மீனாட்சி சுந்தரமூர்த்தி.
.
மாலதி கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். தோட்டத்திலிருந்து ரோஜாப்பூக்களைப் பூக்கூடையில் பறித்துக் கொண்டு வந்தாள் கனகம்.
‘ மாலு இந்த மஞ்சள் ரோஜாவை வச்சுக்கோ’
‘சரிமா’
‘மாமா நேத்து பேசினார்,ஆவணியில நல்ல முகூர்த்தம் இருக்காம்’
”அப்பா என்ன சொன்னார்’
‘உன்னோட விருப்பம்கறார்’
‘அம்மா நீ என்ன சொல்றே?’
‘என்னோட அண்ணன் மகன்கிறதுக்காகச் சொல்லலடி’
‘பின்னே’
‘படிப்பு, வேலை, ,அழகுன்னு எல்லாவிதத்திலயும் உனக்குப் பொருத்தமானவன் மாதவன்’
‘சரீம்மா, அப்பாவும் நீயும் முடிவு பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள்.
மாமன் மகன் மீது இவளுக்கும் விருப்பம்தான். ஆறடி உயரம், மாநிறம், இராணுவ அதிகாரி. மாதவன் இவள்மீது உயிரையே வைத்திருக்கிறான்.
இவள் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கிறாள். ஒவ்வொரு முறையும் விடுப்பில் வரும்போது அத்தை வீட்டில் ஒருவாரமாவது இருப்பான். ஜிமிக்கி, கொலுசு, மோதிரம், சேலை என்று ஏதாவது வாங்கி வந்துவிடுவான். மாலுவின் தம்பி ரகுவிற்கு மாதவன் வந்தால் கொண்டாட்டம்தான். ஒருநாளும் அத்தை மகள் என்ற உரிமை எடுத்துக் கொண்டு தனியாகச் சந்திக்க மாட்டான்.எதிலும் ஒரு ஒழுங்கு தேவை என்று நினைப்பவன்.ஆனாலும் அவன் மனம் இவள் அறிவாள், இவள்மனம் அவன் அறிவான்.
ஆவணிமாதம் வந்த வளர்பிறை நன்னாளில் ஊரும், உறவும்,நட்பும் வாழ்த்த மாலதி, மாதவன் திருமணம் நடந்தது. அதோடு ஜம்மு ரெஜிமென்ட் ஒன்றிற்கு மாதவனுக்குப் பணிமாறுதலும் வந்தது.
அன்றுதான் முதல்முறையாக இவர்கள் இருவர் மட்டும் கோவிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தார்கள்,
‘மாலு இன்னும் ரெண்டு நாள்ல நான் கெளம்பணும், நீ என்ன சொல்ற?’
‘மாது ,நீங்க புறப்படுங்க, ஒரு பத்துப் பதினைந்து நாளில் நாங்க வறோம்’
‘உன் வேலை ?’
‘ போன மாதமே விலகல் கடிதம் தந்துட்டேன்’
‘சரி வேற வேலை நாம பார்த்துக்கலாம், மாலு ஒரு விஷயம்..’
‘சொல்லுங்க மாது’
‘மாதுனு சொல்லாதே’
‘அப்போ..?
‘அத்தான்னு சொல்லு, இல்ல மாமானு கூப்பிடு’
மாலு ஆச்சரியத்துடன் பார்த்தாள்.
மாதவன் ஊருக்குச் சென்றபின்னர் ஒருநாள் அம்மாவிடம் இதைச் சொன்னாள் மாலதி.
‘ இன்னும் பேரைச் சொல்லிக் கூப்பிடறது சரியில்லடி’
மாதவன் வீடு ஏற்பாடு செய்து சொன்னபிறகு மாமன், மாமி, அம்மா,அப்பா, தம்பி மாலதியோடு ஜம்முவிற்கு வந்து பத்துநாள் தங்கிவிட்டுப் புறப்பட்டார்கள்.
காவேரிக்கரை ஓரத்திலிருந்து ஜீலம் நதிக்கரை வந்ததை நினைத்துப் பார்த்தாள். இயற்கை தன் கைவண்ணத்தை,மலை முகடுகளிலும், பள்ளத்தாக்குகளின் பச்சை விரிப்பிலும் காட்டியிருந்தது. மாதவன் நேரந்தவறாமை, சொன்னசொல் மாறாமை என எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கைக் கடைபிடித்தான். மாலதியிடமும் இதை எதிர்பார்த்தான்.
அன்பான கணவன்,அவள் கேட்கும் முன்னரே தேவைகளை நிறைவேற்றினான். மது, புகை என்று எந்த வேண்டாத பழக்கமும் இல்லாதவன். வீட்டுவேலைகளுக்கு ஒருபெண், சமையலுக்கும் வீட்டு மேற்பார்வைக்கும் ஒரு பெண்மணி. (பக்கத்திலேயே இவள் குடும்பத்துடன் தங்க ஒரு போர்ஷன் இருந்தது)தோட்டத்தைப் பராமரிக்க தோட்டக்காரன்.ஒரு குறையும் இல்லை. உண்மையில் சொல்வதென்றால் இராஜ வாழ்க்கைதான். மாலதிக்கு அருகிலிருந்த பள்ளி ஒன்றில் வேலை கிடைத்தது. அவளுடைய திறமையும்,பண்பும், இராணுவ அதிகாரியின் மனைவி எனும் நிலையும் பேரும் புகழும் பெற்றுத் தந்தது.
வருடங்கள் உருண்டோடின, மாதவனுக்குப் பதவி உயர்ந்து கான்பூர் வரவேண்டியதானது. இப்போது மகன் மதன் ஐந்தாம் வகுப்பும் , மகள் மதுமிதா, இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர்.
அன்று தீபாவளித் திருநாள்,
மாலை விருந்திற்கு நெருங்கிய நண்பர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
பிள்ளைகள் புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஏதோ சச்சரவு மதன் ஒரு சிறுவனின் கன்னத்தில் அடித்துவிட்டான். அவன் அழுதுகொண்டே வந்தான்.
‘மதன் இங்கே வா,எதுக்கு இவன அடிச்சே?’
‘ ரோஜாவைப் பறிச்சான், வேண்டான்னு சொன்னேன்,கேக்கலை’
‘அதனால..?’
‘அடிச்சேன்’
‘ஓஹோ’ பளாரென மதனை அறைந்ததில் ,
‘மாதவன் விடுங்க, பிள்ளைகள் அடிச்சுப்பாங்க, கூடிப்பாங்க’
‘இல்லே சேகர், எல்லாம் இவ கொடுக்கற செல்லம்.’
மாலதி மகனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
பலரின் முன்னால் மாதவன் கடிந்து கொண்டது வேதனையானது.கணவன் கடிந்து கொள்வது புதிதல்ல, ஆனால் மற்றவர்கள் எதிரில் இன்றுதான் நடந்தது, அன்று விருந்தினர்கள் சென்றபின்னர் ஒன்றுமே நடவாததுபோல் இயல்பாக இருந்தான் மாதவன். மாலதி இதைக்கேட்பதில் ஒரு பலனும் இல்லை என்று அமைதியாக இருந்துவிட்டாள். ஆனால் இது தொடர ஆரம்பித்தது, மாலுவின் நெருங்கிய தோழி மேகலா நெதர்லாந்திலிருந்து ஊருக்கு வந்தவள் மாலுவைப் பார்க்க குடும்பத்தோடு வந்து மூன்று நாட்கள் தங்கினாள். மாதவன் அகமும் முகமும் மலர அவர்களோடு பழகினான்.அந்த சமயத்தில் எப்போதும் இருக்கும் வேலைக்காரப் பெண்மணி ஏதோ அவசரம் என்று ஒருவாரத்திற்கு புதிய சமையல்காரப் பெண்ணை ஏற்பாடு செய்து விட்டுச் சென்றிருந்தாள். அதுமட்டுமல்ல, பழக்க வழக்கங்களையும் சொல்லியிருந்தாள். வந்தவள் அக்கறையாகச் செயல்படுபவள் இல்லை,
‘ மாலு என் யூனிபார்ம் எங்கே?’
‘இதோ கொண்டு வரேன்’
லாண்டரியிலிருந்து வந்த துணிகளை அவரவர் அறை அலமாரியில் எடுத்து வைப்பது வழக்கம். அதை இவள் செய்யவில்லை, துணி மூட்டைப் பிரிக்கப்படவே இல்லை.
சாப்பாட்டு மேசையில் சொல்லவே வேண்டாம், சுவையாக இருப்பது வேறு,கருகலும், தீய்ச்சலுமாக இருப்பது வேறு.
அன்று மதியம் நல்ல பசியோடு வந்தவன்,
‘ மாலு அவளைக் கூப்பிடு’
வந்தவளிடம்,
‘ ஆப்கோ கானா பனானா ஆத்தாஹே கி நஹி’
‘நஹி சாப், ஹம் ஜல்தி சீக்ஜாயங்கி’
‘ பார்த்தியா, இங்கே கத்துக்குவாளாம் சமைக்க’
‘சொல்லித் தந்திடறேன்’
‘உனக்குப் புரியுதா இல்லையா, பெரிய மகாராணினு நெனப்பா?
நீ சமைக்க மாட்டியோ?’
கோபம் நியாயமானதுதான், ஆனால் தோழியின் முன்னால் கத்தியது இவளுக்குப் பிடிக்கவில்லை.அந்த ஒரு வாரமும் மாலதி கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.
மாதவனின் போக்கு மாறவில்லை, கோபம் வந்துவிட்டால் பிள்ளைகள், மனைவி, பொதுஇடம் என்று பாராமல் கடிந்து கொள்வது தொடர்கதையானது.பிள்ளைகளுக்கு அப்பா மீது பாசம் இருந்தாலும், வெறுப்பும் தலைதூக்க ஆரம்பித்தது, மனைவிக்கும்தான். ஆனால் பணியிடத்தில் நேர்மை, திறமை,பற்று, தியாகம், கண்டிப்பு இவை மாதவனுக்குப் பாராட்டுகளைக் குவித்தன.
நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் ஆண்டுகளாகி நகர்ந்து கொண்டிருந்தன. இப்போது மதனும், மதுவும் ஐதராபாதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். மதனுக்கு அது இறுதியாண்டு. விடுமுறையில் வந்திருந்தார்கள்,
‘ மாலு மணி எட்டாகுதே, மதன் இன்னும் தூங்கறானா?’
‘ ஞாயிற்றுக் கிழமைதானேங்க’
‘அதனால’
சத்தத்தில் எழுந்துவிட்டான்,
‘இந்த வீட்டில் ஒரு சுதந்திரமும் கிடையாது, எப்படிமா இவரோட இருக்கே?’
‘அண்ணா கண்டபடி பேசாதே’
‘மது நீ பேசாதே, ரெண்டு பேரும் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க, மகாலஷ்மி
கோயிலுக்குப் போகணும்’
அம்மாவின் சொல்லுக்கு மகுடியில் மயங்கிய நாகம்போல் இருவரும் நகர்ந்தனர்.
அன்று அதோடு முடிந்திருக்கும் ஆனால் என்ன நேரமோ?ஊரிலிருந்து வந்திருந்த மாலுவின் அப்பா,
‘நானும் ரொம்ப நாளா கவனிச்சிட்டுதான் இருக்கேன், இப்படி வெரட்டறது
சரியில்லப்பா’
‘மாமா உங்களுக்குத் தெரியாது, நீங்க இதில வராதீங்க’
‘நான் என் மகளை எப்படி வளர்த்தேன்!’
‘ஏங்க நீங்க கொஞ்சம் சும்மா இருங்களேன்’
‘எல்லாம் உன்னாலதான்,அண்ணன் மகன்னு உருகினே’
‘குடும்பத்துல இதெல்லாம் சகஜம்தான் பெரிசாக்காதீங்க,’
‘ எம்பொண்ணு கண்கலங்கறதைக் கேக்கக் கூடாதா ?’
மாதவனுக்கு கோபம் பொங்கியது,
‘உங்க மகளை கூட்டிட்டுப் போய் நல்லா வச்சுக்குங்க, நான்தான் கொடுமைப்படுத்தறேனே’
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மதன் அப்பாவின் எதிரில் வந்து நின்று,
‘ஆமாம் பா, அம்மாவோடு நாங்களும் போறோம்.’
‘அப்பாகிட்டப் பேசற பேச்சா இது? வா’ என்றுபேரனையும்,
‘மாதவா, ஏதோ நேரம், எல்லாம் சரியாகும் பா’ என்று மருமகனையும் அமைதிப்படுத்தினாள் கனகம்
‘ பொறுமையா இருந்து வெறுத்தே போச்சுமா எனக்கே’ என்ற மகளிடம்,
‘மாலு , எல்லாரையும் கூட்டிட்டு கோயிலுக்குப் போயிட்டு வா’
என்று அனுப்பி வைத்தாள்.
மாதவன் முதல்முறையாக அதிர்ந்து போய் நின்றார்.
அன்று அதோடு பிரச்சனை முடிந்து போனது என்றுதான் கனகம் நினைத்தாள்.ஆனால் அடுத்த ஆறே மாதத்தில் மதனுக்கு பெங்களூரில் வேலை கிடைத்தது.தங்கையையும், அம்மாவையும் தன்னோடு அழைத்துக்கொண்டு போய்விட்டான்.தனிமரமானார் மாதவன்.
‘இனி யாருக்காக உழைக்கவேண்டும்?’
விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.இந்த முப்பது வருடத்தில் ஒருநாளும் மாலுவைப் பிரிந்து இருந்ததில்லை, அவளைத் தவிர யாரையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை, தனக்கென எதுவும் செய்துகொள்ள விரும்பாதவர்.பிள்ளைகள்தான் உலகம் என்று வாழ்ந்தவர், கோபத்தை முறையாகக் கையாளத் தெரியாத ஒரே குறைபாடு.துவண்டு போனார்.
கணவர் மீதிருந்த வெறுப்பில் மகனோடும்,மகளோடும் மாலதி பெங்களூர் வந்து மூன்று மாதங்களாகி விட்டது.அன்று மாலை மதன்,
‘அம்மா , இதுல கையெழுத்துப் போடுங்க, டைவர்சுக்கு அப்ளை பண்றேன்’
அதிர்ந்தாள் மாலதி.
‘இதைப் பாருடா, உங்க அப்பா அனுப்பியது’
தனது மின்னஞ்சலை மகனிடம் காட்டினாள்.
‘மாலு சாப்பிட்டியா?, மறக்காம மாத்திரை போட்டுக்கோ’
ஒருநாள் தவறாமல் காலையும், இரவும் இதே வரிகள்தான் மூன்று மாதங்களாக வந்திருந்தது.
‘இது என்னம்மா, ஒரேவரி காதல் கடிதமா?’
‘அவருக்குத் தெரிந்த காதல்கடிதம் இதுதானடா.’ என்ற மாலுவின் கண்களில் காவேரி கரைபுரண்டது.