அசோகமித்திரன் சிறுகதைகள் – 19

அசோகமித்திரன் சிறுகதைகள் – 19
This entry is part 1 of 3 in the series 7 செப்டம்பர் 2025

பி.கே. சிவகுமார்

அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம்.

எழுதத் தொடங்கி ஏறக்குறைய 8 ஆண்டுகள் ஆனபின் – 1959ல் பிரசுரமான 12ஆவது கதையில் தான் – அவர்   முதலில் தான் வளர்ந்த, பார்த்த ஹைதராபாத் / செகந்திராபாத் வரலாற்றை வைத்து, இஸ்லாமியப் பாத்திரங்களைக் கொண்டு ஒரு வித்தியாசமான கதைக்களனில் எழுதினார்.

1961-ல் பிரசுரமான, அவரின், 17வது கதையான தப்ப முடியாது என்பது அவரின் இன்னொரு வளர்ச்சியைக் காட்டுகிறது. இதிலேதான் அவர் விளிம்புநிலை மனிதர்களை மையப்படுத்திய கதை எழுதியிருக்கிறார் என்பது மட்டுமல்ல, சென்னை மொழியையும் (slang) கதையில் பயன்படுத்தத் துணிகிறார். அந்த வகையிலும் இந்தக் கதை அசோகமித்திரனின் வளர்ச்சியில் முக்கியமான கதை.

அசோகமித்திரன் போன்ற பெரிய எழுத்தாளர்களே புதிய களனையும், புதிய மொழியையும் கையாள அந்தக் காலத்தில் 8ல் இருந்து 10 ஆண்டுகள் எடுத்திருக்கிறார்கள். Comfort zone நமக்குள் வளராமல் அவசரப்பட்டு எதிலும் ஆழக்கால் வைக்கக் கூடாது என்பது அந்தத் தலைமுறையின் விழுமியம்.

இந்த இடத்திலே ராஜம் கிருஷ்ணனும் நினைவுக்கு வருகிறார். கதை எழுதுகிற இடங்களில் சென்று, உடன் இருந்து, களப்பணி போல் பார்த்து, அதை உள்வாங்கிய கதைகளை எழுதியவர் – உதாரணமாக அவருடைய கரிப்பு மணிகள் நாவலைச் சொல்லலாம்.

அக்கால எழுத்தாளர்கள் எல்லாரிடமுமே நன்றாகத் தெரியாத ஒன்றை எழுதிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்வு இருந்ததை இப்படி அறிகிறோம்.

இணையமும், கூகுளும் வந்துவிட்ட நவீன உலகில் சில இணைய தளங்களையும், சில புத்தகங்களையும் படித்துவிட்டு, செவிவழிச் செய்திகளைக் கேள்விப்பட்டு, தொடர்புடைய இடங்களுக்கு அவசரப் பயணம் சென்று வந்து, நிபுணர்கள் மாதிரி கதைகளும் கட்டுரைகளும் பலர் எழுதுகிறார்கள். அவர்கள் முந்தையத் தலைமுறையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இது.

அசோகமித்திரனின் சாதாரண மொழிநடை குறித்து, உவமைகள் கூட ஏதும் இல்லாத மொழிநடை என முன்னரே சொல்லியிருந்தேன் – கோபால் ராஜாராமிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்போது நான் சொன்னேன் – தமிழில் அசோகமித்திரன் நடையில் மெல்லிய அங்கதமும் நகைச்சுவையுணர்வும் அதிகம் சுட்டப்பட்டாலும் அவற்றை அவர் மிகுந்த கட்டுப்பாடுடனோ ஜாக்கிரதையுணர்வுடனோ பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அதே அசோகமித்திரன் ஆங்கிலத்தில் எழுதுகிற போது, இதில் சுதந்திரமாக அடித்து ஆடியிருக்கிறார். உதாரணமாக, அசோகமித்திரனின் My years with the boss at Gemini Studios – நூலை நான் ஆங்கிலத்தில் படித்தேன். அதன் முதல் பாகம் முழுக்க விரவி நிற்கும் அங்கதமும், நகைச்சுவையும் கொண்ட ஒரு படைப்பை அசோகமித்திரன் தமிழில் எழுதிய மாதிரி தெரியவில்லை. It was Asokamitran at his best writing freely providing a laughing riot and reading him coming that way was pure joy.

கோபால் ராஜாராம் சொன்னார் – அசோகமித்திரனின் தமிழ் நடை சாதாரணமாக இருக்கிறது என்பதற்குக் கூட இது ஒரு காரணமாக இருக்கலாம். அவர் 20/21 வயதில் தான் சென்னை வருகிறார். ஹைதராபாத் / செகந்திராபாத்தில் அவர் வளர்ந்த முதல் 20 வருடங்களில் வீட்டில், உறவினர், தமிழர் வட்டத்தில் மட்டுமே தமிழ் பேசியிருக்கலாம். அதனால் தன் தமிழ்ப்புலமை குறித்த ஒரு self-reflection அவரிடம் இருந்து – தனக்கு இயல்பாக வருகிற தமிழ் நடையில் எழுதினால் போதும் என அவர் முயன்றதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே நேரம், he was more comfortable in English and so he expressed more freely in English using the versatility of the language and using his mastery of the language.

அசோகமித்திரன் எழுத்துகள் குறித்த உரையாடலில் இத்தகைய அவதானிப்புகள் முக்கியமானவை. அவை அசோகமித்திரனை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவலாம். 

இந்தக் கதையில் 3 இடங்களில் சேரி என்கிற வார்த்தை வருகிறது. 1990களில் தலித் எழுத்துகள் வரும்வரை இத்தகைய வார்த்தைகளில் தமிழில் சகஜமாக இருந்தன. சில நாட்கள் முன் கூட – ஒரு தமிழ் ஆன்லைன் புத்தகக் கடையில் ஒரு புத்தகத்தின் blurb-ல் சேரி என எழுதியிருந்தார்கள். ஊரும் சேரியும் நூல் அல்ல. அதனால் அசோகமித்திரன் 1961ல் பிரசுரமான இக்கதையில் இச்சொல்லைப் பயன்படுத்துவதைப் பெரிய குறையாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. வரலாற்றுப் போக்கில், நவீனமடைதலில், ஒரு சமூகம் சமத்துவம் குறித்த கேள்விகளை எழுப்பிக் கொள்ளும்போது என்று பலவழிகளில் புழக்கத்தில் இருந்த சொல் சரியில்லை என ஆவதும், offensive எனச் சுட்டப்படுவதும் தொடர்ந்து நடந்து வருவதே. அதனால் எந்தக் காலத்தில், எந்தக் context-ல் அத்தகைய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனப் பார்ப்பதே என்னளவில் முக்கியமானது. அதனால் இத்தகைய சில வார்த்தைகளை வைத்து எந்த எழுத்தாளரையும் நிராகரிப்பது எனக்கு உடன்பாடில்லை. 

அசோகமித்திரன் தன் கதைகளில் எந்தத் தீர்ப்பையும் சொல்வதில்லை. அரசியல், சமூகப் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசுவதில்லை என்றெல்லாம் பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். 

ஆனால் அசோகமித்திரன் எழுத்துகளைத் தொடர்ந்து படிப்பவர்கள் – அவரின் moral compass – யார் பக்கம் சாய்கிறது என்பதை அவர் சொல்லாமலேயே உணர முடியும். மற்றவர்கள் இப்படி உணர்ந்தார்களோ இல்லையோ நான் உணர்ந்தேன். அசோகமித்திரனின் moral compass பெண்கள் மீது பரிவு கொண்டது. அது பணக்காரப் பெண்ணாக இருந்தாலும் சரி, ஏழைப் பெண்ணாக இருந்தாலும் சரி, அ.மி. பெண்களின் பிரச்னையை எழுதும்போது நேரம் எடுத்து விவரித்தும், கரிசனத்துடனும், அவர்கள் பால் பரிவுடனுமே எழுதுகிறார். அசோகமித்திரனின் மீது எனக்கு மதிப்பு வரக் காரணமாக இருந்ததில் இது முக்கியமானது. இந்த விஷயத்தில் அவர் ஜெயகாந்தன் போன்றவர். ஜெயகாந்தன் எழுத்துகள் பெண்களுக்கு ஒரு வக்கீல் மாதிரி என்றால், அசோகமித்திரன் எழுத்துகள் பெண்களின் நிலை கண்டு இரங்கி, அவர்களின் பிரச்னைகளைப் பரிவுடன் பதிவு செய்வது மட்டுமே தன் இயல்புக்கு ஒத்தது என்பதைப் புரிந்து கொண்ட ஒருவர் பெண்களுக்குக் கொடுக்கும் தார்மீக ஆதரவு மாதிரி.

இந்தத் – தப்ப முடியாது – கதையிலும் அசோகமித்திரன்  விளிம்புநிலைப் பெண்மணியின் வாழ்க்கையைக், கடின உழைப்பை, ஏழ்மையை, குடிகாரக் கணவனுடன் அவள் படுகிற அவஸ்தையை, அவனால் எதிர்கொள்கிற வன்முறையை எல்லாம் நம் மனம் பதைக்க, அவள் பால் பரிவு உண்டாக எழுதியிருக்கிறார். இத்தோடு அசோகமித்திரன் நின்றுவிடவில்லை.

இந்தக் கதை அசோகமித்திரனின் நல்ல கதைகளுள் ஒன்று. ஏனெனில் உளவியல் ரீதியாக, ஒரு நடுத்தர வர்க்கம் சமூகப் பிரச்னைகளை எதிர்கொள்வதைச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

ஒரு குற்றம் தன் முன்னே நடக்கும்போது, ஒன்றும் செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு, பின்னர் அதை நினைத்து இரவு முழுக்கத் தூங்க இயலாமல் குற்றவுணர்வு கொள்ளும் நடுத்தர வர்க்கக் கதைசொல்லி. தன்னைச் சுயநலவாதி, கோழை, பயந்தாங்கொள்ளி, சுயநலவாதி என்றெல்லாம் மனதில் நினைத்துக் கொள்கிற கதை சொல்லி. இன்னொரு பக்கம், தான் எடுத்த முடிவுக்குச் சப்பைக்கட்டு கட்டும் விதமாக, ஜே. கிருஷ்ணமூர்த்தி சொன்ன, “விருப்பு வெறுப்பில்லாத கவனத்தை”த்தான் நமக்கு எதிரே அநியாயமோ, பெண்கள் மீதான வன்முறையோ, குற்றங்களைப் பார்க்கும்போதோ பயன்படுத்த வேண்டும் எனவும் நினைக்கிறான். அதனால் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல அவள் உழைத்துச் சேமித்து வைத்த பணத்தைத் திருடிச் சென்ற குடிகார கணவன் அவள் கேட்டபோது அவளைத் தெருவில் தாறுமாறாக ரத்தம் வருமளவு அடித்ததைத் தான் வேடிக்கை பார்த்தது சரிதான் என புத்திசாலித்தனத்துடன் ஆறுதல் சொல்லிக் கொள்ள முயல்கிறான். அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பது என்ன நிச்சயம், அவள் அவன் மனைவிதானா என்றும் மனதுக்குள் கேள்விகள் எழுப்பிக் கொள்கிறான். கடைசியில் அவனை  அவனே முட்டாள் என்று அழைத்துக் கொண்டு, “உனக்கு நீயே புளுகிக் கொள்ளாதே. அது முடியாது. உண்மையில் இருந்து தப்ப முடியாது. ஏய்த்துக் கொள்ளாதே” எனச் சொல்லிக் கொள்கிறான்.

சமூகப் பிரச்னைகளில், தலையிட்டுக் கொள்ள விரும்பாமல், அமைதியாக வேடிக்கை பார்க்கிற நடுத்தர வர்க்கத்தில் கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் பின்னர் கொள்கிற குற்றவுணர்வும், தனக்குத் தானே சொல்லிக் கொள்ள முயல்கிற சமாதானமும் இந்தக் கதையில் நன்றாக வெளிவந்துள்ளன.

“சில நிமிஷங்களில் நான் தூங்கி விட்டேன். மறுநாள் விடிந்து நான் எழுந்தபோது எல்லாம் சரியாகிப் போயிருந்தது” என்கிற கதையின் சுருக்கமான முடிவு, அபாரமானது. நடுத்தர வர்க்கம் எப்படி விரைவாக, ஓரிரவின் சிலமணி நேர உறக்கத்துக்குப் பின்னர்கூட, தன் மனநிலையைத் தற்காலிக அறம் சார்ந்த குற்றவுணர்வுகளில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியும் என்பதைப் பார்க்கிறோம்.

இந்தக் கதையின் முடிவில் தெரிவது – அசோகமித்திரனின் முத்திரை. அவர்தான் நடுத்தர வர்க்கத்தை எவ்வளவு கூர்ந்து துல்லியமாகக் கவனித்திருக்கிறார்.

– பி.கே. சிவகுமார்

– அசோகமித்திரன் சிறுகதைகள் – தொகுப்பு 1 – கவிதா பப்ளிகேஷன் வெளியீடு

#அசோகமித்திரன்

Series Navigationபாச்சான் பலி 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *