அந்த வீதியில்தான்
நடந்து சென்றான்.
அதே வீதியில்தான்
பள்ளிக்கு சென்றான்.
அதே வீதியில்தான்
சைக்கிள் பழகினான்.
அதே வீதியில்தான்
நண்பர்களும் இருந்தார்கள்.
அதே வீதியில்தான்
காதலியும் இருந்தாள்.
அதே வீதியில்தான்
பிள்ளையார் கோவிலும்
மசூதியும், சர்ச்சும் இருந்தது.
அதே வீதியில்தான்
வாழ்க்கையும் ஆரம்பமானது.
அதே வீதியில்தான்
வாடகை வீட்டில்
இரண்டு பிள்ளைகள் பெற்றான்.
ஆனால்
பழைய காதலி
இன்னொருத்தன் மனைவியாக,
அத்தை மகள்
இவன் மனைவியாக
தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தனர்.
அதே வீதியில்தான்
காதலியும் கிழவியானள்.
அதே வீதியில்
இவன் மனைவியும் கிழவி ஆனாள்.
கிழவனும்-கிழவியும்
நெஞ்சக பாசத்துடன்
நடந்து சென்றதும்
இதே வீதிதான்.
இந்த வீதியில்தான்
பசுமாடும், நாய்களும்
நடந்து செல்கின்றன.
இந்த வீதி
ஒரு மலைப் பாம்பைப்போல்
அசைவற்று
படுத்திருக்கும்
எல்லா உணர்ச்சிகளையும்
அடக்கிக்கொண்ட
ஒரு
யோகியைப்போல!
-ஜெயானந்தன்.
- இலக்கியப்பூக்கள் 349
- பாவண்ணனின் சாம்பல் சிறுகதை கலந்துரையாடல் – அழைப்பிதழ்
- செழியனின் ஹார்மோனியம் – கலந்துரையாடல் – குறிப்புகள்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் – பரிசுத்திட்டம்
- தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்
- மௌனியும் நானும்
- யோகி (கவிதை)
- பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக
- அசோகமித்திரன் சிறுகதைகள் – 18
- எங்கிருக்கிறேன்?
- சந்திரமுக சகமனுஷி