– பி.கே. சிவகுமார்
அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்ஷா, வெறி, எல்லை, எலி, உயிர், திரை, காய் இப்படி. பல என்பதைவிடப் பெரும்பாலும் அப்படி என்றுகூட சொல்லலாம். ஒற்றை வார்த்தைத் தலைப்புகள் கூடவே – இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் என்கிற தலைப்பைப் போலவே ஒரு ஞாயிற்றுக்கிழமை என்று ஒரு தலைப்பும் உள்ளது. இதேபோல சென்சார் என்ற வார்த்தை உள்ள இரு தலைப்புகள் உள்ளன. ஒற்றை வார்த்தை தலைப்புகளிலும் ஐந்தாறு எழுத்துகளுக்கு மிகாமல் இருக்கிற தலைப்புகள் பல. மிக அரிதாகவே, இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள முடியவில்லை என்றோ நானும் ஜே. ராமகிருஷ்ணராஜுவும் சேர்ந்து எடுத்த சினிமாப்படம் என்றோ நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது என்றோ நீண்ட தலைப்புகள் வைத்திருக்கிறார். இவற்றைக் கூட அசோகமித்திரன் வைத்தாரா, பிரசுரிப்பதற்கு முன் பத்திரிகையாசிரியர்கள் வைத்தார்களா என்ற கேள்வி எழுகிறது. ஒற்றை வார்த்தைகளுக்கு அப்புறம் இரண்டு மூன்று எளிய வார்த்தைகள் கொண்ட தலைப்புகள் உண்டு. அசோகமித்திரனின் தலைப்புகளில் ஜெயகாந்தனின் தனித்துவமானத் தலைப்புகள் போலவோ, பிறரின் கவித்துவமான தலைப்புகள் போலவோ இல்லை. புண் உமிழ் குருதி ஒரே தலைப்பு மட்டும் 187 கதைகளில் கொஞ்சம் கவித்துவமாக இருக்கிறது. கூடவே ஒரு கிராமத்து அத்தியாயம், நள்ளிரவில் ஒரு புதுப்பாடம், ஆச்சரியங்களுக்குக் குறைவில்லை, காலமும் ஐந்து குழந்தைகளும் எனச் சில கவனம் ஈர்க்கும் தலைப்புகளும் தென்படுகின்றன. அசோகமித்திரன் தலைப்புகளுக்காக மிகவும் மெனக்கெடவில்லை என்கிற சித்திரத்தையே ஒருவர் அவர் தலைப்புகளைப் பார்க்கும்போது பெறுவார்.
கதை எழுதுவதற்கும் அவர் பெரிதும் மெனக்கெடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவரே சொல்லியமாதிரி காகிதத் தட்டுப்பாடு காலத்தில், கிடைக்கிற காகிதத்தை வைத்துப், பொருளாதார தேவையை வைத்து எனப் பல காரணங்கள் அவர் கதைகளுக்கு உண்டு. அதனால அவர் கதைகள் முக்கியமில்லாத விஷயங்களை விவரிப்பதுபோல் நீண்டு, முக்கியமான விஷயங்களை மிகவும் சுருக்கமாகவும் அல்லது சொல்லாமலே புரிய வைக்கக் கூடியவையாகவும் அமைந்து விடுகின்றன. க நா சு புதுமைப்பித்தன் கதைகளைக் குறித்துச் சொன்னபோது அவரின் பல கதைகள் அவசரகதியில் எழுதப்பட்டவை என்றார். அதை அசோகமித்திரனுக்கும் சொல்லலாம். கதையையே போகிற போக்கில் சொல்லச் சொல்கிறார்களே எனச் சொல்லிச் செல்வதாகத் தோன்றுகிறது. அப்படி அவசரமாகவும் பெரிய திட்டமிடாமலும் அசோகமித்திரன் கதைகளில் நாமறியாத இடங்களில் (ஏன் அவரே கூட எழுதும்போது அறிந்தாரா எனத் தெரியாது) நம்மை ஆஹா எனச் சொல்ல வைக்கிற brillianceம், கலையும்,வாழ்க்கையின் நுண்சித்திரங்களும், மனிதர்களின் ஆழங்களும், உறவுகளின் தன்மையும் வெளிப்படுகின்றன. அவை அசோகமித்திரனைக் கொண்டாட வைக்கின்றன. இவர் இன்னும் கொஞ்சம் நிதானமாகத் திட்டமிட்டு எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ என ஒரு பக்கமும், திட்டமிட்டும் நிதானமாகவும் எழுதுவதால் ஒரு நல்ல கதையை எழுதுவிட முடியும் என்பது நிச்சயமில்லை என்கிற உண்மையும் நமக்கு ஒரே நேரத்தில் தோன்றுகின்றன.
அப்படி அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகள் – பெரிய தத்துவங்களைச் சொல்வதில்லை. வாழ்க்கை குறித்த சில காட்சிகள், மனிதர்களின் சில குணங்கள், சிக்கல்களை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், உறவுகளுக்கிடையே சில போக்குகள் என அவர் சில சித்திரங்களை மட்டும் வரைகிறார். அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் வாசகரைச் சார்ந்தது. இதுவே அசோகமித்திரனின் தனிச்சிறப்பு. எங்கும் எதையும் இது சரி அல்லது இது தவறு எனச் சொல்லாமல் கதையை மட்டும் எழுதுகிற வேலையை அவர் செய்கிறார். இதுதான் கதை எழுதுவதில் சரியான வழியா என்றால் இடத்துக்கேற்ப எனலாம். ஆனால் இதுதான் அசோகமித்திரன். எதுவுமே அவர் கதைகளில் பெரிதாக இல்லை எனச் சொன்ன வெங்கட் சாமிநாதன்கள் குறித்தும் அவர் கவலைப்பட்டதில்லை. அவரை ஒரு மாஸ்டர் எனப் பலர் கொண்டாடியபோதும் அவர் அத்தகைய கிரீடங்களை அணிந்து கொண்டதில்லை. ஆனால் – தமிழில் 1950களில் எழுத வந்த எழுத்தாளர்களில் அசோகமித்திரனைத் தவிர்க்க இயலாது. அவரது சமகாலத்தவர்களான ஜெயகாந்தன் அளவுக்கோ சு.ரா அளவுக்கோ அவர் வெகுகாலம் கவனிக்கப்படவோ புகழ்பெறவோ இல்லை என்பது துரதிர்ஷ்டம். தமிழில் ஜெயமோகன் போன்றோர் திரும்பத் திரும்ப அசோகமித்திரனைப் பேசி அவருக்கான கவனத்தை உருவாக்கினார்கள் என்பது உண்மை. அம்ஷன்குமாரின் அசோகமித்திரன் ஆவணப்படமும் அவரைக் குறித்த ஒரு சிறப்பான சித்திரத்தை வழங்கியது.
அசோகமித்திரனைப் போல நல்ல எழுத்தாளரும் அதிகக் கவனம் பெறாதவரும் அவரின் பிற்காலத்திலேயே கவனிக்கப்பட்டவரும் என கி.ரா.வையும் சொல்லலாம்.
அவருடைய பாணியைப் பின்பற்றிக் கதையெழுத முயன்ற பலர் அவருக்குப் பின்னால் வந்தார்கள் என்பதும் அப்படி எழுதினால் கவனிக்கப்படுவோம் என்கிற நம்பிக்கையைத் தன் எழுத்தால் அவர்களுக்குத் தந்ததும் அசோகமித்திரனின் சாதனை. அவர்கள் அதில் அசோகமித்திரன் அளவுக்கு வெற்றியடைந்தார்களா என்பது ஆய்வுக்குரியது என்றாலும். சட்டென நினைவுக்கு வரும் பெயர் – 1970களில் வந்த சா. கந்தசாமி. அவர் நடையும் கதை சொல்லலும் அசோகமித்திரன் போட்டுக் கொடுத்த பாதைதான். அசோகமித்திரனில் இருந்து அவர் வேறுபட்ட இடங்கள் உண்டு. என் நோக்கம் இங்கே – அசோகமித்திரனால் உந்தப்பட்டு அவரைப் போன்ற ஸ்டைலில் எழுதவந்து, கவனிக்கப்பட்ட எழுத்தாளர்கள் ஆனவர்களுக்கு ஓர் உதாரணம் தருவது மட்டுமே. இருவரையும் ஆழ, அகல ஒப்பிடுவது அல்ல.
இலக்கியத்தில் என் இடம் இது, என்னால் எழுதவந்தவர்கள் இத்தனைபேர் எனப் பட்டியலிட்டுத் தமிழ் இலக்கியத்தில் தன் நியாயமான இடத்தைக் கோரியிருக்கக் கூடிய உரிமையும் தகுதியும் அசோகமித்திரனுக்கு உண்டு. அவர் இயல்புக்கும் வாழ்க்கை அவருக்குக் கொடுத்த விவேகத்துக்கும் இத்தகைய இலக்கியச் சத்தங்கள் அவருக்கு ஒத்துவராதவை. அவற்றைச் செய்யாமல், காலத்தின் கையில் தீர்ப்பை விடுகிற தெளிவும் ஞானமும் நம்பிக்கையும் அவரிடம் இருந்தது. அவரை மிகவும் பிடித்தவர்களுக்கும் கூட, அவர் எல்லாருக்கும் எழுதுகிற மாதிரி அவர்கள் புத்தகங்களுக்கு முன்னுரையோ, அவர் நடத்துகிற கூட்டங்களில் பேசியோ, அவர்கள் கேட்கும் பத்திரிகைகளில் எழுதியும் என்கிறவற்றையே செய்தார். யாரையும் தன் பள்ளி என்றோ தனக்குப் பின் சிறந்த எழுத்தாளர் என்றோ முன்னிறுத்தவில்லை. அவையெல்லாம் ஓர் எழுத்தாளரின் வேலை அல்ல என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. (அப்படி அதை அறிந்த இன்னும் இருவர் என ஜெயகாந்தனையும் சுந்தர ராமசாமியையும்கூட சொல்லலாம்)
அதனால் அசோகமித்திரன் என் மாஸ்டர்களிலும் ஒருவர்.
– அசோகமித்திரனின் அடுத்த கதையைப் பார்ப்பதற்கு முன்
– பி.கே. சிவகுமார்
-ஜூலை 16, 2025
#அசோகமித்திரன்
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 7
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 8
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 9
- நாக சதுர்த்தி
- வா!
- ஓர் இரவு
- பார்வைப் பந்தம்
- காதல் கடிதம்