காற்று அமிழ
பூமியை நிதானமாய் நனைக்குது இம்மழை
பயிருக்கு பிற உயிருக்கு
மனசு நனைய பயன்படும் மழை.
என்றோ வாங்கிய கடனை
மறவாது திருப்பித் தரல் போலே பொழியும் இம்மழை.
காக்கைக்கோ குருவிக்கோ
குளிருடன் இறகு நனையும்
மற்றபடி உதறினால் குளியலாய் மாறும் இம்மழை.
பயணிகள் குடையென அறியப்படும்
கல் கூரை கீழ் நிற்கும்
துணி நனைந்து மாரில் குழந்தையுடன்
வெற்றிலை மெல்லும் குறத்திக்கு
இம்மழை ஓர் அதிருப்தி சனியனாகும்
என்றாலும் சொல்வதில்லை.