– பி.கே. சிவகுமார்
அளவில் சிறியதான அசோகமித்திரன் சிறுகதைகள் கச்சிதமாகவும் நன்றாகவும் வந்திருக்கின்றனவோ என எண்ண வைக்கும் சிறுகதை, 1960ல் பிரசுரமான – அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம். அதேபோல் பரீக்ஷை என்றும் எழுதுகிறார். நட்சத்திரம், பரீட்சை எல்லாம் அப்புறம் வந்தன போல.
ஐந்து பக்கத்தை எட்டிப் பிடிக்கும் இந்தக் கதையின் முடிவு நம்ப முடியாததாகப் பலருக்கும் இருக்கலாம். என்னாலும் நம்ப முடியவில்லை. அவர்கள் அப்படி முடிவை எதிர்கொள்வதற்கான எந்த சமிக்ஞையும் கதையில் இல்லை. மாறாக நேர்மாறாகவே உள்ளது. இறுதியில் ஒரு திருப்பத்தை வைக்க இத்தகைய முடிவோ என்கிற சிந்தனை நமக்கு ஏற்படுகிறது. அதே நேரம் ஏதோ ஒரு மீளமுடியாத பெருந்துயரம் உண்டான பின்னே, காரணத்தை யோசிப்பதால் பலனில்லை என்கிற முடிவுக்கு மனித மனம் வந்து விடுகிறதோ எனவும் யோசிக்க வைக்கிறது.
முன்பு ஒரு கட்டுரையில், பெயர், வயது சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வது எப்படிச் சரியாக இருக்காது எனப் பேசுகிற பாத்திரத்தைப் பார்த்தோம். இந்தக் கதையின் முதலாவது வாக்கியமே, ஶ்ரீராம், 21 வயது என்கிறது. இரண்டாவது வாக்கியம் பி. ஏ. பரீட்சை எழுதியிருந்தான் என்கிறது. ஆக அசோகமித்திரன் தேவைக்கேற்ப எழுதும் முறையை மாற்றிக் கொள்கிறவர் என்பது இன்னொரு முறை தெரிய வருகிறது.
ஶ்ரீராமின் அடுத்த வீட்டுக்காரரான ராமஸ்வாமி ஐயர் மருந்துக் கடை குமாஸ்தா. மூன்று பெண்களுக்கு அப்புறம் நான்காவதாக நான்கு வயதில் ஒரு பையன் இருக்கும்போதும், கடைசியாக (கடைசியாகத்தானா?) ஒன்பது மாதங்கள் ஆன பெண்குழந்தைக்குத் தந்தை.
ஶ்ரீராம் வாங்குகிற ஆங்கில தினசரி, ராமஸ்வாமி ஐயர் வீட்டுக்கு ஒருநாள் போய்விட, ஐயர் அது ஏன் வந்தது எனக் கவலைப்படாமல் ஓசி பேப்பரை வரிக்கு வரி படிக்கிறார். பின்னர் அதே பேப்பரில் தெருவில் புளி விற்றவரிடம் புளி வாங்குகிறார்.
ஶ்ரீராம் வெளியே வந்து பத்திரிகை குறித்து விசாரித்ததைப் பார்த்து வெள்ளந்தியாக இந்தப் பேப்பாரா எனக் கொண்டுவந்து கொடுக்கிறார். எங்கடா இவன் பேப்பரைப் படித்து பின்னர் அதில் புளியும் கொட்டி வாங்கி விட்டோமே என நினைத்துப் பிறர் அமைதியாக இருந்து விடலாம். ஆனால் ஐயர் நேர்மையாக இருக்கிறார். பாராட்டு வரும் என எதிர்பார்த்தாரோ?
அந்தப் பேப்பரின் முதல் பக்க விளம்பரத்தில் ஶ்ரீராமுக்குப் பிடித்த நடிகையின் உருவமெல்லாம் புளிக் கறை. ஏமாற்றமும் கோபமும் கொண்ட ஶ்ரீராம் மறைமுகமாக ஐயர் காது கேட்கும்படி முட்டாள் என்கிறார். ஐயர் கேட்கும்போது அவரை இல்லை என்கிறான். இருவரும் 15 நிமிடத்துக்குள் இப்படி மாறிமாறி திட்டிக் கொள்கிறார்கள்.
பின்னர் ஐயரின் பிள்ளைக்கு அம்மை போட்டிருப்பதை மொட்டைக் கடுதாசியாக சுகாதாரத்துறைக்கு ஶ்ரீராம் தெரியப்படுத்தி விடுகிறான். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐயர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வந்து குழந்தையை ஊருக்கு வெளியில் இருக்கிற காலரா / தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள்.
இதை அறிந்த ஶ்ரீராம் மிகுந்த குற்றவுணர்வு கொள்கிறான். அந்த இரவு தூங்க முடியவில்லை. மிகத் தாமதமாக குழந்தையைத் தனியே மருத்துவமனைக் கவனிப்பில் விட்டது குறித்து அழுது அரற்றியபடி இரவில் வீடு திரும்பும் ஐயரின் மனைவியையும் ஐயரையும் பார்க்கிறான்.
இரு நாட்களில் குழந்தை இறந்து விடுகிறது. நான்கு பெண் குழந்தைகளுக்கு மத்தியில் அவர்களுக்குப் பிறந்த மகனின் மரணம்.
ஶ்ரீராமைக் குற்றவுணர்வு ஆட்கொள்கிறது. அந்த ஒரு மாதத்தில் அவன் மனதளவில் முதிர்ச்சியடைந்தவன் ஆகிறான் என்பதை அ.மி. சொல்லாமல் சொல்கிறார். ஒரு மாதம் கழித்து ஐயரிடம் போய், ராஜூவுக்கு – இறந்த குழந்தையின் பெயர் உட்பட அவனாக அறிந்து வைத்திருக்கிறான் – அம்மை என சுகாதாரத்துறைக்கு எழுதிப்போட்டது அவன் தான் என்கிறான்.
ஐயர் அவனைச் சற்று நேரம் உற்று நோக்கியபின், காமு என்று மனைவியை அழைக்கிறார். பின் அவனிடம், அவளிடம் சொல்லு என்கிறார்.
தன்னைப் பழி வாங்குவதற்குப் பதிலாக அவளை அல்லது அவளையும் பழிவாங்கி விட்டான் என்பதாலா? தாயான – மகன் இழப்பு அவரைவிட அவளை பாதித்து இருக்கிறது என்பதாலா? ஆனாலும் சின்ன விஷயத்துக்கு முட்டாள், மடையன் எனப் பதிலுக்குப் பேசிய ஐயர், இவ்வளவு பெரிய விஷயத்துக்கு ஶ்ரீராமை ஒன்றும் சொல்லவில்லை. தனக்குச் சிக்கல் வந்தபோதும் பேப்பர் விஷயத்தில் தான் உண்மை சொன்னதுபோல், ஶ்ரீராமும் இப்போது முதலில் சொல்லாவிட்டாலும் உண்மையைச் சொல்கிறானே என எடுத்துக் கொள்கிறாரா?
ஶ்ரீராமுக்கு ஐயரின் மனைவியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் போலிருக்கிறது. ஆனாலும் அவளிடமும் ராஜூவைக் குறித்துத் தகவல் கொடுத்தது அவன் தான் என்கிறான்.
அவள் கொடூரமான சாபங்களைக் கொடுப்பாள் என எதிர்பார்த்து உள்ளூற அதற்காகவும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான் என அ.மி. எழுதுகிறார். ஆனால் அவள் தன் இயல்பான அடக்கத்துக்குத் திரும்பியவளாக இருந்தாள். ஒன்றும் சொல்லவில்லை எனக் கதை முடிகிறது.
நமக்குத் திகைப்பாக இருக்கிறது. குழந்தை இறந்த ஒரே மாதத்தில் குழந்தை குறித்து எழுதிப் போட்டு அதனால் குழந்தை இறந்து போயிருக்கலாம் என்பவனை மன்னிக்க எப்படி இவர்கள் இருவராலும் முடிகிறது. மன்னித்தார்கள் என எப்படிச் சொல்ல முடியும். மௌனமாக இருந்தார்கள் என்றே சொல்லலாம். பாதிக்கப்பட்டவரின் மௌனத்தை அவர்கள் தரும் மன்னிப்பு என எடுத்துக் கொள்கிற மனித மனத்தை முடிவில் காட்டுகிறாரா?
இல்லை, மருத்துவமனையில் இருந்தே காப்பாற்ற முடியாத குழந்தை வீட்டில் இருந்திருந்தாலும் இறந்திருக்கலாம் என்பதை உணர்ந்தவர்களாக இருக்கிறார்களா?
நம்ப முடியாத முடிவென்றாலும், உண்மையைச் சொன்னதால் நம் மனதில் உயர்ந்த ஶ்ரீராமை விட அவனை நடத்திய விதத்தால் ஐயரும் அவர் மனைவியும் நம் மனதில் பல மடங்கு உயர்ந்தவர்களாகி விடுகிறார்கள்.
அ.மி.யின் 15வது சிறுகதையான இக்கதை அவரின் நல்ல கதைகளில் ஒன்று. பிரசாரம் போல் இல்லாமல், தவறை உணர்ந்தவர்களை – அவர்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தபோதும் – எப்படி நடத்த வேண்டும் என்பதைச் சாதாரண குடிமக்கள் வாழ்க்கையில் இருந்து காட்டுகிறது. அக்கம்பக்கத்து வாழ்க்கையில் இப்படிச் சாதாரண விஷயங்களுக்குச் சண்டையிடுவதும், பழி வாங்குவதும், பெரிய துன்பம் நேர்கையில் ஒன்று சேர்ந்து மறப்பதும் நடுத்தர வர்க்கத்துக்குச் சாதாரணம் தான். எதிர்பாராத நேரத்தில் சிலர் எதிர்பாராத செயல்களைச் செய்து நம் மனதில் உயர்ந்து விடுவதும்.
முடிவைக் குறித்துக் கேள்விகள் இருப்பினும் அதை மிகவும் சகஜமாகச் சில வாக்கியங்களில் சொல்லிச் செல்கிறார் அ.மி. கடைசியில் ஶ்ரீராமுக்கு மிகவும் பிடித்தமான நக்ஷத்திரம் ஐயரா, அவர் மனைவியா, இருவருமா? நடிகையை மறந்துபோனது ஶ்ரீராம் மட்டுமா?
அசோகமித்திரன் கதைகளைக் குறித்துப் பேசும்போது, கதையின் நுட்பங்கள், நான் ரசித்தவை ஆகியவற்றோடு கதையின் சுருக்கத்தையும் சொல்லிப் பேசுகிறேனே அது சரியா என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம். எனக்கும் இருந்தது. கதையின் கதை என்றொரு கட்டுரையில் பிரயாணம் என்கிற கதையைக் குறித்தும், என் பாத்திரங்களில் எனக்குப் பிடித்தது என்கிற கட்டுரையிலும் அசோகமித்திரன் தொடர்புடைய கதைகளின் சுருக்கத்தை விரிவாகச் சொல்லியே எழுதியிருக்கிறார். அதனால் நான் இந்த விஷயத்தில் அசோகமித்திரன் செய்யாத ஒன்றைச் செய்துவிடவில்லை. கதையைச் சுருக்கமாகவேனும் சொல்லிப் பேசுவதே இம்மாதிரியான கட்டுரைகளுக்கு உதவும்.
என் இனிய நண்பர் டைனோ – நான் எழுதுகிற இக்கட்டுரைகள் எப்படி பவா செல்லதுரையின் கதை சொல்லலில் இருந்தும், விமலாதித்த மாமல்லனின் புதினம் ஒரு புதிர் தொடரில் வெளியான அலசல்களில் இருந்தும் வித்தியாசமானது எனக் கேட்டார். அவர்கள் இருவருமே அவரவர்களுக்குச் சரி எனப்படுவதைச் செய்கிறார்கள். இதில் அவர்கள் சரி, நான் தவறு எனச் சொல்லவோ, நான் சரி, அவர்கள் தவறு எனச் சொல்லவோ எதுவுமில்லை. ஆனால் எந்த இடத்தில் நான் வித்தியாசப்படுகிறேன் எனச் சொல்ல முயல்கிறேன்.
என்னுடைய எழுத்தில் கதாசிரியர் சொல்லாத எதையும் சுவாரஸ்யம் கூட்டவோ, தற்குறிப்பேற்றியோ நான் சொல்வதில்லை. கதை உண்டாக்குகிற எண்ணங்களையும், இதனால் இப்படி எழுதப்பட்டிருக்குமோ என்கிற கேள்விகளையும் கதாசிரியர் கருத்தாக, பார்வையாகச் சொல்லாமல், தனியாகவே வைக்கிறேன். கதையை அதிகம் எளிமைப்படுத்துவதும் இல்லை. கதாசிரியர் சொல்லாத எதையும் சேர்ப்பதும் இல்லை. நல்ல எழுத்தை எல்லாருக்கும் தன் கதை சொல்லல் மூலம் கொண்டு சேர்க்க முயல்கிற பவா கதை சொல்லும்போது கதை சொல்வதில், கதை என்ன சொல்கிறது எனச் சொல்வதில் பல உரிமைகளை எடுத்துக் கொள்கிறார். தன் கதையை பவா சொல்லக் கேட்ட புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் வேடிக்கையாக இது நான் எழுதிய கதையா எனக் கேட்டாராம். ஆனாலும் பவாவால் தன் கதை பலருக்கும் சேர்கிறது என்பதால் பல எழுத்தாளர்களும் பவா அவர்களின் கதையில் எடுத்துக் கொள்கிற உரிமைகள் குறித்து ஒன்றும் சொல்வதில்லை. அதனால் இதில் பவாவின் பாதை வேறு. அவருடைய அத்தகைய கதை சொல்லலுக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. அவரின் அத்தகைய கதை சொல்லலை நான் நேரில் கேட்டிருக்கிறேன். அதற்கு மயங்கியவர்களைப் பார்த்திருக்கிறேன். இதில் பவாவின் நோக்கம் நல்ல நோக்கம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் அது என் பாதை அல்ல.
விமலாதித்த மாமல்லனின் புதினம் ஒரு புதிர் முதல் பாகம் படித்திருக்கிறேன். கதைகளின் பல நுட்பங்களைச் சொல்கிற கட்டுரைகள்தான். ஆனால் எல்லாவற்றிலும் பிரதானமாக மாமல்லன் இருக்கிறார் எனலாம். உதாரணமாக: மாமல்லனின் ஒரு நூலின் தலைப்பு: நானும் நானறிந்த அ.மி.யும் ஜே.கே.வும் என நினைக்கிறேன். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது முதலில் வருகிற நானும். இங்கே (அமெரிக்காவில்) இப்போதெல்லாம் ஆரம்பப் பள்ளியிலேயே – நான் படித்த இந்தியாவில் 10ம் வகுப்பில் – இத்தகைய தொடர்களில் முதலில் நான் வரக்கூடாது எனச் சொல்லித் தருகிறார்கள். பல எழுத்தாளர்களின் வாக்கிய அமைப்பில் குறை காணும் அளவுக்குத் தமிழ் தெரிந்தவர்தான் மாமல்லன். ஆனால் அவரால் நானை முன்னால் வைக்காமல் பொதுவாக இத்தகைய கட்டுரைகளில் இருக்க முடியவில்லை. மேலும் மாமல்லன் கதைகளை ஒரு நிபுணர் அல்லது நீதிபதி ஸ்தானத்தில் இருந்து அணுகுகிறார். நான் வாசகன் என்ற நிலையில் இருந்து அணுகுகிறேன். பவாவும் மாமல்லனும் இவ்விஷயத்தில் தனித்தனி ஆளுமைகள். அவர்களுடன் இக்கட்டுரைகளை ஒப்பிட இயலாது.
நண்பர் டைனோ பல நேரங்களில் வாயைக் கிளற, இம்மாதிரியான கேள்விகளைக் கேட்டு வைப்பார். சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல், சர்ச்சை வருமோ என ஒதுங்கிப் போகாமல் எனக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லியிருக்கிறேன்.
பவாவுடனும் மாமல்லனுடனும் ஒப்பிடத் தகுந்த அளவுக்கு இக்கட்டுரைகள் கவனம் பெறுகின்றனவா எனத் தெரியவில்லை. ஆனாலும் எண்ணிக்கையை நம்பி நான் எப்போதும் எழுதியதில்லை. மாமல்லனுக்கும் எனக்கும் இருக்கிற அரிதான ஒற்றுமைகளில் இது ஒன்று.
– பி.கே. சிவகுமார்
– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன்
#அசோகமித்திரன்