ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அன்புக்கடலாக அறியப்படவேண்டும் என்று அதிகதிகம் விரும்பியவர்
இவர் கருத்துக்கும் லைக்கிட்டார் இவர் கருத்துக்கு நேரெதிர் கருத்துக்கும் லைக்கிட்டார்
இன்னொருவர் பதிவுக்கும் லைக்கிட்டார் அவரை மட்டம் தட்டிய மற்றவர் கருத்துக்கும் லைக்கிட்டார்
இட்டுக்கட்டிய கதைகளுக்கும் லைக்கிட்டார்
ஏதுமிராத சட்டிக்குள் துழாவிக்கொண்டிருந்த அகப்பைக்கும் லைக்கிட்டார்
காததூரமாய் வரையப்பட்ட குட்டிணூண்டுக்கோட்டுக்கும் லைக்கிட்டார்
பாதிவட்டமாய் சுட்டப்பட்டிருந்த உடைந்த கோலிகுண்டுக்கும் லைக்கிட்டார்
கதிரவன் கிழக்கில் உதிக்கும் என்ற ஒற்றைவரிக் கவிதைக்கும் லைக்கிட்டார்
கவிதை என்ற சொல்லில் தை உண்டு
விதை உண்டு கதை யுண்டு கவிதை மட்டும் இல்லை என்ற மூன்று வரிக் கவிதைக்கும் லைக்கிட்டார்
இட்டார் இட்டார் இட்டுக்கொண்டேயிருந்தார்
வலதுகையாள்காட்டிவிரலும் கட்டைவிரலும் கெட்டுப்போனாலும் லைக்கிடாமல் இருக்கலாகாது என்றே
வளர்ந்து பெரியாளான பின்பு இடதுகையில் எழுதப்பழகிக்கொண்டுவிட்ட பின்
இப்போது எல்லாப் பதிவுகளுக்கும்
தப்பாமல் இரண்டிரண்டு லைக்கிட்டுக்கொண்டிருக்கிறார்.