மழை அழகா
பாடிய பாடல் நடுவினிலே காற்றில் கரைந்தது போல்
வந்து வந்து நின்று போவதேன் மழைத் துளியே கூறுக நீ
பூமிப் பண்டாரம் வைத்திருக்கும் கப்பரையில்
உன் சில்லறைத் துளிகள் விழுந்தால் தானே
பக்தியும் வரும் ? பசியும் போகும்? கூறுக நீ
தாய் முலையில் வாயருந்திக் கசியும் பிள்ளை பார்த்திருக்க
பாதி வழியில் தடுத்தது போல்
உனை யாரங்கே வானிலும் தடுப்பது கூறுக நீ
தாய்ப் பாலைப் போன்றதே பருவமழையும்
இரவென்றால் கருமை படரும் பழகிவிடும்
வெயிலென்றால் வெண்மை படரும் பழகிவிடும்
மழை அழகா நீ இருந்து வந்தால் தான்
உயிரினில் ஒளி படரும்
சொட்டு சொட்டாய் உயிர் துளிர்க்கும்
பருவந்தப்பிய உதவிகளை
இறுதி வாழ்வில் செய்தால் உலகத்தார் வெறுப்பர்
மழை அழகா நீ மட்டும் எப்போதாயிருந்தாலும்
வந்து சேரு உனை ஆரத்தி எடுக்கின்றோம்
குழந்தைகள் தெருவில் காகிதம் மடித்து
கப்பல்விட்டு நுரைக்குமிழிகள்
செஞ்சாந்து நீர் சுழித்தோட
வளைந்து சாய்ந்து
மூழ்கிய கப்பல் பார்த்து கண்கலங்கி
நாளாச்சு மாசமாச்சு வந்து சேரய்யா மழை அழகா
விவசாயம் பார்க்கோணும் விளைஞ்சு நெல்மணிமூட்டை குவியோணும்
களம் களமா அடிச்சுப் போட்டு
பதர் அடிச்சு குமிஞ்சு நெல்லு பாத்து
பஞ்சம் பசி பறக்கோணும் கண்மணியே வாருமய்யா
மழை அழகா உனக்கு நாட்டு சனம் எப்பவுமே
சீரு செனத்தி செய்யோணும்.
– பா.சத்தியமோகன்
மழை புராணம் – 9