முள்வெளி அத்தியாயம் -11

This entry is part 2 of 28 in the series 3 ஜூன் 2012

பாட்டிலில் இருந்த குடிநீரை ஒரு மிடறு குடித்து, மறுபடி மூடி வைத்தான் ராஜேந்திரன். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது.

மழை பெய்யும் நீரில் எந்த அளவு எங்கே போய்ச் சேருகிறது? மரத்தின் ஆணி வேர்கள் அருந்துவது எப்பொழுது மழை பொழிந்து நிலம் உள் வாங்கிய ஈரம்? இந்த பாட்டிலில் உள்ள நீரைப் போல அடை பட்டோ, நதி போல ஒழுங்கு பட்டோ, பொழிந்தோ, நிலத்துள் ஊடுருவியோ வெவேறு வடிவங்களில் குதூகலிக்கிறதா? ஈரமான காற்றில் தண்ணீர் காற்றுடன் கலந்ததும் வடிவம் மாறியது எது காற்றா? தண்ணீரா? நிறவதும் நழுவுவதும் சேருமிடத்தின் வசம் விட்டுவிடும் நீர் இயல்பே அற்றதா? அல்லது அவ்வாறு பாவனை செய்கிறதா? விருப்பங்களே அதற்குக் கிடையாதா? இல்லை உலகம் புரிந்து கொள்ள இயலாத பாவனைகளில் தன் விருப்பங்களைச் சுமக்கிறதா? சுத்தம் செய்வதாகவும், நோயைப் பரப்புவதாகவும், வாழ வைப்பதாகவும், அழிப்பதாகவும் எல்லமாகவுமே இருக்க இப்படிப்ப்பட்ட பாவனைகள் துணை போகுமா? அச்சுறுத்தவும், நேசிக்கப் படவும், ரகசிய விருப்பங்களைச் சுமக்கவும் நீர் யாருக்கு வழி காட்டுகிறது? எல்லா உறவுகளின் தொடக்கமும் இந்த வ்ழிகாட்டலில் தானா?

எழுதத் தொடங்கினான்:

ஒரு சருகை உதிர்ந்த பூவை
சிறிதும் பெரிதுமான இறகுகளை
குப்பைகளை எச்சங்களை
அழுக்கை நிழலை
ஒளியை நதியை
எலும்புகளை சாம்பலை
எதையும் அணிந்து
கொள்ளும்
நிலம்
அதன் அடையாளம் இவற்றிற்கு
அன்னியந்தான்
இரண்டாவது நபரின் விழிகளுக்கு
அசல் முகத்துக்கல்ல
**__
**__**
** மதிய நேரம் ப்யூட்டி பார்லர் வெறிச் சோடிக் கிடந்தது. சற்றே கண்ணயர்ந்திருந்த விமலா ஒரு கார் வந்து நிற்கும் சத்தத்தால் கண் விழித்தாள். ரஞ்சனி மேடம். ‘குட் ஆஃடர் நூன் மேடம்” என்று வரவேற்றாள்.

“மனமே கணமும் மறவாதே .. ஜகதீசன் மலர்ப் பதமே..” இந்தப் பாட்டை நீ கேட்டிருக்கியா?’ என்றார் ரஞ்சனி. “இல்லே மேடம்”

ரஞ்சனி தன் கைப்பையை வரவேற்பு மேஜை மீது வைத்து எதையோ தேடத் துவங்கினார்.

“பேசியலா மேடம்?”

“இல்லை. நீ ஒரு வேலை செய்யணும். நீ டிவியிலே ஆக்ட் பண்ணப் போறே”

விமலாவுக்கு ரஞ்சனி மேடம் கண்டிப்பாகக் கிண்டலடிக்கிறார் என்று ஊர்ஜிதமானது.

“என் தொழிலை எல்லாருமே மட்டமாத்தான் நினைக்கறாங்க. நீங்க வேறே ஏன் மேடம் கிண்டலடிக்கறீங்க?”
“இதோ பாரு விமலா.. நான் உன்னைக் கிண்டலடிப்பேனா? என்னோட ப்ரண்ட் ஒருத்தி என்னை ஒரு டிவி ஸீரியல்லே பாடச் சொல்லியிருக்கா. ஒரே ஒரு எபிஸோட் தான் அது. அதே எபிஸோட்ல நீயும் நடிக்கறே. நெஜமாத்தான்.”

“நம்ப முடியலியே மேடம்.”

“முதல்ல இந்தக் கதையைப் படி”. ‘அழகு’ என்று தலைப்பிட்டிருந்தது.
**__
**__**
** காலை மணி எட்டு. இப்போதே வேர்த்து வழிந்தது. திடீரென ஒரு கை தோளில் தட்டியது ‘திடுக்’ கென்றிருந்தது. பின் ‘ஸீட்’டிலிருந்து சிவகாமி “நீ பஸ்ஸுல ஏறி ஸீட் பிடிச்சப்பறம் திரும்புவியான்னு பாத்தா பிரமை பிடிச்ச மாதிரி உக்காந்திருக்கே. இங்கே வா” என பக்கத்து இருக்கையைக் காட்டினாள். சிவகாமி வேலையை விட்ட பின் ‘ஜெராக்ஸ்’ கடையில் விஜயா ஒரே பெண் ஊழியராக ஆகி இருந்தாள்.

“வேறே எங்கேயும் வேலைக்கிப் போவலியா நீ?”
“நாலு மாசமா ஒரு பியூட்டிப் பார்லர்ல வேலை” என்றாள் சிவகாமி ” அங்கே சொல்ற வேலைகள் சிலது அருவருப்பா இருக்குடி”
“அப்படின்னா?”
சிவகாமி அவள் காதில் மெதுவான குரலில் சில விஷயங்களைச் சொல்லி ‘ஜெராக்ஸ்’ எடுக்கறதே டீசன்ட் வேலை” என்றாள். என்ன செய்வது பழகி விட்டாள். பெண் டாக்டர்கள், பெண் நர்ஸுகள் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்கிற மாதிரி தானும் கடைக்கு வரும் பெண்களின் அழகுத் தேவைக்கு என்று நினைத்துக் கொள்வாள். ஜெராக்ஸ் எடுக்கும் இடத்தில் ஸுபர்வைசர், ஸீனியர் இட நெருக்கடியைப் பயன்படுத்திச் செய்கிற சில்மிஷங்களும் நாள் முழுதும் நின்றபடி வேலை செய்வதும், மிஷின் சூடும் அவளை வேலையை விட்டு நிற்கச் செய்திருந்தன.

அண்ணா சாலை நிறுத்தத்தில் விஜயா இறங்கி விட்டாள். அவளிடம் தான் பேச நினைத்ததை ஏன் பேச முடியவில்லை என்று சிவகாமிக்கு வியப்பாக இருந்தது. ஆனால் யாரிடமாவது பேசித்தானே ஆக வேண்டும்? திருவல்லிக்கேணி வந்து விட்டது. இறங்கினாள். ‘பஸ் ஸ்டாப்பு’க்கு அருகிலேயே பார்லர். இன்னும் சூப்பர்வைஸர் வந்து திறக்கவில்லை. நிம்மதியாயிருந்தது. விஜயாவை மொபைலில் அழைத்தாள்.

“விஜி.. கஸ்டமர் நிறைய வந்துட்டாங்களா?’
‘இல்ல. கரன்ட் இல்ல..’
‘உன் கிட்டே ஒண்ணு பேசணும்’
“இவ்வளவு நேரம் பஸ்ஸுல பேசியிருக்கலாமே?”
“ஏனோ தோணலடி”
“சரி சொல்லு”
“எங்க பார்லருக்கு க்ரீம் சப்ளை பண்ண ஜெகன்னு ஒருத்தர் வர்ராறு”

“எங்கிட்ட க்ரீம் வாங்கக் காசில்லடி”

“கிண்டல் பண்ணாதடி. அவரைப் பத்தித் தான் பேசணும்”

“அவன்னு சொல்லாம அவருன்னு சொல்லும் போதே சந்தேகப்பட்டேன். எத்தனை நாளா?”

“ரெண்டு மாசமா”

“பாத்துடி.. உன்னை மூணு மாசத்துக்கு முழுகாமப் பண்ணிடப் போறான்”

“போடி.. அப்பறம் நான் போனைக் கட் பன்ணிடுவேன்”

“கோவத்தைப் பாரு… பாக்க எப்டி இருப்பான். சந்தானம் மாதிரியா இல்லே கஞ்சா கருப்பு மாதிரியா?”

“போடி… பரத் மாதிரி இருப்பாரு”

“பெருமையப் பாரு… ஜாக்ரதடீ… ஏற்கனவே கல்யாணம் ஆனவனா இருக்கப் போறான்..”

‘”ஒரு நாளைக்கி பாத்திமா கிட்டே இரவல் கேட்டு ‘புர்கா’ போட்டுக்கிட்டுப் பின்னாடியே போயி அவன் வீட்டைக் கண்டுபிடிச்சேன்”

“அடிப் பாவி.. சி ஐ டி வேலையெல்லாம் பண்ணியிருக்கே..”

“இன்னோரு நாளைக்கி அவுங்க பக்கத்து வீட்டுக்குப் போயி என்னோட பிரண்டு வீட்டில இவங்களைப் பத்தி விசாரிக்கச் சொன்னாங்கன்னு விவரமும் கேட்டேன். நல்ல குடும்பம்.
அவுரு வீட்டுக்கு ஒரே பையன். எங்க சாதியில்ல.. ஆனா மேல் சாதிதான். செட்டியாரு..”

“அடிக்கள்ளி.. அப்போ சீக்கிரமே கெட்டிமேளந்தான்னு சொல்லு. நல்ல பார்லரா பாத்து அலங்காரம் பண்ணிக்க.. உங்க கடை மாதிரி டுபாக்கூர் பார்லர்ல பண்ணாதே”

“சீ.. ப்போடி… நான் இன்னம் சம்மதமின்னு அவரு கிட்டே சொல்லவேயில்லே”

“ஏண்டி? இன்னும் என்ன வேணும்?”

“என்னைப் பாக்கும் போதெல்லாம் நீ ரொம்ப அழகாயிருக்கேங்கறாரு.. ஏன் இப்படிப் பொய் சொல்லறாருன்னு பயமாயிருக்கு”

Series Navigationகாசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!தங்கம் – 9 உலகத் தங்கக் குழுமம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *