–பி.கே. சிவகுமார்
அசோகமித்திரனின் பல சிறுகதைகள் சிறுகதையின் இலக்கணத்துக்குப் பொருந்தாதவை. ஒரு நாவலில் இருந்து தனியே எடுக்கப்பட்ட அத்தியாயம் போல் தோன்றுபவை. அல்லது ஒரு குடும்பத்தின் ஒரு நாளைச் சொல்பவை. கதையில் விசேடமாக வரும் நிகழ்ச்சியும் பெரிய திருப்புமுனையாக இருக்காது. கதை என்பது கதை மாந்தர்களையும், அவர்களது மனவோட்டத்தையும் குணாதிசயத்தையும் சொல்வதாக அமையும். படித்து முடித்தபின் அந்தக் கதை என்ன சொல்ல வருகிறது என்பதைக் குறித்து நம்மை யோசிக்க வைக்கும்.
அசோகமித்திரன் சிறுகதைகளில் பெரிய குறியீடுகளோ மறைபொருளோ இருக்கிற மாதிரி எனக்குத் தெரியவில்லை. அவருடைய நேரடியான கதை சொல்லலிலும், வரிகளுக்கிடையே அவர் பூடகமாய் விடும் இடைவெளியிலும் கதை சொல்லவருவதை நம்மால் எளிதில் புரிந்து கொள்ளவே முடியும்.
கோலம் கதையில் 9 வருடங்களில் 5 ஊர்களுக்கு (அதுவும் கடற்கரையோரமாக) மாறிய விஜயாவின் குடும்பம் வருகிறது. கதை விஜயாவின் பார்வையில் சொல்லப்படுகிறது. விஜயாவின் சகோதரி ஜமுனாவுக்கு 20 வயது ஆகியும் சரியான வரன் அமையவில்லை. விஜயாவுக்கு 13 அல்லது 14 வயது என யூகிக்க முடிகிறது. வேலைக்காரி இருக்கிற அளவுக்கு வசதியான குடும்பம்தான்.
விஜயாவின் சிற்றப்பா ஊரில் இருந்து வருவதில் கதை ஆரம்பிக்கிறது. விஜயாவின் அப்பா குடிக்கிற சார்மினார் சிகரெட்டுக்கு சிற்றப்பா பரவாயில்லை என நினைக்கிறாள் விஜயா – சிற்றப்பா குடிக்கிற சுருட்டின் நாற்றத்தை நாசி அனுபவிக்கும்வரை.
சிற்றப்பாவுக்கு அவர் குழந்தைகள் குறித்துப் பெருமை. அந்தப் பெருமைகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சொல்கிறார். கிராமம் பிடிக்காது என்பதால் மாமனார் வீட்டுக்குப் போகாமல் அண்ணன் வீட்டுக்குச் சிற்றப்பா வந்திருக்கிறார் என்பதில் கிராமம் சிற்றப்பாவுக்குப் பிடிக்காது என்பதை மூன்று முறை சொல்கிறார் கதாசிரியர். இத்தகைய் உத்திகளை அ.மி. இதில் பயன்படுத்தியுள்ளார்.
ரங்கோலி கோலப்பவுடர் என்றால் என்ன என்று 1958-ல் சென்னை கடைகளுக்குத் தெரியவில்லை என அறியவருகிறோம். அதற்கு பஞ்சவர்ணப் பொடி என்ற பெயர் இங்கே இருந்திருக்கிறது. அகத்திக் கீரைப் பொடி, கரித்தூள், பஞ்சவர்ணப் பொடி வைத்துச் சங்கராந்திக்கு அதிகாலையில் ரங்கோலி வரைகிறாள் விஜயா (பொங்கல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. கதையின் குடும்பம் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பம்). அதை ரசித்துப் பார்த்துத் தன் மகளால் கூட இப்படி வரைய முடியாது என்கிறார் சித்தப்பா.
அக்கோலத்தின்மீது பக்கத்து / எதிர் வீட்டு 20 வயது பையன் பூட்ஸ் காலால் தெரியாமல் இரு இடங்களில் மிதித்துவிட்டுச் சென்று விடுகிறான். அதைப் பார்த்த விஜயாவுக்கு அழுகையும் கோபமும் வந்துவிடுகிறது. அதைப் பார்த்த வேலைக்காரி ஓடிவந்து என்னாயிற்று எனப் பார்த்து தெரிந்து கொள்கிறாள். சிற்றப்பா கோபமாய் ஓடிப் போய் இளைஞனைப் பிடித்து ஏமிரா இதி எனத் தெலுங்கில் கேட்கிறார். விஜயாவின் அப்பா வந்து இளைஞனை விட்டுவிடச் சொல்கிறார். இளைஞன் தான் என்ன செய்தோம் எனத் தெரியாமல் போகிறான்.
மாலை கோவிலுக்குப் போய் வந்தபோது கவனியாமல் தானே கோலத்தை மிதித்துவிட்டு வந்தது விஜயாவுக்கு நாளின் இறுதியில் நினைவுக்கு வருகிறது. வெளியே போய்ப் பார்க்கிறாள். வர்ணங்கள் கலந்து கோலம் முற்றிலும் அழிந்துபோய், கோலத்தில் வைத்த பூவையும் காணவில்லை. விஜயா எந்த உணர்ச்சி மாறுபாடும் கொள்ளாமல் உள்ளே போய்க் கரும்பு சாப்பிடுவதைத் தொடர்கிறாள் எனக் கதை முடிகிறது.
அடுத்தவர் நம் உழைப்பைக் கெடுக்கும்போது நமக்கு வரும் வருத்தமும் அழுகையும் நாமே கெடுத்துக் கொள்ளும்போது வருவதில்லை என்பது ஒரு செய்தி.
புதியதாய் இருக்கிற ஒன்று கறைபடுகிற போது அல்லது சிதிலமடையும்போது வருகிற வருத்தமும் கோபமும் அது பழையதான பிறகு நடந்தால் வருவதில்லை என்பது இன்னொரு செய்தி.
கதையில் செய்தி எடுக்கும் சமாசாரம் வாசக மனம் செய்வதுதான். இதுதான் செய்தி எனச் சொல்லி எந்த நவீனக் கதையாசிரியரும் எழுதுவதில்லை. ஒருமுறை நான் இப்படிக் கதையின் செய்தி என எழுதியதைப் பார்த்து நண்பர் கே என் செந்தில் கதையில் செய்தியா என விளக்கம் கொடுத்திருந்தார். சினிமாவின் செய்தி என்று தியோடர் பாஸ்கரன் இதேபோல் எழுதியிருக்கிறார். சினிமா வெளிப்படையாகச் செய்தி எனச் சொல்லி எதையும் சொல்வதில்லை என தியோடர் பாஸ்கரனுக்குத் தெரியாதா என்ன்? ஆதலால் – செய்தி என்னும்போது அதிலிருந்து படிப்பவரும், பார்ப்பவரும் என்ன எடுத்துக் கொள்கிறார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
கதையின் இறுதிப் பகுதியில் வருகிற கோல நிகழ்ச்சிக்காகவா, சிற்றப்பா டாக்ஸியில் வந்து இறங்குவதில் இருந்து கதை ஆரம்பித்து, விஜயா வீட்டை, அதன் உறுப்பினர்களை, சிற்றப்பா வீட்டை, அதன் உறுப்பினர்களை, அப்பாவுக்கும் சிற்றப்பாவுக்கும் உள்ள வித்தியாசத்தை, சிற்றப்பாவுக்குக் கிராமம் போகப் பிடிக்காமல் இங்கே வந்திருக்கிறார் என்பதை எல்லாம் விரிவாக அ.மி. சொல்கிறார் என யோசிக்கலாம். அசோகமித்திரனின் கதைகள் பொதுவாய் இப்படித்தான். ஒரு கதையில் அது சார்ந்த உலகத்தை அவர் காட்ட முயல்கிறார்.
அகத்திக் கீரைப் பொடி வண்ணக் கோலம் போட அக்காலத்தில் பயன்பட்டது போன்ற நுண்தகவல்கள் இக்கதையில் உண்டு.
மச்சினர் வந்தபோது பின்னால் இருந்து ஸ்ஸ் என மகள்களைக் கூப்பிட்டு ஒருத்தியை வாழையிலை வாங்கக் கடைக்கு அனுப்பிய அம்மா, பின்னால் சகஜமாகி அவருடன் பேசுவது போன்ற எல்லாக் குடும்பத்திலும் நடக்கும் விஷயங்களையும் அ.மி. நுட்பமாகக் காட்டுகிறார். அம்மாவுக்குத் தன் குழந்தைகள் வயதைக் குறைத்துச் சொல்வதில் இருக்கும் சாமர்த்தியமும் சொல்லப்படுகிறது. திருமணத்துக்குத் தயாராக இருக்கிற ஜமுனா ஏராளமான தொட்டிகளில் பூச்செடி வளர்க்கிறாள். 9 ஆண்டுகளை 5 பள்ளிக்கூடங்களில் 4 பாஷைகளில் (மொழி என்கிற வார்த்தையை அ.மி. பயன்படுத்தவில்லை) படித்த விஜயாவுக்கு எந்த பாஷையும் சரியாகத் தெரியாது என்பது போன்ற நுண்தகவல்களும் உண்டு. இருட்டில் மணி தெரிகிற அலாரம் கடிகாரம் குறித்துக் கூட அதில் எப்படி உடனே தெரியாது, சற்று இருட்டுக்குப் பழக்கப்பட்டு பின் உற்றுப் பார்த்தாலே மணி தெரியும் என்கிற அளவுக்கு அசோகமித்திரனின் டீடெய்லிங் இந்தக் கதையில் உண்டு. கடைவீதிக்குப் போய்வரும் நிகழ்வும் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.
நன்றாகக் கவனித்து இருந்தீர்கள் எனில் வளரும் குழந்தை பாத்திரம் (விஜயா) மற்றும் சிற்றப்பாவின் குழந்தைகள் குறித்த சிற்றப்பாவின் பிரதாபங்கள் என இதுவும் ஒருவிதத்தில் குழந்தைகள் குறித்த கதைதான். இத்தோடு 7ல் 3 குழந்தைகள் வருகிற கதை.
1958-ல் அசோகமித்திரன் எழுதிய 7வது கதை இது. பன்னிரெண்டரை பக்கங்கள் கொண்டது.
– பி.கே. சிவகுமார்
– ஜூலை 13, 2025
– அசோகமித்திரன் மொத்தச் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன்
#அசோகமித்திரன்
x
-பி.கே. சிவகுமார்

- அசோகமித்திரன் சிறுகதைகள் – 7
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 8
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 9
- நாக சதுர்த்தி
- வா!
- ஓர் இரவு
- பார்வைப் பந்தம்
- காதல் கடிதம்