்டு சாஸ்திரி என்கிற செல்வாக்குள்ள பிராமணருக்கும் சுப்பு என்கிற ஏழை பிராமணருக்கும் இடையே நடக்கிற கதை. பிராமண சாதிக்குள்ளும் இத்தகைய செல்வத்தால் வேறுபாடுகள் உண்டு என்பதை அசோகமித்திரன் இக்கதையின் போக்கில் விரிவாக எடுத்துக் காட்டுகிறார். 

இந்த இடத்தில் – மார்க்சிஸ்டுகள் வர்க்க பேதத்தை ஒழிக்கிறோம் எனச் சொல்லி, அதைவிட முக்கியமான சாதிபேதத்தை மறந்துவிட்டார்கள் என அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நினைவுக்கு வருகிறது. 

தமிழ்நாட்டில் ஓர் ஏழைக்கும் இன்னொரு சாதியைச் சார்ந்த செல்வந்தருக்கும் ஒரு பிரச்னை எனப் போனால், ஏழையின் சாதியைச் சார்ந்த செல்வந்தர் என்றாலும் இன்னொரு சாதியைச் சார்ந்த செல்வந்தர் பக்கமே 99% நிற்பார். இதில் என் சொந்த அனுபவமும் உண்டு. அதனால் வர்க்கபேதம் ஒழியும்போது சாதிகள் மதிப்பிழந்துவிடும் என மார்க்சிஸ்டுகள் நினைத்ததில் நியாயமுண்டு. அசோகமித்திரனின் இந்தக் கதை ஒரே சாதிக்குள் இருக்கிற வர்க்கபேதத்தையே காட்டுகிறது.

1958-ல் எழுதப்பட்ட எட்டரை பக்க அளவு கொண்ட இந்தக் கதையில், அந்தக் காலத்தில் மேற்கு மாம்பலம் பொட்டல்காடு, அப்போதுதான் ஒன்றிரண்டு வீடுகள் வரத் தொடங்கிய பகுதி போன்ற சரித்திர உண்மைகளும் தெரியவருகின்றன. இது அச்சில் வந்த அசோகமித்திரனின் ஆறாவது கதை.

“ஒரு வண்ணானிடம் அப்படி (கவனிக்காத மாதிரி) நடந்து கொள்ள முடியாது” என்கிற வரியும் வருகிறது. நன்றாகக் கவனிக்கவும். அசோகமித்திரன் அந்தக் காலத்தில் வழக்கில் இருந்ததை அப்படியே எழுதியிருக்கிறார் என யாரும் இதற்குச் சொன்னால் சரி என்று போய்விடுவேன். இத்தகைய மோசமான சாதி விளிச் சொற்கள் சாதிப்படிநிலையின் கீழ் இருந்தவர்களை நோக்கி மிக சகஜமாக பிராமணர்களாலும் பிற சாதிகளாலும் பயன்படுத்தப்பட்டன என்பதை இவ்வரி காட்டுகிறது என எடுத்துக் கொள்வேன். இதற்கு எதிராகப் பெரியாரும் அவர் இயக்கமும் பழம் இலக்கியங்களில் உள்ளதும், பாரதியார் அசோகமித்திரன் ஞானக்கூத்தன் (“நேரம் கடந்துண்ணும் பார்ப்பான்” என்ற கவிதைவரி என நினைக்கிறேன்) உள்ளிட்ட பல பிராமணர்கள் பயன்படுத்திய, அசோகமித்திரனின் இன்னொரு கதைப்படியே – 1957வாக்கில் வரை இழிசொல்லாக இல்லாத பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். அந்தக் காலத்தில் பாப்பாத்தி என்ற பெயர் வைக்கப்பட்ட பெண்கள் இருந்தார்கள். எண்பதுகளில் நானே பார்த்திருக்கிறேன். பெரியாரின் பேச்சும் எழுத்தும் தொகுப்புகளாகக் கிடைக்கின்றன என்பதால் இன்றைக்குப் பார்ப்பான் என்கிற வார்த்தை தங்களைப் புண்படுத்துவதாக நினைக்கிற பிராமணர்கள் – பெரியாரை ஏதோ எக்ஸ்போஸ் செய்வதுபோல – அதை எடுத்து வெளியிடுகிறார்கள். மாறாக – அந்தக் காலத்தில் பிராமணர்கள் பிற சாதிகளை எப்படி அழைத்தார்கள், நடத்தினார்கள், சொந்த சாதியிலேயே செல்வம் இல்லாதவர்களை எப்படி நடத்தினார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். பெரியார் ஏதோ பிராமணர்கள் மீது ஒருமுனைத் தாக்குதல் நடத்தியமாதிரி சித்தரிக்கிறார்கள். பெரியார் நடத்தியது பல நூறாண்டுகால நிகழ்வுகளுக்கு எதிர்த்தாக்குதல் என்கிற உண்மையை மறந்துவிடுகிறார்கள்.  இதை யாரும் எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள இயலாத அளவுக்கு அவர்களை மீறி அவர்கள் சாதிப்பாசம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அசோகமித்திரன் அந்தக் காலத்தில் எழுதிய கதைகளை வாசிக்கும்போது தெரிந்தோ தெரியாமலோ அக்கால சமூக வாழ்வின் அடையாளங்களைச் சொல்கிறார். அதன் மூலம் நாம் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக அசோகமித்திரனுக்கு நாம் நன்றியே சொல்ல வேண்டும். 

இந்தக் கதையில் குண்டு சாஸ்திரி – ஹோமம், திவசம், இறுதிக்காரியம் ஆகியன செய்கிற நல்ல வேளையில் இருப்பவர். மேற்கு மாம்பலத்தில் நிலம் வாங்கிப் போட்டிருப்பவர். அறுந்து போன செருப்புடன், மனைவி விட்டுப் போன பின்னும், தனிக்கட்டையாக, குண்டு சாஸ்திரி செய்கிற வேலைகளில் அவர் சொல்வதைச் செய்கிற எடுபிடி ஆளாக இருப்பவர் சுப்பு. அவரிடம் பணம் இல்லை. மனைவி இல்லை. குண்டு சாஸ்திரியில் இருந்து ஹோட்டல் சிப்பந்திவரை அவரை ஏமாற்றுகிறார்கள். (சாதியைத் தாண்டிய வர்க்க பேதம்). பசியால் இருக்கும்போது கேட்டும் குண்டு சாஸ்திரி ஒரு ரூபாய் கடனாகக் கொடுப்பதில்லை. சுப்புவை அவர் பொருளாதார நிலைமையால் விட்டுப்போன மனைவி – அவர் சென்று அழைத்தும் வரவில்லை. தூக்கு மாட்டிக் கொண்டு சுப்பு சாக முயன்றது தோல்வியில் முடிகிறது. குண்டு சாஸ்திரி சுப்புவுக்குப் பொதுவில் மரியாதை தருவதில்லை. அயோக்கியன் என்கிறார். சுப்பு சோறு தண்ணிக்கு வழியில்லாத பிராமணர் என்று உதவினால் சுப்புவுக்கு இவ்வளவு திமிரா என்று கேட்கிறார். கதை இதையெல்லாம் விரிவாகச் சொல்லிச் செல்கிறது. 

பிறகு அடுத்த வேலைக்கு (சுமங்கலி பூசைக்கு) குண்டு சாஸ்திரி கையால் நூற்கப்பட்ட 100 மஞ்சள் கயிறு வேண்டும் எனக் கேட்கிறார். இருக்கிறது எனச் சொல்லி, கையால் நூற்கப்படாத இவர் மஞ்சள் நிறமேற்றிய 50 கயிறை, 50தான் சொன்னீர்கள் என்று தந்து விடுகிறார் சுப்பு.

பொய்மையும் வாய்மையிடத்து என்றும், குண்டு சாஸ்திரிக்கு இது வேண்டும் என்றும் வாசகர் மனம் இறுதியில் சமாதனமடைகிறது. ஆனால் செருப்பில்லாமம் கல்லிலும் முள்ளிலும் நடக்கிற சுப்புவின் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அசோகமித்திரன் அவருக்கு நன்றாகத் தெரிந்த பிராமண சாதிப் பின்புலத்தில் இக்கதையை எழுதியிருக்கிறார். ஆனால் இது எல்லாச் சாதிகளிலும் நடப்பதுதான்.

அதனால்தான், வர்க்கபேதம் குறித்து மார்க்சிஸ்டுகள் சொல்வதை – இந்தியாவின் சாதியச் சூழ்நிலையிலும் – மறுபரிசீலனை செய்யலாம் எனத் தோன்றுகிறது.

– பி.கே. சிவகுமார்

-ஜூலை 12, 2025

– அசோகமித்திரன் மொத்தச் சிறுகதைகள் – தொகுதி 1 – கவிதா பப்ளிகேஷன்

#அசோகமித்திரன்

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 5நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *