- பி.கே. சிவகுமார்
கதைப்போமா நண்பர்கள் குழுமம் இந்த வாரம் (ஆகஸ்ட் 27, 2025) நடத்திய செழியனின் ஹார்மோனியம் சிறுகதை கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நடந்தது. செழியனும் கலந்து கொண்டு, முழுமையாகக் கேட்டு, கடைசியில் தன் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.
கூட்டத்தில் அதிகபட்சமாக 38 பேர் ஒரே நேரத்தில் கவனித்தார்கள். இடையில் வந்தும் போயும் கொண்டிருந்தவர்களைக் கணக்கில் கொண்டால் மொத்தம் 50+ பேர்களுக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்து இருப்பார்கள். கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்துகிற மூன்றாவது நிகழ்ச்சிக்கே இத்தனை பேர் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது கொடுக்கிற உற்சாகத்தில் தொடர்ந்து செயற்படுவோம். நன்றிகள்!
ஒரு வார நாளில் அமெரிக்காவில் இரவு 8:30 முதல் 10:45 வரையும் இந்தியாவில் காலை 6 மணியில் இருந்து 8:15 மணிவரையும் இவ்வளவு பேர் கலந்து கொண்டது – எங்களுக்கு நிறைய பொறுப்புணர்வைத் தருகிறது.
கூட்டத்துக்கு வந்தவர்களில் பேச விரும்பியவர்கள் அனைவரும் கதை குறித்துத் தங்கள் கருத்துகளைச் சொன்னார்கள். அப்படி கருத்துச் சொன்னவர்கள் 35 பேர்களாவது இருப்பார்கள். இது இந்நிகழ்வின் நோக்கத்தை நிறைவு செய்கிறது.
சிலர் முதலில் அபுனைவு வாசிக்கிறவராக இருந்து புனைவாக இக்கதையைப் படித்ததாகவும், சிலர் சமீபத்து எழுத்தாளர்களின் கதையில் தான் படித்த முதல் கதை என்றும் சொன்னார்கள். இவையெல்லாம் தான் நாம் நிகழ்ச்சியை நடத்துவதன் நோக்கமே.
மேலும் இது சிறுபத்திரிகை வாசிப்பு மட்டுமோ நிபுணர்கள் மட்டுமோ கொண்ட தளம் அல்ல. ஆரம்ப நிலை வாசகர்களோடு இலக்கிய நுண்ணுணர்வு மிக்கவர்களும் பங்கு கொள்ளும் தளம். இப்படி எல்லாரும் ஒரே இடத்தில் பங்குபெற்று, சமமாக உரையாடும்போது, ஆரம்பநிலை வாசகர் தான் பெறுகிற புதிய விஷயங்களால் அடுத்த நிலைக்குத் தானாக நகர முடியும். அதுவே இக்குழுமத்தின் நோக்கம். அதனாலேயே பேச விரும்பும் எல்லாருக்குமே இங்கே வாய்ப்பு உண்டு. கதையைப் படித்துவிட்டுப் பேச வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். கதையைத் திருப்பிச் சொல்லாது, கதை குறித்த தன் பார்வையைச் சொல்ல வேண்டும் என்பவையே நாங்கள் திருப்பித் திருப்பிச் சொல்வது.
இந்த வாரம் $10 கிப்ட் கார்டு பரிசுக்குரியவராக மதுமிதாவைச் செழியன் தேர்ந்தெடுத்தார். மதுமிதாவுக்கு வாழ்த்துகள். செழியனின் ஹார்மோனியம் கதையை மதுமிதா மிகவும் உயிர்ப்பான குரலில் வாசித்து யூடியூபில் முன்னரே வெளியிட்டும் இருக்கிறார். ஒரு வாரத்துக்குள் மதுமிதாவுக்கு கிப்ட் கார்டு அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக நெறியாள்கை செய்து கூட்டத்தை நடத்துகிற தீபப்பிரியாவுக்கு நன்றிகள்.
அடுத்த வாரம் இன்னொரு சிறுகதையுடன் உங்களைச் சந்திக்கிறோம்.
அன்புடன்,
கதைப்போமா நண்பர்கள் குழுமம்
- இலக்கியப்பூக்கள் 349
- பாவண்ணனின் சாம்பல் சிறுகதை கலந்துரையாடல் – அழைப்பிதழ்
- செழியனின் ஹார்மோனியம் – கலந்துரையாடல் – குறிப்புகள்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் – பரிசுத்திட்டம்
- தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்
- மௌனியும் நானும்
- யோகி (கவிதை)
- பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 18
- எங்கிருக்கிறேன்?
- சந்திரமுக சகமனுஷி