பாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9

This entry is part 5 of 41 in the series 13 மே 2012

“ என்னண்ணே இந்தப் பொம்பள இவ்ளோ அசிங்க அசிங்கமா பேசுது? “
“ ஆம்பள இல்லாத குடும்பம். ஒத்தப் பொட்டப்புள்ளைய வச்சிக்கிட்டிருக்குது.. பேசலேன்னா ஒன்னிய மாதிரி பசங்க வுட்டு வப்பீங்களா? “
ஒரு ஏழைத்தாயின் பாதுகாப்பு வளையத்தைப் பற்றி, இவ்வளவு தெளிவாக, இதற்கு முன்னால், வேறு ஏதாவது படங்களில் வசனம் வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. கேட்டவுடன் பொட்டில் அறைவது போலிருந்தது.
என்னைப் பொருத்தவரை, பாராட்டுகள் நடிகர்களுக்கு முன்னால், திரைக்கதைக்கும், இயக்கத்துக்கும் போய்ச் சேரவேண்டும். அடுத்தது அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவுக்கு. லைவ் ரெக்கார்டிங் என்று போடுகிறார்கள். சூப்பர். பாடல்கள் வெறும் Montages தான். அதனால் இன்னமும் வலு கூடுகிறது. அப்புறம் விஜய் மில்டன் கேமரா! ரோட்டோரம், கொஞ்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், கொஞ்சம் பணக்காரத் தனமான வீட்டின் உள்பாகங்கள். ஏறக்குறைய குப்பையும் அழுக்கும்தான் படம் முழுவதும். ஆனாலும் அசூயை தோன்றாமல் எடுத்ததில் ஒளி ஓவியருக்கு வெற்றி.
வெளியான மூன்றாவது நாளே காவல் அதிகாரியாக நடித்தவரின் படத்தை விளம்பரங்களில் போட்டு விட்டார்கள். ஆனால் அவரது வெற்றிக்குப் பின்னால், அந்தப் பாத்திரப் படைப்பு இருக்கிறது. வசன உச்சரிப்பு இருக்கிறது. மேனரிசம் இருக்கிறது. பேசாமல் பாலாஜியின் படத்தைப் போட்டிருக்கலாம். அவருக்குத்தான் அது போய் சேர வேண்டும்.
பெற்றோரின் கடனை அடைக்க, எட்டாவது படித்த வேலுச்சாமி (ஸ்ரீ ), வேலை தேடி பட்டணம் வருகிறான். விலைமகள் ரோசி உதவியால், ரோட்டோர டிபன் கடையில் வேலை கிடைக்கிறது. வீட்டு வேலை செய்யும் ஜோதி ( ஊர்மிளா மகந்தா ) மீது அழுக்குத் தண்ணீரைக் கொட்டி, வாங்கிக் கட்டிக் கொள்கிறான் அவளது அம்மாவிடம். அடுத்தடுத்த சந்திப்புகளும் அவன் பொறுக்கி என்றே ஜோதிக்கு அடையாளம் காட்டுகின்றன. ரோசியைத் தேடி வரும் வேலு யதேச்சையாக ஜோதி வீட்டைப் பார்க்கிறான். அவள் மூளை சரியில்லாத சிறுவனைப், பாசத்தோடு அணுகுவது அவனுக்குப் பிடிக்கிறது. இன்னொரு பக்கம், அந்த அடுக்குமாடி குடியிருப்பில், ஜோதி வேலை செய்யும் வீட்டில் இருக்கும் ஆர்த்தி ( மனிஷா யாதவ் ), அவளைக் கவிழ்க்க நினைக்கும் தினேஷ் (மித்துன் முரளி). எல்லோரும் பதினாறு வயது பாத்திரங்கள். தினேஷ் ஆர்த்தியைப் பல கோணங்களில் செல்போனில் படம் எடுத்து, தன் வகுப்பு நண்பர்களிடம் காட்டுவதும், வீட்டில் செல்போன் மறுக்கப்பட்ட ஆர்த்தி, அவனில்லாத போது, அவனது போனை ஆராய, விவரம் புரிவதும் சூப்பர் டிவிஸ்ட். ஆர்த்தியால் மறுதலிக்கப்படும் தினேஷ், ஆர்த்திக்காக வீசும் திராவகம், ஜோதி மேல் படுவதும், அரசியல் பண பலங்களால் தினேஷ் தப்பித்து, வேலு சிறையில் மாட்டுவதும் கதை. ஜோதியில் முகம் சரி செய்யப்பட, வேலு செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்வதும், ஆனால் சிறைக்கு அனுப்பப்பட்டும் ஜோதிக்கு பணம் தரப்படாமல் ஏமாற்றப்படுவதும், கிளைமேக்ஸ். ஜோதி அதே திராவத்தை, ஏமாற்றிய காவல் உயரதிகாரி மேல் ஊற்றுவதும், வழக்கிலிருந்து வேலு விடுவிக்கப்பட்டு தினேஷ் மாட்டுவதும் ஆண்டி கிளைமேக்ஸ்.
இரண்டு மணிநேரப் படம். அனாவசிய சுற்றல்கள் இல்லை. பட விழாக்களிலும், அரசு தேர்வுகளிலும் பரிசு பெறலாம். ஓடுவது கியாரண்டி இல்லை.
நடிகர்களில் முதல் மார்க் மிதுன் முரளிக்குத்தான். பிஞ்சில் பழுத்த பணக்கார பையனை கண் முன்னே கொண்டு வருகிறார். சூப்பர் ஸ்டார்கள் நடிக்கும் (நெற்றிக்கண், ஊர்க்காவலன் போல ) இரண்டு தலைமுறைக் கதைகள் இனிமேல் ஏதாவது வந்தால், மகனாக அல்லது மகளின் காதலனாக ஒரு ரவுண்டு வரலாம். அடுத்தது ஊர்மிளா மகந்தா. சிறுமியாக அசத்தும் இவர் முகம், கனவுக் காட்சியில் புடவை கட்டி, பெரிய பொட்டிட்டவுடன், அப்படியே பெண்ணாக மாறுவது அதிசயம். அடுத்த படத்தில் மனிஷா ஒரு கொய்ராலா ரேஞ்சுக்குப் போகலாம். இயல்பாகவே குழி விழுந்த கண்களும் ஒட்டிய கன்னங்களுடன் இருக்கும் ஸ்ரீ பாத்திரத்திற்குப் பொருந்திப் போகிறார் என்பதைத் தவிர சொல்வதற்கு ஏதுமில்லை.
சராசரி ரசிகனின் கணிப்பு இந்த ஒரு காமெண்டில் புரியும். படம் முடிந்து வெளியேறும் ஒருவர், பக்கவாட்டு வழியைக் காட்டி “ இந்தப் பக்கமா போயிடலாம்.. அப்பத்தான் சீக்கிரம் வெளியே ஓடிர முடியும்! “
0
கொசுறு
25 ஜி டீலக்ஸ் பேருந்தில், இளம் தம்பதியர், இரண்டு பெண் குழந்தைகளுடன் ஏறினர். அம்மாவுக்கும் குழந்தைகளுக்கும் சீட் கிடைத்து விட்டது. எனக்கும்.. அப்பா ஸ்டேண்டிங். அடுத்த இரு நிறுத்தங்களுக்குப் பிறகு அப்பாவுக்கு பின் சீட்டில் இடம் காலியாக, உட்கார்ந்தார். ஓடும் பேருந்தில், அவரது ஒன்றரை வயது மகள், அவரிடம் போக இறங்கியது. நிலைமையின் அபாயத்தை உணர்ந்த நான், கைகளை நீட்டி, விழிகளை உருட்டி, குழந்தையை நோக்கி மிரட்டலாக முழித்தேன். பயந்த குழந்தை, மீண்டும் அம்மாவிடமே போய் விட்டது. அம்மா மடியில் உட்கார்ந்தபடியே என்னை மீண்டும் பார்த்த குழந்தையைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தேன். சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டது. பேரானந்தம் எனக்கு.. ஒரு விபத்தைத் தடுத்ததை எண்ணி!

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –12சௌந்தரசுகன் 300 / 25
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    punai peyaril says:

    இந்த விமர்சகம் முன்பு தவறான தகவல்களை தந்ததை சில பின்னூட்டங்களில் சுட்டிக் காட்டியதற்கு எந்த விதமான வருத்தமோ விளக்கமோ தரவில்லை. எழுத்தாளரின் பொறுப்பை தட்டி கழிக்கும் இவரைப் பார்த்து பஸ்ஸில் சின்ன குழந்தையின் பயண சந்தோஷத்தை நல்லது செய்வது போல் ( அந்தக் குழந்தை அப்பாவிடம் வர உதவியிருந்தால் அதன் பயணம் இனிதாக இருந்திருக்கும், தற்போது அதுக்கு மனக்காயமே மிஞ்சியது) கெடுத்த இவரின் நாக்கை துருத்தி, விழி உருட்டியது போல திண்ணை ஆசிரியர் இவரைக் விடியோ சாட்டில் கண்டிக்கலாம்… மத்தபடி இந்த விமர்சனம் வழவழா என்று மேலோட்டமானது. காவ்யா விமர்சனம் நன்று.

    1. Avatar
      punai peyaril says:

      சுரேஷ், அதற்கும் இந்த விமர்சனத்திற்கு கீழ் கமெண்ட் போடுவதற்கும் என்ன சம்பந்தம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *