திருவை
1. திருமகள்
தாமரை மலர்கள் கூடிச் செய்த
புண்ணியம் கோடி
பாத மலர்களைத் தேடி
தஞ்சம் அடைந்தது உனை நாடி
இடை உரசும் நெட்டை நெடுங் கூந்தலும்
நளினம் புகுந்த பாதமும்
அடக்கி ஆளும் எழிலின் சாயலே
மைபொதி விழி கண்டு களைத்த விழிகள்
சிவந்த நின் இதழாய் கொதிக்க
நின்னழகு ஏதென எதைக் காண
தாமரைப் பூவில் அமர்ந்த தேவி
எங்கள் கண்ணைப் பறித்துத் தங்கக்
குடத்தை நிரப்பும் ஒவ்வொரு தங்கக் காசும்
போடும் இரைச்சல் தான் என்ன
அருள் மாரிப் பொழிவின் அருவிச் சத்தமோ
செல்வச் சீமாட்டியே
க்ராதகன் பாதகன் இல்லம் தேடி அடையும்
உனைச் சிறையிலிடவா
2. பூமிக்களம்
களத்தோடு சேர்த்துப் பாலை அருந்தும்
பூனைக் குட்டியாய்
நிலத்தோடு சேர்த்துப் பயனை உறிஞ்சும்
பயனாளியாய்
வேறு நிலத்தைத் தேடி நகரும் நாடோடியாய்
நகர்ப் படியாய்
கண்டதை அழித்து விழுங்கி முழுங்கும்
மனிதப் பூதமாய்
அழிவின் காலில் தொங்கும் கலாச்சாரத்தில்
செத்தொழிந்த மனிதத்தின் உருவாய்
வேங்கைக் காட்டில் உலவும் மானாய்
தூண்டில் வலைக்குக் காத்திருக்கும் மீனாய்
இருக்கும் நமக்கு வேறு நிலமாய் செவ்வாய்
பூனைக்கு வேறு களமாய் பாலித்தீன் செரட்டை….
3. நற்கனா
கண்டதோர்க் கனவிலே
தெரிந்ததோர் பாழான நிலத்திலே
ஈமக்காடு செல்லும் புனைவிலே
அழைந்து திரிகையில்
கன்னத்தில் கையூன்றி அமர்ந்து
இருக்கையில்
விழுந்த ஓர் எரிகல்லில் பற்றிய
நெருப்பிலே
எரிவிடும் கனலிலே
அது இடும் தணலிலே
எழுந்த சாம்பலில் ஒரு பிடியாய்
உரு திரிந்து கரைந்து போனது
மனிதம் மதிக்காத ஊழலில் உலவிட்ட
கட்சிகளோடு கட்சிக் கொடிகளெல்லாம்…
4. உசுரு
நெஞ்சுக்குள் மணமுடித்தக் கண்ணாலே
உனைப் பார்த்துக் கதி மறந்துப் போனேனே
தாங்க இயலாப் பெருஞ்சுமை சுமக்கின்ற
மனதிற்கு மருந்திட மறவாதே
சுடுமெனத் தெரிந்தும் தீயுக்குள் இறங்கிய
மனவலிமை உன்னருமை
செந்தழல் அல்ல சந்தன அருவி எனக் கானல்
கண்டும் ஏமாறாத் திடம் உனது
கானலே ஆனாலும் குத்திருட்டாய் உருமாறி
பயமுறுத்தும் மாயம் அதன் வெளித்தோற்றம்
கண்டும் உள்ளடக்கம் உணர்ந்தாயே
காத்திருந்து பெற்ற உனை
என் செல்வாக்கு என்பேனா
பெருஞ் செல்வம் என்பேனா
ஏதென்பேன் என்னுயிரே
5. மயான ஒற்றுமை
தலையில் தண்ணீர் ஊற்ற
தலையாட்டும் ஆடு
நள்ளிரவில் குலவை விட்டு
குடம் தண்ணீர் உடம்பில் காதில்
ஊற்றியும்
மாசானத்துக்கு நேந்துவிட்ட
தலை ஆட்டாத பலி ஆட்டால்
கிளம்பியது குழப்பம்….
என்ன குறை வச்சோம்
என்ன குத்தம் செஞ்சோம்
என புலம்பி தீர்க்க
மாசானம் சொன்னாரு
“பலி ஏற்க வேணுமுன்னா
அண்ணன் தம்பி நாலுபேரும் சேர்ந்து
கொடை கொடுக்க வேணுமப்பா”.
6. கொஞ்சல்
என் மொழி கட்டுண்ட இலக்கண நடை
அழகை வென்ற நடை ஒன்றில்
விழுந்தவன் எழவில்லை
கருத்தழிந்து நினைவு அழிக்கும்
மொழி ஒன்றில் மதிமயங்கி மழலையானேன்
களிமண்ணோ செம்மண்ணோ கரிசல்
வண்டல் மண்ணோ எம் மண்ணோ
இவ்வண்ணம் ஆக்கிய மேனி கெட
மண்ணை அள்ளித் தின்கிறாயே
உனை அள்ளித் தின்று விடுகிறேன் வா……