வண்ண நிலவன்- வீடு

வண்ண நிலவன்- வீடு
This entry is part 6 of 12 in the series 27 ஜூலை 2025

வீடு என்பது வீடல்ல;

மாற்றாங்கே ஜீவன்களின் காலடி சத்தம் கேட்க வேண்டும். சிரிப்பு அழுகை, சண்டை,சச்சரவு, உறவுகள்,அம்மா,அப்பா, மாமா,மாமி, அத்தை, அத்தான், அம்மச்சி, அப்பத்தா, 

தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி சுவாசங்களால் பின்னி பிணையப்பட்டது வீடு. 

இங்கே, ஒவ்வொரு வீட்டின் கதவுகளுக்கு ஒவ்வொரு சத்தம். 

“ஆழிக்கம்பி கதவுக்கு கீச்கீச்சு சத்தம். 

பட்டக சாலை கதவுக்கு ,கோயில் கதவுகளைத்திறக்கிற போது வருகின்ற கனமான சத்தம்.

ரெண்டாம்கட்டக் கதவுக்கு இழுத்து மூடுகிறவரை ஒரே அழியாத சத்தம். 

எல்லாவிதமான சத்தங்களிலும், அவளுக்கு பிரியமானது, ஆழிக்கம்பி கதவு சத்தம்தான். அதை இத்தனை வருஷ காலத்தில் லட்சம் தடவை கேட்டிருப்பாள் .ஒருதடவைக்கூட அந்த சத்தம் அலுப்பை தந்ததில்லை (வண்ண நிலவன்- காரை வீடு)”.

இதுதான் வாழ்க்கையின் உயிர்நாடி. 

வீடு என்பது வீடல்ல. 

ஜீவன்கள் முக்தி அடைய ,வீடு வேண்டும். 

அவனின்-அவளின் ஸ்பரிச்சங்களை, அந்த வீட்டின் அந்தராத்மாவுக்கு தெரியும். எத்தனை இரவுகள் அந்த நடைக்கதவை சாத்தும்போதும், 

ஒரு ஜீவனுக்கு வேண்டிய க்ரியா சம்போகம் நடந்தேற, இந்த கதவுகள் சாத்திக்கிடக்கும். சத்தம் போடும். 

சூரிய உதயத்தில் திறக்கும், சம்சாரிகள் 

சாணி தெளிக்க, குளித்துக்கரையேறி, 

குங்கும பொட்டோடு குலுங்கி நிற்பர். 

அய்யனாரு குளக்கரையில் தான் எத்தனை வளையல் சத்தம். ராத்திரி நடந்த சல்லாபக்கதைகள், சிரிக்கும் 

மங்களங்கள். சிரிப்பு சத்தம். 

வீட்டின் சுவாசித்தல் என்பது, அங்கு வாழ்ந்து சென்ற ஆன்மாக்களின் கூடு. 

கடந்த சென்ற தலைமுறைகளின், நடந்து சென்ற காலடிச்சுவடுகள் 

வீடெங்கும் மெட்டி ஒலிகளால் நிரம்பி வழியும். 

வீட்டில் விளக்கேற்றிய மங்கல அம்பிகைகள் கரங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட அறைகளில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் உயிர்கள். 

வீடும், சத்தத்தின் ரகசியத்தையும் 

ஒரு கலைஞனால்தான் சொல்ல முடியும். 

வீடு என்பது வீடல்ல, 

இப்படிப்பட்ட வீடு ஒரு மனிதனின் கையிலிருந்து நழுவி, அடுத்தவன் கைகளுக்கு போகும் போது, அதனை கட்டியவன் மனம் சிந்தும் ரத்தக்கண்ணீர்,அவனுக்கு மட்டுமே கேட்கும் ரகசிய ஒலி. 

இது கோயில் மணியோசை அல்ல;

இதய ஓசை. 

நதியில் மிதந்து செல்லும், காற்றை நதி அறியும். 

மனம் உணருமா?

-ஜெயானந்தன்.

(வண்ணநிலவனின் – காரை வீடு சிறுகதை படித்தவுடன் எழுதிய கட்டுரை.)

Series Navigation*BYRON பாணி மகிழ்ச்சியின்மை- [BERTRAND RUSSEL’S THE CONQUEST OF HAPPINESS – அத்தியாயம் – 2]தவம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *