எங்கிருக்கிறேன்?

This entry is part 10 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

Dr V G மாலதி

மயக்கமா, தூக்கமா, மிதப்பது போல லேசா லேசா என்னை உயர்த்தி கொண்டே போகும் இந்த காற்று கடைசியில் எங்கு கொண்டு செல்லும்? நான் எந்த இடத்துக்கு போக விழைகிறேன் உச்சிப்பிள்ளையார் கோயில் நடையா?  ” போங்க, போங்க ” என்று வெறுத்து தள்ளி விடும்   அலுவலர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி  “கொஞ்ச நேரம், நின்னு பாத தரிசனம் என்று  முக்கி முனகி  பார்த்தோமா பார்க்கலையா என்கிற திகைப்புடன் சன்னிதியில் இருந்து இறங்கி வணங்கி எப்பொழுதும் உதவிக்கு கூப்பிடும் பெருமாள் அடியா தெரியவில்லை. 

காசிபேட்  ரயில் நிலையம் தெரிகிறது. நான் வழக்கப்படி யாரும் என்னிடம் எதுவும் கேட்காவிட்டாலும், ” இங்கே ட்ரெயின் ரொம்ப நேரம் நிக்கும் . எஞ்சின் மாற்றுவார்கள் இந்த வழியில் இருந்து வேற வழிக்கு மாற்றி விடுவார்கள் அதனால் எஞ்சின் மாற்றி திரும்ப ஓடும் பொழுது நம்ம வந்த பாதையிலேயே போறாப்  போல இருக்கும். யாரும் குழம்பாதிர்கள் பயப்படாதீர்கள் இந்த ரூட்டில் எத்தனை வருஷங்களாக நான் வருகிறேன்.” பேசிக்கொண்டே போகிறேன் ஒரோரு தடவையும் இந்த மாற்றம் நிகழும் போது ஒரு அதிர்வு தான். பின்னே ஜன்னல் வழியாக எம்பி நாம்  இந்த தண்டவாளம் வழியாக வந்தோம் இவன் எந்த  திசையில்   போகிறான் என்று தெரிந்து கொள்ள முற்பட்டு மண்டையை குழப்பி இதுக்கு நம்ம ஏன் கவலைப்படணும் என்று கைவிட்டது தான். இப்பொழுது என் கூட  வரும் சென்னை கூட தாண்டாத அறிவிலிகளுக்கு நான் சொல்ல வேண்டியது என் கடமை. அதனால் சொன்னேன். ஆனால் ஒருத்தரும் நான் சொன்னதை கேட்க கூட இல்லை. அலைபேசியில் அப்படி என்னதான் இருக்குமோ. இரண்டு கைகளாலும் இயந்திரத்தனமாக எல்லோரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சொல்லுவதை சொல்லிவிட்டோம் என்று கையில் உள்ள புத்தகத்தை விரித்த பொழுது பார்த்தேன். பக்கத்து சீட்டு ஆளு அவசர அவசரமாக மேலிருந்து பெட்டியை எடுத்தார். அதற்குப் பிறகு ஒவ்வொருவராக அவரவர்  பெட்டியுடன் ரயிலில் இருந்து இறங்கி போய்க்கொண்டிருந்தார்கள். அலை மோதும் கூட்டம்  கூச்சல். ” மேடம் இப்ப எல்லாம் மாறிட்டதன்னாலே   இந்த ட்ரெயினில் இருந்து இறங்கி வேற பிளாட்பார்ம் இருக்கிற டிரெயினில் போகணுமாம். ” இல்லப்பா அவங்க எல்லாம் தெரியாம…………” தடதடவென்று இறங்கி சக்கரங்களில் சுழலும் பெட்டியையும் தூக்க முடியாத கட்டைப்பையையும் தூக்கிக்கொண்டு   இறங்கும் கூட்டம் . என் கைப்பையையும் ஏர்பேகையும் எடுத்துக்கொண்டு கீழ் இறங்கி பிளாட்பார்மில் கால் வைக்கும் பொழுது எங்கே போனார்கள் எல்லாரும்? என்னுடன் வந்த ஸ்டூடண்ட் கும்பல் எங்கே? பக்கத்து சீட்டில்  நொறுதீனி   தின்று கொண்டிருந்த( இளம் நரை கருப்பு கண்ணாடி பரவாயில்லை சின்ன வயதில் நன்றாகத்தான் இருந்திருப்பார்) நபர் ,  பிங்க் துப்பட்டாவை சரி  செய்து கொண்டே இருந்த பஞ்சாபி பெண் , அழுது கொண்டிருந்த குழந்தையை பலவிதத்தில் சமாதானம் செய்து கொண்டிருந்த தம்பதியர்  எல்லாரும் எங்கே போனார்கள்? பிளாட்பார்மில் அலை மோதும் கூட்டம் எந்த பிளாட்பார்ம்க்கு போக வேண்டும் என்று அனௌன்ஸ்மென்ட் வருகிறதா என்று கூர்ந்து நோக்கினேன். எனக்குத்தான் காது கேட்கலையா? ஜனங்கள் எல்லாரும் பதட்டமாக எங்கே ஓடுகிறார்கள்? என்ன பாஷை பேசுகிறார்கள்? அவசர அவசரமாக ஒரு பணியாளர் .தூஸ்ரா பிளாட்பார்ம்  மே ஹை  என்கிறார். தெளிவாக அறிய  உதவி கவுண்டரில் கேட்ட பொழுது   பிளாட்பார்ம் மாற்றிவிட்டதாகவும் மேலே போய் வலது திரும்பினால் அந்த பிளாட்பார்ம் வரும் என்று சொன்னதும் நடக்கத் தொடங்குகிறேன்.பல தெருக்கள் கடந்து வீடுகள் பார்வையிலிருந்து மறைந்த பிறகு  ஒரு கிராம் போல்   இருக்கிற இடத்தில் இணையாகபளபளக்கும் தண்டவாளங்கள். மூச்சு வாங்க கிட்ட வந்ததும் அங்குள்ள பணியாள், ” இல்ல மாதாஜி நீங்கள் தவறுதலாக வந்துவிட்டீர்கள் வண்டி 12 ஆம் பிளாட்பாரத்தில் இருந்து கிளம்புகிறது இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது கவலைப்பட வேண்டாம்.” என்று பாதையை காண்பித்தான். எனக்கு என்ன வியப்பு என்றால் நான் மட்டும் இப்படி தனியாக சுற்றுகிறேன்..அந்த ட்ரெயினில் உள்ள மத்த பிரயாணிகளும் என் கூட வந்த ஆட்களும் எங்கே போனார்கள் என்னை  மாதிரி  அவர்களும் அலையணும்  இல்லையா? அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் சரியாக தெரிகிறபொழுது எனக்கு மட்டும் ஏன் இப்படி. வயது. வயது தான் காரணம் அதுமட்டுமல்ல நான் ஒரு சூப்பர்ஹூஃபர் என்கிற நினைப்பு எனக்கு தெரியாதது இல்லை என்கிற மமதை. அதான் சாமி அவ்வப்பொழுது சம்மட்டியாலே அடிக்கிறார். இந்த சுயபச்சாபத்தில் இருந்து முறுக்கி எழுந்து நோ இப்பொழுது நான் கவனம் செலுத்த வேண்டியது 12வது பிளாட்பாரத்தை எப்படி அடைய வேண்டும் என்றுதான். நடக்கணும். கால் குழைகிறது தொடை உரசுகிறது தடுக்கி விழுகிறது ஒரு ஒரு அடியும். நடக்கணும்.பல தூரம் வந்த பிறகு   ஆரவாரமாக இருக்கிற ஒன்றாம் பிளாட்பார்ம் அடைந்த  பொழுது ஓட்டலுக்கே உள்ள மணம் சுண்டி இழுக்கிறது. இந்த ஸ்டேஷனை விட்டால் இனிமே சக்கர போட்ட  டீ தான் காபி கிடைக்காது ஒரே கப்பு காபி குடிச்சிட்டு………. “அடிப்பாவி பத்து நிமிஷம் தான் இருக்குன்னு சொன்னா அதுல நீ காபி வேறயா? திருந்தவே மாட்டியா நீ? உயிர் போற நெருக்கடியிலும் அப்படி என்ன காபி வண்டி இருக்கு. பின்னாலே ஒட்டலை பார்ப்பதும் மறுத்து முன்னாடி ஓடுவதும் அப்படியாக 12வது பிளாட்பாரம் தான் ஜி டி நிற்கிறதா என்று உறுதி செய்ய கேட்ட  பொழுது ஆள்   ஒரு விதமாக சிரித்தான்.  சொல்லும் பொழுது இந்த குண்டு கிளவி  எங்கே பத்து நிமிஷத்தில் போகப்போகிறது என்று நினைத்தானோ என்னவோ. எல்லாருக்கும் நம்மளை பார்த்தால் ஏன் இளக்காரமா இருக்கு? 12-வது பிளாட்பார்ம் அடுத்த கண்டத்தில் இருப்பது போல் நிராசையுடன் குபுக் என்று வரும் கண்ணீரை அடக்கி போகலாம் வேகமாக போகலாம். நடையெடுத்து வைக்கையில் வந்தது ஒரு தெய்வம். ” என்ன கண்ணு பனிரெண்டாவது பிளாட்பார்மா? டைம் ஆயிருச்சு வரியா நான் கொண்டு விடுறேன் என்று கை நீட்டினாள். எங்கேயோ பார்த்திருக்கோம் . எந்த கோவிலில்? ரொம்ப பயமாகவும் இல்லை ஆனால் இணக்கமாகவும் இல்லை சரி வேற வழி இல்லை என்று, ” என் பேக் மட்டும் எடுத்துக்கோங்க ப்ளீஸ் கொஞ்சம் வழிகாட்டினா…….. “ வேகமாக பேக் எடுத்துக்கொண்டு   “வா தாயே ” என்று நடந்தாள் .( பேக்கில் வெறும் துணி தான் விலை உயர்ந்தது ஒன்றுமில்லை தூக்கி ஓடினாலும் கவலையில்லை” என்று நினைக்கிறேன்) நான் வளைந்து வ ளைந்து கூட்டத்தில் முந்தி அடித்து கடைசியில் ஒரு கட்டத்தில், ” அந்த அதுதான் 12-வது பிளாட்பார்ம்  இந்த பிளாட்பாரத்தில் இருந்து கீழே குதித்து தண்டவாளங்களை ஒரு மினிட்ல கடந்து அங்கே ஏறினா அம்புட்டுதான்”. கால் கூட வைக்க முடியாத இடம். அதில் அவள் இறங்கி கைநீட்டி என்னை அழைத்த பொழுது வெடித்து சிதறி மனதில் அழுது கொண்டு இறங்கி அவள் உதவியுடன் தண்டவாளங்களை தாண்டி 12வது பிளாட்பார்ம் மேடையில் ஏறுகிறேன். விசில் ஊதுகிறது.  ஒரு தம்  பிடித்து ஏறு  கண்ணா என்று என் பின்னாடியே தூக்கி ரயில் வாசல் படியில் ஏற்றி வைக்க அவள் முயற்சிக்கிறாள். காலை தூக்கி வைக்க திராணி இன்று திகைத்து நின்றபொழுது வேகம் கொண்டது ஜிடி. நீங்கள் யாராவது கவனித்து இருக்கிறீர்களா? அதுவரை உயிரில்லா பிணம் போல அசைவற்று இருக்கும் ரயில் வண்டி( விடை கொடுக்க வந்தவர்கள் சலித்து என்ன கிளம்ப  மாட்டேன் என்கிறான் சனியன் கிளம்புச்சுன்னா பஸ் பிடிச்சு வீடு பொய் சேர ………. ) வண்டியில்  போகிறவர்கள் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சு(” சரி மா உடம்பு பாத்துக்கோ அலையாதே லெட்டர் போடு அந்த ஆளு சகவாசமே வேண்டாம்”) அப்படியும் கிளம்பவில்லை என்று நொந்திருக்கும்  கூட்டம்.  வண்டி கிளம்பியதும்  ஓடுகின்ற ஒரு அசுர  ஓட்டம்.  கடக்க  முடியாது   நாம் பதைக்கப் பதைக்க நடந்து செல்லும் பிளாட்பார்ம், ரயில்வே ஸ்டேஷன் காவல் நிலையம், மஞ்சள் நிறத்தில் ஸ்டேஷனின்  பெயர் போர்டு  கடந்து, எப்பொழுதும் வேலை செய்து கொண்டு ரயிலுக்காக தலைநிமிர்த்தி பயணிகளை  காணும் பணியாள்களை   கண் சிமிட்டும்  நேரத்தில் விழுங்கி, இணைப்பாம்புகளாக நெடியும் தண்டவாளங்களை கரைத்து எல்லா ஸ்டேஷனிலும் தாண்டிய பிறகு நாறிக் கொண்டிருக்கும் ஒரு அழுக்கு குட்டையுயின்  மேல் இருக்கும் உடைந்த பாலம்  வந்த  பிறகு  சிறிது வேகம் குறைக்கும் வரை மின் அணு போல ஓடும்  வண்டியில்  ஏற  தைரியம் எனக்கு இல்லை. சுற்றி இருந்தவர்களுடைய அனுதாபங்களை வாங்கிக் கொண்டு, சரி அடுத்தது என்ன, எந்த ஊரு டிக்கெட், எங்கே வாங்கணும், நான்  இதனால் எல்லாம் பயப்படுவேன் என்று இல்லை  என்று குமுறி கொண்டே , இருந்தாலும் நமக்கு மட்டும் இப்படி நடப்பானேன் ……………

சட் என்று முழிப்பு வந்தது. என்ன ஆச்சு.  இது என்ன என் பக்கத்தில் கவிழ்ந்திருக்கும் காபி கப். நான் ஒரு  பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். அப்ப நான் இத்தனை நேரம் பார்த்ததெல்லாம் கனவுதானா? ட்ரெயின்ஒண்ணும்  மிஸ் ஆகலையா, ஓடுற ட்ரெயி னில் ஏற பாக்கலையா அப்படி ஒன்றுமே நடக்கலையா. அப்பாடி! நாம் சேஃபாகத்தான் இருக்கிறோம். ஆனா அந்த பெண்ணை எங்கேயோ பார்த்திருக்கிறோம் யாராயிருக்கும் டிவி யிலேயா   கோவில் விசேஷமா எங்கே என்று பல்லில் சிக்கியதை எடுக்க துருவுவது போல் ஆய்ந்து கொண்டிருந்த பொழுது கைப்பையில் இருந்த அலைபேசி அலறியது. யாராயிருக்கும்?

” மேம், எங்கே இருக்கீங்க? ஏதோ புக்கு வாங்கிக் கொண்டு வரேன்  என்று இறங்கினீங்க . நீங்க ட்ரெயின்ல ஏறிட்டீங்களா?வேஸ்டுபுயூல்  வழியா  வர முடியுமா? எஸ்6கோச்சு.” 

நான் எங்கே இருக்கிறேன்?

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 18சந்திரமுக சகமனுஷி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *