ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “

This entry is part 3 of 40 in the series 6 மே 2012

பாராட்ட வேண்டிய விசயம் ஒன்றிருக்கிறது இந்தப் படத்தில்! பண்டி சரோஜ்குமாரின் “ அஸ்தமனம்” படத்திற்குப் பிறகு, இந்தப் படமும் 90 நிமிடம் தான். ஆனால் சினிமாவின் எந்த அத்தியாவசியத்தையும் களைந்து விடவில்லை இதன் இயக்குனர். நான்கு பாட்டுகள், இரண்டு சண்டைகள் எல்லாம் உண்டு இந்த நேரத்திற்குள். சபாஷ்!

சூரியா( தருண் ஷத்திரியா) கட்டணக் கொலையாளி. அதனால் பெரும் பணம். கார், பங்களா என்று வசதியாக வாழ்பவன். கூடுதல் தகுதி, அவன் ஒரு அனாதை. கன்னியாகுமரியில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் ப்ரியா(ஷிக்கா), ஒரு நாள் சூரியா கண்ணில் பட, கண்டதும் காதல். அதனால் அவனது கொலை முயற்சிகள் தள்ளிப்போடப்படுகின்றன. இயற்கையைப் படமெடுக்கும் ப்ரியாவை, பல கோணங்களில் சூரியா படமெடுக்கிறான். நேரிடையாகக் காதலைச் சொல்ல முடியாமல், அந்தப் படங்களை அவளுக்கே அனுப்புகிறான். அவனது வீட்டில், கே.பி. யின் படங்களில் வரும் சரிதாவின் பிரம்மாண்ட புகைப்படங்கள் போல், ப்ரியாவின் படங்கள்! தன்னை அழகாகப் படமெடுக்கும் நபரைக், காணத் துடிக்கிறாள் ப்ரியா. சூரியாவைக் கொலை முயற்சிகளுக்கு அனுப்பும் பாஸின், இன்னொரு தொழில், அரசியல் பிரபலங்களின், அந்தரங்க சரீர இச்சைகளைப், படமெடுத்து, ப்ளாக் மெய்ல் செய்வது. பாதிக்கப்பட்ட ஒரு அமைச்சர், காவல் உயரதிகாரி நந்தகுமாரை பணிக்கிறார் பாஸைக் கண்டுபிடிக்க. அவரால் அந்தப் பணிக்கு நியமிக்கப்படும் அசோக் (தர்ஷன்), சூரியாவால் தவறவிடப்பட்ட, ப்ரியாவின் புகைப்படத்தைப் பார்த்து, அவளைப் பின் தொடர்கிறான். ப்ரியா, அசோக்கை, தான் சந்திக்க விரும்பும் காதலன் என்று எண்ணுவதும், அசோக் மரணத்தால், அவள் சூரியாவைக் காட்டிப் கொடுப்பதும் பின்பாதி. சூரியாவை விடுவிக்க நந்தகுமார் போடும் நிபந்தனை, பாஸின் கூட்டத்தைக் கூண்டோடு ஒழிப்பது. அதுவும் நடந்துவிட, ப்ரியா தான் உண்மையாகச் சந்திக்க விரும்பியது சூரியாவைத்தான் என்பதை உணர்ந்து, அவனோடு சேரும் சுபம்.

நவ யுவதியை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஷிகா, நல்ல நடிகை. இவரால் அமலா பால் திரிந்து போகலாம். தருணுக்கு அப்படியே ராம் சரண் தேஜா முகம். மனவாடுகள் கொண்டாடலாம். தர்ஷனுக்கு அதிக வேலையில்லை என்றாலும், பார்த்தவரையில் சோடையில்லை.

துல்லியமான ஒளிப்பதிவுக்கு தீபு.எஸ். உண்ணியைப் பாராட்டியே ஆகவேண்டும். இத்தனைக்கும் காட்சிகள் எல்லாம் கன்யாகுமரியிலேயே தான். ஆனாலும் வெரைட்டி காட்டி இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னமும் உயரம் தொடுவார். சூரியாவின் வீட்டில் செய்யப்பட்டிருக்கும் லைட்டிங் ஒன்று போதும், அவர் திறமையைப் பறை சாற்ற.

இன்னொரு ஷொட்டு.. இல்லையில்லை கோட்டறையே அறையலாம்.. இசைத்த கணேஷ் ராகவேந்திராவுக்கு.. ஐட்டம் பாட்டில் கூட மெல்லிய கிட்டாரை வாசிக்கும் இவரைத், திரையுலகம் கொண்டாடுமா? பாடல்கள் எல்லாம் காதை வருடுகின்றன. வார்த்தைகள் தெளிவாகக் கேட்கின்றன. இசைஞானியின் குருகுலமோ என்று ஒரு சந்தேகம் கூட வருகிறது. இதயம் கனிந்த வாழ்த்துகள்.

மெலோ டிராமா இல்லை. கொலைகாரன் ஆயிற்றே என்கிற சந்தேகத்தில், காதலை துறக்க முடியாமல், ப்ரியா, சூரியாவைச் சந்திக்கும் கடைசி காட்சியில் வசனம் ஏதும் இல்லை. சூரியாவும் ப்ரியாவும் சந்திக்கும்  பின்நோக்குக் காட்சிகளின் அணிவகுப்பு, ஷிக்காவின் முகம் மறுதலிப்பிலிருந்து இணக்கத்திற்கு மாறும் அழகு! வெல் டன் பெஞ்சமின்.

படம் முடிவில் டைட்டில்கள் போடும்போது சைடில் படப்பிடிப்புக் காட்சிகளைக் காட்டுகிறார்கள். பரட்டைத் தலையும், பத்து நாள் தாடியுமாக, மெலிந்த ஒருவர் காட்சியை விளக்குகிறார். அவர்தான் பெஞ்சமின் பிரபு. ஒன்று புரிகிறது. அந்தப் பரட்டைத்தலைக்குள்ளே சினிமாவின் கிராமர் தெளிவாக உட்கார்ந்திருக்கிறது.

இயக்குனர் சார்! அடுத்த படம் இதைவிட சூப்பரா பண்ணீங்கன்னா, நீங்க பெஞ்சு இல்ல பால்கனி!

#

கொசுறு

விருகம்பாக்கம் அன்னை கருமாரியில், மொத்தம் பதினைந்து பேர் வந்திருந்தார்கள். ஏழு மணி வரையிலும் படம் ஆரம்பிக்காதலால், எல்லோருக்கும் இருட்டு அரங்கில் உட்கார பயம். வெளியே தயங்கி நின்றிருந்தார்கள். கணினி வழியாக டிக்கெட் கொடுப்பதில் உள்ள சங்கடம் காரணமாக, ஒரே நேரத்தில் மூன்று அரங்குகளுக்கும் டிக்கெட் கொடுத்து விட்டார்கள். அதனால் 90 நிமிடப் படத்திற்கு 30 நிமிடம் காத்திருக்க வேண்டிய கட்டாயம்.

வடபழனியிலிருந்து பயணப்படும் ஷேர் ஆட்டோக்களில் ஆறு நபர்களுக்கு மேல் ஏற்றுவதில்லை. ( கிண்டி டு போரூர் மார்கத்தில் இதே வண்டிகளில் பத்து பேரை அடைத்துக் கொண்டு போவார்கள்.) முக்கியமான குறிப்பு: ஷேர் ஆட்டோக்களில், இடம் இருந்தாலும், கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது. வெளியிலிருந்து பார்த்தால் இடம் இல்லாதது போல் தெரியுமாம். ஓட்டுனர் தந்த அனுபவத் தகவல்.

#

Series Navigationசயந்தனின் ‘ஆறாவடு’குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *