விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தொன்பது

This entry is part 35 of 41 in the series 13 மே 2012


1929 ஜனவரி 30 விபவ வருஷம் தை 17 புதன்கிழமை

பெண்டல்வில் ஜெயில் இருக்கப்பட்ட வீதியில் ஆஸ்டின் கார் மெதுவாக ஊர்ந்து வந்தது. கென்சிங்டனிலேயே இருக்கப்பட்ட டாக்சி தெலூக்ஸ் கம்பெனிக்கு ஆளனுப்பிச் சொல்லி தெரிசா வரவழைத்தது. டிராமில் வந்திருக்கலாம். கூட்டத்தைக் கண்டால் பயமாக இருக்கிறது. மனுஷர்களைப் பார்த்து உண்டான பயம் இல்லை இது. இடித்துப் பிடித்து வண்டியில் ஏறி, குளிர் காலம் என்ற சாக்கில் மாசக் கணக்கில் குளிக்காமல் உடுப்பு மாற்றாமல் திரிகிறவர்களின் உடம்பு வாடை பற்றிய சங்கடம்.

அரை மணி நேரம் முன்னால் பனி பொழிந்து வெளுத்துக் கிடக்கிற சாலை. பாதி அடைத்து மூடி இருக்கும் கடை வாசல்களுக்கு உள்ளே இருந்து மண்வெட்டிகளும், வாரியல்களும் எடுத்துக் கொண்டு தெருவில் வந்தவர்கள் கட்டித்துப் போன பனியைக் கூடிய மட்டும் விலக்கித் தள்ளித் தெரு ஓரமாகக் குவித்துக் கொண்டிருந்தார்கள். நாலைந்து விடலைகள் ட்வீட் கால்சராய்களும். கண்ணை மறைக்கிற விதத்தில் உசரத் தொப்பிகளும் அணிந்து தெருவோரத்தில் பனிக்கட்டி பொம்மை பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

தெரிசா சாரட்டில் இருந்து இறங்கியதும் பொம்மை தான் கண்ணில் பட்டது. வெள்ளைக்காரி. முலைகள் குத்திட்டு நிற்க காலை அகட்டி வாவா என்று கூப்பிடுகிற பாவம். ஒருத்தன் அந்த பொம்மையின் இடுப்புக்குக் கீழே உள்ளங்கையை நுழைத்துக் குடைந்து கொண்டிருந்ததைப் பார்க்க தெரிசாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. யோனி வைக்கிறானாம் போக்குக் கெட்ட பயல்.

மேடம் மேடம். அங்கஹீனன். உதவி செய்யுங்க.

பிச்சைக்காரன் ஒருத்தன் தொப்பியைக் கையில் பிடித்துக் கொண்டு பின்னாலேயே வந்தான்.

ஹேண்டிகேப் என்றால் கையாவது கண்ணாவது காலாவது பிசகாகி இருக்க வேண்டாமோ? கிழங்கு மாதிரி இருக்கிறியே?

அவன் கையில் பிடித்த தொப்பியைக் காட்டிச் சிரித்தான்.

கேப் இன் ஹேண்ட். ஹேண்டிகேப். சரிதானா மேடம்?

ஒழிந்து போ.

தானும் சிரித்துக் கைப்பையில் இருந்து காசு எடுத்துப் போட்டபடி பெண்டல்வில் சிறைச்சாலை வாசலைக் கடந்தாள் தெரிசா.

உள்ளே நுழைந்ததும் வந்திருக்கவே வேண்டாமே என்ற நினைப்பு முனைப்பாக மேலேறி வந்தது. பீட்டரின் சாவும் இந்த இடத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அவனுடைய சுவாசத்தை நிறுத்திக் கட்டையாக்கிக் கிடத்தியதற்காக கோர்ட் தீர்ப்பு விதித்து இங்கே தான் குற்றம் சாட்டப்பட்டவனை அனுப்பினார்கள். தெரிசா இங்கே வந்து அவனைச் சந்தித்த காலைப் பொழுது இப்போது போல பனியோடு இல்லை. நல்ல காற்றும் பூவாடையும் கூடிய வசந்த காலம் அது. பூவும் வாசனையும் கூட மனசில் துன்பத்தை மீண்டும் கிளப்பும் போல.

இந்த ஹால் முடிந்து இடது கைப்பக்கம் நடந்தால் ஜெயில் சூப்பிரண்டண்ட் ஆபீஸ் வரும். ஏதேதோ மறந்து போக, இந்தத் தகவல் ஏனோ இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு வேளை தெரிசா இங்கே வர வேண்டும் என்று உள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறதோ? அவளுக்குத் தெரியவில்லை,

மன்னிக்க வேணும். யாரைப் பார்க்கணும்?

காக்கி உடுப்பு தரித்த இரண்டு பேர் வழி மறித்தது போல் நின்றார்கள். இரண்டு பேருமே ஐரீஷ்காரர்களாக இருக்கும் என்று தெரிசாவுக்குத் தோன்றியது. இந்த அளவு நீலக் கண்கள் இங்கிலாந்துக் காரர்களுக்குக் கிடையாது. பல்லும் இத்தனை சுத்தமாக, மஞ்சள்கரை பிடிக்காமல் வெளேரென வெளுத்து இருக்காது.

சூப்பிரண்டண்டை பார்க்கணும்.

அவர் இந்தப் பக்கம் இல்லையே.

இங்கே தானே இருந்தார்?

சின்னக் குழந்தை பிடிவாதம் பிடிக்கிற மாதிரி அவள் சொல்ல ஒரு கான்ஸ்டபிள் மென்மையாகச் சிரித்தான்.

நான் இங்கே வந்து அஞ்சு வருஷமாகிறது. சூப்பிரண்டண்ட் மேல் மாடியில் தான் இருப்பு. படி இந்தப் பக்கம் இருக்கு மேடம்.

அங்கே இருந்தாரே.

அங்கே இப்போ தூக்குமேடைக்குப் போகிற ரெண்டு கைதிகளை வச்சிருக்கு. பார்க்க முடியாது.

கூட இருந்தவன் சொல்லியபடி மாடிப் படியேறினான். ரெண்டு படி முன்னால் போய், வாங்க என்று தெரிசாவைக் கூப்பிட்டான்.

வழி மறித்தவர்கள் யார் என்ன என்ற விவரம் எதுவும் கேட்கவில்லை. தெரிசாவின் தோரணை அவர்களுக்கு சகல சந்தேகத்தையும் போக்கியிருக்கலாம். கழுத்தில் தழையத் தழைய அணிந்த சிலுவை கோர்த்த வெள்ளிச் சங்கிலியும் அங்கங்கே அழுத்தமாக நரை படர்ந்த தலைமுடியும் கண் கண்ணாடியும் அவளுக்கு ஒரு கன்யாஸ்திரியின் தோற்றத்தைக் கொடுத்திருக்கலாம். வெள்ளைப் பாவாடையும்.

அந்த அறை விசாலமாக இருந்தது. நீள விரிந்த மர மேஜையில் ஒரு பூங்கொத்து தவிர வெறுமையாகக் கிடந்தது. சுவரில் கன்யாஸ்த்ரி புனித ஜோன் ஓஃப் ஆர்க் மாதாவை வைக்கோல் படப்பில் உட்கார்த்தி வைத்து எரிக்கிற ஓவியம் பெரியதாக மாட்டப் பட்டிருந்தது. சுவர் ஓரமாக டெலிபோன் ஒன்றை ஸ்டாண்ட் அடித்துப் பொருத்தி வைத்திருந்தார்கள்.

வாழ்க்கையிலேயே எத்தனை முறை இந்தக் கருவியில் பேசியிருக்கிறோம்? தெரிசா யோசித்துப் பார்த்தால். மிஞ்சினால் நாலு தடவை. எடின்பரோவில் இருந்து மடாலய விஷயமாக கார்டினலோடு இரண்டு நிமிடமும் மூன்று நிமிடமும் பேசியது அதெல்லாம். கையில் வைத்துப் பேச ஒரு குழாயும் காதில் பொருத்திக் கொள்ள இன்னொன்றுமாக இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள சற்றுச் சிரமப்பட வேண்டியிருக்கும். தூரத்தில் இருந்து பல தடவை தேசலாக குரல் கேட்கும். இப்போதெல்லாம் பேக்லைட்டி கன்னங் கறேலென்று பேசவும் கேட்கவும் ஒரே குழாயோடு இது வந்து விட்டது. நாளைக்கு குழாயே இல்லாமல் பேச முடியலாம்.

இந்தியாவுக்குக் கூட இந்த டெலிபோன் வந்துவிட்டதாக கார்டியனில் படித்திருக்கிறாள் தெரிசா. தம்பி வேதையன் வீட்டில் வாங்கி வைத்திருப்பானோ? ஆஸ்டின் கார் போல் இதுவும் மேட்டுக்குடிக்கான சுகபோகமாக இருந்தால்?

யாரோ செருமுகிற சத்தம். தெரிசா திரும்பிப் பார்த்தாள்.

நெடுநெடுவென்று உயரமாக, வயதில் இளையவனாக நுழைந்தவன் ஜெயில் சூப்பிரண்டண்ட் ஆக இருக்க வேண்டும். தேகம் பூஞ்சை என்றாலும் வலிமை கண்ணில் தெரிந்தது. ஆனால் என்ன? கத்தோலிக்கன். இல்லாவிட்டால் ஜோன் ஓஃப் ஆர்க் படத்தை உத்தியோக ஸ்தலத்தில் பிரதானமாக மாட்டி வைத்து பூஜிக்க மாட்டான். நாட்டில் பெரும்பான்மை ப்ராட்டஸ்டண்ட் இருக்கும்போது ஒன்று இரண்டு கத்தோலிக்கர்கள் இப்படி முக்கியமான பதவிகளுக்கு வருவது அபூர்வமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கையில் விரைப்பாகப் பிடித்திருந்த பிரம்பை மேஜையில் உருளாமல் ஜாக்கிரதையாக வைத்து விட்டு, தெரிசாவைப் பார்த்தான். மரியாதை நிமித்தம் சற்றே குனிந்து வந்தனம் செய்தான்.

அம்மா உங்களுக்கு நான் என்ன விதத்தில் உதவி செய்யக் கூடும் என்று சொல்லுங்கள்.

ஐரிஷ்காரன் இல்லை. ஸ்காட்லாந்து. ஸ்காட்லாந்துக் காரர்கள் மரியாதை என்ன விலை என்று கேட்கக் கூடியவர்கள் ஆச்சே. கத்தோலிக்கனாக இருப்பதால் மரியாதையையும் பிரார்த்தனை கிரமத்தையும் கற்றுக் கொடுப்பதோடு, கட்டுச் சாதம் போல் இன்னும் பத்து வருடத்துக்குத் தீராதபடிக்கு மூளையில் அடைத்து அனுப்பியிருப்பார்கள். எடின்பரோ கில்மோர் தெரு கன்யாஸ்திரிகள் போல ஸ்காட்லாந்து முழுக்க மும்முரமாக பல விசுவாசிகளும் செய்கிற காரியம் இது. மிடாக்குடி பிரதேசத்தில் எப்படியோ கிறிஸ்துவமும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

எனக்கு. எனக்கு இங்கே.

தெரிசாவுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. இங்கே எதற்கு வந்திருக்கிறாள்? நினைவு வரவில்லை. இது என்ன இடம்? முன்னால் இருப்பது யார்? ஒன்றும் புலப்படவில்லை. கொஞ்சம் உடம்பு தள்ளாடியது.

சூப்பிரண்டண்ட் விரசாக முன்னால் நகர்ந்து ஆதரவாக தெரிசாவின் தோளைப் பற்றி அவளை நாற்காலியில் அமர்த்தினான். தெரிசாவுக்கு ஒரு மகன் இருந்தால் இந்த வயது இருக்கும். இப்படி ஆதரவாகக் கவனித்துக் கொண்டிருப்பான். அவளுக்கு நெஞ்சு கனத்தது.

பீட்டர், தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாயேடா. தன்னந்தனியாக விட்டுவிட்டு பர்லிங்க்டன் கல்லறை வளாகத்தில் உனக்கு என்ன அந்திம விஸ்ரமம் நிம்மதியாகக் கண்ணை மூடி சவப்பெட்டிக்குள் படுத்தபடி வேண்டியிருக்கு? நீ செய்தது அநியாயம் இல்லையா?

பீட்டர் பீட்டர் என்று மெல்ல இரண்டு முறை முனகினாள் தெரிசா.

அம்மா, உடம்பு சுகமில்லாமல் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்க வேணாம் இல்லையா? ஏதாவது தேவையா? கடுதாசி கொடுத்து விட்டிருந்தால் நானே மடாலயத்தில் வந்து பார்த்திருப்பேனே? இங்கே வேணுமானால் இங்கே. எடின்பரோவில் நீங்க ஊழியம் செய்யும் இடத்தில் வேணுமானால் அங்கே.

சட்டென்று திரும்ப எல்லா நினைப்பும் வர, சுறுசுறுப்பானாள் தெரிசா. இந்தப் பையன் யார்? அவளை எப்படித் தெரியும்? போன தடவை அவள் ஜெயிலுக்கு வந்தபோது வேலை பார்த்தவனா? ஊஹும். அப்போது பள்ளிக் கூடத்தில் இல்லையா படித்துக் கொண்டு இருந்திருப்பான்?

நீங்கள்?

தெரிசா தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

எடின்பரோ தான். தோப்புத்தெருவில் என் தாத்தா விடுதி வைத்திருந்தார். நீங்கள் அங்கே வந்து தங்கியபோது பார்த்திருக்கிறேன். எடின்பரோ வந்த சக்கரவர்த்திகளிடம் தாத்தாவுக்காக நிதி உதவி கேட்டுக் கடிதம் கொடுத்தபோது நான் உங்கள் பக்கத்திலே சின்னப் பையனாக வாய் பார்த்துக் கொண்டு நின்றேன். நினைவு இல்லையா?

அவன் சிரித்தபடி கேட்டான்.

நினைவில் இல்லை என்று சொல்ல தெரிசாவுக்கு வருத்தமாக இருந்தது. அவள் வெறுமனே சிரித்தபடி அவன் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தாள்.

செயிண்ட் ஜேம்ஸ் சர்ச்சில் நாலு வருஷம் முந்தி நீங்க பியானோ வகுப்பு எடுத்தபோது என் வீட்டுக்காரி உங்க சிஷ்யை.

அப்படியா? பெயர் என்ன?

தெரிசா பரபரப்பாகக் கேட்டாள். எப்படியாவது இந்தப் பையனோடு சொந்தம் கொண்டாட வேண்டும் என்று மனசு அடித்துக் கொண்டது.

மூரியல். கொஞ்சம் மெலிந்த பெண். தங்க நிறத்துலே தலைமுடி இருக்கறவள்.

தெரிசா தனக்குத் தெரிந்த தங்க நிறத் தலைமுடிப் பெண்களை எல்லாம் நினைவு படுத்திப் பார்த்தாள். நாற்பது வயதுக்கு மேற்பட்ட, தேவ ஊழியம் பார்க்கிற, சால்வேஷன் ஆர்மியில் சேர்ந்து, அநாதைகளுக்காகப் பழைய துணியும் நிதியும் வாங்க தெருவோரத்தில் டிரம்பெட் ஊதுகிற, பேங்கில் கணக்கு பதிந்து தருகிற ஸ்தூல சரீரமுள்ள பெண்கள். இவன் வயதில் யாரும் மனதில் உடனடியாக வர மாட்டேன் என்கிறார்கள்.

ஆமா, நினைவு வந்துவிட்டது. அவள் டால்ரி தெருதானே.

இவனிடம் பொய் சொல்லக் கூட சந்தோஷமாக இருந்தது. யாருக்கும் எந்த சிரமத்தையும் கொடுக்காத பொய். கூட நாலு கரண்டி சர்க்கரையாக மனசில் பால் பாயசத்தைப் பொங்கி வழிந்து தித்திக்க வைக்கட்டும்.

அவளே தான். நீங்க யாரை மறந்தீங்க, அந்த கீச்சுக் கீச்சுக் குரல் பூனைக்குட்டியை மறக்க?

சூப்பிரண்டெண்ட் பையன் கால் சராய் பாக்கெட்டில் இருந்து தன் பர்ஸை எடுத்து அதில் செருகி வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான். படத்தில் சிரிக்கிற பெண்ணை அவள் பார்த்திருக்கிறாள், பழகியிருக்கிறாள் என்று நம்பத் தயாராக இருந்தாள் அவள்.

பீட்டரை இந்த மாதிரி ஒரு ஃபோட்டோ பிடித்து வைக்காமல் போய்விட்டதற்காக தெரிசாவுக்கு சட்டென்று வருத்தம் எட்டிப் பார்த்தது. தனியாக ஏன்? தெரிசாவும் கூட நின்றபடிக்கு. டெலிபோன் இல்லாவிட்டால் போகட்டும், புது விஷயமாக ஃபோட்டோவாவது அவள் வாழ்க்கையில் எங்கேயாவது மெல்ல நுழைந்திருக்கக் கூடாதா?

பார் நான் ஞாபகம் வச்சிருக்கேன். நீ உன் கல்யாணத்துக்குக் கூப்பிட்டியா? உன் தாத்தா உயிரோடு இருந்தால் கூப்பிடாமல் விட்டிருப்பாரா?

அவள் சூப்பிரண்டெண்ட் பையனை சும்மா சீண்டினாள்.

அம்மா, நாங்க இன்னும் முறைப்படி கல்யாணம் செய்துக்கலே. என்னை ப்ராட்டஸ்டண்ட் ஆகச் சொல்றாங்க.

அதுக்காக.

ஏதோ பேச ஆரம்பித்த தெரிசா கட்டுப்படுத்திக் கொண்டாள். கல்யாணம் இல்லாமல் அவர்கள் சேர்ந்து வாழ்வது அவர்களாக எடுத்த முடிவு. இந்தப் பையன் எதற்காக மாற வேண்டும்? அவன் என்ன தெரிசாவா? நாற்பது வருடம் முந்தி அம்பலப்புழை இந்து பிராமண கன்யகையாக இருந்து கத்தோலிக்க ஸ்திரியாக மாற்றம். அதுக்கு பத்து வருஷம் கழித்து பீட்டரின் பெண்டாட்டியாக, கப்பலில் விதேசியாகப் போகவேண்டி வந்தபோது, கத்தோலிக்கத்தில் இருந்து ப்ராட்டஸ்டண்ட் மதம்.

இதெல்லாம் இல்லாமலேயே இந்த வாழ்க்கை எல்லா மகிழ்ச்சிகளோடும் சோகங்களோடும் ஒழுகிப் போயிருக்காதா?

அம்மா, சூடாக பால் சாப்பிடறீங்களா? ஆர்டர்லியை எடுத்து வரச் சொல்றேன்.

சூப்பிரண்ட் கேட்டபோது சிரிப்போடு வேண்டாம் என்று மறுத்துவிட்டு வந்த காரியத்தைச் சொன்னாள்.

கைதியைப் பார்க்க வேணுமா? ஆயுள் தண்டனை பெற்ற இந்தியனா? இங்கே பெண்ட்வில் ஜெயிலிலா? நான் தானே ஜெயிலர். எனக்குத் தெரியாமல் இந்தியக் கைதியா?

இல்லை, மொரிஷியஸ்காரன் என்று விவரம் இருக்கும். ஒரு பத்து வருடம் முந்தி இங்கேதான் இருந்தான்.

அப்படியா? கொஞ்சம் இருங்க.

அவன் பழைய ரிக்கார்டுகளைக் கொண்டுவரச் சொல்லி ஆர்டர்லியை அனுப்பினான். தூசியைக் கிளப்பிக் கொண்டு ஒரு கட்டு காகிதங்களும் பைண்ட் செய்த நோட்டுப் புத்தகங்களும் அவனுடைய சுத்தமாக மேஜையில் பரந்து கிடந்து இடத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன.

மொரிஷியஸ். சாமி. கென்சிங்க்டன் தெரு பீட்டர் மெக்கன்ஸியை கொலை செய்த குற்றத்துக்காக.

பீட்டர் மெக்கன்ஸி என் கணவன்.

தெரிசா இடைமறித்த போது அவள் குரல் கம்மி இருந்தது.

வருத்தப்படுகிறேன் அம்மா. ரொம்ப வருத்தப்படுகிறேன்.

அந்தப் பையன் கண்களில் சோகம் தெரிந்தது.

பரவாயில்லை. அது நடந்து பத்து வருடம் ஆகியாச்சு. அந்தக் கைதி இப்போ எங்கே.

தெரிசா முடிப்பதற்குள், பழைய ரிக்கார்டில் ஆள்காட்டி விரலால் கோடு மாதிரி கிழித்தபடி சூப்பிரண்டண்ட் உரக்கப் படித்தான்.

சாமி. கைதி எண் முன்னூத்து முப்பத்தெட்டு. நாலு வருட தண்டனைக்கு அப்புறம் மேல் விசாரணை கோரிக்கை ஏற்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப் படாததால் விடுதலை.

சாமி வெளியே போய் கிட்டத்தட்ட நாலு வருடம் கடந்து போச்சு அம்மா.

தெரிசாவுக்குத் திரும்ப மனதில் சந்தேகம் பலமாக எழுந்து வந்தது.

இங்கே எதற்காக வந்தேன்?

வாசல் வரை அவள் கூட நடந்து வழியனுப்ப வந்தான் சூப்பிரண்டண்ட்.

அம்மா, வாரக் கடைசியில் நான் உங்களை என் வீட்டுக்கு அழைத்துப் போக அனுமதி தருவீங்களா? மூரியலும் நானும் உங்களோடு ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுக்க இருக்க வேணும். தயவு செய்து சரி என்று சொல்லணும்.

அவன் தெரிசாவின் கையைப் பற்றியபடி சொன்னான்.

தெரிசா அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தாள்.

மூரியலுக்கு என் ஆசிர்வாதத்தைச் சொல்லு.. நீயும் அவளும் ஆஸ்திரேலியா தேசத்துக்குப் பயணம் போகிறதாக திட்டம் இருந்தால் தெரியப்படுத்து.

அவனுக்கு விளங்கவில்லை.

சனிக்கிழமையன்று நான் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் வச்சிருக்கேன். தேவ ஊழியம் செய்ய அங்கே போய் இருக்கச் சொல்லி திருச்சபை உத்தரவு.

கர்த்தர் உங்களோடு எப்பவும் இருக்கட்டும் அம்மா.

வாசலில் காத்து நின்ற மோட்டார் காரில் அவள் ஏறக் கார்க் கதவைத் திறந்தபடி சொன்னான்.

உன்னோடும் தான். மூரியலை உடனே கல்யாணம் செஞ்சுக்கோ. சரியா?

அவன் தலையசைக்க, வண்டி நகர்ந்தது.

(தொடரும்)

Series Navigationவேழ விரிபூ!ரியாத் தமிழ்ச்சங்க விழாவில் சுகி.சிவம், பேராசிரியர் அப்துல்லா பேச்சு
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *