Posted in

சிறகு ஒடிந்த பறவை

This entry is part 5 of 5 in the series 16 நவம்பர் 2025

 

                          –ஜெயானந்தன்

நேற்று 

அந்த வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன் 

பேரனோடு. 

“பூக்கள் பூக்கும் தருணம். ..”

ஆருயிரே, பார்த்த தாரும் இல்லையே…,.என்ற பாடல் ,

எங்கோ ஒரு வீட்டின் டிவியில் ஓடிக்கொண்டிருந்தது. 

யாரோ ஒரு பெண் சத்தமாக, அந்த பாட்டோடு பாடிக் கொண்டிருந்தாள். 

அன்று, 

அந்த வீதியில் தான் 

சிவகாமி இருந்தாள் நாற்பது வருடங்களுக்கு முன்னால். 

அவள் வீட்டின் வாசலில் ஒரு மகிழமரம்

இருந்தது, நாற்பது வருடங்களுக்கு முன். 

இன்று அங்கு ஒரு அடுக்கு மாடிக்கட்டடம். 

அந்த காலத்தில், நாங்கள்,எங்கள் மாணவ பருவத்தில், அந்த வீதியில், அவள் வீட்டைத்தாண்டும் போது, அழகான குயில் குரலில், சிவகாமி, சினிமாப்பாட்டை பாடிக்கொண்டே, தோட்டத்தில், துவைத்த துணிகளை காயப்போடுவாள்.

குழைதள்ளும் வாழைமரங்கள் பக்கத்தில்தான், அந்த துவைக்கல் பதிந்திருப்பார்கள். எட்டிப்பார்க்கும் அளவில் மதில் சுவர். மழையினால், காளான் பூத்து நிற்கும். ஒரு கொய்யா மரக்கிளை மதில் சுவரை தாண்டி நிற்கும். தென்னை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்த வீடு. அவளுடைய தந்தையார், மார்க்கெட் ரோட்டில், உடுப்பி ஓட்டல் வைத்திருந்தார். 

அவளைப்போலவே, அந்த மரத்தின் காய்கள் இனிக்கும். கொய்யா பூக்கள் ரம்மியமாக பூத்திருக்கும் சூரிய ஒளியில். 

அவள் குரலில் அந்த இனிமை தேனாக பாயும். உச்ச ஸ்தாயில் மேலே சென்று, 

அநாயசமாக பாடுவாள். பள்ளி , பாட்டு போட்டியில் கலந்துக்கொண்டும் பரிசைஅள்ளிக்கொண்டுபோவாள். சாந்தமான முகம். 

கபடு சூது தெரியாதவள். 

அந்த காலத்தில், “காதல்”, வீட்டுத்தோட்டங்களில் பூக்கவில்லை. 

எல்லாம் மனதோடு மடியும் மார்கழிதான். 

மார்கழி மாத பஜனையில், பூலோக கண்ணன் கோயிலில், ஆண்டாள் பாசுரங்களையும் அற்புதமாக பாடுவாள். “ஏழேழ் பிறவிக்கும் கோவிந்தா ” என்று அவள் 

பக்தியை குழைத்து பாடும் போது, 

ஸ்ரீரங்க நாதனே, எழுந்து வந்துவிடுவான் போலிருக்கும். 

சுடச்சட நெய் மணத்தோடு சர்க்கரை பொங்கலும், சிவகாமி தரிசனமும் தான், 

எங்களது மார்கழி மாதம். 

“அவள் இல்லாத மார்கழியா”, என, 

காதல் கவிதைகள் எழுதிய காலம். 

எனக்கு சங்கீதத்தில் விருப்பம் அதிகம். 

நான் இனிமையான சினிமா பாடல்களை அந்த காலத்தில்,வீட்டில் பாடிக்கொண்டிருப்பேன். 

P.B.ஸ்ரீனிவாஸ் பாடல்கள் பிடிக்கும். 

பிறகு SPB.

கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள வசதியில்லை.

“காலங்களில் அவள் வசந்தம்.

இயற்கை என்னும் இளையக்கன்னி. 

நிலவே என்னிடம் நெருங்காதே. 

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”.

இதுபோன்ற பல பாடல்களை பாடி ரசிப்பேன். 

காலம் ஓடிவிட்டது. அதை நிறுத்த முடியுமா. இன்னும் எத்தனைப் பிறவி மனிதர்கள் இங்கு வரவேண்டும். இன்னும் எத்தனைக்கோடி காலடிகள் இந்த மண்ணில் நடக்க வேண்டும். 

இன்னும் எத்தனைவிதமான மதுரகானம் இசைக்க வேண்டும். இன்னும் இன்னும் எத்தனை சிவகாமிகள்,எத்தனை விஞ்ஞான யுகங்கள் கடக்கவேண்டும். 

இந்த பூமா தேவி, யுகயுகமாக காத்து நிற்கின்றாள். 

இந்த பிறவியில் கிடைத்த சில அற்புதங்களில் இசையும் ஒன்றல்லவா?

வயோதிகத்தில் ஒரு நாள், சிவகாமியை 

பார்த்தேன் கடைத்தெருவில். 

கிழவியாகி விட்டாள். பேத்தியோடு ஜவுளிக்கடைக்கு வந்திருந்தாள். 

சிவகாமியிடம் குசலம் விசாரித்து விட்டு, 

சங்கீதத்தைப்பற்றி கேட்டேன். 

முகம், சோர்ந்து போனது. ஒருவித சங்கடத்தில் நெளிந்தாள். 

“இல்லடா, கல்யாணம் ஆகி, மாமியார் வீட்டுக்கு போனப்பிறகு, பாட்டெல்லாம் பாடக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. 

அது என்ன, சினிமாக்காரிங்க மாதிரி பாடறது. …இது குடித்தனம் நடத்துற வீடு என்று கூறிவிட்டார்கள்”, என்றாள். 

“அத்தோடு போனது என் பாட்டு.” .என்று 

வேதனைப்பட்டாள் சிவகாமி. 

பேசி முடித்துவிட்டு, அவள் காரில் பேத்தியோடு சென்றுவிட்டாள். 

நானும், பேரனோடு அங்கிருந்து நகர்ந்தேன். 

“அந்த சிவகாமி மகனிடம் 

சேதி சொல்லடி. …”

என்று யாரோ ஒரு கிழவி, அடுக்குமாடியிலிருந்து, பாடிக்கொண்டிருந்தாள்.

-ஜெயானந்தன். 

Series Navigationமழைபுராணம் – 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *