வளவ. துரையன்
பள்ளி செல்வதற்காக வாசலில் வந்து நின்றான் மணி. கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பதாகி இருந்தது. காலையிலேயே வெயில் சுரீரென்று அடித்தது. எதிரே இருந்த நிருவாகி வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த கறவைப் பசுக்கள் நிலைகொள்ளாமல் சுற்றிச் சுற்றி வந்தன. அவற்றை அவிழ்த்து மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவேண்டியவன் இன்னும் வரவில்லை. பக்கத்து வீட்டிலிருக்கும் நாதமுனியும் வெளியே வந்தார்.
“என்னாங்கய்யா; போலாமா?’ என்று கேட்டார்.
“ஒங்களுக்காகத்தான் நின்னுக்கிட்டிருந்தேன்; வாங்க போலாம்” என்று அவருடன் நடந்தான் மணி.
எதிரே வந்த எருமைகளுக்கு வழிவிட்டு இருவரும் விலகி நின்றனர். நான்கைந்து பேர் கைகளில் அரிவாள்களுடன் அறுப்புக்காகச் சென்றனர். அப்போதுதான் மணி பார்த்தான். தெருக்கோடியில் ஒருவர் வந்துகொண்டிருந்தார். கூன் விழுந்துவிட்ட அவர் குனிந்தவாறே நடந்து வந்ததைப் பார்த்ததுமே அவனுக்கு வருவது யாரென்று தெரிந்துவிட்டது.
உடனே “ஐயா, நீங்க போயிக்கிட்டே இருங்க; நான் பின்னாடி வரேன்; எங்க பெரிய தாத்தா வராரு” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றான்.
“பாட்டி. பெரிய தாத்தா வந்துக்கிட்டிருக்காரு” என்றான்.
‘என்னாடா சொல்ற? அவரு எங்கடா இங்க வராரு? வேற யாராவதா இருக்கும்?”
“நான்தான் பாத்துட்டு வந்துட்டனே; அவருதான். இதோ போயி அழைச்சுக்கிட்டு வரேன்’’ என்று கூறி வெளியில் வந்தான்.
அதற்குள் அவர் பாதி தெருவை வந்தடைந்துவிட்டார். “வாங்க தாத்தா” என்று கூறி அவர் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டான்.
அவர், “யாரு மணியா” என்றார்.
‘ஆமாம் தாத்தா; நடந்தேயா வந்திங்க?”
”ஆமாண்டா; மூணு மைல்தானே? பெண்ணை ஆத்தைத் தாண்டினா மணமேடு. அப்பறம் இந்த ஊரு” என்று சொல்லிக் கொண்டே நடந்தார்.
வாசலைத்தாண்டி உள்ளே வந்தார். ”நேரே வாங்க” என்று கூறி அழைத்துச் என்றான். ”என்னாடா; இத்தனை வீடுங்க சின்னச் சின்னதா இருக்கு?” என்று கேட்டார்.
“ஆமாம் தாத்தா: எல்லாம் வாத்தியாருங்கதான். எங்க பள்ளிக்கூடம்தான்”
வாசலில் இருந்த தண்ணீரில் கைகால்களைச் சுத்தம் செய்துவிட்டு உள்ளே வந்தார். பாட்டி ”வாங்க வாங்க” என்று அழைத்தார்.
”உஸ், அப்பாடா” என்று சொல்லிக்கொண்டே உள்ளே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். பாட்டி குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தார்.
”கார்த்தால வெயில்ல ஏன் நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு வரணும்; ஒரு கடிதாசி போட்டீங்கன்னா அவனை வரச் சொல்றேன்” என்றார் பாட்டி.
“எங்க கடிதாசி எல்லாம் சரியாப் போய்ச் சேருது? அதுவும் நானே வரணும்னு நெனச்சேன்” என்றார் அவர் பதிலுக்கு.
தண்ணீரைக் குடித்து முடித்துவிட்டு மேலே பார்த்தார். “பனை வாரை போட்டுக் கட்டியிருக்காங்க போல இருக்கு” என்று சொல்லிவிட்டு மாட்டப்பட்டிருந்த சாமி படங்களைப் பார்த்தார். கடைசியில் அவர் தம்பி படமும் இருந்தது. ”இந்தப்படம் நேர கோவிந்தனையே பாக்கற மாதிரி இருக்கு” என்று சொல்லிவிட்டு மௌனமானார்.
”தம்பியின் நினைவுகளில் மூழ்கி இருக்கிறார்’ என்று நினத்துக் கொண்டேன். சற்று நேரம் கழித்து “மணி நீ போயிட்டு வா” என்றார்.
“இல்ல தாத்தா” விடுப்பு வாணா சொல்லிட்டு வந்திடறேன்” என்றான் மணி.
“வேணாம் வேணாம் நீ போயிட்டு அப்பறமா வா” என்றார்.
”ஏதாவது வேணுமா” என்று பாட்டியைக் கேட்டான் மணி.
அவன் கேட்பதைப் புரிந்து கொண்ட அவர் “ஒண்ணும் வேண்டாம்; இட்லி இருக்கு; சட்டினி அரைச்சிடறேன்” என்றார்.
மணி கிளம்பினான். அவனுக்கு ஒரே குழப்பம்; ”இதுவரை வராதவர் இப்பொழுது ஏன் வந்திருக்கிறார்? அதுவும் தனியாக நடந்தே வந்திருக்கிறார்?” பள்ளியில் பாடம் கற்பிக்கவே மனம் செல்லவில்லை. மாணவர்களைப் படிக்கச்சொல்லிவிட்டு நினைவுகளில் ஆழ்ந்தான்.
பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்தவை படம்போல் ஓடின. அன்று இதே பெரிய தாத்தா ஆடிய சாமியாட்டம் கண் முன் வந்தது. அப்போது மணி எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். மணிக்கு மொத்தம் மூன்று தாத்தாக்கள். அவர்களில் நடு தாத்தா கோவிந்தன்தான் மணியின் அம்மாவுக்கு அப்பா. அவருக்கு மணியின் அம்மா மட்டுமே. மகன்களில்லை.
மணியின் அம்மாவை விழுப்புரம் பக்கத்தில் உள்ள வளவனூரில் ஓர் ஆசிரியரான ஈசுவரன் என்பாருக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். ஆக, ஈசுவரன்தான் அக்குடும்பத்திற்கு மூத்த மருமகன்.
பெரியவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனான சந்திரனைப் பக்கத்தில் மைலத்தில் இருக்கும் தமிழ்க் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். அந்தக்கிராமத்திலிருந்து தினமும் போய் வருவது சிரமம் என்பதால் மைலத்திலேயே இருந்த பெரியவரின் அக்கா அதாவது சந்திரனின் அத்தை வீட்டியே தங்கி அவன் படித்து வந்தான். சந்திரனின் அத்தை சுமாரான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தாள். அவர் கணவர் மைலம் மலையேறும் வழியில் மளிகைக்கடை வைத்திருந்தார். அவ்வப்போது கோவிந்தன்தான் அவர்களுக்கு உதவிகள் செய்து வந்தார்.
கடைசி சின்னத்தாத்தா கோபாலனுக்குக் குழந்தைகளே இல்லை. சின்னத்தாத்தா செங்கல்பட்டில் உயர்நிலைப் பள்ளியில் அந்தக்காலப் பட்டதாரி ஆசிரியர். மணியின் தாத்தா ஹையர்கிரேடு ஆசிரியர். செங்கல்பட்டிலிருந்து பணி ஓய்வு பெற்ற சின்ன தாத்தாவும் பெரிய தாத்தா இருக்கும் அடுத்தத் தெருவில் வீடு கட்டிக்கொண்டு வந்துவிட்டார்.
பாட்டி சொல்லி இருக்கிறார். “எப்பவுமே மொதலும் கடைசியும் ஒண்ணுதான். இவரு நடுவுல வந்ததால தனிதான். அவங்க ரெண்டு பேரும் ஒரு கட்சிதான்”
பெரியவர் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு தம்பிகள் இருவரையும் திண்டிவனம் அனுப்பிப் படிக்க வைத்தார். சின்னதாத்தா செங்கல்பட்டில் தனியார் பள்ளியில் பணியாற்றியதால் அவருக்கு மாறுதலே கிடையாது. மணியின் தாத்தாவுக்கு மட்டும் ஊர்விட்டு ஊருக்கு மாறுதலிருக்கும். சின்ன தாத்தா கோபாலனின் நிலத்தையும் சேர்த்துத்தான் பெரிய தாத்தா பார்த்துக் கொண்டிருந்தார். மணியின் தாத்தா கோவிந்தன் தன் பங்கைக் குத்தகைக்கு விட்டிருந்தார்.
ஒவ்வொரு மே மாதமும் கோவிந்தன் குத்தகையை வசூல் செய்துகொண்டு போக அந்தக் கிராமத்திற்கு வந்து விடுவார். வளவனூரிலிருந்து ஏதாவது ஒரு பேரனை உதவிக்கு அழைத்துக் கொண்டு வந்துவிடுவார். பெரும்பாலும் மணிதான் அவருடன் வருவான். தாத்தாவும் பாட்டியும் வந்து வீட்டைச் செப்பனிட்டு, ஊர்த்திருவிழாவிலும் கலந்துகொண்டு பத்துப் பதினைந்து நாள்கள் இருந்துதான் போவார்கள்.
அப்படி ஒரு மேமாதம் மணி தாத்தா பாட்டியுடன் வந்திருந்தான். ஒரு நாள் காலை பத்து மணிக்கு மணியின் அப்பா ஈசுவரன் திடீரென வளவனூரிலிருந்து வந்தார். கோவிந்தனுக்கு ஆச்சரியம்.
வந்தவரிடமே, “என்னா மாப்பிளே! திடீர்னு?” என்று கேட்டே விட்டார்.
அதற்குள் உள்ளே இருந்து வந்த பாட்டி, “என்னாங்க வர்ற மாப்பிள்ளைக்கிட்ட பேசற பேச்சா இது?” என்றார்.
ஈசுவரன் சிரித்துக் கொண்டே, “ஏன் மாமா, நான் திடீர்னு வரக்கூடாதா?” என்று கேட்டார்.
“ஒங்க வீடுதான இது. நீங்க வர்றதுக்கு யார்கிட்டக் கேக்கணும்? என்றார் கோவிந்தன்.
பாட்டி மோர் கொண்டுவந்து கொடுத்தார். குடித்துவிட்டு மணியைப் பார்த்து, “என்னடா, பொழுது நல்லாப் போகுதா?” என்றார் ஈசுவரன்.
“அவன் இங்க வீட்ல தங்கினாத்தான? வெளியிலதான் எல்லாரோடயும் வெளையாட்டு. வயலு வாய்க்கால், ஏரிக்கரைன்னு சுத்தறான். போதாக் கொறைக்கு நெறைய வயல்ல கரும்பாலை போட்டு வைச்சுட்டாங்க, அங்க போயி வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பான். கருப்பஞ்சாறு குடிப்பான்” என்றார் பாட்டி.
சற்று நேரம் யாரும் பேசவே இல்லை. ஈசுவரன் சிறிதுநேரம் கழித்து, “மணி பக்க்கத்துலப் போயிப் பெரியவரு இருக்காரான்னு பாத்துட்டு வா” என்றார்.
“என்னா மாப்ளே! விஷயம் சொல்லுங்களேன்” என்றார் கோவிந்தன்.
அதற்குள் மணி வந்து “இருக்காருப்பா” என்றான்.
உடனே எழுந்த ஈசுவரன், “சொல்றேன், சொல்றேன்” என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு, “மணி நீயும் வா” என்று கூறி அவனையும் அழைத்துச் சென்றார். பெரியவர் வீட்டினுள் இருவரும் செல்வதை வெளியில் போய்ப் பார்த்துவிட்டு வந்த பாட்டி, “ஏனென்று தெரியவில்லை” என்பது போல உதட்டைப் பிதுக்கிக் காட்டினார்.
சற்று நேரம் கழித்துப் பெரியவர் குரல் ஓங்கி ஒலித்தது. ”இதுக்காகத்தான் நீங்க வந்தீங்களா? கண்டிப்பா இது நடக்காது; போய்ச் சந்திரன்கிட்டச் சொல்லுங்க”
உள்ளே மணி அனைத்திற்கும் சாட்சியாக இருந்தான். அவனுக்கும் லேசாகப் புரிந்தது. சந்திரனும் அவன் அத்தை பெண் மாலதியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் போலிருக்கிறது. அதைச் சந்திரன் ஈசுவரனுக்கு எழுதித் தன் அப்பாவிடம் போய்ச் சொல்லித் திருமணம் செய்துவைக்கக் கேட்டு இருக்கிறான். அப்பா அதற்காகத்தான் வந்திருக்கிறார்.
ஈசுவரன் பேசினார், “மாமா, சந்திரன் எனக்கு எழுதியதால்தான் வந்தேன். நானும் காலையிலே வந்து அவனைப் பார்த்துப் பேசினேன். “ஏண்டா; நீயே ஒங்க அப்பாக்கிட்டக் கேளேன்” என்றுதான் சொன்னேன். அவன்தான் பதிலுக்கு அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாருன்னான்”
‘அப்பறம் நீங்க ஏன் மாப்பிள வந்தீங்க”
”ஒரே காரணம்தான். நான் பேசியதிலேந்து அவங்க நாம சம்மதம் கொடுக்காட்டாக் கூட பண்ணிக்கற முடிவுல இருக்காங்க”
“செஞ்சுக்கட்டுமே என் சொத்துல ஒரு பைசாக் கூட அவனுக்குக் கொடுக்க மாட்டேன்”
“என்னாங்க மாமா! நீங்க இந்தக் காலத்துலப் போயி சொத்துன்னு பேசிக்கிட்டு? ரெண்டு பேரும் வேலைக்குப் போயிச் சம்பாரிச்சா கை நெறய சம்பாதிப்பாங்க; அதுவே போதும். அப்படி அவங்களே போயிப் பண்ணிக்கிட்டா நமக்குக் கௌரவம் போயிடும். தெரியும்ல. அத்தை பொண்ணையே ஏழைன்றதால பண்ணிக்கலன்ற பேருதான் நெலைக்கும்”
சற்று நேரம் பெரியவர் பேசவே இல்லை. கீழேயே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களில் நீர் வந்துவிடும் போல இருந்தது. பின்னர் எழுந்தார். தோட்டத்திற்குச் சென்றார்.
ஈசுவரன் நின்று கொண்டிருந்த பெரியவர் மனைவியிடம், “மாமி நீங்களே சொல்லுங்க; தண்ணி அடிச்சுத் தண்ணி வெலகாது. அவங்க ஏழைன்னா நம்ம சம்பந்தம் கெடச்சா நமக்கு சமமா ஆயிடறாங்க; ஒறவு உட்டுப் போகக்கூடாதுல்ல” என்றார்.
”ஏழை பணக்காரன்னு என்னாங்க மாப்ளே! இவருதான் சொத்து சொத்துன்னு பேசிக்கிட்டு இருக்காரு. எல்லாம் ஒத்துக்குவாரு; நானும் சொல்றேன்” என்றார் மாமி.
தோட்டத்திலே இருந்து பெரியவர் வந்தார். முகம் கழுவிக்கொண்டு வந்தவர் சற்றுத் தெளிவாக இருப்பதைப் போல இருந்தார். வந்தவர் நாற்காலியில் உட்கார்ந்தார். பாட்டியைப் பார்த்து, ”சாமிக்குப் போயி வெளக்கு ஏத்து” என்றார்.
பெரியவர் மனைவிக்குப் புரிந்து விட்டது. அவர் இப்போது பேசினார். “ஏங்க நம்ம குடும்பத்து மூத்த மருமகன் இவரு. நீங்கதான் எப்பவும் வளவனூராருன்னு ஒசத்தியாப் பேசுவீங்க; அவரே வேல மெனக்கிட்டு வந்திருக்காரு. இவரு என்ன கெடுதலா நெனப்பாரு. கொஞ்சம் யோசியுங்க” என்றார். பெரியவர் உள்ளே போய் சாமி கும்பிட்டுத் திருநீறு பூசிக்கொண்டு வந்தார்.
”சரிங்க மாப்பிள; எதுக்கும் ஒரு மொறை இருக்குதில்ல; அக்காவை வந்து பேசச் சொல்லுங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
அதிலிருந்து ஈசுவரனின் மதிப்பு அக்குடும்பத்தில் உயர்ந்துதான் இருந்தது. காலம் ஓடியது. மூன்று தாத்தாக்களான உடன்பிறந்த சகோதரருக்குள் வேற்றுமை இல்லாமல்தான் போய்க்கொண்டிருந்தது. சொத்து பாகம் பிரிக்கும்போதுதான் பிரச்சனை வந்தது. யாரும் எதிர்பார்க்காத பிரச்சனை அது.
மணிக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது நடந்ததும் ஒரு மேமாதம்தான். அப்போதுதானே கோவிந்தனும் பாட்டியும் மணியுடன் அக்கிராமத்திற்கு வருவார்கள்.
அறுப்பு முடிந்துவிட்டது. குத்தகை நெல் மூட்டைகள் வீட்டு வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மறு நாள் காலை மூன்று வண்டிகளில் அவை ஏற்றப்பட்டு வளவனூர் போய்ச் சேர வேண்டும். மாலை நான்கு மணி இருக்கும். ஊரின் குருக்கள் சிவநேசன் வந்தார்.
கோவிந்தன் “வாங்க வாங்க, ஏது இவ்வளவு தூரம் என்று கேட்க அவர் சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்தார். அடுத்துக் குப்புசாமி ரெட்டியார் வந்தார். “ஏதேது இன்னிக்குப் பெரியாளுங்க எல்லாம் வந்திருக்கீங்க? கோயில்ல ஏதாவது திருவிழாவா”ன்னு கேட்டார் கோவிந்தன்.
“நமக்கென்ன எல்லா நாளும் திருநாள்தான்” என்றார் குப்புசாமி.
அதற்குள் பக்கத்து வீட்டிலிருந்து பெரியவரும் அவர் மனைவியும் வந்தனர். ”வாங்கண்ணா; வாங்க அண்ணி” என்று கோவிந்தனும் அவர் மனைவியும் வரவேற்றனர்.
எல்லாரும் தண்ணீர் குடித்துவிட்டுச் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தனர். “என்ன வெளச்சல் பரவாயில்லயா?” என்று கேட்டார் குப்புசாமி.
”போட்டதுக்கு நஷ்டம் இல்ல” என்றார் கோவிந்தன்.
”நான் கோயில்ல சாயரட்சைக்குப் போகணும்; வந்த காரியத்தைப் பேசினீங்கன்னா நல்லது” என்றார் சிவநேசன். அப்போதுதான் இவர்கள் ஏதோ பேசி வைத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள் என்று கோவிந்தனுக்குப் புரிந்தது.
அவர்களாகவே தொடங்கட்டும் என்று காத்திருந்தார். “ஒண்ணும் இல்ல தம்பி; நெலத்தைப் பிரிச்ச மாதிரி மனைக்கட்டையும் பிரிக்கணும்தான் நான் வரச் சொன்னேன்” என்றார் பெரியவர்.
“மனைக்கட்டு ஏதண்ணா?” என்று கேட்டார் கோவிந்தன்.
“இப்ப குடியிருக்கற மனைகளத்தான் சொல்றாரு” என்று எடுத்துக் கொடுத்தார் குப்புசாமி.
“இதையா: இதுகள்ளதாம் மூணு வீடுங்களும் இருக்கே” என்றார் கோவிந்தன்.
“இதைத்தாம்பா சொல்றேன். நீ ஒரு ஓரமா எடுத்துக்கிட்டா நாங்க ரெண்டு பேரும் மீதியை எடுத்துக்குவோம்” என்றார் பெரியவர்.
“ஏன் இப்படியே எடுத்துக்கிட்டா என்னாவாம்? என்று சற்று சூடாகவே கேட்டார் கோவிந்தன்
“இல்லப்பா, அவங்க ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்துல இருந்தா நல்லா அகலமா பெரிய வீடா கட்டலாம்னு பாக்கறாரு” என்றார் குப்புசாமி.
“அதூம் சரிதானே; அவங்க ரெண்டு பேரும் சேத்து ஒரே வீடா கட்டுவாங்கள்ள” என்றார் சிவனேசன்.
கோவிந்தனின் மிகம் சிவந்து விட்டது. “இது சரியா வராதுங்க” என்றார் கோவிந்தன். எல்லாரும் திடுக்கிட்டனர்.
“ஏண்டா வராது?’ என்று கேட்டார் பெரியவர்.
’நெலத்தைப் பிரிக்கும்போதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் பக்கத்துப் பக்கத்துலப் பிரிச்சிங்க; நான் சரின்னு ஒத்துக்கிட்டேன். நான் இதுக்கு ஒத்துக்கவே மாட்டேன்”
“நல்லா யோசிச்சுப் பாருங்க” என்றார் குப்புசாமி.
“இதுல யோசிக்கவே ஒண்ணும் இல்லீங்க”
”நாங்க சொல்றது ஒனக்குப் புரியுதா” என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டார் பெரியவர்.
”அது கூடத் தெரியாத முட்டாளா நான்? அப்படியே என்னை ஒதுக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் கட்டிக்கலாம்னுதான் பாக்கறீங்க. நான் விட மாட்டேன். நடுப்பாகம்தான் எனக்கு வேணும்”
“ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கறீங்க?” என்று கேட்டார் குருக்கள்.
“பிடிவாதம் இல்லீங்க. இந்த நடுப்பாகம் எனக்குக் கோயில் மாதிரி. இங்கதான் என் அப்பா அம்மா உயிர் விட்டாங்க; என் உயிரும் இங்கதான் போகணும். நான் நிச்சயமா விட மாட்டேன்” என்று கத்தினார் கோவிந்தன். அப்படித்தான் ஒரு மேமாதம் அறுப்புக்கு வந்த போது கோவிந்தன் நடுப்பாகத்தில் உயிர்விட்டார்.
அவர் கத்தலைக் கேட்டதும் பெரியவருக்குக் கோபம் வந்தது. “ஆமாண்டா சேத்துவை நடுப்பாகத்தை; ஒன் புள்ளயா இங்க வரப் போறான்? வளவனூரான் வந்து காப்பிப் பொடி சக்கரைக்கு இதை வித்துட்டுப் போகப் போறான்” என்றார்.
“யாரு விக்கறாங்கன்னு பேச்சு இப்ப இல்ல; என் உசிரு இருக்கற வரைக்கும் நான் நடுப்பாகத்தை விட்டுத்தர மாட்டேன். நீங்க வேற ஏதாவது பேசலாம்” என்று முடிவாகக் கூறிவிட்டார் கோவிந்தன்.
பள்ளி மணியின் ஓசை மணியின் கவனத்தைக் கலைத்தது. கிளம்பி வீட்டிற்கு வந்தான். வீட்டில் பெரியவர் இல்லை.
”என்னா பாட்டி. அவரு கெளம்பிப் போயிட்டாரா?”
”ஆமாண்டா; நீ வரட்டும் பாத்துட்டு சாயங்கலாமாப் போங்கன்னு சொன்னேன். அவரு கேக்கல”
“நடுப்பாகம் விஷயமாதாண்டா வந்தார். அதைக் கேட்கறார்”
மணி தட்டை எடுத்துப் போட்டுக்கொண்டே, “நான் நெனச்சேன் அதுக்குதான் வந்திருப்பருன்னு”
பாட்டி தட்டில் சாதம் போட்டுக்கொண்டே, “பெரிய மாடிவீடா அகலமா கட்டணுமாம். நீங்கதான் நெலத்த வித்துட்டீங்களே. இதை வேற யாருக்காவது கொடுக்கறதை எனக்குக் கொடுங்கன்னு கேக்கறாரு.”
மணி சாதத்தைப் பிசைந்து கொண்டே பேசினான். “கூடாது பாட்டி; வேற யாருக்காவது கொடுத்தாலும் கொடுக்கலாம். இல்ல காப்பி சக்கரைக்குக் கூடக் கொடுக்கலாம். அவருக்குக் கூடாது” என்று சிரித்துக் கொண்டே கோபமாகவும் பேசினான் அவன்.
“நானும் அப்படிதாண்டா நெனச்சேன்; ஆனா அவரு என்ன சொன்னாரு தெரியுமா? இப்ப என் தம்பி இருந்தா வேற பேச்சில்லாமக் கொடுத்திடுவான்; அப்ப நெலமை வேற”
“சரின்னு ஒத்துக் கிட்டீங்களாக்கும்”
“ஆமாண்டா; அவரு சொன்ன வார்த்தை ஒங்க தாத்தா சொல்லியதெல்லாம் நெனவுக்குக் கொண்டு வந்தது. அவரைப் படிக்க வச்சது முக்கியமில்ல; இந்த வேகாதவெயில்ல மூணு மைல் ஆத்தைத் தாண்டி வந்திருக்கரே. என்ன வாரிக்கிட்டுப் போகப் போறாரு? வேற ஒருத்தரு நடுவுல வீட்டைக் கட்டினா நல்லா இருக்குமா சொல்லு”
பாட்டி சொன்னதிலும் சொல்வதிலும் நியாயம் இருப்பதுபோல் உணர்ந்தான் மணி .