பாச்சான் பலி 

பாச்சான் பலி 
This entry is part 2 of 3 in the series 7 செப்டம்பர் 2025

ஆர் சீனிவாசன் 

வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா காடுகளில், மனதின் ஆழத்தில், தொன்மங்களின் மாயங்களில் , கருப்பு – வெளுப்பு வேறுபாடுகளில் பரம்பொருள் கிடைக்காதபோது சமூகத்தின் நிர்பந்தங்களால் சில இறை சம்பந்தமான எளிமைகளை ஏற்றுக்கொள்ளப் பழகுகிறோம் அல்லது பழகிக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறோம். அத்தகைய கோட்பாடுகள் சொல்லும் நியாயங்கள், அறிவாற்றலின் வினைகளுக்கு சத்ருவாக நிற்கும்போதெல்லாம் மனதில் ஏற்படும் எண்ண எரிமலை வெடிப்புகளை, குடும்ப நலனைக் கருதி வெளிப்படுத்தாமல் நம்மை நாமே சாந்திப்படுத்திக்கொள்ளவும், கேள்விகளின்றி சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவும் பழகுகிறோம். ஆனால் அத்தகைய ஒட்டுவேலைகள் அதிக நாட்கள் நீடிக்காது.

குப்புஸ்வாமி பிறந்த சில வருடங்களிலேயே சில நியாயங்களை கேள்விகேட்காமல் ஏற்றுக்கொண்டார். பால்யத்தில் தீனம் தெரியாமல் வளர்ந்ததால், உலகமே நல்லுள்ளம் படைத்ததென நினைத்தவர், இளமையில் வாசிப்பு அதிகமானதும், கண்ணாடித்திரைகளை தாண்டி போக முயல்பவர்களுக்கு ஏற்படும் பலத்த காயங்களை பார்த்து, தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள, ஒருங்கிணைத்துக்கொள்ள உள்ளூற தயக்கங்கள் இருப்பினும் வெளிப்புறம் முகம் சுளிக்கவில்லை. மூன்று மூன்றாக இப்போது ஒன்பது சரடுகள் மார்பின் குறுக்கில் தொங்கும் நிலையில் ஓய்வூதியத்தின் போதாமையும் மனைவி சரஸ்வதியின் இம்சையும், சார்பு ஞாயங்களை வேவு பார்க்க தொடங்கியிருந்தன. சரஸ்வதி, குப்புவின் நுங்கூரம். எங்கும் போக விடாமல் கட்டிய கன்றுக்குட்டியைப்போல குப்புவை குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே மேய விட்டிருந்தாள்.

குறிப்பிட்ட ஆரம் உடைய வட்டப் புல் வெளியின் விளிம்பில் ஏதோ ஓர் புள்ளியில் கட்டிய ஆட்டின் (அல்லது மாட்டின், மானின் , விளங்குவகை முக்கியமில்லை) கழுத்துக் கயிறு எவ்வளவு நீளம் இருந்தால் வட்டத்தின் சரி பாதி புல்வெளியை மேய முடியும் என்பது கணிதவியலின் மிக முக்கியமான புதிர். அதற்கு இன்றுவரை யாராலும் சரியான பதில் அளிக்க முடியவில்லை. சரசுவுக்கு இந்தப் புதிரின் விடை எப்படியோ தெரிந்துவிட்டது. அதனால்தான் குப்புவை தன் அறிவாற்றல் அளவு நீளமுள்ள கயிற்றினால் கட்டி புல்வெளி எனும் உலக அனுபவங்களின் மேல் மேய விட்டிருந்தாள். நிச்சயமாக அந்தளவு அறிவாற்றலை பயன்படுத்தி நடைமுறை உண்மைகள் பாதி கூட புத்திக்கு புலப்பட வாய்ப்பில்லை. அதுதான் அவளுக்கு வசதியானது.

வலைதள விவாத மேடைகளில், வாத-பிரதிவாத சரடு வெகு நேரம் நீடித்தால் ஏதோ ஒரு கட்டத்தில் நாட்ஸியிசம் மற்றும் ஹிட்லரின் மேற்கோள் நிச்சயம் எழும் என்பது சமூகவியல் கோட்பாடு. குடும்ப பட்டிமன்ற மேடைகளில் விவாதிக்கும் தம்பதியினர், எதிர்நிற்கும் பேச்சாளரின் உற்றார் உறவினரை சுட்டுப் பொசுக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது நமக்கே சொந்த அனுபவத்தால் அறிந்த உண்மை. சரசு – குப்பு விவாதங்கள் அதற்கு விதிவிலக்கல்ல. ராமாயணத்தை பல ஆசிரியர்கள் பல்வேறு கோணங்களிலிருந்து எழுதுவது கதை ஒன்றென்றாலும் பாத்திரத்தைப் பொறுத்து நியாயங்கள் மாறுபடலாம் என்பதற்காக இருக்கலாம். குடும்ப இராமாயணத்தில், நடந்தவைக்கு எப்போதும் இரு ஞாயங்கள், தர்க்கங்கள் இருப்பது ஊர் அறிந்த பொதுமறை. குப்பு – சரசு விவாதங்கள் எப்போதும் உச்ச கட்டத்தில், ‘உங்க தங்க வீட்டுல பாத்திரத்துக்கு ஒருத்தி , தோட்டத்துக்கு ஒருத்தன், வண்டி தொடைக்க இன்னோருத்தன், சமைக்க ஒருத்தின்னு வேலைக்கு வெச்சிருக்கா. எனக்கென்ன இருக்கு? ஒரு உதவி இல்லாம ஒண்டிக்கட்டையா போராடுறேன். ‘ என்று திசை திரும்போதெல்லாம், ‘நீ லூசு, உன் அப்பன் லூசு , உன் பரம்பரையே லூசு பரம்பரை டி’ என முடியும் தருணங்களில் கழுத்துக் கயிற்றை அறுத்துக்கொண்டு குப்பு ஆடு, பாயும் புலியாக மாறி முடிவடையும்.

அன்று ஆடி வெள்ளி, நாட்களுள் விசேஷம் – தோஷம் என பிரிக்கும் நடைமுறையை தீவிரமாக குப்பண்ணா ஆராய்ந்துகொண்டிருந்த காலம். நாட்களை ஓரைகளாக , ஓரையை நாழிகையாக, நாழிகைக்கு ஒத்த நட்சத்திரங்களை இணைத்து, திதி , பக்ஷம் பிரிக்கும் முறையை, பகுத்தறிவாளர் குப்பண்ணா சந்தேகிக்கத் தொடங்கிய காலம். மாறிகள் இரண்டிற்கு மேல் இருந்தால் அவற்றுள் பதுங்கியிருக்கும் ஊடாட்ட ரகசியத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மனித சிந்தனைக்கு இயல்பானது. வானத்தில் மிதக்கும் அம்புலி, ஞாயிறு நட்சத்திரங்களுக்கும், மனித இயலாமையின் பின்வினைக்கும், காலத்தைப் பிரித்து கருப்பு – வெளுப்பு வண்ணம் தீட்டினால்தான் தீர்வு காணமுடியும் என்ற மனித சிந்தனையை, குப்பண்ணா தர்க்கத்திற்கு உள்ளாக்கிக்கொண்டிருந்த காலத்தின்போது வந்த ஆடி வெள்ளி அன்று. காலை ஏழரைக்கே சரஸ்வதி குளித்து தயாராகி பூஜை மண்டபத்திற்கு முன் உட்கார்ந்துவிட்டாள். குப்புஸ்வாமி மெதுவாக எழுந்து வெராண்டாவில் காலை நாளிதழுடன் உலக நடப்பை அவநம்பிக்கையோடு வாசித்துக்கொண்டிருந்தார்.

இயற்கை அமைப்புகள் குறைவான ஆற்றலுடன் இருக்கும்போதுதான் அதி நிலையாக இருக்கும் என்பது அறிவியல் கோட்பாடு. குப்பண்ணாவை பொறுத்தவரை காலை காபி முடிந்து நாளிதழ்களை படிக்கும்போதுதான் மிக நிலையாக இருப்பார். அந்த அமைதி நிலையை சீர்குலைக்க யாரையும் விடமாட்டார். ஆனால் அன்று அந்த அமைதி , 

‘இங்க சீக்கரம் வாங்க….ஐயோ என்ன கண்றாவி இது’ என்ற அலறலினால் குலைக்கப்பட்டது, 

‘உலகம் அழிய இன்னும் ஒரு நிமிடமே உள்ளது’ என்ற தலைப்பில் சீதோஷ்ண சீர்குலைவால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பின்விளைவுகளைப் பற்றி படித்துக்கொண்டிருந்த குப்பு, முதல் அலறலை கேட்டும் கேட்காததைப்போல அமைதிகாதார். 

‘உங்களைத்தான்…சும்மா உட்கார்ந்து பேப்பரை படிக்கிறதை விட்டுட்டு இங்க கொஞ்சம் வந்து பாருங்க’ என்ற போதுதான் கொஞ்சமாவது திரும்பி பார்க்க தோன்றியது. 

‘என்ன? ஏன் கத்தறே?’ என்றார்.

‘இத பாருங்க…பூஜை அறையில என்ன உட்கார்ந்திருக்குன்னு’ என்றபோதுதான் குப்புவின் பொது அறிவு அலைவரிசை ‘அபாயம்’ என்ற செய்தியை கிரகித்துக்கொண்டு, திரும்பிப்பார்த்ததோடு நிற்காமல் எழுந்து நிற்கவும் செய்தது. 

‘என்ன உட்கார்ந்திருக்கு?’ என்றார் 

‘பச்சான்’ என்றாள் சரஸ்வதி. அதைக் கேட்டவுடன் குப்பண்ணா மெதுவாக பேப்பரை மடித்து அக்குளில் சொருகிக்கொண்டு நடந்து வந்து பார்த்தார். 

மரத்தினால் ஆன பூஜை மண்டபம் சமீபத்தியது. கதவுகள் இரண்டிலும் ஈட்டி முனை போன்ற துவாரங்கள் வெட்டப்பட்டு, சிறிய மணிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் மெல்லிய மணியோசை கேட்கும். தரையின்மேல் சரியான திசைப்பார்த்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தின் அடிவாரத்தில் இரண்டு பெட்டிகளும் மேலே இருக்கும் முக்கிய பகுதி மூன்றடி உயரமும் ஒன்றரைக்கு இரண்டடி விஸ்தாரமும் உடையதாக தச்சனிடம் செய்யச்சொன்னது சரஸ்வதிதான். மேல் கூரையில் கோபுர கலசம் பொருத்தி, சமீபத்தில்தான் விசேஷமாக தயார்செய்யப்பட்டது. குப்புஸ்வாமி மண்டபத்தைப் பார்த்தவுடனேயே அதில் உள்ள குறையை கண்டுபிடித்துவிட்டார், ‘இருட்டா இருக்குமில்ல?’ என்றார். மண்டபம் செய்து வந்தபின் அதற்குள் துளையிட்டு மின்சார பல்பு பொருத்த சரசு மன்னி அனுமதிக்கவில்லை. ‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். தினமும் விளக்கேத்தறேனே’ என்ற சரசுவின் பதில் அவருக்கு ஆசுவாசம் அளிக்கவில்லை. மண்டபம் வந்திறங்கியவுடன் சரியான கிழமை, நாழிகை பார்த்து அணைத்து படங்களையும், விக்ரகங்களையும் வைத்தபோதுதான் இடத்தட்டுப்பாடு தெரியவந்தது. எந்த சாமிக்கும் குறையில்லாமல் எப்படியோ அரங்கேற்றிவிட்டாள் சரசு.

குப்பண்ணா மெதுவாக வந்து மண்டபத்தினுள் பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. 

‘எங்கடி, ஒன்னும் தெரியல’ என்றார். 

‘எதிரே நிக்குற என்னையே உங்களுக்குத் தெரியாது. மேல பாருங்க ‘ என்று ஆள்காட்டி விரலைத் தொடர்ந்து சென்றபோதுதான் குப்புவிற்கே திடுக்கிட்டது. அங்கே மண்டபத்தின் உள்கூரையில் மிக நிதானமாக நல்ல பெரிய மீசையுடன் தலைகீழே எதுவும் நடக்காததைப்போல வீற்றிருந்தது கரப்பான் பூச்சி. அதைப் பார்த்தவுடனேயே குப்புவிற்கு மெய்சிலிர்த்ததற்கு முதற்காரணம் அதன் ஆகிருதி, இரண்டாவது அது தற்போது நின்றிருந்த இடம். படங்களுக்கு மிக அருகே அதுவும் தலைகீழாக மீசையை அசைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது. நிலைமையின் தீவிரம் மெதுவாகப் புலப்பட்டது குப்புவிற்கு. ஒரு சிறு தவறான அசைவு செய்தாலும் கரப்பான் ஓடிவிடும் அல்லது இன்னும் மோசமாகப் பறக்க ஆரம்பிக்கும். சந்நிதிக்குக் கீழே அன்றைய படையல் உணவு வைக்கப்பட்டிருந்தது. ஒரு சிறு தவறு என்றாலும் எல்லாம் பாழாக போய்விடும். 

‘என்ன பாத்துகிட்டு இருக்கீங்க..பூஜைக்கு நேரமாகுது.. ஏதாவது செய்யுங்க’ என்றாள் சரஸ்வதி. 

‘என்னடி செய்யலாம். பாக்கற இல்ல..அத அடிக்கப்போய் மிஸ் ஆயிடுச்சுன்னா படத்துக்குப் பின்னால் போய் ஒளிஞ்சிக்கும்..’ என்றார்.

‘என்ன பேசறீங்க பெருமாள் சந்நிதிக்குள்ள அத அடிக்க முடியுமா?..அத பிடிச்சு வெளியே தூக்கி எறியுங்க’ என்ற போது, குப்புவிற்கு ‘சுல்’ என உரைத்தது. 

‘ஏன் நீயே செய்யேன்…பிடிச்சு தூக்கியெறிய அது என்ன எலியா..அதுக்கு கூட பொறி வடை வேணும். கொஞ்சம் இரு..’ என்று என்ன செய்வது என யோசித்தார். 

‘ஐயோ..கையில ஒரு பிளாஸ்டிக் கவரை போட்டுண்டு…மீசையை பிடிச்சு அப்படியே கொண்டுபோய் வெளியில தூரக்க வீசியெறியுங்க..இது கூடவா சொல்லித்தரனும் ?’ என்ற போதுதான் சினம் தலைக்கு ஏறுவதை உணர்ந்தார் குப்புஸ்வாமி. 

‘அது எப்படிறி முடியும். அதை பிடிக்கப்போய் எங்கேயாவது ஓடி ஒளிஞ்சுக்கிச்சுன்னா என்ன பண்ணுவ…சரி ஒன்னு செய் அது அப்படியே இருக்கட்டும் ஒன்னும் பண்ணாது..நீ பூஜையை ஆரம்பி’ என்றார். 

‘என்ன சொல்லறீங்க? அது மேல உட்கார்ந்துண்டு இருக்கும்போது எப்படி பூஜை செய்யமுடியும்? பெருமாளுக்கு மந்திரம் படிக்கிறதா இல்ல பாச்சானுக்கு படிக்கறதா? உங்களைப்போய் கேட்டேனே..பக்கத்து வீட்டு வேலைக்காரி இருக்காளான்னு பாருங்க’ என்று படபடத்தபோது, குப்பண்ணாவிற்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. ஒரு கரப்பானால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதாயிற்றே என்ற சினம். அப்போதுதான் அக்குளில் சொருகியிருந்த பேப்பர் ஞாபகம் வந்தது. அதை மெதுவாக உருவி மண்டபத்திற்குள் உட்கார்ந்திருந்த பாச்சானை குறிபார்க்கும்போது,

‘ஐயோ , அதை அடிக்காதீங்க…வேண்டாம்..’ என குப்பண்ணாவின் கைகளைப் பிடிக்க முயன்றாள் சரசு. விஷயம் கைகலப்பில் முடியும் அபாயம் மிக அண்மையில் வந்துவிட்டது. 

‘ஏன்? அடிக்கக் கூடாதா?’ என்றார். 

‘மண்டபத்துக்குள்ள உயிரைக் கொல்வீங்களா?’ என்றாள் சரசு. 

‘வெளியில அடிச்சா பரவாயில்லையா?’ என்றார் குப்பு, 

‘இப்ப அதெல்லாம் வேண்டாம்…’ 

‘வேற என்னடி செய்ய சொல்ற? வெளியே எங்கயாவது பார்த்தா தொடப்பத்தாலையோ, செருப்பாலையோ அடிச்சு தூக்கி போட்டுறலாம். இது மண்டபத்துக்குள்ள இல்ல உட்கார்ந்திருக்கு, கொஞ்சம் கூட இடம் இல்லாம படத்தைப் வைக்காதடின்னு சொன்னா நீ கேட்கல , நல்லா இருட்டா இருக்குன்னு வந்து உக்கார்ந்துக்கிச்சு, இத பார்த்தா நூறு முட்டை போட்டதுமாதிரி இருக்கு. இன்னும் எவ்வளவு உள்ள பதுங்கி இருக்கோ? உள்ள இருக்குற எல்லாப் படத்தையும் எடுத்து சுத்தம் செஞ்சாத்தான் தெரியும். ஒரு பல்பு போடறேண்டின்னா அதுக்கும் கேட்க மாட்டேங்கிற, பெருச்சாளி சைசுக்கு பச்சான் வரமே வேற என்ன வரும்? நீயே கையில கவரை போட்டுக்கிட்டு பிடிச்சு தூக்கிப் போட வேண்டியதுதானே? என்ன ஏன் கூப்படற?’ சரசு பேசிய அதே உச்ச ஸ்தாயியில் கொட்டித் தீர்த்தார் குப்பு.

‘ஆமாம் எல்லாம் என்னாலதான். எனக்கு நூறு கையிருக்கு பாருங்க. வீட்டை சுத்தம்பண்ண நீங்க என்ன செஞ்சீங்க. உங்க தங்க வீடு மாதிரி…’ 

வாதம் இந்த திரிபுக்கு வந்தபோது குப்புஸ்வாமியின் செவிகள் தானாகவே மூடிக்கொண்டன. சிந்தை மரத்துப்போனது, இருதயத் துடிப்பு நிமிடத்திற்கு இருநூறை தொட்டிருக்கலாம். கழுத்துக் கயிற்றை அறுத்துக்கொண்டு பாய்ந்தது குப்புஸ்வாமி என்கிற ஆடு. வலது கையை மின்னல் வேகத்தில் மண்டபத்திற்குள் விட்டு கரப்பானைக் கைவிரல்களால் வெளிப்புறம் தட்டினார். தட்டிய அத்தருணம் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. சில மணித்துளிகளில் வலது கைவிரலில் ஒருவகை அசூயை பரவியது. கரப்பானை பலமுறை பெருக்குமாறாலும், செருப்பாலும் பச்சக்கி செய்திருந்தாலும், கரப்பானை விரங்களால் ஸ்பரிசித்து அன்றுதான் முதல் முறை. பார்ப்பதற்கு வெகு பளுவாகத் தோன்றினாலும் எடை குறைவாகத்தான் இருந்தது. அத்துடன் உடலில் எந்தவித சதையுமின்றி, காய்கறி பஃப் வெளிப்புற அடுக்குகளை ஞாபகப்படுத்தியது. தட்டியபோது கரப்பான் நல்லவேளையாக ஓடவில்லை, பறக்கவும் முயற்சிக்கவில்லை. ஒருகணம் தன் குறியையும், வேலை சாகசத்தையும் மெச்சிக்கொண்டார். 

எண்ணங்கள் பல தோன்றி மறைய, செவி மெதுவாக மீண்டும் கேட்கத்தொடங்கிய போதுதான் மெல்லீதாக, ‘ஐயோ…..’ என்ற அலறல் கேட்டது. அப்போதுதான் வீரதீரமாகத் தூக்கியெறிந்த கரப்பான் சரஸ்வதியின் மேல் விழுந்ததை உணர்ந்தார். சரசுவிற்கு உதவ செல்வதற்கு முன், சில மணித்துளிகள் சரஸ்வதியின் மேல் முந்தானையில் ஒட்டிக்கொண்டு ஒய்யாரமாய் நடந்துகொண்டிருந்த கரப்பானைப் பார்த்த அந்த காட்சி, அவரையும் அறியாமல் முகத்தில் புன்முறுவல் படரச் செய்தது.

Series Navigationஅசோகமித்திரன் சிறுகதைகள் – 19காட்சி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *