தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 ஆகஸ்ட் 2020

யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்

புதிய மாதவி

Spread the love

உலகத்தின் மக்கள் தொகையில் மிகச் சிறுபான்மையினராக சற்றொப்ப 0.25% எண்ணிக்கையில் இருக்கும் யூதர்கள், அறிவுத்திறனில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

அமெரிக்கா மக்கள் தொகையில் 3% ஆக இருக்கும் யூதர்கள் அமெரிக்காவில் நோபல் பரிசு பெற்றவர்களின் எண்ணிக்கையில் 27%. கணினித் துறையில் மிகச் சிறந்த விருதுகள் பெற்றவர்களும் இவர்களே. ஏன், செஸ் விளையாட்டில் உலகச் சாம்பியன்களின் 50% யூதர்கள்தான். ஐரோப்பிய மக்கள் சமூகத்தில் யூதர்களின் அறிவுத்திறன் (அதாவது IQ ) முன்னிலை வகிக்கிறது.

மிக அதிகமாக வன்கொடுமைகளை அனுபவித்த இனமாகவும் உலக நாடுகள் எங்கும் தங்கள் வாழ்வின் இருத்தலை நிச்சயப்படுத்திக் கொள்ள புலம் பெயர்ந்த இனமாகவும் இருந்தவர்கள் யூதர்கள் எனலாம்.

இந்திய மண்ணிலும் யூதர்களின் புலம்பெயர்ந்த வாழ்க்கை சரித்திரம் தொடர்கிறது. அவர்களை ,மூன்று வகையாக இந்திய சமூகவியலார் பிரிக்கிறார்கள்.

1) இஸ்ரேலின் மைந்தர்கள் (Bere Israel)

2) கொச்சின் யூதர்கள்

3) ஐரோப்பாவிலிருந்து வந்த வெள்ளை யுதர்கள்.

இதில் இஸ்ரேலின் மைந்தர்கள் என்றழைக்கப்படும் முதல்வகையினர் மும்பை. புனே, கராச்சி (பாக்) , அகமதாபாத் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். மராத்தி மொழிதான் அவர்களின் வழக்கு மொழியாக இருந்தது. 7 கப்பல்களில் அலிபாக் கடற்கரையில் அவர்கள் வந்திறங்கியதாகச் சொல்லப்படுகிறது. 2100 வருடங்களுக்கு முன்பே இந்தியா வந்தவர்கள் இவர்கள். 1830ல் இவர்களின் எண்ணிக்கை வெறும் 6000 தான். 1948ல் 20000. ஆனால் இஸ்ரேல் நாடு 1964ல் பெரெ இஸ்ரேலியர்களை எல்லாவகையிலும் ஐயத்திற்கு அப்பாற்பட்ட முழுமையான யூதர்கள் என்று அறிவித்தப் பின் அவர்களில்  பெரும்பாலோர் இஸ்ரேலுக்குச் சென்றுவிட்டார்கள்.

கொச்சின் யூதர்கள் கேரளாவில் மலபார் பகுதியில்வசிப்பதால் மலபார் யூதர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் நிறத்தின் அடிப்படையில் கறுப்பு யூதர்கள் ( Black Jews என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் வழக்கு மொழியாக இருப்பது மலையாளம். அரசன் சாலமன் காலத்தில் இவர்கள் கேரளா பகுதிக்கு வந்ததாகச் சொல்கிறார்கள்.

இவர்கள் தவிர ஐரோப்பாவில் ஹாலந்து, ஸ்பெயின் பகுதியிலிருந்து கோவா கடற்கரையோரம் புலம் பெயர்ந்தவர்கள் வெள்ளை யூதர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் தவிர கல்கத்தாவிலும் யூதர்கள் குடியிருப்புகள் உண்டு.

நாடில்லாமல் அலைக்கழிக்கப்பட்ட யூதர்கள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்ல அவர்களிடம் எதுவுமில்லை. நிலம் சார்ந்த தொழிலோ, நீர்வளம் சார்ந்த தொழிலோ அவர்கள் அறிந்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கைச் சூழல் அதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு கொடுக்கவே இல்லை. எனவே தான் அவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்கள் நினைவுகளையே (பயோ மெமரி) பாதுகாத்து வந்தார்கள் என்று சொல்லலாம். அதாவது மருத்துவம், கணிதவியல், வாணிபம் சார்ந்தே இன்றும் அவர்களின் வாழ்வாதரங்கள் இருக்கின்றன. மிகச்சிறந்த மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அவர்களாகவே இருப்பதன் சூட்சமம் இதுவே. பணம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் வாழ்விடத்தில் ஒரு துண்டு நிலத்தைக் கூட அவர்கள் தங்களுக்கானதாக விலைக்கு வாங்கிக் கொள்ள முடியாத சட்டதிட்டங்கள் அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் அவர்கள் மீது திணிக்கப்பட்டு இருந்தன. அதனால் தான் அந்த நிலத்தை ஆதாரமாகக் கொண்டு வாழும் சமூகத்தினருக்கு தங்கள் பணத்தைக் கடனாகக் கொடுத்தும் அதிலிருந்து கிடைக்கும் வட்டி மூலம் தங்கள் முதலீட்டைப் பெருக்கியும் பெருமளவில் செல்வந்தர்களாகவும் ஆவதற்கான காரணமானது எனலாம்.

சமூகவியல் ஆய்வில் யூதர்கள் குறித்த மேற்கண்ட கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகள் இல்லாமலில்லை. எல்லா குணாதிசயங்களும் மரபணு சார்ந்தது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது தான், ஆனால் மரபணு சார்ந்த குணாதிசயங்கள் கிடையாது என்று முற்றாக விலக்கி வைப்பதும் சாத்தியமில்லை.

அறிவு, அறிவியல், புத்திக்கூர்மை இவை அனைத்தும் பகுத்தறிவுடன் சம்பந்தப்பட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால் யூதர் சமூகத்தின் சடங்கு, சம்பிரதாயங்களை அறிய வரும்போது நம் புரிதல் ஒரு கேள்விக்குறியாகிவிடுகிறது.

யூதர் சமூகத்தில் பெண்கள் சார்ந்த சில சடங்குகளைப் பார்ப்போம்.

நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக தன்னை எல்லா நிலைகளிலும் முன்னிலைப் படுத்திக் கொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் வாழும் யூதப் பெண்களைப் பற்றிய ஒரு செய்தியை தன் தொலைக்காட்சி நிகழ்வில் வெட்ட வெளிச்சமாக்கினார் ஓப்ரா (Oprah Winfrey).

யூதப் பெண்கள் மாதாவிடாய் முடிந்தப்பின் குளிப்பதற்காக தனியாக குளியலறைகள் இருக்கின்றன. அக்குளியலறையில் அவர்களின் மதச் சம்பிரதாயப்படி ஒரு தொட்டியில் மழை நீர் சேமிக்கப்படுகிறது.

யூதப் பெண் அங்கு வந்தவுடன் குளியல் முறைப்படி நடக்கிறது. அதுவும் அவள் முறைப்படி குளிக்கிறாளா என்பதைக் கவனிக்க தனியாக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருப்பார்.  அவள் குளிப்பதற்கு முன் அவளுடைய தீட்டு அழுக்குப்படிந்த கைநகங்களை வெட்டுகிறார்கள். அழுக்குப்படிந்த மயிர்களை அகற்றுவதும் உண்டு. இதை மிக்வெக் என்றும் டகாரா என்றும் அழைக்கிறார்கள்.

MIKVEH என்றால் நீர் சேகரித்தல் என்று பொருள். TAHARAH என்றால் புனிதச் சடங்கு என்று பொருள். மாதாவிடாய் முடிந்து ஆற்றில் நிர்வாணமாக குளிக்க முடியாத நிலையில் தான் இச்சம்பிரதாயம் சமூகத்தில் வந்திருக்க வேண்டும் என்கிறார்கள். எது எப்படியோ, இன்றும் இச்சம்பிரதாயம் யூதப் பெண்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஓர் அம்சமாகவே இருக்கிறது.

பெண் மாதவிடாய் நாட்களில் கணவனுடன் ஒரே படுக்கையில் படுப்பதோ தொடுவதோ கூடாது. மணப்பெண்ணுக்கு உடலுறவின் போது ஏற்படும் இரத்தப்போக்கும் கூட தீட்டாகவே கருதப்பட்டு அப்பெண்ணை மணமகனிடமிருந்து பிரித்து வைப்பதும் புனித நீராட்டலும் உண்டு.

இத்துடன் மகப்பேறு காலத்தில் பெண்ணுடல் தீட்டாகவே கருதப்பட்டு புனித நீராட்டலுக்குப் பின் தூய்மையடைவதாக கருதப்படுகிறது.

இத்தீட்டு சமாச்சாரமெல்லாம் இந்தியப் பெண்களுக்கு ஒன்றும் புதிதல்ல!

ஆனால் யூதப் பெண்கள் தங்கள் தலைமுடியை தன் கணவன் அல்லாது பிறர் பார்க்க அனுமதிப்பதில்லை! ஆரம்ப காலத்தில் திருமணமான பெண்கள் மொட்டை அடித்துக் கொண்டார்களாம். 19 ஆம் நூற்றாண்டில் தலைமுடியை மறைத்து பொய்முடி அதாவது ‘விக்’ வைத்துக் கொண்டார்களாம்! ( இது எவ்வளவு புத்திசாலித்தனமா இருக்குப் பாருங்க!!!!)

இப்போதும் திருமணமான பெண்கள் ஒரு வகையான தொப்பி அணிந்துக் கொண்டு மறைத்துக் கொள்வதும், ஸ்கார்ஃப், கைகுட்டை என்று கொஞ்சம் ஸ்டைலாக மறைத்துக் கொள்வதும் தொடர்கிறது. எப்படிப் பார்த்தாலும் திருமணமானப் பெண் தலைமுடியை மறைத்தே ஆக வேண்டும்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் ஓர் ஆடவனுக்கு she is not available என்று தெரிய வேண்டுமாம். யூதப் பெண்கள் பெரும்பாலும் பாவாடை /அதாவது ஸ்கர்ட்/ தான் அணிவார்கள். கால்சட்டை அணிவதில்லை. அது ஆணுக்கான உடை என்பதால்.

இவ்வளவு சம்பிரதாயங்கள் இருக்கும் இச்சமூகத்தில் இன்றைய தலைமுறை பெண்கள் மிகக் கடுமையாக அனைத்தையும் விமர்சனப்படுத்துகிறார்கள்.

தங்கள் சடங்குகளை, சம்பிரதாயங்களை அதன் வேர் வரை சென்று அடையாளம் கண்டு இன்றைக்கு அதன் தேவை என்ன? என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். யூதப் பெண்களின் பெண்ணியக்குரல் அமெரிக்க சமூகத்தில் ஏற்ப்படுத்தி இருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள்.

தங்கள் கடவுள் ஆண் பெண் என்ற பால்வேறுபாடுகளைக் கடந்தவர். இடைக்காலத்தில் கடவுளை ஆண்பாலாக சித்தரிப்பதும் அதற்கான மொழிக்கூறுகளையும் கடுமையாக விமர்சிக்கின்றார்கள் இவர்கள்.

புனித நீராடலுக்கான தனி இடங்கள் அமெரிக்காவில் இன்றுமிருக்கின்றன என்றாலும் இப்புனித நீராடல் சடங்கு பெண்ணுடலை இழிவுப்படுத்தும் ஆணாதிக்கம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. பாலுறவில் சமபங்காளாராக இருக்கும் ஆணுக்கு எதையும் விலக்கி வைக்காத சமூகம் பெண்ணுடலைத் தீட்டாக்கியது ஏன்? என்ற கேள்வியை வைக்கிறார்கள். பெண்ணுடலின் இயற்கையான நிகழ்வுகள் எப்படி தீட்டாக இருக்க முடியும்?

தூய்மைப்படுத்தல் என்று சொல்லக்கூடும். ஆனால் தூய்மைப்படுத்தல் என்று மட்டுமே இல்லாமல் இச்சடங்கு புனிதப்படுத்தலாக மாற்றம் பெற்றதால் அப்பெண்ணுடல் புனிதம் இழந்ததும் அதைப் புனிதப்படுத்த வேண்டியது அவசியம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே பெண்ணின் மாதவிடாய் என்ற இயல்பான இயற்கை நிகழ்வை தீட்டு என்று அடையாளப்படுத்துவதையே மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

பெண்ணின் புனித நீராட்டலுக்கு மாதமாதம் பெண்கள் வருவது இன்றுவரை குறையவில்லை. அப்படி வரும் பெண்கள் அந்தப் புனித நீராடலை தங்களுக்கும் தங்கள் உடலுக்குமான தனித்துவமான தருணங்கள் என்று உணர்வதாக சொல்வதும் இச்சடங்கின் இன்றைய இன்னொரு பக்கம்.

இச்சடங்கு பெண்ணின் மதாவிடாயுடன் சம்பந்தப்பட்டதல்ல என்ற ஒரு வித்தியாசமான குரல் 1986 ல் எழுந்தது. (Take back the waters pub by Lilith in 1986 vol 15) .- சந்தோஷமான அல்லது துயரமான தருணங்களில் பெண்ணுக்குப் புத்துணர்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது என்றார்கள். குறைப்பிரசவம், கருக்கலைப்பு, ஏன் கற்பழிப்புக்குப் பின் இப்புனித நீராடல் பெண்ணுடலுக்குப் புத்துணர்ச்சி தரும் நிகழ்வாக அடையாளம் காட்டினார்கள்.

(நம்ம எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதை நினைவுக்கு வருகிறதா…? அதே தான்) இந்நீராடலின் போது செய்ய வேண்டிய சடங்குகள், வழிபாட்டு முறைகளில் புதிய முறைகளை இன்றைய பெண்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்நீராடும் தருணத்தில் பெண்ணுடல் பெண்ணுக்கானது அவள் தன் உடலைக் கொண்டாடும் தருணம் படைப்புக்கும் அவளுக்குமான தொடர்பாக அவள் உடல் அவள் படைப்பின் சிருஷ்டி மட்டுமல்ல படைக்கும் சிருஷ்டி என்பதை அவள் உணரும் தருணமது.

அவள் கடவுளின் அம்சம்

அவள் உடல் கருவறை

அதை அவள் வணங்குகிறாள்\

கொண்டாடுகிறாள்

போற்றுகிறாள்

சாரா அன்டைன் (Sarah Antine ) இது குறித்து எழுதியிருக்கும் ஒரு கவிதை, நான் மிகவும் ரசித்தக் கவிதை..

புனித நீராடல்

————————-

அந்த மரத்திற்கு ஓராண்டானது

எனக்கோ அதுவே ஒரு மாதத்தில்

நிலவு மறைக்காத முத்துகளாய்.

என் அடுக்குகளை

நானே உரித்துக் கொள்ளும்

இரவின் விளிம்புகள்

மேப்பிள் இலைகள் சிவந்து உதிர்கின்றன

தற்காலிக கைகளை உதிர்க்கின்ற கால்களாய்.

நிரம்பியிருக்கும் மழைநீர்

என் சடங்கு குளியல்

சுவர்களுக்கு நடுவில் நான் மட்டும்

அத்தருணத்தில்

உன்னோடு ஒன்றாகி கலக்கும் நான்.

தண்ணீருக்கு அடியில் நான்

என்னை முழுமையாக மூடிவிடுகிறது தண்ணீர்

சோகச்சுமைகள்

இனி என்னிடமில்லை

—————————–

டகாரா (Tahara )என்ற பெயரில் வெளிவந்திருக்கும் இஸ்ரேல் திரைப்படமும் இப்புனித நீராடல் குறித்து வெளிவந்தப் திரைப்படங்களில் முக்கியமானது என்று நினைக்கிறேன்.

கற்பழிப்புக்குப் பின் இந்நீராடல் நிகழ்வு இச்சமூகத்தில் பெண்களால கடைப்பிடிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதை யூதப் பெண்கள் அனுபவித்த வன்கொடுமைகளை அறிய வரும் எவரும் ஒத்துக்கொள்ள முடியும். சடங்கு, சம்பிரதாயங்கள் மதச்சடங்குகளாக மாற்றப்படும் போடு அந்தக் குறிப்பிட்ட இனக்குழு வாழ்வில் அச்சடங்கு ஏற்பட்டதற்கான காரணம் மறைக்கப்பட்டு விடுகிறது அல்லது காலப்போக்கில் மறந்துவிடுகிறது.

வரலாற்றுப் பார்வையில் ஊடறுத்துப் பார்க்கும் போது சின்னதாக சில புள்ளிகள் தெரியவருகிறது.

——–

கட்டுரைக்கான ஆதாரங்கள்:

> Newyork magazine – are jews smarter?

> sarah Antine’s website

Series Navigationநியாப் படுத்தாத தண்டனைகள் ….2..பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் நீர் வெள்ளம் நிரப்பச் செய்த நிபுளா விண்வெளி மூலச் சுரப்பி.

4 Comments for “யூதர் சமூகத்தில் சில சடங்குகளும் சம்பிரதாயங்களும்”

 • களிமிகு கணபதி says:

  இனத்தின் அடிப்படையில் அறிவுக்கூர்மை தொடரும் என்கிற தவறான, ஆபத்தான, கொள்கை புதிய மாதவியின் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

  கட்டுரை சொல்வது உண்மையானால், யூதர்களில் எல்லா யூதர்களும் அறிவிலும், வாணிபத்திலும், அரசிலும் வல்லமை பெற்று இருக்க வேண்டும்.

  ஆனால், ஆய்வுகள் வேறு புரிதலை உருவாக்குகின்றன.

  மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய யூதர்கள் மட்டுமே அறிவிலும், தொழிலும், அரசிலும் முன்னேறியவர்களாக இருக்கிறார்கள்.

  காரணம்: தொழிற்புரட்சி தந்த வாய்ப்புக்களைத் திறந்த கைகளுடன் அவர்கள் அரவணைத்துக் கொண்டார்கள்.

  ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய யூதர்கள் மிக மோசமான நிலையிலேயே இன்றும் இருக்கிறார்கள். கிறுத்துவர்களுக்கு அஞ்சி அவர்கள் வாழ்ந்து வரும் வாழ்க்கை இன்றும் தொடர்கிறது.

  அவர்களது அறிவு, தொழிற்திறன், அரசியல் அதிகாரம் என்பவை மற்ற கிழக்கத்திய யூரோப்பியர்களைவிடக் குறைவு.

 • puthiyamaadhavi says:

  நன்றி கணபதி. உங்கள் கருத்துகளை நான் மறுக்கவில்லை.
  சில புள்ளிவிவரங்களைக் கொண்டு பொதுவான ஒரு முடிவுக்கு வருவதில் எனக்கும் உடன்பாடில்லை. அதனால் தான் என் கட்டுரையில்,

  >சமூகவியல் ஆய்வில் யூதர்கள் குறித்த மேற்கண்ட கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகள் இல்லாமலில்லை. எல்லா குணாதிசயங்களும் மரபணு சார்ந்தது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது தான், ஆனால்

  மரபணு சார்ந்த குணாதிசயங்கள் கிடையாது என்று முற்றாக விலக்கி வைப்பதும் சாத்தியமில்லை.>

  அன்புடன்,

  புதியமாதவி

 • களிமிகு கணபதி says:

  புதிய மாதவி,

  மரபணுவியலின் படி, தொழிற்திறமை, மதி அளவை (IQ) போன்ற விஷயங்கள் மரபணு சார்ந்து ஒரு இனத்திற்கு மட்டுமே உரித்தான ஒன்றாக இருக்க முடியாது என்பது அடிப்படை.

  இனவெறியர் ஈவெராவிடம் இருந்து விடுபட்ட தெளிவுடையோருக்கு இந்த அடிப்படை விதிகள் எளிதாகப் புரியும். இது புரியாவிட்டால் அவர் போல, “சாதி கிடையாதுன்னுதானே சொன்னேன். சாதிப்புத்தி இல்லை என்று நான் சொல்லவில்லையே” என்றுதான் நாமும் யோசிப்போம்.

  மரபணு சார்ந்த குணாதிசயங்கள் கிடையாது என்று முற்றாக விலக்கி வைப்பது இந்த விஷயத்தில் சாத்தியமே, புதிய மாதவி அவர்களே.

  .

 • Maneesh says:

  nice article. It is informative. Thanks Thinnai


Leave a Comment

Archives