– பா.சத்தியமோகன்
மழை நனைத்த பின்னான எதுவும்
டக்கெனப் பசை பிடிக்கிறது மனதுக்கு
நனைந்த தார்ச்சாலை
வடிந்த நீரை அங்கங்கே பள்ளத்தில்
ஞாபகம் வைத்திருப்பதும்..
குளித்த தவளை ஒன்று
எம்பிச் சிறுகுரலில்
சாலை குறுக்கே தத்துவதும் ..
மிச்ச சொட்டுகள் புள்ளிப் பனிகளாய்
இலைகளில் வடிவதும்..
வளைந்த குழல்விளக்கு
தேங்கிய நீரில் ஒளி புகுத்தித் தெறிப்பதுவும்..
பார்த்தபடியே வந்த கண்களுக்கு
சகிக்கவில்லை ஒரு காட்சி
மழை ஈரச் சாக்கைப் பிழிந்து
பச்சிளம் குழந்தை ஒன்றை
ஜடப் பொருள் போலே படுக்க வைத்தாள்
வீடில்லா ஒருத்தி
அடர் குளிர் காற்று வீசிய அக்கணத்தில்
மழையைக் கோபித்தேன்
இரசிப்பைத் துறந்து.
***