இயற்கையின் ஊடே சமூகப் பயணம்

 

கவிதாயினி மீனாட்சிசுந்தரமூர்த்தியின் முதல் கவிதைத் தொகுப்பு “வனம் உலாவும் வானம்பாடி”. பெரும்பாலும் எல்லாக் கவிதைகளும் இயற்கையையே பாடுபொருளாகக் கொண்டுள்ளன. அதிலும் சூரியன் நிறைய கவிதைகளில் காணப்படுகிறான். கவிதைகளுக்கேற்ற படங்களா? அல்லது படங்களுக்கேற்ற கவிதைகளா? என்னும் கேள்வி எழத்தான் செய்கிறது. படங்கள் இருப்பதால் எக்கவிதைக்கும் தலைப்பு அளிக்கவில்லை போலும்.

முதல் கவிதையில் சூரியன் அப்போதுதான் உதிக்கத் தொடங்குகிறான். அதைக் கவிதாயினி செங்கதிரோன் “உலா போகப் புறப்பட்டான்” என்கிறார். அதுவும் ஒற்றை யானையில் கிளம்பப் போகிறான். அவன் வந்து ஏறிக் கொள்ள வசதியாக அதுவும் நிற்கிறது. ஆமாம்; அதுநடக்கவில்லை. அரசன் உலா வர மழைமேகம் பன்னீர் தெளிக்கிறது. மலர்களின் வாசம்தான் சாமரமாகிறது. இப்படிப் பயணம் தொடங்கும் இச்சூரியன் சுமார் 20 கவிதைகளில் வலம் வருகிறான். சிலநேரங்களில் கூறுவது கூறல் போல் உள்ளது.

இயற்கை என்பது காணக்காண ஒரு விந்தையான தோற்றம் தருவது. அருவி, கடல், ஆறு போன்றவை எத்தனை நேரம் பார்த்தாலும் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கத் தூண்டுபவை. அதேபோலத்தான் மலைகளும் காடுகளும். இப்படி இயற்கை எடுத்துள்ள வடிவங்கள் எல்லாமே நமக்காகத்தான் என்கிறது கவிதை. அதுவும் மானுடம் மகிழத்தான் என்கிறார்.

”என்னஅதிசயம்!/மலையாய்/மரமாய்நதியாய்/இயற்கைஎடுக்கும்/வடிவம்/எத்தனை?எத்தனை/ மானுடம் மகிழ இறைவன் தரும் கொடை இது”

இக்கவிதை போலவே தனியாக உள்ள ஒரு கொக்கு ஒரு கவிதையை உண்டாக்குகிறது. அது தன் கழுத்தை உயர்த்தி வானைப் பார்க்கிறது. ”ஏன் நீ வானைப் பார்க்கிறாய்?  ஒருவேளை மழை வேண்டி வானத்திடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறாயோ” என்று நூலாசிரியர் கேட்கிறார். பிளந்த பனக்கிழங்கிழங்கை உவமை சொன்னார் சத்திமுற்றப்புலவர். இவர் பிளந்த மஞ்சள் கிழங்கைக் கூறுகிறார், அதுவும் அக்கொக்கின் கழுத்து சற்று வளைந்திருக்கிறது. எனவே அதை ஒரு வளைகுடா என்றும் அதன் சிறகு வெண்மையாக இருப்பதால் நீராவி தந்த சிறகென்றும் கூறுகிறது இக்கவிதை.

”நீராவி தந்த சிறகோ/நீள்கழுத்து/வளைகுடாவோ/வெண்தாமரை/மொட்டோ உடலழகு?/பிளந்த மஞ்சளின்/கிழங்குதான் அலகோ?/எங்கள்/வறண்ட பூமிக்காக/மழை தர/விண்ணப்பம்/வைக்கின்றாயோ/அழகியகொக்கே”

இப்படிச் சூழல் மட்டுமன்றித் தனிப்பட்ட ஒரு பறவையும் இயற்கையின் விசித்திரத்தைக் காட்டிக் கவிதாயினியின் மனத்தை வருடி இருக்கிறது. அதனால்தான் ”நதிப்பெண் நீலச்சேலை கட்டி வருகிறாள். அவளுக்குச் செஞ்சாந்து மலர்களால் பந்தல் போட்டு வரவேற்பளிக்கப்படுகிறது. மஞ்சள் இலைகளால் தோரணம் கட்டப்பட்டு நீருக்கிறது. பச்சைக்கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது” என்றெல்லாம் அவரால் இயற்கையில் மனம் தோயமுடிகிறது.

இப்படி இயற்கையில் மனம் பறிகொடுக்கும் இவர் அதேநேரத்தில் அந்த இயற்கை நமக்குக் கற்றுத்தரும் பாடத்தையும் காட்டுகிறார். இயற்கையை நாம் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் காட்டுகிறார். யானைகளைக் காட்டி, “கயவர் சிலர் தந்தத்திற்காக இவர்களைப் பலியிடுவதுண்டு. வனங்களை அழிப்பதால் ஊருக்குள் புகுவதுண்டு. வனங்களைப் பாதுகாப்போம்” என்கிறார். “மணல் அள்ளிக் குழி பறிப்பதை விடித்து நீரோடு ஆறோட வழி தருவோம்” இவற்றில் சற்றுக் கவிநடை குறைந்து உரைநடை மிகுந்து இருப்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

காக்கை, குருவி, நரி, தவளை எல்லாமே இவருக்குப் பாடுபொருள்களாக இருக்கின்றன. “காக்கைகளின் மாநாடு/கண்டுவந்தேன் நானும்/” என்று இவர் எழுதுவது பாரதி எழுதிய காக்கைகள் பற்றிய சித்திரத்தைக் கண்முன் கொண்டுவருகிறது. இப்போதெல்லாம் சோறு வைத்தால் கூட ஒரு காக்கை வந்து தான் மட்டுமே தனியாகத் தின்கிறது. “காக்கை கரவா கரைந்துண்ணும்” என்பது குறளில் மட்டுமே இருக்கிறது. அவற்றிடையே ஒற்றுமை குறைந்து போய்விட்டதோ என நான் எண்ணுவதை இவர் அப்படியே படம் பிடிக்கிறார். அதனால்தான் காக்கைகளின் மாநாட்டில், “கட்டுக்கோப்பாய் வாழ்ந்திட /தீர்மானம் /ஒருமனதாய் /நிறைவேற்றப்பட்டது” என்று எழுதுகிறார். அத்தீர்மானம் காக்கைகளுக்கு மட்டுமன்று; நமக்கும் கூடச் சேர்த்துத்தான் என்று எண்ண முடிகிறது.

68-ஆம் பக்கத்தில் உள்ள படத்தில் ஒரு குழாயில் இருந்து நீர் சொட்டுகிறது. ஒருகுருவி பறந்துகொண்டே அதைக் குடிக்க முயல்கிறது. தன் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள அது அந்தரத்தில் மிதந்துகொண்டே முயற்சி செய்கிறது. இதைப் பார்த்த கவிஞர் அது “வாய்திறக்க எத்தனை முயன்றதோ எவர் அறிவார்?” எனக் கவலைப்படுகிறார். அக்கவிதை மூலம் அவர் ”எச்செயலும் தன் முயற்சி இன்றி வெற்றி பெறாது” என்கிறார். ஒருகுருவி ஒரு சொட்டு நீருக்காக படும் பாடு நம்மைச்  சிந்திக்க வைக்கிறது. ஆமாம்; நாம் ஒரு நாளில் எந்த அளவுக்குத் தண்ணீரை வீணாக்குகிறோம் என்பதை எண்ண வைக்கிறது. அதனால்தான், “ஒரு சொட்டு நீர்/ ஒரு பறவையின் /தாகம் தீர்க்கும் /தண்ணீரை /வீணாக்காமல் சேமிப்போம்” என்ற கவிதை அடி நம்மனத்தில் படிகிறது.

காட்டிலாவது விலங்குகள் உண்மை முகத்துடன் உலாவுகின்றன. எனவே அவற்றை இனம் தெரிந்து நாம் பாதுகாப்பாய் இருக்கலாம். ஆனால் மாந்தர் பலர் முகம் மட்டும் மனிதராய் மனமெல்லாம் விலங்குகளாய் வாழ்கிறார்கள். அவர்களை இனம் கண்டு தெரிந்து வாழ்வதுதான் வாழ்வாக இருக்கிறது. அப்படி நாம் செயல் புரிவதில்தான் வெற்றி இருக்கிறது. அதற்கே கவிதாயினி அறைகூவல் விடுக்கிறார். “தந்திரம் எனும் /மந்திரம் கொண்டு/ விலங்குகளை/ ஏய்த்து உலாவும்/ செந்நரிக் கூட்டம்/ காட்டில் மட்டுமா? இனமானத்தைக் /கூறுபோட்டு விற்கும்/ எத்தர்களின்/ நாடகம் முடிக்க /எழுந்தது இளஞ்சிங்கக்கூட்டம்” எனும் கவிதை முக்கியமான ஒன்றாகும்.

இலக்கியமாகட்டும் அரசியலாகட்டும் இன்னும் எந்தத் துறையானாலும் ஒரு சிலர் எல்லாம் தெரிந்த்துபோல் பேசுவார்கள்; ஆனால் அவர்கள் தாம் பேசும் துறை பற்றிய அறிவு சிறிதும் இல்லாதவர்கள். அதைப் பற்றி அறியும்  ஆர்வமும் இல்லாதவர்கள். தாங்கள் அறிந்ததே போதும் என்றெண்ணுபவர்கள். இவர்கள்தாம் ‘கிணற்றுத்தவளை” என்று சொல்லப்படுபவர்கள். அப்படி இருக்க வேண்டாம் என்கிறது ஒரு கவிதை. ”கிணற்றுத் தவளையாய் /இருந்து விட்டால்/ ஒதுங்கி விடுவோம்/! ஊரோடு /கூடி வாழ்வோம்” என அக்கவிதை முடிகிறது.

சோகத்தில் சூரியன் மறைவதாகவும், ஆறுதல் கூற நிலவு வருவதாகவும் பாடப்படும் கவிதையிலும், தண்ணீரில் தன்முகம் பார்த்துக் கொக்கு மீனையும் கொத்த மறந்தது என்னும் கவிதையிலும் தற்குறிப்பேற்ற அணி மிளிர்கிறது. 27-ஆம் பக்கக் கவிதையில் காற்று எப்படிக் கடலில் ஒளிந்தது என்பது புரியவில்லை. 55-ஆம்பக்கக் கவிதை மாட்டிறைச்சி பற்றிப் பேசுகிறது. அம்மாடுகள் நம் வாழ்வைச் சுமந்தவையே. ஆனால் அவை ஓய்ந்தபின் அவை சுமையாகிறதே? என்ன செய்வது? என்னும் வினாவிற்கு விடை காணத்தான் வேண்டும்.

மிக நேர்த்தியாக நூலை வெளிக்கொணர்ந்துள்ள கடலூர் அனிச்சம் பதிப்பகத்தாருக்குப் பாராட்டுகள்.

முதல் நூலே முத்தாக அமைந்திருக்கிறது. இன்னும் கவிதாயினி மீனாட்சி சுந்தரமூர்த்தி பல நூல்கள் எழுதி தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வழங்க வாழ்த்துகிறேன்.

 

[வனம் உலாவும் வானம்பாடி—கவிதைத் தொகுப்பு—மீனாட்சி சுந்தரமூர்த்தி; அனிச்சம் வெளியீடு—55, தேரடித்தெரு; திருப்பாதிரிப்புலியூர்; கடலூர் 607 002—பக்;96—விலை;ரூ100; பேச: 97917 07673]

 

Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20