தொட்டனைத்து ஊறும்…

Spread the love

 

 

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________ருத்ரா

“நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார் பெறின்.”

பிறக்கும் போது 

நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும் 

முன்னரே

காலம் நம்மை தழுவிக்கொள்ளும்.

அதன் ஆலிங்கனம் நமக்கு

சுகமானது.

அதன் புள்ளிவிவரம் நம் மீது

எழுதப்படும்போது

வயதுகள் என அழைக்கப்படுகின்றன.

வயதுகள் நம் வலிமை.

வயதுகள் நம் இளமை.

வயதுகள் நம் முதுமை.

ஆனாலும் வயதுகளே

நமக்கு நாமே அச்சடித்துக்கொள்ளும்

நம் “பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்.”

வெட்ட வெட்ட வழுக்கிக்கொண்டு ஓடும்

வேதாளங்கள் 

காலம்.

கொஞ்சம் கொஞ்சமாக 

நகம் வெட்டப்படுதல் போல‌

நம் ஆளுமை

நம் ஓர்மை

எல்லாம் வெட்டப்படுகிறது.

வெட்ட வெட்ட தளிர் விடும்

இலைகள் நம்மிடம் உண்டு.

அதுவே

நம் அறிவு.

நம் மூளை எனும் மெமரிப்புதையலில்

ஆயிரம் ஆயிரம் கணிப்பான்கள்

முளைக்கின்றன.

அதன் டிஜிடல் துடிப்புகளில்

எங்கோ 

ஒளிப்பிரளய‌ங்களாக‌

இருட்பிழம்பாக 

இருக்கின்ற‌

பிரபஞ்ச மூலை முடுக்குகள்

பதிந்து கிடக்கின்றன.

நம் அறிவு உமிழ்வின் தடங்களே

கனத்த கனத்த 

இந்த வரலாற்றுத்தடிமனான

புத்தங்கங்கள்.

நம் காலமே நம்மை கசாப்பு செய்து விடும்

ஆயுதக்கிடங்கு 

என்று வள்ளுவர் நம்மை

கிலி கொள்ள வைக்கிறார்.

உண்மையில் அவர்

வாள் காட்ட வரவில்லை.

நம் நாள் காட்டியே அவர் தானே.

உயிரை இரண்டாக பிளக்கும் வாள்

மனிதனை இரண்டாக பிளந்து காட்டுகிறது.

மரணத்தைக்கண்டு அஞ்சும் மனிதன்.

மரணத்தை 

“அடேய்! வாடா! உன்னை என் காலால் மிதிக்கிறேன்”

என்று நெஞ்சை நிமிர்த்தும் “பாரதி” மனிதன்.

நாள் வாளாகிறது.

வாள் நாளாகிறது.

அறிவியல் தீப்பொறி தெறிக்க‌

யுத்தம் தொடர்கிறது.

பார்ப்போம்

இது அந்த செவ்வாய்க் கோள் வரை 

தொடரட்டுமே.

அதையும் பார்த்து விடுவோம்.

“எலான் மஸ்க்” தோளை நிமிர்த்துகிறார்.

நம் பயோ டெக்னாலஜியில்

ஒரு நாள் 

சூரியன் தோன்றும்போது

அது இமைவிரித்து

வியப்பு அடையலாம்.

இறப்பு என்பதே மறந்து போய்விட்ட‌

ஒரு “அல்காரிதம்”

நம் டி என் ஏ ..ஆர் என் ஏ 

“கோட்” சங்கிலியில் தோன்றி விடலாம்.

உயிர் மட்டுமே

பிரபஞ்சம் முழுதும் நிறைந்து வழியலாம்.

இது வள்ளுவர் சொல்லாமல் விட்ட‌

வாள்.

“தொட்டனைத்து ஊறும் அறிவே” அது.

______________________________________

Series Navigationகம்பன் எழுதாத சீதாஞ்சலி இளமை வெயில்