வைகறை கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரிஜினல் தாஜ்மகால் ‘ தொகுப்பை முன் வைத்து ….

This entry is part 16 of 16 in the series 21 பெப்ருவரி 2016

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அடைக்கலாபுரம் [ தூத்துக்குடி மாவட்டம் ] என்ற ஊர்க்காரர் வைகறை ; பள்ளி ஆசிரியர் . இத்தொகுப்பில் 26 கவிதைகள் உள்ளன. காதல் கவிதைகள் சுயமானவை. இவருக்குக் கவிமொழி
வாய்த்திருக்கிறது. பெண் தொடர்பான புதிய சிந்தனைகள் , படிமங்கள் அமைந்துள்ளன. கவிதைத்
துறைக்குப் புதியவர் என்பதால் சில சறுக்கல்களும் உள்ளன. தாஜ்மகால் பல கவிதைகளில் இடம்
பெற்றுள்ளது.
‘ பூங்காவே … ‘ என்னும் கவிதையில் …
சவுக்கியமாய் அமர்ந்து
சங்கதி கேட்டபோது
பூங்கா என்னோடு
தோழமையானது
—- என்பது கவிதையின் தொடக்கம். தென்றல் வீசுவதை எல்லோரும் அறிவோம். தென்றலை
வைகறை வித்தியாசமாகப் பார்க்கிறார்.
மெல்ல வீசும்
பூந்தென்றல்தான்
அதன்
தாய்க்கரம் …
கண்ணீர் வேளையில்
அது
மெல்லத் தலை தடவி
கண்ணீர் துடைக்கும் …!
—- பூங்கா என்றால் பூக்கள் இல்லாமலா ? வைகறையின் இலக்கிய மனம் பூவில்போய் அமர்ந்து
கொள்கிறது.
சின்னச் சின்னப்
பூக்களெல்லாம்
‘ ஹைக்கூ ‘ வாய்ப் பூத்திருக்கும்
நமக்காக… !
—- புல்வெளியைப் பார்க்கும் எல்லோருடைய மனங்களிலும் அதன் பசுமைதான் பொங்கி வழியும் .
ஆனால் வைகறையின் பார்வையில் கவிமனம் தெரிகிறது.
பன்னீர்த் துளிகளைப்
பதியமிட்ட தேகத்தோடு
புல்வெளிகள்…
—- அழகான படிமம். பனித்துளிகளே தேகமாக மாறிவிட்டது என்னும் பார்வையில் வாசகன் மனமும்
சிலிர்க்கிறது.
காய்ந்த பிறகும்
மெல்லிசை ஒன்றை
இசைத்தவாறே
நடை பயிலும் சருகுகள்…
பேசத் தெரிந்த புதர்கள்
—– என்ற மெருகூட்டும் வரிகளில் நுட்பமான பதிவுகள் ரசிக்க வைகின்றன. பூங்கா நேசம் இன்னும்
விட்டபாடில்லை என்கின்றன பின் வரும் வரிகள்.
நாடி தளர்ந்தாலும்
நான் இங்கே
நிச்சயம் வருவேன்
—- பூங்காவைப் பற்றிய இக்கவிதையை யாராவது ஒரு ஆங்கிலக் கவிஞன் எழுதியிருந்தால் உலக
வாசகர் வட்டம் உருவாகியிருக்கும். பாராட்டுகள் வைகறை !
‘ ஒரு பௌர்ணமி இரவில் ‘ என்ற கவிதை , ஊர் சுற்றிப் பார்க்க மகாபலிபுரம் சென்ற காதலர்களைப்
பற்றிச் சொல்கிறது.
ஒரு
பௌர்ணமி இரவில்
மகாபலிபுரத்தில்
பிரியாத கரங்களோடு
மௌனமாய் நடந்து கொண்டிருந்தோம்…
—– என்பது தொடக்கம். அங்குள்ள சிற்பங்களைத்தான் தன் காமிராவுக்குள் படம் எடுக்க நினைக்கிறான் அவன் . ஆனால் எடுக்கவில்லை , ஏன் ?
கடற்கரைக் கோயிலை
காமிராவுக்குள் அடக்க
எழுந்து
தள்ளிச் சென்று
பார்த்த போதுதான் தெரிந்தது
அந்தப்
பௌர்ணமி ஒளியில்
அன்பே
உன் அழகு … !
—- முதலில் அவளைப் படம் பிடிக்கிறான் அவன். இதை அனுபவக் கவிதை என்றே சொல்ல வேண்டும்.
தலைப்பில்லாக் கவிதை ஒன்று காதலைச் சொல்கிறது.
தாஜ்மகாலின் முன்
அமர்ந்து
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
உன் புகைப் படங்களை !
—- அழகு என்றால் அவனுக்கு அவள்தான். மனம் முழுவதும் அவள்தான் . அவள் நிறைந்திருக்க
தாஜ்மகால் உட்புகவில்லை.
புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ ஒரிஜினல் தாஜ்மகால் … ‘
இதில் ஓரிடத்தில் எதைப் பார்த்தாலும் தாஜ்மகாலாகத் தெரிகிறது.
ஊருக்கு ஓரமாய்
ஒத்தையடிப் பாதையில்
அவசரமாய் ..
ஓலைக்குடிசையாய் …
காத்திருக்கச் செய்யும்
மரப் பாலமாய் …
ஊருக்கு ஊர் – நாம்
தாஜ்மகாலைக் காணலாம்
—- அழகு என்றால் தாஜ்மகால் ; தாஜ்மகால் என்றால் அழகு என்னும் கருத்துதான் மேற்கண்ட
வரிகளில் நாம் அறியும் செய்தி . கவிதையின் முத்தாய்ப்பு எங்கோ இடிக்கிறது.
அப்படிப் பார்த்தால்
இங்கே ஒவ்வொருவரும்
தனித்தனி தாஜ்மகால்தான்… !
—- ‘ குடை ‘ என்ற கவிதை , கவிதை சொல்லியின் காதல் தோல்வியைச் சொல்கிறது.
கதறி அழும்
கார்கால மழை… !
நீயும்
நானும்
எதிரெதிராய் …
குடையோடும்
நீ துணையோடும் … !
எனக்காகவும் சேர்த்து
அழுகிறது
மழையும் குடையும் …
—- ‘ குடையும் ‘ என்ற சொல் சூழாலுக்கு இரண்டாவது அர்த்தத்தைச் சேர்க்கிறது. பாராட்டத்தக்க
முயற்சி. கவிதகளின் பேசு பொருள் எல்லை விரிவடைய வேண்டும். தனிக்குறிப்பு : இவரது இரண்டாம்
தொகுப்பு குழந்தைமை பற்றிய பதிவு. அதில் நல்ல மொழித் தேர்ச்சி காணப்படுகிறது.

Series Navigation2015சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்புக்கான விருது தமிழில்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *