சௌந்தரசுகன் 300 / 25

This entry is part 6 of 41 in the series 13 மே 2012

தஞ்சாவூரிலிருந்து 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழ் சௌந்தரசுகன். ஆசிரியை சுந்தரசரவணன். இதன் வெள்ளிவிழா ஆண்டும், 300வது இதழ் வெளியீட்டு விழாவும் மே மாதம் 5 , 6 தேதிகளில் தஞ்சையில் நடந்தது. 5 அமர்வுகள், ஒன்றரை நாட்கள் கூட்டம், 8 பக்க அழைப்பிதழ் என்று ஏகத்துக்குத் தடபுடல்.

முதல் அமர்வில் கவிஞர் கிருஷ்ணப்பிரியாவின் “ வெட்கத்தில் நனைகின்ற .. “ என்கிற கவிதைத் தொகுப்பு, அமிர்தம் சூர்யா தலைமையில், நிலாமகள் வெளியிட, நடைபெற்றது. இரண்டாவது அமர்வில் வெற்றிப்பேரொளி, சேலம் கி. இளங்கோ போன்றோர் துவக்கி வைக்க, கவிஞர் மு.மேத்தா சிறப்புரை ஆற்ற முடித்து வைக்கப்பட்டது. 6ந் தேதி காலை விழா இதழைப்பற்றிய படைப்பாளிகளின் பதிவுகள், சிற்றிதழ்கள் குறித்த 90 நிமிட ஆவணப்படம், பிற சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் பங்கேற்கும் அமர்வு என இரவு வரை நீண்டது. பின்காலை கார வேர்க்கடலை, மதியம் சுவையான உணவு, இரவு சிற்றுண்டி என ஜமாய்க்கப்பட்ட விழா இது.

கவிஞர் நா.விச்வநாதன், அரசூர் வேதியபுரத்திலிருந்து வந்திருந்தார். இவர் பிறப்பில் ஒரு அந்தணர். ஆனாலும் அந்தணக்குலத்திலிருக்கும் முரண்களையும், அந்தக் குலத்தில் நிலவும் பொண்ணடிமைக் கொடுமைகளையும் சாடி கவிதை, கட்டுரை எழுதி வருபவர். தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டு, 35000 ரூபாய் பரிசு பெற்றவர். இவர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் சோ. பிரபாகரன், ஹரணி, வலம்புரி லேனா, தேவரசிகன் போன்றோர் கலந்து கொண்டனர்.

கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், சிற்றிதழ் சங்கத் தலைவர் பூ. ஆ. இரவீந்திரன் போன்றோர் கலந்து கொண்ட அமர்வில் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பல இடங்களுக்குப் போய், சிற்றிதழ் ஆசிரியர்கள், படைப்பாளிகளைப் படம் பிடித்து, 17 மணிநேர footage ஐ 90 நிமிடமாக சுருக்க 42 மாதங்கள் ஆனதாக சுகன் சொன்னார். கடைசி அமர்வு, ஆரம்பிக்க வேண்டிய மாலை 5.30 ஐத் தாண்டி 7.30க்கு ஆரம்பித்தது. ஒரு வழியாக முடிந்தது. போட்ட 10 பேரில் நான்கு நபர்களே வந்தது ஒரு குறைதான்.

சுகன் முதல் அமர்வில், சரவணன் சாதனைகளைப் பற்றிச் சொல்லாமல், பட்ட வேதனைகளைப் பற்றியே பேசியதாக, சேலம் கி. இளங்கோ சொன்னார். இதழை நிறுத்தி விடலாமா என்று சொன்னதாகவும் கேள்வி. அமிர்தம் சூர்யா, குடும்பமா, இதழா என்கிற நிலை வரும்போது, குடும்பமே முக்கியம் என்று முடிவு எடுக்க வேண்டும் என்று பேசியதாகச் சொன்னார். அவரே அமிர்தம் இதழை, 7 ஆண்டுகள் நடத்திவிட்டு, குடும்ப நலனுக்காக நிறுத்தியதாக ஒப்புக்கொண்டார். சேலம் கி.இளங்கோ தான் ஒரு லட்சம் தருவதாகவும், இன்னும் நான்கு நபர்களிடம் தலா ஒரு லட்சம் வாங்கினால் 5 லட்சம் ஆகும். அதிலிருந்து வரும் வட்டியில் நடத்தலாம், ஆனால் உங்கள் சுதந்திரம் பறி போய் விடும். பரவாயில்லையா என்று கேட்டதாகச் சொன்னார். கிருஷ்ணப்பிரியா நூல் வெளியீட்டில் மேடையில் இருந்தவர்களுக்கே நூல் பிரதிகள் தரப்படவில்லை என்றொரு பதிவும் அவர் செய்தார்.

ஆவணப்படம் 90 நிமிடம். எல்லோரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தது அழற்சியைத் தந்தது மறுக்க முடியாதது. திரும்பத் திரும்ப தி.மா.சரவணனும், மதிவாணனும், எட்வினும், இடையிடையே சுந்தர சரவணனும், சௌந்தர வதனாவும் இன்னும் சிலரும் பேசிக்கொண்டே இருந்தது தாங்கவில்லை. பிரபஞ்சனும், மேத்தாவும் பேசியதை லிப் ரீடிங் தெரிந்தவர்கள் தான் புரிந்து கொண்டிருக்க முடியும். அந்த segment முழுவதும் ஒரே noise. நல்ல கைமாறு செய்திருக்கிறார்கள் பிரபஞ்சனுக்கும், மேத்தாவுக்கும். வாழ்த்துக்கள். பத்து தலைகளே repeated ஆகப் பேசிக் கொண்டிருந்ததால் இது ஆவணப்படமா இல்லை ராவணப் படமா என்றொரு சந்தேகம் வந்தது உண்மை. படம் பார்த்த உபாதையால் மதிய உணவுக்குப் பிறகு நானும் சேலம் கி. இளங்கோவும் எஸ்கேப்! நானும் வந்திருக்கலாம் என்று ஆதங்கப்பட்டார் பூ.ஆ. இரவீந்திரன். அப்படி இருந்தது ஆவணம்!

அழைப்பிதழில் இல்லாத இடைச்செருகல், சுந்தரசரவணனின் கவிதைகளின், ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தக வெளியீடு. பெயர்த்தவர் சரவணனின் மகள். சில கவிதைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசித்து விமர்சித்திருக்கலாம். தவற விட்டுவிட்டார்கள்.

திரும்பத் திரும்ப எட்வின், ஆவணப்படத்திலும், மேடைப்பேச்சிலும் சொன்னது இதுதான். “ ஒரு சிற்றிதழ் ஆசிரியன் ஒவ்வொரு இதழ் வெளியிடும்போதும் தற்கொலை செய்து கொள்கிறான். அடுத்த இதழ் ஆரம்பத்தில் உயிர்தெழுகிறான். சுகன் ஆசிரியர் 300 முறை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உயிர்த்தும் இருக்கிறார். இவர் இதழை நிறுத்த மாட்டார். நாமெல்லாம் அவருடன் இருக்கிறோமா என்று சோதிக்கத்தான் விழாவே நடத்துகிறார். இப்படி பல விழாக்களை அவர் நடத்தி இருக்கிறார். எனக்குத் தெரியும். அப்படியே நிறுத்த வேண்டுமென்றாலும், என் சாவுக்குப் பிறகு நிறுத்தட்டும். அப்போதுதான் என் புகைப்படம் இதழ் அட்டையில் வரும் “ இது எப்படியிருக்கு? சூப்பர்!

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமோ என்று ஒரு பழமொழி உண்டு. ஆரம்பமே முகாரி, ஒப்பாரி என்றால், முடிவும் தற்கொலை, சாவு என்று தான் இருக்கும். யாரும் ஒரு சிற்றிதழை, மக்களுக்காக நடத்துவதில்லை. தனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்கிற அளவில்தான் நடத்துகிறார்கள். அதனால் கிடைக்கும் பெயரில், வேறு ஏதாவது சில்லறை பண்ண முடியுமா என்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கும். பல படைப்பாளிகள், சிற்றிதழ்களை, வணிக இதழ்களுக்கும், சினிமாவுக்கும் தாவ உதவும் spring board ஆகத்தான் பார்க்கிறார்கள். ‘ழ’ இதழில் எழுதிய ஞானக்கூத்தனுக்கு கமல்ஹாசன் அறிமுகம் கிடைத்து, மருதநாயகம் வரை போனது இப்படித்தான். அண்மைக்கால உதாரணங்கள் ஜெயமோகனும், எஸ்.ரா. வும்.

சுகன் 300 விழா, அந்த இதழ் புகழ் பாடும் விழாவாக அமைந்தது, வருந்தத்தக்கது. கிட்டத்தட்ட 16 மணிநேர விழாவில் சுந்தரசரவணனே பாதி நேரத்தைப் பேசிக் கெடுத்தது இன்னொரு black mark. விமர்சனங்களே இல்லாத நிகழ்வு அசட்டு தித்திப்பு. சுந்தரசரவணன் ஒரு பள்ளி ஆசிரியர். விழாவும் சரியான திட்டமிடல் இல்லாமல், ஒரு ‘ வகுப்பு ‘ அறை விழாவாக அமைந்தது, இலக்கிய சுவை அரும்பர்களுக்குக் கிடைத்த எட்டிக்காய்.

0

Series Navigationபாலாஜி சக்திவேலின் “ வழக்கு எண் 18 / 9எஞ்சினியரும் சித்தனும்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *