மாமல்லன்

0 minutes, 6 seconds Read
This entry is part 3 of 17 in the series 5 ஜூன் 2022

 

 

 

 

இந்தியாவின் பல இடங்களில் குகைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெரும்பாலானவை  புத்த,  சமண மதத்தவர்களது.  குகைக் கோவில்களின் அடுத்த பரிணாமம் ஒரே கல்லில்      (Single rock cut temple ) செதுக்குவதேயாகும். 

 

இப்படியான குகை கோவில்கள் மகாபலிபுரத்தில் உள்ளன. .குகைக்கோயில்கள்,  தனிக் கல்லான கோவில்கள்,  அத்துடன் பல கற்களில் கட்டப்பட்ட  கடற்கரை கோவில் என மூன்று வகையானதும் ஒரே இடத்தில் இருக்கிறது. 

ஒரே கல்லில் அமைந்த கற்கோவில்கள்  ( Single rock cut temple) குகைக்கோயில்களின் (Cave Temple)  இரண்டாவது பரிணாமாகும்.

 மூன்றாவது பரிணாமமே  கடற்கரை கோவில்

 

அந்த விடயத்தில் உயிரியல் பரிணாமத்தின் சுரங்கமாக   சார்ள்ஸ் டார்வின்(Charles Darwin)   கண்ட கலபிகாஸ்  தீவு (GALAPAGOS  ISLANDS) க்கு இணையானது  – திராவிடக் கட்டிடக்கலைக்கு இந்த மகாபலிபுரம் .

 

பஞ்சரதங்கள் எனச் சொல்லப்படும் மகாபலிபுரத்தின் முக்கியமான   இடங்களை முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக ஒரு மதிய நேரத்தில் காட்டுத் தீயாகக் கொழுத்தும் வெயிலில் பார்த்தபோது,  கோவில் கூட்டத்தில் பஞ்சாமிர்தத்திற்கு அடிபடுபவனாகப் பலரால் தள்ளப்பட்டுப் பார்த்தேன். பார்க்கும்போது எதை ஏன் பார்க்கிறோம் என்ற தெளிவு வேண்டும். அத்துடன் அதைக் கிரகிக்கும் மன நிலைவேண்டும். நமது  12 வயதுக்கு முன்னர் எத்தனை அழகிய பெண்களைப் பார்த்தோம்.  ஆனால்,  யாராவது மனதில் நிற்கிறார்களா? ரீன் ஏஜ் வயதாகிய பின்னர்  நிழல்கள்,  சுவடுகள்,  என அவர்கள் விட்டுச் சென்ற சிறு பொருட்கள் மனதில் எவ்வளவு ஆழமாகப் பதிகிறது!

 

80களில்  ஒரு வித அகதி வாழ்வு- அக்காலத்தில் எதைப் பார்த்தேன் எதைப்பார்க்கவில்லை என்று புரியாதவனாக,  பிச்சைக்காரன் பட்சணக் கடையைப் பார்த்தது போன்ற நினைவே  பல காலமாக மனதிலிருந்தது. பிற்காலத்தில் இந்தியா சென்றபோது தமிழகம் தவிர்ந்த இடங்களை பார்ப்போம் என்ற ஒரு எண்ணம் இருந்ததை இங்கு  சொல்லவேண்டும்.

இம்முறை வயது,  அறிவு கொஞ்சம் இருந்த நிலையில் திட்டமிட்டபடியால் அப்படியான கூட்டமோ  தள்ளலோ இல்லாது காலையில் சென்று பார்த்தேன்.

கோவில்கள் என்றே அனுமதிச்சீட்டு வாங்கினேன். அதில் ரதங்கள் என்ற சொல்லைப் பாவிக்காது,  தமிழில் கோவில்கள்  – ஐந்து கோவில்கள் என எழுதியிருந்தார்கள். ஆரம்பத்தில் இவை கோவில்களாக மக்களால் வணங்கப்பட்டிருக்கலாம் .   ஆனால்,  இவை தற்போது  நாம் பார்க்கும்  கோவில்களுக்கு முந்திய அமைப்புகள். மனித மூதாதையரில் ஒருவனாகிய  நியண்ட்டதாலை (Neanderthal) தற்போதைய நவீன மனிதனாகப் பார்க்கமுடியாது  அல்லவா? ஆரம்ப மாதிரிகள் எனச் சொல்லலாம்.

இந்த ஐந்து ரதங்களும் நிலத்திலுள்ள தெற்கு வடக்காகச் செல்லும் ஒரே கருங்கல் பாறையில்  செதுக்கப்பட்டவை

ஆரம்பத்தில் இருப்பது திரௌபதிக்கான ரதம்.  உள்ளே துர்க்கை வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.   அது துர்க்கைக்கானது.  அங்கு ஆண் தெய்வங்கள் முழங்காலிலிருந்தார்கள்.  அம்மா ஜெயலலிதா தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்த   காலக்காட்சிகள் என் மனக்கண்ணில் அந்தக் காலை நேரத்திலும்  வந்துபோகத் தவறவில்லை.   துர்க்கையின் பக்கத்தில் சசிகலாபோல்  தெய்வ கணங்கள் உள்ளார். அத்துடன் சிங்கத்தின் வடிவம் சிலையாகவுள்ளது. இந்த ரதத்தின் மேல் விமானம் தமிழ்நாட்டில்  பார்க்கப்படும் ஓலைகுடிசையின் சாதாரணமான வடிவமாகத் தெரிந்தது.

ரதங்களை நான் விவரிக்கத் தேவையில்லை.  அவை பார்க்கவேண்டியவை.

திரௌபதிக்கான ரதம் அடுத்து அர்ச்சுனனுக்கான ரதம்.   அது  சிவனுக்குரியது

 

நடுவே பீமனுக்கான ரதம் மகாவிஷ்ணுக்கானது.

 

தர்மனது ரதம் அர்த்தநாரீஸ்வரருக்குரியது.

 

இறுதியான நகுலன் – சாகாதேவர்களது  ரதங்கள் இந்திரனுக்கானதாகவும் உள்ளது.  அங்கு வெளியே யானையுள்ளது.

 

இங்கே திராவிட சிற்பக்கலையின் கச்சாப் பொருளாக இருந்தவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட புராண இதிகாசங்களே .  சிற்பிகளும் சரி  அரசர்கள்,  கொத்தனார்கள்  எனச் சகலரும் அக்காலத்தில் சமஸ்கிருதத்தில் தேர்ந்திருக்கிறார்கள்.  இதையேதான் நான் சென்ற கம்போடியா ,  தாய்லாந்து போன்ற நாடுகளில் பார்த்தேன். இக்காலம்போல் அரசியல் இருந்திருந்தால் கண்ணகி,  மாதவி,  கோவலனுக்கு மட்டுமே  ரதங்கள் இருக்கும். எவ்வளவு மொழிகள் நமக்குத் தெரிகிறதோ  அந்தளவு எமது மனம் விரிவடையும் என்ற அரசியல் கருத்தையும்  இங்கே விட்டுச் செல்கிறேன்.

இந்த ரதங்கள் கோவிலாக்கப்படவில்லை.  ஆனால்,  இங்குள்ள தர்மனது அர்ச்சுனனது  ரதங்கள் ஆறு மூலை கொண்ட விமான  அமைப்பாக அமைந்து மேலிருந்து கீழ்நோக்கிச்  செல்லும் பிரமிட் வகையானவை. இவையே  தமிழ் நாட்டிலுள்ள கோவில்களுக்கு ஆரம்ப  மாதிரி  வடிவத்தைக் கொடுத்தவை..

இங்கே எனது பார்வை மத நீக்கம் செய்யப்பட்டது,  சிற்பம் ,  கட்டிடக்கலை மட்டுமே சார்ந்தது. அக்காலத்தில்  அரச அரண்மனைக்கு அடுத்ததாகக் கட்டிடக்கலையைப் பார்க்க வேண்டுமானால் செல்ல வேண்டியவை கோவில்களே. இது மேல் நாட்டுக்கும் பொருந்தும். அங்கு கட்டிடக்கலையைப்  பற்றி அறிய விரும்பினால் தேவாலயங்கள் மட்டுமே இருக்கின்றன.   மேலும் வேற்றரசன் படையெடுத்து வரும்போது அரண்மனைகள் உடைக்கப்படும். ( புலிகேசியின் மகன் படையெடுத்து வந்தபோது காஞ்சி அரண்மனை உடைக்கப்பட்டிருக்கலாம்.  யார் கண்டது?)   

 

தற்கால கோவில்களின் அமைப்பிற்கு  வடிவம் கொடுத்ததுடன் திராவிட சிற்பக்கலை என்ற பிரமிட் வடிவத்தை நமக்களித்தது இந்த பல்லவ சிற்பிகளே. ஆனால்,  என்ன  ஐரோப்பாவில் என்றால்  செதுக்கிய  சிற்பிகளது பெயர் பொறிக்கப்பட்டிருக்கும்.  ஆனால் இங்கு எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுபோல் நரசிம்ம பல்லவனுக்குக் கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள் அந்த சிற்பிகளென்ற  சிந்தனையுடன்,  ஒரு மணி நேரமாக நான் மட்டும் நின்று அந்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டாவது நாளும் சென்று பார்த்தேன்.

 

இரண்டு தடவை எம்ஜிஆர் மாமல்லனாக  வேடமிட்டுள்ளார் : ஒன்று கலங்கரை விளக்கம் என்ற படத்தில் சிவகாமி சிவகாமி என்ற பாடல் காட்சியில், சிவகாமியின் சபதம் நாவலில், மாமல்லன் மீது சிவகாமியின் காதல் நிறைவேறாததால்,  சரோஜாதேவி தன்னை சிவகாமி என்று  நினைத்தபடி மகாபலிபுரம் லைட் கவுசில் ஏறி,  அங்கிருந்து  குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தபோது,  தற்செயலாக அங்கே வந்த   எம்ஜிஆர், சரோஜாதேவியைக்   காப்பாற்றத் தன்னை மாமல்லனாக பாடுகிறார். சரோஜாதேவி கீழே இறங்கி வருகிறார்

 

தற்போதைய மகாபலிபுரத்தில் லைட்கவுஸ் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. ஆனால்,  பல்லவர் காலத்தில்  குகை மேலுள்ள கோவிலொன்றில் நெருப்பு எரிக்கப்பட்டு கடலில் செல்லும் மாலுமிகளுக்கு வழிகாட்டியாக இருந்தது. புராதன காலத்திலிருந்தே மாமல்லபுரம் துறைமுக நகரமானதால் இதையே இந்தியாவில் முதல் கலங்கரை விளக்கம் என்கிறார்கள்.

 

நான் சென்ற நாட்கள் சித்திரை வருடப் பிறப்பு அந்த நேரத்தில் தமிழர்கள் எவருமில்லை . வந்தவர்களோடு பேசியபோது அவர்கள் எல்லோரும் தெலுங்கு,  கர்நாடகா  மாநிலங்களைச்  சேரந்தவரகள். பல இடங்களில் ஏறுவதற்கு  இளைஞர்கள் எனது  கைபிடித்து உதவினார்கள்.

 

மாமல்லபுரத்தில் நின்றபோது நினைவுக்கு வந்த மற்றைய திரைப்படம்  காஞ்சித்தலைவன். கலைஞர் கருணாநிதியின் வசனத்துடன் அவரது குடும்ப தயாரிப்பாக,  திராவிட முன்னேற்றக்கழக ஆதரவுக் கலைஞர்கள் நடித்த படம். எஸ். எஸ்.  ராஜேந்திரன் குறிப்பாக பேசிய அடுக்கு வசனங்கள் சில வந்து திராவிட  அரசியலை நினைவூட்டியபோதிலும் 1963 இல் வந்த  அந்த கருப்பு வெள்ளைப் படத்தைச் சலிக்காது பார்க்க முடிந்தது.

வழமையான எம்ஜி ராமச்சந்திரனது படத்தில் உள்ள ஃபோர்மியூலா அற்று,  சரித்திரத்தை  மாத்திரம்  காண்பித்த திரைப்படம் . கதையில்  மாமல்லன்,  பானுமதியான  சோழராணியை மணப்பான் என்பதை இறுதிவரையும் சஸ்பென்சாக வைத்து கடைசியில் இல்லை என்பதுபோல் காண்பித்து  மீண்டும் திருமணத்தில் முடியும்  அழகான பைனரி  புளட்( Binary plot ) வைக்கப்பட்டது. அத்துடன் நம்பக்கூடிய  சாதாரண உணர்வுகள் கொண்டு . தர்க்கரீதியாகப் பேசும்  மனிதனாக மாமல்லன் பாத்திரம்  காட்டப்படுவதும் சிறப்பாகத் தெரிகிறது.

 

எனக்குப் பிடித்த விடயம் மாமல்லபுரத்தில் பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது காஞ்சிபுரக் கோவில்கள் பின்னணியில் தெரிகிறது.

 

எம் ஜி ஆர் படங்களை,  பாட்டுக்கு மட்டும் நான் பார்ப்பவன்.  ஆனால்,   இந்தப் படத்தில் அவரது  நடிப்பும் என்னைக் கவர்ந்தது. அரச பாத்திரங்கள் சிவாஜியிலும் பார்க்க எம்ஜிஆருக்கே பொருந்தும் என்பது எனது அபிப்பிராயம். ஓர் அரசன் மீசை,  கண்கள் உதடுகள் துடிக்க வீரவசனம் பேசுவது  அசிங்கமானது.  ஒலிவாங்கி இல்லாத காலத்தில் நடந்த நாடகத்திற்கு இப்படியான அங்க அசைவுகள் பொருத்தமாக இருக்கும். தற்பொழுது கன்னத்தின் சிறிய தசை அசைவுகளையே படம் பிடிக்கும் கெமராக்களது காலத்தில் அரசன் என்பவன் தற்காலத்து விளாடிமிர் புடின் போன்று கோடையில் விளைந்த வெள்ளரிக் காயாகக் குளிர்மையாக இருக்கவேண்டுமென நான் எதிர்பார்ப்பவன்.

 

அமரர் கல்கியின் சிவகாமியின் சபதத்தால்  சாதாரணமானவர்களுக்கும் மாமல்லனை மட்டுமல்ல,  வாதாபியை வெற்றி கொண்ட வரலாறும்  அங்கிருந்து பரஞ்சோதி என்ற தளபதி , வாதாபி கணபதியைக்  கொண்டு வந்தது என்பது தெரிகிறது  பரஞ்சோதி என்ற தளபதி வாதாபி பிற்காலத்தில் சிறுத்தொண்டரென்ற நாயனாராகி குழந்தையை வெட்டி விருந்தளிக்க முயன்றவர் என்பது பெரியபுராணம் வாயிலாக  நாம் தெரிந்துகொண்டோம் . எனக்குத்  தெரியாத விடயம் வாதாபி வெற்றியின் சின்னமாகக் கட்டப்பட்ட மாமல்லபுரம் பிற்காலத்தில் புலிகேசியின் மகனால் வெல்லப்பட்டது.

 

காஞ்சித்தலைவன் திரைப்படத்தில்,   இலங்கை அரசன் நாடிருந்து மனைவி குழந்தையுடன் இந்தியா வருகிறான். அவனை மாமல்லன் அரவணைத்து அடைக்கலம் கொடுக்கிறான். இது வரலாற்று  உண்மையோ தெரியாது.  ஆனால் , இலங்கை அரசர்கள் இந்தியாவில் அடைக்கலம் பெறுவது சரித்திர நிகழ்வாக நடந்துள்ளது.  கடைசி கண்டி மன்னனை பிரிட்டிஷார் கைது செய்து வேலூருக்குக் கொண்டு சென்றனர் .படத்தைப்  பார்த்தபோது தற்காலத்தில் ஒரு அரசியல்வாதி மோடியிடம் புகலிடம் கேட்டு கடிதம் எழுதியது  நினைவில் வருகிறது.

 இந்தப்  படத்தின் காட்சியில்  வாதாபியினது கொடியைக்,  காலில் மிதிக்கப்படுவதாக கன்னடர்களால் படத்திற்கு எதிராகக் கண்டனம்  எழுப்பப்பட்டது.

 

படம்  பொருளாதார ரீதியில் தோல்வியைக் கொடுத்தாலும்,  எனக்குச் சிறந்த படமாகத் தெரிந்தது. ஒருவிதத்தில் தமிழ் பிரதேசத்தின் முதற் பேரரசனாகவும் நாம் பார்க்கும் கலாச்சாரத்தைத் தொடக்கிய முன்னோடியாகவும் மாமல்லனை நாம் பார்க்க முடியும்.

 

மீண்டும் ஹோட்டல் வந்து உடையை மற்றிவிட்டு,  வெளியே வந்தபோது எனது அறைக்கருகே  ஒரு பெண்,  தொலைப்பேசியில் தெலுங்கில் பேசியபடியிருந்தாள்.  நிமிர்ந்து பார்த்தேன். கண்களால் என்னைக்  கைது செய்தாள்.    எதிரே நின்ற வங்காளிப் பையன் என்னைப் பார்த்துச் சிரித்தான். ஏற்கனவே அவனை  அனுப்பி  பியர் வாங்கினேன்.  அதற்குத் தாராளமாக டிப்ஸ் கொடுத்தேன்.   அப்பொழுது விடயம் புரிந்தது. அவன் எனக்கு  அதிகமாக உபகாரம் செய்ய விரும்புகிறான் என நினைத்து அவசரமாக மறுத்துத் தலையாட்டி விட்டுக் கீழிறங்கினேன். கோடையின் 36 பாகையில்  மதியம் பதினொரு மணிக்கு ஐயிட்டம் தேடும் வயதைக் கடந்து விட்டேன்  என்ற நினைவுடன் கடையொன்றுக்குச் சென்றேன்.

 

காலை உணவாக தேநீர் பின்கட்டிற்கு 40 இந்திய ரூபாய்களே முடிந்தது. பெற்றோல் விலை ஏறியபோதும்  உணவுப் பொருட்களின்  விலை இந்தியாவில் கட்டுப்பாடாக இருப்பது தெரிந்தது

 

அந்த வங்காளத்துப் பையன் மீது  எந்த ஆத்திரமும் வரவில்லை, அனுதாபமே வந்தது.  எனது தாத்தா வாத்தியார் ,  சிறுவயதில்  சொன்ன விடயம் :  வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்குப் பலரும் பல விதமாக நடக்கிறார்கள். அதில் உங்களால் நேர்மையாக  நடக்க முடிந்தால்,  அந்த அதிஸ்டம் மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லையே என்பதே காரணம் . நீ நல்லவன் . மற்றவர்கள் தவறானவர்கள் என்பது அர்த்தமில்லை.

தொடரும்

Series Navigationவிழிப்புகாற்றுவெளி(கவிதைச் சிறப்பிதழ்)ஆனி 2022
author

நடேசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *