தொலைந்துபோன கோடை

2
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 41 in the series 13 மே 2012

மேமாதம் முதல் வாரமோ இரண்டாம் வாரமோ பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடுவார்கள். ” மெஷினெல்லாம் ஓவர் ஆயிலிங்க் பண்ணனுமில்ல, அதுக்காகத்தான் இந்த ஒருவார லீவு ” என்றான் என் நண்பன் ராஜு. எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. அப்பாவிடம் ‘ ஒவர் ஆயிலிங்க் ‘ என்றால் என்ன என்று கேட்டபோது என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. ” ம்! உன் தலை ” என்றார். பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்திக்குக் காலையில் நான் தின்றுகொண்டிருந்த கடலையைக் கொடுக்காததால் அன்று சாயந்திரம் நடந்து கொண்டிருந்த கில்லி தாண்டு என்ற சர்வதேச விளையாட்டில் சேர்த்துக் கொள்ளப்படாமல் ரிசர்வில் நிறுத்தி வைக்கப்பட்டேன். அப்போது மைதானத்தின் ” ஸைட்லைன்சில் ” என்னுடன் நின்றுகொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் அண்ணனிடம், ( ஒர்க் ஷாபில் சார்ஜ்மேனாக இருந்தவர் ) ” ஓவர் ஆயிலிங்க்னா என்னண்ணே ? ” என்று கேட்டபோதுதான் அது ஓவராயிலிங்க் அல்ல ஓவர்ஹாலிங் என்றும், மெஷின்களையெல்லாம் பழுதுபார்த்து மீண்டும் நல்ல நிலையில் வேலை செய்ய அவற்றைத் தயார்செய்வதற்குப் பெயர்தான் அது என்றும் புரிந்தது.

ஒர்க் ஷாப்பில் அந்த ஒரு வாரத்தில் மெஷின்களெல்லாம் பழுது பார்க்கப்படுகிறதோ என்னவோ தெரியாது. ஆனால் பொன்மலையில் வசிக்கும் பாதி குடும்பங்கள் தங்களைப் பழுது பார்த்துக்கொள்ளவும் குடும்பத் தலைவர்களின் பர்ஸை பழுக்க வைக்கவும் சொந்த ஊர்களுக்கோ அல்லது எங்காவது சுற்றுலாவிற்கோ கிளம்பிவிடும். நானும் என் தம்பியும் மற்றும் வெளி ஊர்களுக்குச் செல்லாத துரதிர்ஷ்ட நண்பர்களும் காலையிலிருந்து ராத்திரி வரை பயணப் படுபவர்களை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம். பயணப் படுபவர்களின் முகங்களிலெல்லாம் சந்தோஷம் அப்பியிருக்க புது உடைகளிலோ அல்லது தீபாவளிக்குத் தைத்த ட்ரெஸ்களிலோ அவர்களின் நடையே மாறி இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் பஸ்ஸை எதிர் நோக்கிக் காத்திருக்கும் நேரத்தில் குடும்பத்தின் ஆண்கள் மட்டும் குடும்பத்தைவிட்டுத் தள்ளிப் போய்த் தெரிந்தவர்களோடு நாயர் கடைப் பக்கம் நகர்ந்து பீடியோ அல்லது சிகரெட்டோ அவர்கள் வசதிக்கேற்ப ஊதிக்கொண்டிருப்பார்கள். பஸ் வந்தபின்னர் நெருக்கி அடித்து ஏறிக்கொண்ட பின்னால் மாத்திரம் அல்லாது பஸ் வரும்வரைக்கும் காத்திருந்த நேரத்திலும்கூட ஊருக்குச் செல்லும் எங்கள் வகுப்புத் தோழர்கள் ஊருக்கு எங்கும் செல்லாது இருக்கும் எங்களுக்குத் தொடர்ந்து டாட்டா காட்டி வெறுப்பேற்றிக் கொண்டிருப்பார்கள். பஸ் வந்து அவர்கள் எல்லோரையும் அள்ளிக்கொண்டு போக, கொஞ்ச நேரம் பஸ் ஸ்டாண்டில் நிலவும் அமைதி மாத்திரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் தருணமாக இருக்கும்.

மே மாத விடுமுறையில் நான் ஐந்தாம் வகுப்பு முடிக்கும்வரை எங்கும் வெளி ஊர்களுக்குச் சென்றதே கிடையாது. நானும் என் தம்பியும் அழுது அடம்பிடித்தால் எங்களைச் சமாதானப்படுத்த ‘ நாளை போவார் ‘ மாதிரி அப்பாவும் அடுத்த வருடம் நிச்சயம் போகலாம் என்ற வாக்குறுதியைத் தவறாமல் கொடுப்பார். அப்படி வாக்குக் கொடுத்த அன்று மனதிரங்கி எங்களைத் திருச்சி ரயில்வே ஜங்க்ஷன் பின்புறம் இருக்கும் கல்லுக்குழி ஆஞ்சனேயர் கோவிலுக்கு நடத்தியே அழைத்துச் செல்வார். அதுமட்டும்தான் எங்களின் ‘ வகேஷன் டூர் ‘ ஆக இருக்கும். ஆஞ்சனேயர் கோவிலின் வாசலில் எங்களுக்குக் காணக்கிடைக்கும் பச்சை நிற ட்யூப் லைட்டும் அங்கே எங்களுக்குக் கிடைக்கும் சின்ன சின்ன வடையும்தான் வெளியூர் போகாத ஏமாற்றத்தைக் கொஞ்சம் தணிக்கும். அந்த வருடம் என் ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் இருந்த ” வாண்டர் தர்ஸ்ட் ” என்ற கவிதையை பி. ஆர். எஸ். என்றழைக்கப்பட்ட பி. ஆர். சீனிவாசன் சார் சொல்லிக்கொடுத்த விதத்தில் எனக்கும் ஒரு ஜோல்னாப் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு இந்நாளைய எஸ். ராமகிருஷ்ணன் போல் தேசாந்திரியாகக் கிளம்பிவிட ஒரு உத்வேகம் வந்திருந்தது. அந்த உத்வேகத்தைப் பொன்மலைவாழ் மக்களின் மேமாதத்துக் கோடையின் மன அரிப்பான “ எக்ஸோடஸ் ” என்று எண்ணும் அளவிற்கான ஊர்சுற்றக் கிளம்பும் உற்சாகம் மேலும் உசுப்பிவிட்டிருந்தது. என் மனதில் கனன்று கொண்டிருந்த சுற்றுலா கனவு என்று நனவாகும் என்று ஏக்கம் சூல்சொல்கொண்டிருந்த அந்த வருடத்து மேமாதத்தில் உண்மையாகவே நாங்களும் விடுமுறையில் திருப்பதிக்குப் போய்வரத் தயாராகிவிட்டோம். ஊருக்குக் கிளம்பும் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே நாங்களெல்லாம் உற்சாகமாக ரெடியாகிக் கொண்டிருந்தாலும், அப்பா மட்டும் அவ்வளவு சுரத்தாக இல்லை. ஊருக்குக் கிளம்பும் முதல் நாள் இரவு எங்கேயோ போய்விட்டு மிகவும் லேட்டாக வந்த அப்பா அம்மாவிடம், ” நூறு ரூபாதான் கெடச்சுது. அதுவும் ரெண்டு வட்டிக்கு ” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.

எட்டு பேருக்கு ட்ரெஸ்கள், சமைத்துச் சாப்பிடப் பொருட்கள் என நாலு நாட்கள் பயணத்திற்கு என்று நாங்கள் கிளம்பியபோது எடுத்துச் சென்ற லக்கேஜைப் பார்த்து , என் நண்பன் ராஜு, “என்னடா! குடிமாத்திப் போறீங்களா? ” எனக் கேட்டது என் அண்ணனுக்குப் பிடிக்கவில்லை. ” இனிமேல் அவனோடு சேராதே ” என்று முகம் சிவந்து எனக்குக் கட்டளை இட்டதிலிருந்தே எனக்கு அது புரிந்தது. திருச்சி ஜங்க்ஷனுக்குப் போய் அங்கு காலை பதினோரு மணிக்குக் கிளம்பும் திருப்பதி எக்ஸ்ப்ரஸ்ஸில் இடம் பிடித்து அந்த ரயில் கிளம்பும்வரை எங்கள் பயணம் உத்தரவாதம் இல்லாததுபோல்தான் இருந்தது. நாங்கள் பொன்மலை மாரியம்மன் கோவில் பஸ்ஸ்டாண்டில் பேருந்து பிடித்துக் கிளம்பவே பத்து மணியாகிவிட அப்பா கடைசியாக ஒருமுறை மாரியம்மனிடம் பஸ் லேட்டாகப் போய் ட்ரெய்னைப் பிடிக்கமுடியாமல் போனாலோ அல்லது ட்ரெய்னே ஏதோ காரணத்தால் கேன்ஸலாகி விட்டாலோ ஒரு டஜன் சிதறுகாய் போடுவதாக வாய்விட்டு மெதுவாக வேண்டிக்கொண்டிருந்தது எனக்கு மட்டும் இன்றி பஸ்ஸில் பக்கத்திலிருந்த பத்து பேருக்கும் நன்றாகக் கேட்டது. ஆனால், பஸ்ஸிற்குள்ளும் வெளியிலும் நிலவிக்கொண்டிருந்த கூச்சலில் அப்பாவின் ப்ரார்த்தனை மாரியம்மனிடம் போய்ச்சேரவில்லை. அப்பாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக நாங்கள் ஏறிய டி.வி.எஸ் பஸ்ஸின் அசகாய சூர டிரைவர் அடுத்த பத்தாவது நிமிஷத்தில் எங்களை திருச்சி ஜங்க்ஷனில் இறக்கிவிட என் அண்னன் இரண்டுபேரும் தேர்ந்த ‘ டெகொத்தலான் ‘ வீரர்கள் போல ட்ரெய்ன் வந்து நிற்கும் முன்பே தண்ணீர் வண்டிகளையெல்லாம் தாண்டிக் குதித்து இறங்குபவர்களை எல்லாம் தள்ளிவிட்டுக் கொஞ்சம் கும்பல் குறைவான கோச்சிற்குள் நுழைந்து எங்கள் எல்லோருக்கும் இரண்டு ‘ பேக்களில் ‘ இடம் போட்டதைப் பார்த்து ரயில்வே போர்ட்டர்களே அசந்து போனார்கள். நாங்கள் எல்லாம் லக்கேஜெல்லாவற்றையும் வைத்தபிறகு மேலே கீழே என எல்லா இடத்திலும் ஒடுங்கிக்கொண்டபின் அம்மா பெட்டி படுக்கை ஆட்கள் என நம்பரைச் சரிபார்க்கவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. ஒருவழியாக எங்கள் பயணம் தொடங்கிவிட்டது.

ரயில் கிளம்பிய ஐந்தாவது நிமிடத்தில் , எதுவும் அவர் வசம் இல்லாதுபோனதில் களைத்துப்போய், தலையைத் துண்டால் இறுகக்கட்டிகொண்டு கண்ணைமூடித் தூங்க ஆரம்பித்த அப்பாவைப் பார்க்கப் பாவமாய்த்தான் இருந்தது. தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் என பசுமைப் பகுதிகளில் ரயில் விரைந்துகொண்டிருக்க எங்கள் உடம்புகளில் அழுக்கும் ஸ்டீம் எஞ்சின் உபயத்தில் கருமையும் ஏறிக்கொண்டிருந்தது. என் அண்ணன்கள் தாங்கள் பெரியவர்கள்தான் என்பதைக் காண்பித்துக்கொள்ள ரயில் நிற்கும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறங்கி ஏறிக்கொண்டிருந்தார்கள். ஆனால், நானும் அவர்களோடு இறங்கமுற்பட்ட சமயத்தில் ” போடா உள்ளே ” என்று தள்ளிவிட்டதில் நான் எதிர்த்தாற்போலுள்ள கதவில் போய் முட்டிக்கொள்ள நேர்ந்தது. ஜன்னல் ஓர சீட்டைச் சண்டை போட்டு வாங்கியிருந்த என் தம்பி நான் அவ்வாறு விழுந்ததைப் பார்த்து சிரித்துவிட்டுக் கண்களில் கரிவிழக் கண்களைக் கசக்கிக்கொண்டே தூங்கிவிட்டான். நான் கீழே தள்ளிவிடப்பட்டதை மறந்து, ரயில் நிற்காமல் புறக்கணித்துச் சென்ற ஸ்டேஷன்களையும், யாருமற்ற வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகளையும் மாறி மாறி ரயில் உதைத்துச் சென்றுகொண்டிருந்த தாளகதியையும் பார்த்தும் கேட்டும் கொண்டு எனக்குப் பிடித்த பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தேன். அந்த ரயில் பிரயாணத்தின் சில மணித் துளிகளிலேயே என் அம்மாவுடன் ஸ்னேகம் கொண்டுவிட்ட சக பயணியான ஒரு காரைக்குடி ஆச்சி நான் ஸ்வாரஸ்யமாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே பாடிக்கொண்டிருந்ததைக் கவனிப்பதை எதேச்சையாகப் பார்த்தபோது என்னைப் பார்த்து அவள் ரொம்ப அன்புடன் சிரித்தது எனக்கு வெட்கத்தைக் கொடுத்தது. நான் நாணிக்கோணிக்கொண்டு முகத்தை மூடிக்கொள்ள ” நீ என்கூட வந்துடறயாப்பூ? ” என்று அந்த ஆச்சி கேட்டபோது, ” போறியாடா! பெரிய வீடு, நெறைய காசு பணம் எல்லாம் இருக்கு ” என்று அம்மா சிபாரிசு செய்தபோது அந்த ஆச்சி என்னைக் கட்டிக்கொண்டார்கள். நாலைந்து பற்கள் விடுபட்டுப் போயிருந்த வாயில் எதையோ மென்றுகொண்டிருந்த ஆச்சியின் தாராள உடம்பு அதிக அளவில் படுமாறு அவள் என்னைக் கட்டிக்கொண்டபோது எனக்குள் நடந்த ரசாயன மாறுதல் நான் பெரியவனாகிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்த்தியது. திருப்பதி வரும்வரை எனக்கு ஏதாவது தின்பதற்குக் கொடுத்துக்கொண்டே இருந்தாலும், அம்மா என்னை அவர்களிடம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் நான் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காதவற்றை எல்லாம் வேண்டாம் என்று திருப்பிக்கொடுத்து விட்டேன்.

திருப்பதியில் இறங்கின உடனே அந்த ஆச்சியை அழைத்துச் செல்ல யாரோ வந்தார்கள். அந்த ஆச்சி கடைசியாக எனக்கு முத்தம் கொடுத்தபோது நான் நெளிந்ததைக் கண்ட அம்மா கொஞ்சம் அவசரமாக என்னை இழுத்துக்கொண்டுவிட்டாள். சைக்கிள் ரிக் ஷாவின் பின்புறமிருந்த சின்ன ஓட்டை வழியாக அந்த ஆச்சி என்னை பார்த்துக்கொண்டேயிருக்க அந்த வண்டி ஸ்டேஷன் வாசலைவிட்டு முன்னால் செல்லச் செல்ல, வார்த்தைக்குள் அகப்படாத தெளிவற்ற சோக இசைச் சிதறல் இதயத்துள் இறங்கியது இப்போதுகூட நினைக்கும்போது அதன் கூரிய முனைகளால் என்னைக் காயப்படுத்திக்கொண்டுதானிருக்கிறது.

நாங்கள் மீண்டும் பஸ்பிடித்து மலையின் வழி நெடுக என் சகோதரிகள் விட்டு விட்டு வாந்தியெடுக்க, பாதி தூரம் தாண்டும்போதே என் காதுகள் அடைத்துக்கொண்டுவிட்டன. ஆஞ்சனேயர் கருடன் சங்கு சக்கரம் எல்லாம் எங்கள் பின்னே ஒன்றொன்றாய் நின்றுவிட வளைந்து வளைந்து நாங்கள் சென்ற பஸ் மலையைக் கோதும் சுண்டுவிரலாக மேலேறி ஒரு மணி நேரத்தில் எங்களை ஏழுமலையானிடம் கொண்டு சேர்த்தது. பஸ்ஸிலிருந்து இறங்கின உடனேயே அம்மா களைப்பெல்லாம் பறந்து போய்விட பரவசமாகி ஒரு துளி மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு ” சீனிவாசா! வேங்கடேசா ” என்று பக்தியோடு கூப்பிட்டது நிச்சயம் அந்த ஏழுமலையானின் காதுகளில் கேட்டிருக்க வேண்டும். பின்னர், ரூம் பிடித்து சமைத்து சாப்பிட்டு சாமிபார்க்க ஒரு நாள் ஆயிற்று எங்களுக்கு . மறு நாள் சாப்பிட்டவுடன் என் அப்பா, ” போய் வெத்தலை சீவல் வாங்கிண்டு வாடா ” என்று என்னை அனுப்பியதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. நானும் ஏதோ பொன்மலையில் எங்கள் வீட்டருகில் கண் பார்வையற்ற பெருமாள் வைத்திருந்த கடைக்குப் போவதுபோல வெற்றிலை வாங்கக் கிளம்பிவிட்டேன். கடையைத் தேடி வெற்றிலை சீவல் வாங்கிக்கொண்டு திரும்பிவர வழிதெரியாமல் எங்கேயோ அலைந்து நான் கொஞ்ச நேரம் காணாமல் போயிருந்ததுதான் இந்தப் பயணத்தின் ஹைலைட்!

நான் அப்பாவின் ஆணையை சிரமேற்கொண்டு சென்று ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஆகியும் வெற்றிலையுடன் வராதது அப்பாவுக்கு ஏனோ உறைத்திருக்கவே இல்லை. அம்மா அவ்வப்போது எடுக்கும் அட்டண்டன்ஸில் ஒரு பொழுதில் நான் இல்லாதது கண்டு அம்மா முதலில் கொஞ்சமாகவும் பின் நான் காணாமல் போய்விட்டேன் என்பது உத்தரவாதமாகிவிட பரபரப்பாகி அதிக அளவிலும் அழுது அரற்றியிருக்கிறாள். ” கடங்காரீ! அவ முழியே சரியில்லாமத்தான் இருந்தது ! அவ கண்ணுபட்டுதான் எம்புள்ள காணாமப் போயிட்டான்! ” என்று அந்த ரயில் ஸ்னேகிதமான ஆச்சியைத் திட்டித்தீர்த்திருக்கிறாள். அப்பா அப்போதும் வெற்றிலை சீவல் வாங்க என்னை அனுப்பியதைச் சொல்லவே இல்லை. நான் ரூமைத்தேடி ரொம்பதூரம் தேவையற்ற இடங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடப் பாடம் படிப்பதுபோலவே திரிந்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் கொஞ்ச நேரம் அழுதுவிட்டு ஓரிடத்தில் உட்கார்ந்து, அந்த ஆச்சி யாருக்கும் தெரியாமல் என்னிடம் கொடுத்துவிட்டுப் போயிருந்த நாலணாவிற்கு கடலை மிட்டாய், பர்பி என சிலவற்றை வாங்கித் தின்றுவிட்டு சுவர்களில் ஒட்டியிருந்த சினிமாப் போஸ்டர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என் இரண்டு அண்ணன்களும் திருப்பதியின் எல்லா விடுதிகளிலும், தெருக்களிலும் தேடி அலைந்து களைத்துப் போய் கட்டக் கடைசியாக ஒருமுறை கோவில் வாசல் பக்கம் பார்த்துவிடலாம், ஒருக்கால் அங்கே நான் ” பப்பரக்கே ” என்று நின்றுகொண்டிருக்கிறேனா எனப் பார்ப்பதற்காக வந்தபோதுதான், நான் என். டி. ராமராவ் பஞ்சு மிட்டாய்க் கலரில் போட்டுக்கொண்டிருந்த ட்ரெஸ்ஸில் லயித்து, பெரியவன் ஆனபின் அந்தக் கலரில் ஒரு நாலைந்து ட்ரெஸ்கள் வாங்கிவிட ஏழுமலையான் அருள் புரியவேண்டும் என வேண்டிக்கொண்டிருந்தேன். நான் அப்படி வேண்டிக்கொண்டிருந்த அந்த இனிய வேளையில்தான் என் அண்ணன்கள் என்னைக் கண்டுபிடித்தார்கள். அவ்வளவு நேரம் அலைந்து திரிந்திருந்த எரிச்சலில் என்னைப் பார்த்தவுடன் என் பெரியண்னன் தன் வசம் இழந்து என்னை ஓங்கி முதுகில் அடித்ததை என். டி. ராமராவில் மூழ்கியிருந்த நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அசந்தர்ப்பமாக விழுந்த அந்த அடிக்குப் பின் நான் போட்ட அலறலில் திருப்பதி வெங்கடாஜலபதியே கலங்கிப்போயிருக்கவேண்டும்.

அப்போது அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்த போலீஸ்காரர்கள் நான் அழுவதைக் கண்டு என் அண்ணனைக் குழந்தை பிடிப்பவன் என்று எண்ணி அவனைப் பிடித்துக் கைகளைக் கட்டி, சுந்தரத் தெலுங்கினில் சொன்னது ” நடடா ஸ்டேஷனுக்கு ” என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். நான் பேந்தப்பேந்த அந்தப் போலிஸ்காரர்களையே பார்த்து முழித்துக்கொண்டிருந்ததை என் அண்னன் நான் அவனிடம் அடிவாங்கியதற்குப் பழிவாங்குகிறேனோ என்ற சந்தேகத்தில் அதிக பயத்தில் வெளிறிப்போன மூஞ்சியுடன் என்னைப் பார்த்து, ” சொல்லுடா! நான் உன் அண்ணன்னு சொல்லுடா ” என்று சினிமா வசனம் போலச் சத்தமாகச் சொன்னதை நான் மேலும் மிரட்டப்படுகிறேன் என்று நினைத்து போலிஸ்காரர்கள் அவனை அடிக்கக் கை ஓங்கியபோது, அதுவரை அந்தப் போலீஸ்காரர்களின் வித்தியாசமான தொப்பியைப் பார்த்து நம்மூர் போலீஸ் தொப்பிபோல் இல்லாதது கண்டு வியந்திருந்த நான் நிலைமையின் விபரீதம் உணர்ந்து ” அண்ணா ” என்று அவனைக் கட்டிக்கொண்டேன். அதே சமயத்தில் ஹிந்தி பட போலீஸ் கடைசிக் காட்சியில் வருவதுபோல என் அப்பாவும் அங்கு வர, கடப்பாவில் கொஞ்ச நாள் வேலையிலிருந்த அப்பாவின் தடுமாற்றத் தெலுங்கினால் எல்லோரும் பத்திரமாக மீட்கப் பட்டோம். வரும் வழியில் நான் வாங்கி வைத்திருந்த கசங்கிப்போன காகிதத்தில் இருந்த காய்ந்துபோன வெற்றிலையையும் நொறுங்கிப்போன சீவலையும் அப்பாவிடம் நீட்ட , அப்பாவோ ” உஷ்ஷ் ! ” என்று உதட்டின் மேல் கைவைத்து யாருக்கும் இது தெரியக்கூடாது என்பதுபோல சைகை காட்டினார். நான் ரூமிற்கு வந்ததும் அழுது வீங்கியிருந்த முகத்தோடு இருந்த அம்மா என்னைக் கட்டிக்கொண்டாள். இந்த நிகழ்ச்சிக்குப் பின், என் பெரியண்ணன் நான் எப்போதாவது அவனுக்குப் பிடிக்காததைச் செய்யும்போதெல்லாம், ” நீ திருப்பதியில் காணாப்போயிருந்தபோது, உன்னைக் கண்டுபிடிச்சிருக்கவே கூடாது ” என்று சொல்லிக்கொண்டே இருப்பான். ஆனால் நான் பதிலுக்கு, ” நானும் உன்னை என் அண்ணன் என்று அந்தப் போலீஸ்காரர்களிடம் நீ அவர்களிடம் அடிவாங்க இருந்தபோது சொல்லியே இருக்கக்கூடாது ” என்று ஒருமுறை கூட பதிலுக்குச் சொன்னதில்லை.

இது நடந்த அடுத்த நாள் காலை, நாங்கள் திருப்பதியில் இருந்து கிளம்பி இருக்கவேண்டும். ஆனால், நான் காணாமல் போய்க் கிடைத்ததற்கு வெங்கடாசலபதிக்கு வேண்டுதலாய் எனக்கு மொட்டை அடிக்கவேண்டும் என்று அம்மா எங்கள் டூர் ப்ரோக்ராமின் அஜெண்டாவில் இல்லாத ஒன்றைச் சொன்னபோது, ” எல்லாம் அடுத்த தடவை பார்த்துக்கலாம் ” என்று அப்பா சொன்னதை நான் முதன் முதலாக ஆதரித்தேன். ஆனாலும் அம்மாவின் பிடிவாதம்தான் ஜெயித்தபோது, நான் காணாமலே போயிருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு நான் கதறக் கதற எனக்கு மொட்டை போட்டுவிட்டார்கள். என் தம்பி ஒன்றும் என்னைப்போல் காணாமல் போயிராவிட்டலும் என்னோடு சேர்த்து அவனுக்கும் மொட்டை போட்டதுதான் எனக்கான ஒரே ஆறுதலாக இருந்தது.

— ரமணி

Series Navigationகுந்திகைலி
author

ரமணி

Similar Posts

2 Comments

  1. Avatar
    sivagami says:

    தலைப்பைப் படித்ததும் கோடைதான் தொலைந்ததுபோய்விட்டது என்று நினைத்தேன். பின் கதையையைப் படித்தபிறகுதான் தெரிந்தது தொலைந்தது ( தற்காலிகமாக ) ரமணிதான் என்று. சம்மர் லீவில் சிறுவயதில் பிரயாணம் போவது என்பது மிகவும் சந்தோஷம்கொடுப்பதாகத்தான் இருந்தது. பாட்டி வீட்டுக்கோ அல்லது சொந்தக்காரர்களின் வீட்டுக்கோ ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு ஜாலியாய்ப் போய் இருந்துவிட்டு வருவது வழக்கம்தான். பழனி திருப்பதி என்று நேர்த்திக்கடன் செலுத்துவதற்குப் போவதும் உண்டு. ஆனால் அந்த மாதிரி சிறுவயது அனுபவங்களை பெரியவர்களானதும் நினைத்துப்பார்க்கும்போது எழுகின்ற ஞாபக அலைகளும் அப்போது கஷ்டப் பட்டிருந்தாலும் அந்த நினைவுகள் இப்போது இனிமைதரக்கூடியதாக ஆகிவிடுவது காலம் நமக்குள் செய்துவிடுகிற ரசவாதம்தான்.

    நகைச்சுவை ததும்ப அப்படி ஒரு கோடைப்பயணத்தை எழுதி என்னையும் பழைய நினைவுகளுக்குள் தள்ளிவிட்ட உங்களுக்கு நன்றி ரமணி.

  2. Avatar
    ganesan says:

    ponmalai to tirupathy by ramani gives me pleasure equal OF ENJOYING the goodold comedy movie MADRAS TO PONDYCHERRY…hatsoff!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *