சோம. அழகு
இந்தக் கண்றாவியான கலாச்சாரம் எப்படி எப்போது துவங்கியது? அதான்…. எதற்கெடுத்தாலும் ‘………. எப்படி?’ என்று முடியுமாறு தலைப்பிட்டு கருத்தரங்கம், பயிலரங்கம், பயிற்சிப் பட்டறை என நடத்தும் பண்பாட்டைக் கூறுகிறேன். இந்த எண்ணவோட்டத்தின் விதை முதன்முதலில் என்னுள் விழுந்த பள்ளிக்காலத் தருணத்தை நினைவுகூர்தல் எனது நிலைப்பாட்டின் நியாயத்தைப் புரிய உதவும். இப்போது காலத்தில் பின்னோக்கிப் போகப் போகிறோம் ஆதலால் நீங்கள் கழுத்தை ஒருக்களித்து விட்டத்தைப் பார்க்கலாம்தான். ஆனால் அப்படி வைத்தபடியே வாசிக்க முடியாது என்பதால் இப்படியே தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எங்கள் பள்ளி வளாகத்தினுள் ஒரு கல்வியியல் கல்லூரியும் இருந்தது. அக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் தமது கற்பித்தல் செயல்முறையின் பயிற்சியை மேற்கொள்ள பள்ளி மாணவிகளாகிய நாங்கள்தாம் சோதனை எலிகளாகப் பாவிக்கப்பட்டோம். அவர்களது உள்மதிப்பீட்டு நடைமுறை தேர்வுகளுக்காக மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் முழுக்க வெவ்வேறு கல்வியியல் மாணவிகள், எங்கள் புத்தகங்களில் இருந்து ஏற்கெனவே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பாடத்தலைப்பில் எங்களுக்கு வகுப்பெடுப்பார்கள். எங்களது ஆசிரியர்கள் வகுப்பின் கடைசி இருக்கையில் அமர்ந்து ஆசிரியர்களாகப் போகும் அம்மாணவிகளை மதிப்பிடுவார்கள்.
அந்த நாளில் நடக்கவிருக்கும் வகுப்புத் தேர்வுகள் எல்லாம் ரத்து ஆகிவிடும் என்பதால் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். முந்தைய நாள் தரப்பட்ட வீட்டுப்பாடம் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. மாறாக வண்ணப் படங்கள், ஓவியங்கள், அறிவியல் உபகரணங்கள், மாதிரிகள்(models) என பலவும் காணக் கிடைக்கும். சும்மா வெறுமனே உட்கார்ந்து எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது?
நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கையில் அவ்வாறான ஒரு நன்னாளில்தான் “இவ்வகையான பயிற்சி அல்லது பட்டப்படிப்பின் பயன்/நோக்கம் தான் என்ன?” என்னும் கேள்வி என்னுள் உதித்தது. ஷேக்ஸ்பியரின் “Under the greenwood tree” என்ற ஆங்கிலக் கவிதையை எங்களுக்கு நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவி ஒருவர். அக்கவிதைக்கு முழு நியாயம் செய்யும் நோக்கில் நயத்தோடு வாசிக்க முற்பட்டார். மரபுக் கவிதை ஆகையால் தமது தொனியை அதற்கேற்றவாறு ஏற்ற இறக்கங்கள் கொண்டதாக மாற்றி நாடகத் தன்மையான குரலைச் சூடிக் கொண்டார். அவரது மென்மையான குரலுக்கு முற்றிலும் மாறுபட்டதொரு கட்டைக் குரலில் அக்கவிதை ‘சிந்து பைரவி ராகத்தை சிவரஞ்சனி ராகத்தோட கலந்து அட்டானா ராகத்தை அரக்கோணத்துல பிடிச்சு….’ எனச் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது. அதிலும் ஒவ்வொரு முறையும் “Come hither” என்பதைக் கனத்த குரலில் கேட்க நேர்ந்த போதெல்லாம் சிரிப்பை அடக்கிக் கொள்ள நாங்கள் பட்ட பாடு…. ஜெகப்பிரியரே பரிதாபப்பட்டிருப்பார். இதற்கிடையில் தத்ரூபமாக அக்கவிதையைக் கண்முன் கொணரும் முனைப்பில் ஒரு விளக்கப்படம் வேறு! மஞ்சள் அட்டை(chart) ஒன்றில் இலைகள் அற்ற மரத்தின் (குளிர் காலத்தைக் குறிப்பதற்காக இருக்கலாம்!) அடியில் பெரிய தலையும் சூம்பிப் போன கை கால்களையும் உடைய ஒரு சிறுவன் படுத்திருக்க, அருகில் சிட்டுக்குருவி ஒன்று நின்று கொண்டிருப்பதாக அம்மாணவியால் தயார் செய்யப்பட்ட ஓர் ஓவியம். அவனில் பாதி இருந்த சிட்டுக்குருவி தன் உருவளவை எண்ணி வியந்து கொண்டிருந்தது அப்பட்டமாக அதன் கண்களில் தெரிந்தது!
பாடத்தைத் துவங்கும் முன் வகுப்பிலுள்ள ஒன்றிரண்டு மாணவிகளின் பெயர்கள், பொழுதுபோக்குகள், வசிப்பிடம் என அறிமுக அளவளாவல்களை அவசர அவசரமாக பெயரளவில் மேற்கொண்டது; பாட வேளையின் போது இடையில் வலிந்து திணிக்கப்பட்ட சிரிப்பையே வரவழைக்காத சில நகைச்சுவைகள்; தாம் நடத்தும் பாடத்தில் வரும் கதையின் முதல் வரியில் (மட்டுமே!) அரண்மனை வந்ததால் – போர்வீரர்கள், பணியாட்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்குமாறு துல்லியமான நுணுக்கங்களுடன் ஒரு பெரிய அரண்மையின் மாதிரியைச் செய்து கொண்டு வந்தது (அக்கதையில் அரண்மனைக்கென்று ஒரு முக்கியத்துவமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!); பட்டுத் துணியையும் பல நிறங்களிலான பாசிமணிகளையும் கொண்டு கோர்க்கப்பட்ட ஜகஜோதியான அக்பரை வரலாற்று வகுப்பு முழுக்க எங்களை நோக்கிப் பாவமாகப் பார்க்க வைத்தது(ஆறிலிருந்து ஏழு மணி நேரமேனும் எடுத்திருக்கும் அதைச் செய்து முடிக்க!); அவர்களால் நடத்தப்பட்ட பாடத்தைக் கவனிக்காவிட்டாலும் கூட எளிதில் பதில் அளித்துவிடக் கூடிய சாரமற்ற கேள்விகளையே கேட்டது; அதற்கு நாங்கள் அளிக்கும் அறிவார்ந்த(!) பதில்களைக் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்து எங்களைப் பாராட்டித் தள்ளியது; இறுதியாக, தம் முகத்தில் ஒரு பெருமிதத்தை அணிந்து தமது கற்பிக்கும் ஆற்றலைத் தாமே வியந்து மனநிறைவை வெளிப்படுத்தி விடைபெற்றுக் கொண்டது – தொடர்ந்து வந்த ஒவ்வொரு ‘ஆசிரிய’ மாணவியும் வகுப்பைக் கொண்டு சென்ற விதம் மேற்கூறிய வகையில் ஒரே மாதிரியான வினோதங்களையும் நெருடல்களையும் உள்ளடக்கியதாக இருந்தன.
இவ்வாறாக இயற்கைக்குப் புறம்பாகக் காணப்பட்ட இயங்குமுறையின் பின்னுள்ள காரணத்தை ஒரு நாள் எதேச்சையாக எங்கள் கைகளில் கிடைத்த ஒருவரின் மதிப்பெண் அட்டவணையின் வாயிலாக அறிந்தோம். எங்கள் ஆசிரியர் அப்பயிற்சி மாணவிக்கு மதிப்பெண் வழங்கிய பின் மறந்து போய் அட்டையை அங்கேயே வைத்து விட்டுச் செல்ல, அதற்குரியவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்கும் முன்பு அதைப் பார்க்க நேரிட்டது. நிரல்களும் நெடுக்கைகளுமான அந்த அட்டவணையில் பல பகுப்புகள் இருந்தன : பாடம் குறித்த அறிவு, எடுத்துரைக்கும் திறன் (உட்பிரிவு : மொழித் திறன், குரல் வளம், உச்சரிப்பு, தொனி), தெளிவான அணுகுமுறை, வகுப்பை நிர்வகிக்கும் திறன், (நூதனமான!?) கற்பித்தல் வழிமுறையில் புகுத்தப்பட்ட புதுமையின் அளவு, பாடத் திட்டம்(lesson plan), துணைக் கருவிகள், காட்சிப் பொருட்கள்,……
கடைசி இரண்டு பிரிவுகளுக்கு மட்டும் அளவுக்கு அதிகமாக அவர்கள் முக்கியத்துவம் தந்ததிலும், வலிந்து மேற்கொள்ளப்பட்ட துருத்தலான முயற்சிகள் இக்கற்பித்தல் பயிற்சியின் ஒரு பகுதியாக இருந்ததிலும் அவர்களது செயற்கைத்தனங்கள் அனைத்தும் விளங்கி நின்றன. எங்கள் ஆசிரியர்கள் யாரும் இவ்வாறு செய்வதே இல்லையே என்று யோசித்தாவது முன்னரே விளங்கியிருக்க வேண்டும். ஆசிரியர்களான பின் இவை எதையும் செய்யப்போவதில்லை அல்லது தேவை இருக்கப் போவதில்லை எனில் இந்தச் சம்பிரதாயங்கள் எதற்காக?
ஒரு முறை கணித வகுப்பில் ஒத்த கோணங்கள், மாற்று கோணங்கள், உள்ளேறு கோணங்கள் ஆகியவற்றுள், சம கோணங்கள் இருக்கும் இடங்களில் மட்டும் பொருந்தும் வகையில் வெட்டப்பட்ட ஒத்த தெர்மாகோல் துண்டுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட மாதிரியின் உதவியோடு விளக்கப்பட்டது. துணைப்பொருட்களின் (additional materials) சரியான பயன்பாட்டிற்கான எடுத்துக்காட்டு இது. அதை விடுத்து என்ன பாடம், என்ன தலைப்பு என்றெல்லாம் பாராமல் கண்டிப்பாக ஒரு மாதிரி (model) செய்தே ஆக வேண்டும் என்று அதற்கு மதிப்பெண் ஒதுக்கினால் என்ன செய்வார்கள், பாவம்? இது என்ன கைவினைப் பயிற்சிப் பட்டறையா?
இந்நடைமுறையை PPTகளின் பயன்பாட்டோடு ஒப்பிடலாம். ஒரு விரிவுரையின் போது பெரும்பாலும் அவையோரை நேருக்கு நேர் எதிர்கொண்டு உரையாற்றிக் கொண்டே, அறிவியல் கருத்தாக்கங்களை விளக்கவும் கணிதத்தில் எடுத்துகாட்டாக ஒரு சார்பின் வரைபடத்தைப் பற்றிப் புரிய வைக்கவும் மட்டும் PPTன் செயல்திறனை மிக நேர்த்தியாக பயன்படுத்தலாம். ஆனால் தற்காலத்தில் நமக்கு எழுத்துகூட்டி வாசிக்கத் தெரியாதததால்(!) பெரும்பாலானோர் மொத்த உரையையும் PPTல் ஏற்றி ஒவ்வொரு வரியாக வாசித்துத் தருவதில்தான் எத்தனை களிநயம்!
கற்பித்தலைப் பொறுத்தமட்டில் ஒரே விதிதான் : பிறர்க்குப் புரியும்படி விளக்க வேண்டும். நல்ல மொழி ஆளுமையும் சான்றாண்மையும் வாய்க்கப் பெறின் ஒரு கருத்துருவை அதன் அடிப்படை வரை சென்று எளிதாக உடைத்துப் புரிய வைக்க இயலும். குழந்தைகளிடம் கொஞ்சம் அதிக பொறுமையும் கனிவும் தேவைப்படும். அவ்வளவுதானே? ‘குழந்தைகளின் வளர்ச்சி, உளவியல் சார்ந்த விஷயங்களைத் தனியாகப் படிக்கத்தான் இப்படிப்பு’ என்னும் வாதத்தை முன் வைப்போருக்கு என் கேள்வி, ‘குழந்தைகள் என்ன வேற்று கிரக வாசிகளா?’.
‘சொல்லித் தரத் தெரியாது’ என்ற ஒன்று கிடையவே கிடையாது. ‘விஷயம் தெரியாது’ என்பதன் வழ வழ கொழ கொழ மழுப்பல் வடிவம்தான் அது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ‘எவ்வாறு கற்பிக்க வேண்டும்?’ எனக் கற்பிக்க என்ன இருக்கிறது? கல்வியில் பல இயல்கள் இருக்கலாம். கல்வியே எப்படி ஓர் இயல் ஆக முடியும்?
இந்த மாதிரியான எந்திரத்தனமான நடைமுறைகள் எல்லா திசைகளிலும் ஊடுருவிச் சென்றதில் விளைந்தவைதான் – ஆராய்ச்சி செய்வது எப்படி?, தகவல்களைச் சேகரிப்பது எப்படி?, சேகரித்தவற்றைப் பகுப்பாய்வு செய்வது எப்படி?, துணை நூற்பட்டியல் தயார் செய்வது எப்படி?, ஆய்வேடுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டுவது எப்படி?…. என நீட்டி முழக்கி ஆராய்ச்சி முறையியல் (Research Methodology) என்ற ஒன்றை வகுத்தே விட்டார்கள்.
தொல்காப்பியத்தில் தொழில்நுட்பம், அகநானூற்றில் அகப்படும் அறிவியல் கூறுகள், சீவகசிந்தாமணியும் செயற்கை நுண்ணறிவும், The Propulsion parameters of Penguin poop, Harry Potter = Jesus Christ – ஆராய்ச்சி முறையியலை ஆர்வம் பொங்க முறைத்து நெறித்துப் பார்த்ததில் கிட்டியவையாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறாக, சில கட்டுரைகள் வாசிப்பதற்கு சுவாரஸ்யமில்லாமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் தலைப்பே வாசிக்கும்படி இல்லாமல் போகும் உதா‘ரணங்களும்’ உண்டு : சங்க இலக்கிய கவிதைகளில் தென்படும் மெய்ப்பாட்டுக் கூறுகளின் குறுக்குவெட்டுப் பார்வையில் பெண்ணியக் கருத்தாக்கங்களும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களும், A gynocentric interrogation on the transformation of Women – From subjugation to socio environmental catalysts in the select works of XXX, A paradigmatic and syntagmatic analysis of diasporic dystopian political disintegration from the perspective of YYY’s works.
எல்லா ஆசிரியர்களும் கண்டிப்பாகப் பணிக்காலம் முழுக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா என்ன? மாணாக்கர்களுக்குத் தாம் கற்பிக்கும் புலத்தில் தெளிவை உண்டாக்கி அடிப்படைகளை வலுப்படுத்தித் தருதலே ஒரு நல்ல ஆசிரியரின் ஆகச் சிறந்த பணி. நன்றாகச் சொல்லிக் கொடுப்பதே அருகிக் கொண்டு வரும் சூழலில் அரிதாகத் தென்படும் தேர்ந்த ஆசிரியர்களை அவர்களது பணிக்காலத்தை நிம்மதியாகக் கழிக்க விடாமல் சும்மா நச நசன்னுட்டு…. தம் புலம் சார்ந்த அறிவை மேம்படுத்தியும் தம்மைப் புதுப்பித்துக் கொண்டும் வந்தால் போதாதா? அவ்வப்போது ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசுரித்துக் கொண்டே இருத்தல் வேண்டும் என நிர்பந்தித்தால்….. இல்ல, ஒண்ணும் சொல்லல! Publish or Perish என்பதெல்லாம் கடைந்தெடுத்த மூடத்தனம். அம்புட்டுதேன்! ஆராய்ச்சி என்பது மிக இயல்பாக நிகழ வேண்டியது. இடைவிடாத ஆர்வம் ஒரு கருத்துப் படிவத்தின் அடுத்த கட்டம் நோக்கித் தானாக இட்டுச் செல்லும். வராததை வா வா எனக் குட்டிக்கரணம் போட்டு இழுக்கும் வேலையைத்தான் எல்லா முறையியல்களும் கற்றுக் கொடுக்கின்றன.
இப்போதும் நான் ஆசிரியப் பயிற்சி, கல்வியியல் பட்டப்படிப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றில் சேர்பவர்களைப் பற்றியே பேசவில்லை. அடிப்படைத் தகுதியாக ஒன்று நிர்ணயிக்கப் படும் போது அதைப் பூர்த்தி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. நான் சாடுவது இந்தக் கட்டமைப்பை. கண்டவற்றிற்கும் ஒரு கையேடைத் தயார் செய்யும் மனநிலைதான் இக்கட்டமைப்பின் அடிப்படைப் பிரச்சனை. இத்தோடு நிறுத்தினால் கூட பரவாயில்லை.
இன்னும் ஒரு படி மேலே சென்று – கவித்துவமாகக் கவிதை எழுதுவது எப்படி?, சிலாக்கியமாகச் சிறுகதை எழுதுவது எப்படி?, பளிச்செனப் படம் வரைவது எப்படி?, காத்திரமாகக் கட்டுரை எழுதுவது எப்படி? என்றெல்லாம் கூட கற்றுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் என்ன லாபம் என்றெல்லாம் சிந்தித்திருக்கிறேன். ஆனால் ஒரு முக்கோணத்தை வரைந்து ஒரு மூன்று வயது குழந்தையின் குதூகலத்துடன் அதற்கு வண்ணம் தீட்டி எண்பது மில்லியனுக்கு விற்றிருக்கிறார்கள் எனக் கேள்விப்பட்ட போது……
கலைத்திறனும் படைப்பாற்றலும் ஓர் உய்த்துணர்வாக ஒவ்வொரு மனிதனுள்ளும் உறைந்திருக்கும். அல்லது இல்லாமலும் இருக்கும். ஒருவருக்கு கணிதம், அறிவியல், வரலாறு, இலக்கியம் ஆகியவற்றைக் கற்பிக்கலாம்; வள்ளுவன், கம்பன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரைக் கை காண்பித்து வாசிக்கச் சொல்லலாம்; மொசார்ட், ப்ராம்ஸ், விவால்டி ஆகியோரை அறிமுகப்படுத்தலாம். இவர்களுடன் பயணிக்கும் போது ஏதோ ஒரு தருணத்தில் பொறி ஒன்று ஆழ்மனதில் பிறக்கலாம். மிக இயல்பான நகர்வாக ஒரு துறையை நோக்கிச் செல்லுதல் நிகழும். அப்படித்தானே நிகழ வேண்டும்? லியோனார்டோ டாவின்சி, மிக்கேல் ஆஞ்ஜெலோ, ரவிவர்மா ஆகியோரின் படைப்புகளை ரசித்துக் களித்தவாறே வாழ்நாள் முழுவதையும் கழிப்பது ஒன்றும் மாபெரும் பாவம் அல்ல. கையில் தூரிகை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. அதையும் மீறி கட்டாயத்தில் எடுத்தால் வெற்றிலை குதப்பித் துப்பிய கறைகளை எல்லாம் ஓவியங்கள் என நம்ப வைக்க ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கும். ‘உள்ளுணர்வு’ என்ற அற்புதமான வார்த்தையை மொத்தமாகக் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சிகள்தாம் இப்போது அரங்கேறிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
நேர்மறையாகச் சிந்திப்பது எப்படி?, தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி? தெளிவாக உரையாடுவது எப்படி? உணவகத்தில் பரிவுடன் பரிமாறுவது எப்படி? …. எனப் பொதுப்படையாகத் துவங்கி மெல்ல மெல்ல நம் வீட்டினுள்ளும் நுழைந்து, கணவனிடம் களிப்புடன் பேசுவது எப்படி? மனைவியிடம் மன்றாடுவது எப்படி?, குழந்தைகளைக் கடிந்து கொள்ளாமல் அன்பாகத் திருத்துவது எப்படி? ஐந்து மாதக் குழந்தைக்கு பெருக்கல் வாய்ப்பாடு சொல்லித் தருவது எப்படி?…… என கண்டதற்கும் ஒரு முறையியல்! எதற்கெடுத்தாலும் ஒரு வரையறை! இப்படி எல்லாவற்றையும் நிறுவனமயமாக்குவதைப் பார்த்தாலே சலிக்கிறது. இனி குழந்தை வளர்ப்பில் பட்டப்படிப்பு முடித்தால்தான் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையையே தருவார்கள் போலும்!
எந்த ஒரு மனிதனிடமும் அடிப்படையாக இருக்க வேண்டிய குணமான பச்சாதாபத்தை(empathy) எல்லாம் எப்படி கற்றுத் தர முடியும்? இன்முகத்துடன் தன்மையாகப் பேச, பிறரைப் பரிவுடன் நடத்த, தமது சிந்தனையைத் திறம்பட எடுத்துரைக்க என இவை போன்ற பண்புகள் ஒருவரிடம் இயல்பாகக் காணப்படவில்லை எனில் அவர் ஒரு குறிப்பிட்ட பணிக்கு மட்டுமல்ல… எந்தப் பணிக்கும் லாயக்கு இல்லை என்றுதானே பொருள்? (அறிவு)ஆற்றல் இன்மையைச் சரி கட்ட ஏதுவாய்க் கற்றுத் தரப்படும் செயற்கைப் பூச்சு வேலைகள் எதற்கு?
எல்லா பயிற்சிகளையும் ஒரேடியாகப் புறந்தள்ளவும் இல்லை. ஒவ்வொரு வருடமும் மாதம் ஒருமுறை தேசிய அளவில் பேரா. குமரேசன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தும் MT&TS(Mathematical Training and Talent Search) என்ற கணிதப் பயிற்சி படிமுறையில், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை கணிதவியல் மாணாக்கர்களுக்கு பகுப்பாய்வியல், இயற்கணிதம் போன்றவற்றின் அடிப்படைகள் மிகத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஒரு கணக்கையோ தேற்றத்தையோ எவ்வாறு அணுக வேண்டும் என மாணவர்களின் சிந்தனை ஓட்டத்தைச் செப்பனிடும் பணியில் பல பேராசிரியர்கள் தமது கோடைகால விடுமுறையைக் கழிக்கிறார்கள். ஒரு சிறந்த பயிற்சிப் பட்டறைக்கான எடுத்துக்காட்டு இது.
இது போல் அல்லாத “பெரும்பாலான சம்பிரதாய ‘எப்படி’களை சமூகத்தில் இருந்து களைவது எப்படி?” என யாராவது கருத்தரங்கு நடத்தினால் கொள்ளாம்.
- சோம. அழகு
- இலக்கியப்பூக்கள் 344
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 4
- நிறமாறும் அலைகள்
- …………….. எப்படி ?
- *BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]
- வண்ண நிலவன்- வீடு
- தவம்
- கல்விதை
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 5
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 6
- நிரந்தரப் பருகலின் சுய நீச்சல்
- தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை