சலிப்பும் களிப்பும்
(பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் நான்காம் அத்தியாயம்
BERTRAND RUSSEL’S ‘THE CONQUEST OF HAPPINESS’
CHAPTER – 4 BOREDOM AND EXCITEMENT

தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்
மனித நடத்தையில் ஒரு அம்சமாக சலிப்புணர்வு அதற்குத் தரப்பட வேண்டிய கவனத்திற்கு மிகவும் குறைவாகவே பெற்று இருக்கிறது என்று நான் கருதுகிறேன். வரலாற்றின் போக்கில் அது மகத்தான உந்துசக்திகளில் ஒன்றாக இருந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் முன்னெப்போதையும் விட அதிகமான அளவு உந்துசக்தியாக இருக்கிறது. சலிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான உணர்வாக தோன்றும். பிடிபட்டு அடைபட்டிருக்கும் விலங்குகள் அமைதியின்றி அங்குமிங்கும் அலைந்தபடியிருக்கும், அடிக்கடி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும், அவற்றின் தன்மையில் அவை அலுப்பு, சலிப்பு எனும்படியான எதையும் உணர்வதாக நான் நம்பவில்லை. முக்கால்வாசி நேரம் அவை எதிரிகளை அல்லது உணவை அல்லது இரண்டையும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன. சில சமயங்களில் அவை இணையோடு உறவு கொண்டாடியவா றிருக்கின்றன. சில சமயங்களில் அவை தங்களைக் கதகதப்பாக்கிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் அவை மகிழ்ச்சியற்று இருக்கும்போது கூட சலிப்படைந்திருப்பதாக, அலுப்புற்றிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒருவேளை மனிதக்குரங்குகள் இந்த விஷயத்தில் நம்மைப் போல் இருக்கலாம் – வேறு பல விஷயங்களிலும் இருப்பதைப் போலவே. ஆனால், அவற்றோடு ஒருபோதும் ஒன்றாக வாழ்ந்த அனுபவம் இல்லாததால் அவற்றிடம் இந்த பரிசோதனையை செய்துபார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. சலிப்புணர்வின் முக்கிய அடிப்படைகளில் ஒன்று தற்போதைய சந்தர்ப்ப சூழல்கள் மற்றும் அவற்றை விட அதிக இணக்கமானதாய் நம்முடைய கற்பனையில் தம்மை வலிந்தேற்றிக்கொள்ளும் பிறவேறு சந்தர்ப்ப சூழல்களுக்குமிடையேயான முரண்பாட்டில் அடங்கியுள்ளது. அலுப்பின் இன்னொரு அடிப்படையான அம்சம் ஒருவரின் திறனாற்றல்கள் முழுமையான அளவு வேறு விஷயங்களில் ஆழ்ந்திருக்காத நிலை என்றும் சொல்லலாம். ஒருவரைக் கொல்வதற்காக அவரை துரத்திக்கொண்டு ஓடுபவரிடமிருந்து தப்பிப்பதற்காக வேக வேகமாக ஓடுவது சங்கடமான, ஒவ்வாத விஷயமாக இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக, அலுப்பூட்டுவதாக இருக்காது. ஒரு மனிதர் கொலைத்தண்டனைக்காளாகும்போது அவர் மிக மிக அசாதாரண, அமானுஷ்யமான துணிச்சலைப் பெற்றிருந்தாலொழிய அலுப்படைய முடியாது. இதேபோல், ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில்(HOUSE OF LORDS)இல் முதன்முதலாக உரையாற்றும் போது கொட்டாவி விட்டிருக்க மாட்டார்கள் – அமரர் ரேவன்ஷயர் ட்யூக்கைத்(DUKE OF DEVONSHIRE) தவிர. அதன் விளைவாய் அவர் மற்ற ’பெருமகன்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். சலிப்பு என்பது அடிப்படையில் சம்பவங்களுக்கான தடுக்கப்பட்ட விருப்பு – இனிய நிகழ்வுகளுக்குத்தான் என்று அவசியமில்லை – ஏதேனும் நிகழ்வு – சலிப்பினால் பாதிக்கப்பட்டவர் ஒரு நாளிலிருந்து இன்னொரு நாளை வித்தியாசம்படுத்தி பார்க்க முடிந்ததாய் சில நிகழ்வுகள். சலிப்பின் எதிரிடை, ஒரு வார்த்தையில் சொல்வதென்றால், இன்பம் அல்ல , மகிழ்ச்சிப்பரவசமே.
மகிழ்ச்சிப்பரவசத்திற்கான ஆசை மனிதப்பிறவிகளுக்குள், குறிப்பாக ஆண்களுக்குள் வேரோடு இருப்பது. மனிதன் வேட்டையாடிய காலகட்டத்தில் இந்த ஆர்வம் அதற்குப் பிறகான காலகட்டங்களைக் காட்டிலும் சுலபமாகப் பூர்த்தி செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். துரத்தியோடுதல் ஆர்வமூட்டுவதாக இருந்தது; போர் ஆர்வமூட்டுவதாக இருந்தது; காதல் செய்தல் ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஒரு கற்கால மனிதன் இன்னொருவனின் மனைவியோடு அந்த கணவன் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் உறவு கொள்வான். அந்தப் பெண்ணின் கணவன் எழுந்துவிட்டால் தனக்கு உடனடியாக மரணம்தான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். இந்த நிலைமை சலிப்பூட்டுவது அல்ல என்றே நான் நினைக்கிறேன். ஆனால், வேளாண் வாழ்க்கை வந்த பிறகு வாழ்க்கை அலுப்பூட்டுவதாக மாறத் தொடங்கியது. அதாவது, உயர் குடியினரைத் தவிர்த்து. அவர்கள் வேட்டையாடும் காலகட்டத்திலேயே தொடர்ந்து இருந்தார்கள்; இருக்கிறார்கள். இயந்திர ரீதியான சிந்தித்தலின் சலிப்பு குறித்து நாம் நிறைய செவிமடுக்கிறோம். ஆனால், பழைய பாணி வழிமுறைகளில் செய்யப்படும் விவசாயம் குறைந்தபட்சம் அதேயளவு அலுப்பூட்டுவது என்று நான் எண்ணுகிறேன். உண்மையாகவே அப்படித்தான் – பெரும்பாலான புரவலர்கள் வலியுறுத்தும் கருத்துக்கு மாறாய், இயந்திரங்களின் காலகட்டம் உலகில் சலிப்புணர்வை பெருமளவு குறைத்துள்ளது என்றே நான் கூறுவேன். உழைத்து ஊதியம் பெறுவோரிடையே உழைக்கும் நேரம் என்பது அவரவர் தனிமையில் கழிப்பதல்ல. வேலை நேரம் முடிந்த பிறகான மாலை நேரம் வேலைநேரம் புறந்தள்ளிய பலவகையான கேளிக்கைகளுக்கு ஒதுக்கப்பட முடியும். அவை ஒரு பழங்கால கிராமப்புறத்தில் கிடைத்திருக்க வழியே
- “HOUSE OF LORDS” என்பது தமிழ் மொழியில் பிரபுக்கள் அவை (Pira’pukkal Avai) என்று குறிப்பிடப் படுகிறது. இது ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் மேலவையாகும், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் கூடுகிறது.
இல்லை, கீழ்-மத்தியதர வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துக் கொள்ளுங்
கள். முன்பெல்லாம் இரவு உணவுக்குப் பிறகு மனைவியும் பெண்களும் எல்லாவற்றையும் கழுவித் துடைத்து துப்புரவாக்கிவிட்ட பிறகு எல்லோரும் வட்டமாக அமர்ந்துகொண்டு மகிழ்ச்சியான குடும்ப நேரம் என்று கூறப்படுவதை அனுபவம் கொண்டார்கள். இதன் அர்த்தம், குடும்பத்தலைவர் உறங்கச் செல்ல, அவருடைய மனைவி பின்னல் வேலைப்பாடு செய்ய, மகள்கள் தாம் இறந்துபோயிருந்தால் அல்லது TIMBUKTUவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மனதார விரும்பினார்கள்.
அவர்கள் வாசிக்க அனுமதிப்படவில்லை. அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை எனில், அந்த காலகட்டத்தில் அவர்களுடைய தந்தை அவர்களோடு உரையாடினார். அது அவர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும் என்பதே அப்போதைய கருத்தாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, முடிவில் அவர்களுக்கும் திருமணம் நடந்து அவர்கள் தங்கள் குழந்தைகள் மீது தங்களுக்கு வாய்த்திருந்த அதேயளவு பொலிவிழந்த இளமைப்பருவத்தை வலுக்கட்டமாகத் திணிக்கும் வாய்ப்பு பெற்றார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை என்றால் அவர்கள் வயதான பணிப்பெண்களாக, ஒருக்கால், இறுதியாக சிதைவுற்ற சீமாட்டிகளாக உருப்பெற்றார்கள். காட்டுமிராண்டிகள் அவர்களது பலிகடாக்கள் மீது திணித்த அதே விதமான கொடூர விதியை அவர்களும் அனுபவித்தார்கள். நூறு வருடங்களுக்கு முன்னாலானதொரு உலகத்தைக் கணக்கிடுவதில் இந்த அலுப்பின் மொத்த கனமும் நினைவிலிருக்கவேண்டியது அவசியம். ஒருவர் கடந்த காலத்திற்குள் இன்னும் ஆழமாக உட்புகுந்து பார்த்தால் சலிப்பு இன்னும் மோசமாகவே புலப்படுகிறது. மத்திய காலகட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் குளிர்காலத்தில் இந்த செயலற்ற தன்மை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். மக்களால் படிக்க இயலாது; எழுத இயலாது. இருட்டிய பிறகு ஒளி தர அவர்களிடம் மெழுகுவர்த்திகள் மட்டுமே உண்டு. அவர்களிடம் இருந்த ஒரு சாதாரண கணப்படுப்புப் புகை அவர்களுடைய அத்தனை குளிராக இல்லாத ஒரு அறையை மட்டுமே நிரப்பியது. சாலைகள் கடந்துசெல்ல சாத்தியமற்றவை. எனவே, ஒரு கிராமத்தில் இருப்பவர் இன்னொரு
*திம்பக்து (Timbuktu, ), என்பது மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இது நைஜர் ஆற்றுக்கு வடக்கே 15 கி.மீ. தூரத்தில், சகாராவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.

கிராமத்தைச் சேர்ந்த யாரையும் பார்ப்பதே அரிது. அத்தகைய சூழலில் வரவாகும் தீரா அலுப்பே பேய்விரட்டல்கள் என்ற பழக்கத்தை குளிர்கால மாலைகளை கதகதப்பாக ஆக்கும் ஒரே விளையாட்டாக உருவாக்கியிருந்தது எனலாம். நம்முடைய முன்னோர்களை விட நம்முடைய சலிப்பு குறைவானதுதான். ஆனால், அவர்களுக்கு இருந்ததை விட அதிக அளவு நம்மை சலிப்பு அச்சமூட்டுகிறது. சலிப்பு என்பது மனிதனின் இயல்பான தன்மையின், வாழ்வின் ஓர் அம்சம் இல்லை என்று நாம் அறிந்து கொண்டிருக்கிறோம், அல்லது, நம்பத்தலைப்படுகிறோம். ஆனால், குதூகலத்தை போதுமான அளவு தீவிரமாக தேடியோடுவதன் மூலம் சலிப்பைத் அதைத் தவிர்க்க முடியும் என்று தெரிந்துகொண்டிருக்கிறோம். அல்லது நம்பும் அளவு வந்திருக்கிறோம். இப்போதெல்லாம் பெண்கள் தங்கள் வாழ்க்கைக்கானதை தாங்களே ஈட்டத் தொடங்கி யிருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம், இந்த மாற்றம் அவர்களை மாலையில் குதூகலத்தை நாட வைக்கிறது. அவர்களுடைய பாட்டிகள் சகித்துக்கொண்டாக வேண்டியிருந்த மகிழ்ச்சியான குடும்பநேரத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வழிவகுக் கிறது. யாராயிருந்தாலும் சரி அவர்களால் முடிந்தால் நகர்ப்புறப் பகுதியிலே வாழ்கிறார்கள். அமெரிக்காவில் அப்படி நகர்ப்புறத்தில் வாழ இயலாதவர்கள் கார் வைத்திருக்கிறார்கள்; அல்லது, குறைந்தபட்சம் ஒரு மோட்டார்சைக்கிளாவது வைத்திருக்கிறார்கள். அவற்றின் உதவியோடு திரைப்படங்களை போய்ப் பார்த்துவிட்டு வருகிறார்கள். அவர்கள் வீடுகளில் ரேடியோ இருக்கிறது. இளைஞர்களும் யுவதிகளும் முன்பிருந்த கட்டுதிட்டங்களை விட எத்தனையோ சுலபமாக ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசுகிறார்கள். வீட்டு வேலை செய்யும் ஒவ்வொரு பெண்ணு வாரம் ஒரு முறையாவது ஜேன் ஆஸ்டினின் கதாநாயகிக்கு நாள்முழுக்கக் கிடைக்கும் களிப்பு அளவுக்கு எதிர்பார்க்கிறார்கள். நாம் சமூக அளவுகோலில் உயரும் போது களிப்பு சார் நம்முடைய தேடல் இன்னுமின்னும் அதிகமாக தீவிரமடைகிறது. யாருக்கு அதை அடைய முடிகிறதோ அவர்கள் ஒவ்வொரு இடமாக நகர்ந்துகொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் போகுமிடமெல்லாம் களிப்பு, நடனம், மது அருந்துதல் என எல்லாவற்றையும் எடுத்துச்செல்கிறார்கள் ஆனால். ஏதோ காரணத்திற்காக புதிய இடங்களில் அவற்றையெல்லாம் முன்பைக்காட்டிலும் அதிகமான அளவு அனுபவித்து ஆனந்தம் அடையலாம் என்று எப்பொழுதுமே எதிர்பார்க்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்காக உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அவர்களுடைய பணிநேரத்தில் அவர்களுக்கான அலுப்பையும் சலிப்பை யும் அடைகிறார்கள். ஆனால், தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காக வேலை செய்ய வேண்டிய தேவையில்லாத அளவு போதுமான பணம் வைத்திருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் லட்சியமாக அலுப்பிலிருந்து முற்றிலுமாக விடுபட்டதொரு வாழ்க்கையை பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு உன்னதமான லட்சியம் தான். நான் அதைக் குறைத்து பேசுவதிலிருந்து அது வெகு தொலைவாகவே இருக்கட்டும். ஆனால், என் பயம் என்னவென்றால், எல்லா லட்சியங்களையும் போலவே இதுவும் அடைவதற்கு லட்சியவாதிகள் கருதுவதைவிட அதிக அளவு கடினமானதாகவே இருக்கிறது. ஏனெனில், எப்பொழுதுமே முந்தைய நாள் மாலைகள் எத்தனைக்கெத்தனை சுவாரசியமாக இருந்தனவோ அதேயளவு இன்றைய காலைகள் அலுப்பூட்டுபவை யாகவே இருக்கின்றன. இதில் நடுத்தர வயதும் வரும்; ஒருவேளை முதுமையும் வரலாம். 20 வயதில் ஆண்கள் 30 வயதில் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். நான் இப்போது 58 வது வயதில் அந்தக் கண்ணோட்டத்தை கொண்டிருக்க இயலாது. ஒருவேளை ஒருவருடைய மூலாதாரமான மூலதனத்தை செலவழிப்பது அவரது நிதி சார் முதலை செலவழிப்பதைப் போல் அதே அளவு விவேகமற்ற செயலாக இருக்கக்கூடும். ஒருவேளை ஓரளவு சலிப்பு வாழ்வின் அத்தியாவசியமான மூலக்கூறாக இருக்கக்கூடும். அலுப்பிலிருந்து தப்பிக்கும் விருப்பம் இயல்பான ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் மானுடத்தின் அத்தனை இனங்களுமே இதை கைக்கு கிடைத்த அரிய வாய்ப்பாக வெளிப்படுத்தியிருக்கின்றன. முதன் முதலில் வெள்ளைக்கார ஆண்கள் இடமிருந்து மது அருந்தும் வாய்ப்பு பெற்ற போது அவர்கள் ஒரு வழியாக காலங்காலமான அலுப்புணர்விலிருந்து தப்பிக்கும் வழியை கண்டுபிடித்துக்கொண்டார்கள். அரசாங்கம் தலையிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் குடித்துக்குடித்தே தங்களை ஆர்ப்பாட்டமான மரணத்திற்கு ஆட்படுத்திக்கொண்டார்கள். போர்கள், படுகொலைகள், மரணதண்டனைகள் எல்லாமே அலுப்பிலிருந்து தப்பித்துப் பறந்தோடுவதன் ஓர் அங்கமே. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சண்டையிடுவது கூட எதுவுமே இல்லாததற்கு எத்தனையோ மேலாக பாவிக்கப்படுகிறது. எனவே, சலிப்பு என்பது ஒழுக்கவியலாளர்களுக்கு உரிய பிரச்சினை.
ஏனெனில், மனித இனத்தின் பாவங்களில் குறைந்தபட்சம் பாதியாவது அவை குறித்த பயத்தால் விளைகின்றன. எப்படியிருந்தாலும், சலிப்பு என்பதை முற்ற முழுக்க ஒரு கெடுதியாக பாதிப்பது சரியல்ல. இரண்டு வகையான சலிப்புகள் இருக்கின்றன. ஒன்று பயனளிக்கும் சலிப்பு; இன்னொன்று பயனற்ற, வீண்விரய அலுப்பு. பயனுள்ள வகையைச் சேர்ந்த அலுப்பு போதைமருந்துகளின் இன்மையால் விளைகிறது. வீண் விரய அலுப்பு அத்தியாவசியமான செயல்பாடுகள் இன்மையால் ஏற்படுகிறது. போதை மருந்துகள் நம் வாழ்வில் நன்மையளிக்கும் பங்காற்ற வழியே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். உதாரணமாக, சில தருணங்களில் ஒரு விவேகமுள்ள மருத்துவர் போதைமருந்தொன்றை உட்கொள்ளச் சொல்லக்கூடும். இத்தகைய தருணங்கள் தடையாளர்கள் அனுமதிப்பதை விட அதிகமாகவே அடிக்கடி நேரக் கூடியவை என்று நான் நினைக்கிறேன் ஆனால், ஒரே மருந்துகளுக்கான தாகம், கண்டிப்பாக இயல்பான உள்ளுணர்வின் தடையற்ற இயக்கத்திற்கு விட்டுவிடக்கூடிய ஒன்று அல்ல. அதுவும், போதை மருந்துகளை உட்கொண்டு பழக்கப்பட்ட நபர் அனுபவிக்கும் அலுப்புணர்வு என்பது – அவை அவருக்கு கிடைக்காமல் தடுக்கப்படும் நிலையில் அவர் அனுபவிக்கும் அலுப்புணர்வு என்பதற்கு என்னால் காலத்தைத் தவிர வேறு எந்த நிவாரணத்தையுமே பரிந்துரைக்க இயலாது. இவ்வாறு போதைமருந்துகள் சார்ந்த சலிப்பு என்ற விஷயத்தில் எவையெல்லாம் பொருந்துகிறதோ அவை எல்லாமே வரையறைகளுக்கு உட்பட்ட அளவில் எந்தவிதமான களிப்பு, பரவசத்திற்கும் பொருந்தும். குதூகலப்பரவசங்கள் நிறைந்த வாழ்க்கை மிகவும் களைப்படையச்செய்வதாக அமையும்.
அத்தகைய வாழ்க்கையில் ஆனந்த அனுபவம் என்பதன் தவிர்க்க முடியாத அங்கமாக பார்க்க பழகிவிட்ட அந்த பரவசத்தை கொடுப்பதற்கு, கிளுகிளுப்பை கொடுப்பதற்கு இன்னுமின்னும் அதிக சக்தி வாய்ந்த தூண்டுகாரணிகள் தேவையாக இருக்கிறது அதிகமான அளவு பரவசத்திற்கு பழகிய ஒரு நபர், மிளகுக்காக மரணத்தைக் கூட ஏற்கத் தயாராக உள்ள ஒருவர் இறுதியில் வேறு யாரையுமே மூச்சுத் திணறவைக்கக் கூடிய அளவிலான மிளகை ருசித்துச் சுவைக்க கூட முடியாதவராக ஆகிவிடுவதைப் போல. மிக அதிகமான அளவு குதூகலப் பரவசத்தைத் தவிர்ப்பதில் அலுப்பு என்ற அம்சம் இருக்கிறது என்பது உண்மைதான். மிக அதிக அளவு களிப்பு என்பது உடல்நலனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவிதமான களிப்புக்குமான சுவையை மழுங்கடித்து விடுகிறது. மகத்தான, இயல்பான மனநிறைவுகளை ஆர்வக் கிளுகிளுப்பு களால் இடம்பெயர்த்துவிடுகிறது. குதூகலப்பரவசத்திற்கான ஆட்சேபணையை இன்னு மின்னும் விளக்கிக்கொண்டுபோக விரும்பவில்லை. ஒரு குறிப்பிட்ட அளவு வரை களிப்பு முழுமையான மனநிறைவுக்கானதுதான். ஆனால் மற்ற எதையும், எல்லாவற்றையும் போலவே இந்த விஷயம் அளவுரீதியானது. மிகவும் குறைவான அளவு, மரணமனைய வேட்கையை வரவாக்கும். மிக அதிக அளவு சலிப்பை ஏற்படுத்தும். எனவே, சலிப்பை சகித்துக்கொள்வதற்கான ஒரு குறிப்பிட்ட அளவு மனவலிமை மகிழ்ச்சியான வாழ்வுக்கு அத்தியாவசியமானது. இந்த சகிப்புத்தன்மை, அதற்கான அவசியம் இள வயதிலேயே மனிதர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது.
சிறந்த புத்தகங்கள் அனைத்திலுமே சலிப்பூட்டும் பகுதிகள் உண்டு. மகத்தான வாழ்க்கைகள் எல்லாவற்றிலும் சலிப்பூட்டும் பகுதிகள் உண்டு ஒரு நவீன அமெரிக்க பதிப்பாளரிடம் ஆதியாகமம் (OLD TESTAMENT) ஒரு புதிய கையெழுத்துப் பிரதியாக முதல் தடவை வாசிக்கத் தரப்பட்டால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அது குறித்து அவருடைய அபிப்ராயம் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்ப்பது கடினமான விஷயம் அல்ல. உதாரணத்திற்கு வம்சவரலாறுகள் (GENEOLOGIES) பற்றி அவர் கூறும் அபிப்பிராயம் இப்படித்தான் இருக்கும்:
அன்புக்குரிய சிநேகிதரே – இந்த அத்தியாயத்தில் விறுவிறுப்பு இல்லை. வெறும் பெயர்கள். அந்த பெயருக்குரியவர்களை பற்றி நீங்கள் வாசகருக்கு எதுவுமே சொல்வதில்லை என்ற நிலையில் வாசகர் அந்தப் பெயர்களில் எப்படி ஆர்வம் காட்ட இயலு?ம் உங்களுடைய கதையை சிறந்த நடையில் தான் ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதை நான் ஒப்புக்கொள் கிறேன். அதைப் படிக்க ஆரம்பித்தபோது அதில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது என்பது உண்மையே. ஆனால், மொத்தத்தில், இவை எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்பதில் உங்களுக்கு எக்கச்சக்க விருப்பம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. முக்கியமான விஷயங்களை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் தேவைக்கு அதிகமான விஷயங்களை அகற்றிவிடுங்கள். உங்களுடைய கையெழுத்துப் பிரதியை சரிவர நீளம் குறைத்த பிறகு, திருத்தப்பட்ட அந்த பிரதியை என்னிடம் கொண்டுவாருங்கள்.
_சமகால வாசகரின் சலிப்பு குறித்த பயத்தை அறிந்த சம கால பதிப்பாளர் இப்படித்தான் பேசுவார். மற்றும், விற்பனையில் சாதனை புரிந்த வேறு பல செவ்வியல் நூல்களான கன்ஃபூசிய தத்துவ நூல்கள், குரான், மார்க்ஸின் மூலதனம், மற்றும் விற்பனையில் சாதனை புரிந்த பல புனித நூல்களைப் பற்றியும் அவர் இதே போல் தான் கூறுவார்.. இது புனித நூல்களுக்கு மட்டும்தான் என்று இல்லை சிறந்த நாவல்கள் எல்லாமே அலுப்பூட்டும் பகுதிகளைக் கொண்டவை. முதல் பக்கத்தில் இருந்து இறுதிவரை ஜொலிக்கும் ஒரு புதினம் கண்டிப்பாக நல்ல புத்தகமாக இருக்க முடியாது. அதைப்போலவே மகத்தான மனிதர்களின் வாழ்வுகளும் சில தருணங்களில் மட்டுமே சுவாரசியமாக இருக்குமே தவிர மொத்தமாக அல்ல. சாக்ரடீஸால் அவ்வப்போது சில விருந்துகளை ருசித்துச் சாப்பிட்டிருக்க முடியும். நச்சுத்தாவர பானம் தன் வேலையைச் செய்யும்போது அவர் மேற்கொண்ட உரையாடல்களில் கணிசமான மனநிறைவை கண்டிப்பாக அடைந்திருப்பார். ஆனால், அவர் வாழ்வின் பெரும்பாலான நாட்களை தன் மனைவி Xanthippeயுடன் அமைதியாக வாழ்ந்தார். மதியவேளைகளில் ஓய்வாக காலார வெளியே நடந்து, ஒருக்கால் வழியில் சில நண்பர்களை சந்தித்தவாறு இருந்திருப்பார். அவருடைய மொத்த வாழ்நாளிலும் KANT (*ஜெர்மானிய தத்துவஞானி) KONIGISBERG இலிருந்து பத்து மைல்களுக்கு அதிகமான தொலைவில் இருந்ததில்லை. டார்வின் உலகம் முழுமையும் சுற்றி வந்த பிறகு தனது மிச்ச வாழ்நாள் முழுவதும் தனது சொந்த வீட்டிலேயே கழித்தார். மார்க்ஸ் சில புரட்சிகளைக் கிளர்ந்தெழச்செய்த பிறகு தனது வாழ்க்கையின் மிச்ச காலம் முழுமையையும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கழிப்பது என்று முடிவு செய்தார். மொத்தத்தில், அமைதியான வாழ்க்கை என்பது மகத்தான மனிதர்களின் இயல்பான பண்பாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அவர்களுடைய ஆனந்தங்கள் என்பன புறக்கண்களுக்கு பரவசமாக, ஆர்வத்தைக் கிளறுவதாகக் காண்பவையாக இருந்ததில்லை. தொடர்ந்த ரீதியிலான உழைப்பு இல்லாமல் எந்த ஒரு மகத்தான சாதனையும் சாத்தியம் அல்ல. அத்தகைய உழைப்பு ஒருவருடைய முழு நேரத்தையும் எடுத்துக்கொள்வதாக, மிகக் கடினமானதாக இருக்கும் என்பதால் அதிக அளவு நேரத்தையும், சக்தியையும் கோருகின்ற வகை பொழுதுபோக்குக் கிளர்ச்சிகளுக்கு அவர்களிடம் சக்தி மிச்சமிருப்பதில்லை. விடுமுறை நாட்களில் அவர்களுடைய உடல்ரீதியான சக்தியை சரிபடுத்திக்கொள்ளவும் மீட்டெடுத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ஆர்வங்கள் மட்டுமே அவர்களால் கைக்கொள்ள முடியும்.
கிட்டதட்ட ஒரே மாதிரியான, இயந்திரகதியிலான வாழ்க்கையை சகித்துக்கொள்ளும் ஆற்றல் என்பது குழந்தைப்பருவத்திலேயே கை வரப்பெறவேண்டியது அவசியம். நவயுகப் பெற்றோர்கள்தான் இதில் பெருமளவு குற்றம் சுமத்தப்பட வேண்டியவர்கள். அவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு மிக அதிக அளவு பயனற்ற பொழுது போக்குகளை வழங்குகிறார்கள். காட்சிரீதியான நிகழ்வுகள், சாப்பிடுவதற்கு ருசியான விஷயங்கள் போன்றவை. அவை, ஒரு நாளைப் போலவே இன்னொரு நாள் இருக்க வேண்டியதன் – அதாவது, சில அரிய தருணங்களைத் தவிர்த்த அளவில் அப்படி இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அந்தக் குழந்தைகளால் உணர முடிவதில்லை. குழந்தைப்பருவத்தின் ஆனந்தம், களிப்பு என்பது முதன்மையாக குழந்தைகள் சற்று முயன்று கண்டறியும் ஆர்வத்தோடு தங்களுடைய சுற்றுச்சூழலில் இருந்து அடையக் கூடியதாக இருக்கவேண்டும். பரவசமூட்டும் மகிழ்ச்சியின்பங்கள் – எந்தவொரு உடல் ரீதியான முயற்சியையும் கோராதவை – உதாரணத்திற்கு, திரையரங்கம் செல்லுதல் நாடகம், மேடைநிகழ்வு போன்றவை மிக அரிதாகவே குழந்தைகள் வாழ்வில் நிகழ வேண்டும். அதில் கிடைக்கும் களிப்பு, பரவசம் -போதைமருந்தின் தன்மையிலானது – கிடைக்கக் கிடைக்க இன்னும் அதிகம் தேவைப்படுவதாகிவிடும். மேலும், அந்தக் களிப்பு கிடைக்கும்போது அமையும் உடல்ரீதியான இயக்கமின்மை மனித உள்ளுணர்வுக்கு முரணானது. ஒரு குழந்தை இளம் குருத்தைப் போல இடையூறு செய்யப்படாமல் தான் பிறந்த அதே மண்ணில் இருக்க அனுமதிக்கப்படும்போது சிறந்த வளர்ச்சியைப் பெறுகிறது. மிக அதிகமான பயணங்கள், மிக ஏராளமான பலதரப்பட்ட மனப்பதிவுக ளாகியவை குழந்தைகளுக்கு நல்லது அல்ல. அவை குழந்தை வளரும்போது நன்மை பயப்பதான, ’ஒரேமாதிரி’யான, இயக்கத்தை சகித்துக்கொள்ள இயலாதவர்களாக்கி விடுகின்றன. ஒரேவகையான தினசரி வாழ்முறைக்கு அதற்கென்று எந்த உயர்தகுதிகளும் இருப்பதாக நான் கூறவில்லை. நான் சொல்வதன் அர்த்தம் இதுதான்: ஒரு குறிப்பிட்ட அளவு இயந்திரகதியிலான, ஒரேமாதிரியான இயங்குமுறை இருந்தாலொழிய சில நல்ல விஷயங்கள் சாத்தியமாகாது. உதாரணத்திற்கு WORDSWORTHஇன் PRELUDEஐ எடுத்துக்கொள்ளுங்கள். வர்ட்ஸ் வர்த்தின் எண்ணங்களிலும் உணர்வுகளிலும் எவற்றுக்கெல்லாம் தனி மதிப்பு இருந்ததோ அவை நாகரீகமான நகர்ப்புற இளைஞனுக்கு சாத்தியமாயிருக்க வழியே யில்லை என்பது எந்த வாசகருக்கும் தெளிவாகவே உணரக்கிடைக்கும் ஒன்று. ஏதாவதொரு தீவிரமான, ஆக்கபூர்வமான நோக்கத்தைக் கொண்டிருக்கும் சிறுவனோ இளைஞனோ அதை அதை நோக்கிச் செல்லும் போக்கில் அனுபவித்தாகவேண்டியதாக இருக்கக்கூடிய பெருமளவு சலிப்பைக் கூட அவன் மனமுவந்து சகித்துக்கொள்வான் – தனது இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் அது இன்றியமையாத அம்சமாக இருப்பதை அவன் அறிந்து கொண்டால் ஆனால், ஆக்கப்பூர்வமான குறிக்கோள்கள் என்பவை ஒரு சிறுவனின் மனதில், குறிப்பாக அவன் நிறைய கவனச் சிதறல்கள் ஆற்றல் சிதறல்கள் உள்ள வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவனாக இருந்தால், எளிதாக உருவாவ தில்லை. ஏனெனில், அவன் மனம் அடுத்தடுத்த ஆர்வங்களுக்கும் பரவசங்களுக்கும் தான் அலைந்துகொண்டிருக்குமே தவிர தொலைவில் உள்ள சாதனையை நோக்கி குவியாது. இந்த அத்தனை காரணங்களினாலும் சலிப்பை சகித்துக்கொள்ள முடியாத ஒரு தலைமுறை சிறிய மனிதர்கள் அடங்கிய தலைமுறையாகவே இருக்கும். இயற்கையின் நிதான கதியிலான வழிமுறைகளிலிருந்து முற்றிலுமாய் தன்னை விலக்கிக்கொண்டு விட்ட மனிதர்களாலான தலைமுறையாகவே இருக்கும். ஜாடியில் உள்ள பூக்களைப் போல், வெட்டப்பட்ட நறுமண மலர்களைப் போன்றவர்களாய் தங்களுடைய மூலாதார உள்ளுணர்வுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் வதங்கிவிடுகின்ற மனிதர்களைக் கொண்ட தலைமுறையாக இருக்கும்.
எனக்கு மறைஞான மொழிப் பிரயோகம் பிடிக்காது. ஆனால், நான் சொல்ல நினைப்பதை அறிவியல்ரீதியானவையாக ஒலிப்பதைக் காட்டிலும் கவித்துவமான தொனி உடையவையாய் இருக்கும் சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல் எப்படி சரிவர எடுத்துரைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. நாம் என்ன நினைக்க விரும்பினாலும், நாம் பூமியின் உயிர்கள். நமது வாழ்க்கை புவியினுடைய வாழ்வின் ஓர் அம்சம். விலங்குகளையும் தாவரங்களையும் போலவே நாமும் பூமியிடமிருந்து தான் நமக்கான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்கிறோம். புவியினுடைய வாழ்வுலயம் மந்தகதியிலானது. இலையுதிர் காலமும் குளிர்காலமும், வசந்த காலத்தையும் கோடை காலத்தையும் போலவே, அதே அளவு முக்கியமானது. இளைப்பாறல் என்பது இயக்கம் அளவுக்கு இன்றியமையாதது. வளர்ந்த மனிதனை விட குழந்தைக்கு நிலவுலக வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களுடன் ஏதோவொரு வகையில் தொடர்புவைத்துக்கொண்டிருப்பது மிகவும் அவசியமானது. மனித உடல் காலங்காலமாக புவியின் இந்த லயத்திற்குப் பழகியது. அதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டிருக்கிறது. ஈஸ்டர் விழாவில் மதம் இந்த தகவமைத்தலை ஓரளவு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. லண்டனில் வசிக்க வைக்கப்பட்டிருந்த இரண்டு வயது சிறுவன் ஒருவனை நான் பார்த்திருக்கிறேன். அவனை முதல் தடவையாக பசுமையான கிராமமொன்றில் காலார நடக்க அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது குளிர்காலம். எல்லாமே ஈரமாகவும் சகதியாகவும் இருந்தது. வளர்ந்த மனிதர்களின் கண்களுக்கு பரவசமூட்டுவதாக எதுவுமே இல்லை. ஆனால், அந்த சிறுவன் பரவசம் பொங்க பாய்ந்து குதித்தான். அந்த ஈரத்தரையில் மண்டியிட்டு தனது முகத்தை புல்வெளியில் புதைத்துக்கொண்டு களிப்பு பொங்க என்னென்னவோ அரற்றியபடி கூவினான். அவன் அனுபவித்துக் கொண்டிருந்த மகிழ்ச்சி – பாசாங்கற்றது ஆதிமனிதனுடைய எளிமையான களிப்பு. அளப்பரிய ஒன்று. அவரிடம் இயல்பாக இருந்த தேவை, அப்போது பூர்த்தியாகிக்கொண்டிருந்தது, மிக நுட்பமானது ஆதாரமானது. அது கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்கள் எப்பொழுதுமே முழுமையான அளவு புத்தி சுவாதீனமுள்ள மனிதர்களாக இருப்பதில்லை எத்தனையோ பரவசங்கள், இன்பங்கள் – உதாரணத்திற்கு நாம் சூதாட்டத்தை எடுத்துக்கொள்ளலாம் -இந்தத் தொடர்பில் இணைப்பின் எந்தவிதமான அம்சமும் இல்லாதவை. இத்தகைய ஆர்வங்கள், களிப்புகள் அவை முடிந்த உடனே ஒரு மனிதனை தூசுபடிந்தவனாய் மனநிறைவற்றவனாய் மாற்றிவிடும். எதுவென்றே தெரியாத ஒன்றுக்காக, சிலவற்றுக்காக அவரிடம் பசி எடுத்துக்கொண்டேயிருக்கச் செய்யும் இத்தகைய இன்பங்கள் மகிழ்ச்சி என்று சொல்லப் படக்கூடிய எதையும் கொண்டுவராது. மாறாக, புவியின் வாழ்க்கையோடு நம்மை இணைப்பன, தொடர்புபடுத்துவன நமக்கு மிகவும் மனநிறைவளிப்பதாக இருக்கும். அவை முடிந்த பிறகும் அவை வரவாக்கிய மகிழ்ச்சி மறையாது நீடிக்கும் – அந்த இன்பங்கள் அவை இருந்தபோது மற்ற, அதி தீவிரமான களிப்புகள் /இன்பங்களின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை விட சற்று குறைவாகவே இருக்கக்கூடும், என்றாலும். என் மனதில் உள்ள இந்த வேறுபாடு மிக எளிய நாகரீக அலுவல்களிலிருந்து மிக உயரிய நாகரீகமான அலுவல்கள் வரை செல்கிறது. ஒரு நொடி முன்பாக நான் குறிப்பிட்டுப் பேசிய அந்த இரண்டு வயதுச் சிறுவன் இந்த புவியோடு, இந்த மண்ணோடு இருக்கக்கூடிய, சாத்தியமாக கூடிய மிக ஆதாரமான கூட்டுறவை, ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தினான் ஆனால், அதே விஷயம் ஓர் உயர்ந்த வடிவில் கவிதையில் காணக் கிடைக்கும். ஷேக்ஸ்பியரின் கவிதைகளை எது மகோன்னதமாக்குகிறது என்றால் அவை அந்த இரண்டு வயது குழந்தையை புல்வெளியை ஆறத் தழுவச் செய்த அதே ஆனந்தத்தால் நிரம்பிவழிகின்றன. அவருடைய ‘HARK, HARK, THE LARK (கேள், கேள் வானம்பாடியின் பாடலை), ‘COME UNTO THESE YELLOW SANDS (வா இந்த மஞ்சள் மணலுக்கு) ஆகியவற்றை கவனித்துப் பாருங்கள். இந்தக் கவிதைகள் அந்த இரண்டு வயதுச் சிறுவன் தெளிவற்ற கூவல்களில் வெளிப்படுத்திய அதே ஆனந்த உணர்வின் நயமான வெளிப்பாடுகள் ஆகும். அல்லது, காதலுக்கும் வெறும் பாலீர்ப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள். காதல் என்பது நம்முடைய முழுமையும் புத்துணர்ச்சியும் புத்தெழுச்சியும் அடையும்படியானதோர் அனுபவம். வறட்சிக்குப் பிறகு மழை வந்தால் தாவரங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படி. காதல் இல்லாத பாலுறவில் மேற்குறிப்பிட்ட புத்துணர்ச்சி எதுவுமே இருக்காது. அந்த கணநேரம் இன்பம் முடிவடைந்ததும் அயர்வும், வெறுப்பும், வாழ்க்கை வெறுமை நிரம்பியது என்ற உணர்வும் மேலோங்கும். காதல் என்பது புவியினுடைய வாழ்வின் ஓர் அங்கம். காதல் இல்லாத பாலுறவு அப்படியல்ல.
நவீன நகர்ப்புற மக்கட்சமூகங்களை வருத்தும் தனித்தன்மையான வகை சலிப்பும் அலுப்பும்கு அவர்கள் புவியின் வாழ்விலிருந்து பிரிந்துவாழும் போக்கோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த விலக்கம் வாழ்க்கையை வெப்பமானதாகவும் தூசி படர்ந்ததாகவும், தாகமெடுப்பதாகவும், பாலைவனத்திலிருக்கும் யாத்திரிகரின் நிலைமை போல் ஆக்கியிருக்கிறது. தங்கள் வாழ்க்கைப்போக்கை தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய பண வசதி படைத்த செல்வந்தர்களில், அவர்களைத் துன்புறுத்தும் அந்த சகிக்கமுடியாத குறிப்பிட்ட வகை சலிப்புக்கு – இது ஒரு முரண்பாடாக தோன்றினாலும் – உண்மையில் சலிப்பு குறித்த அவர்களுடைய அச்சமே காரணமாகிறது. பயனளிக்கக்கூடிய சலிப்புணர்விலிருந்து விலகிப் பறந்தோடுவதில் அவர்கள் அந்த இன்னொரு மிக மோசமான சலிப்புணர்வுக்கு இரையாகிறார்கள். ஒரு மகிழ்ச்சிகரமான வாழ்வென்பது உண்மையில் பெருமளவு, அதன் பெரும்பகுதியும் அமைதியான வாழ்வாகவே இருக்கவேண்டியது இன்றியமையாதது. ஏனெனில், அமைதியான சூழலில்தான் உண்மையான உயிர்த்திருக்க முடியும்.
***
- மழை புராணம் – 1
- ஸ்பீவாக், சபால்டர்ன், சமுதாயம்
- (பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் நான்காம் அத்தியாயம்
- பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய ‘வாழ்க’ சிறுகதை