—-வளவ. துரையன்
எப்பொழுதும் போல வழக்கமாக
ஓர் இரவு விடிந்துவிட்டது
ஆச்சர்யமாகவோ அதிசயமாகவோ
எதுவும் நடக்கவில்லைதான்.
ஒரு கனவுகூட வரவில்லை.
அது வந்திருந்தாலாவது
எல்லாரிடமும் சொல்லலாம்.
பலன்கள் என்னென்ன என்று கேட்கலாம்.
பாதி ராத்திரியில் கண் விழிப்பும் வரவில்லை.
மின்சாரம் சில மணி நேரம்
நின்று போயிருந்தால்
காலை முதல் வேலையாக
பக்கத்து இல்லை எதிர்
ஆசாமியிடம் அதுபற்றி உரையாடலாம்.
இரவு தெருநாய்கள் குலைக்கவே இல்லை.
அவை ஏதோ வேலைநிறுத்தம்
செய்வதுபோல் வாளாவிருந்தன.
குறைந்தபட்சம் ஒரு திருடனாவது
வந்து எழுப்பிவிட்டு
ஒன்றும் திருடாமல்
ஓடியிருக்கலாம்.
எதுவுமே இல்லாமல்
ஓர் இரவு விடிந்துவிட்டது.