வளவ. துரையன்
இக்குளிர்காலத்தில்
கொட்டும் பனி உனக்குப் புரிகிறதா?
மலர்களும் தருக்களும்
நனைந்தது போதுமென்கின்றன.
முன்பு
இதேபோல ஒருநாளில் வந்து
நீ ஈந்த முத்தத்தின் சுவடு
இன்னும் காயவில்லை.
எங்கிருக்கிறாய்
என் நெருப்புக் காதலனே!
எங்கே உன் தீக்கங்குகள்
அவற்றின் சிவப்பு வண்ணத்தில்
என்னை அடைகாக்க வா
மெதுவாக வந்தணைத்தாலும்
மேனியெலாம் தகிக்கச் செய்வாய்,
யாருக்கும் தெரியாமல்
அழலை என் மறைத்து வைத்துள்ளாய்
அதை எடுத்துவந்து
ஆழ்ந்து கொண்டிருக்கும் இந்த
அபலையை மீட்டெடு
உன் அந்தச் சுடர்களெலாம்
உண்மையில் எனக்குத்தான் சொந்தம்
என்பது எனக்குத் தெரியும்
காக்க வைத்தது போதும்
கதவைத் திறந்து வைத்துள்ளேன்
பசலையைப் போக்கப்
பார்வைப் பந்தம் கொண்டுவா