மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4

This entry is part 11 of 28 in the series 3 ஜூன் 2012

 

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன.

பெர்னாட் ஷா (Preface to Mrs. Warren’s Profession Drama)


ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர்.  அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வி யுற்ற வணிகத்துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர்.  இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார்.  அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  நிரம்ப இலக்கிய நூற் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வியுறும் நாடகங்களை எழுதினார்.  பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களை விமர்சனம் செய்து 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராகவும் உரைமொழி ஆற்றினார்.

அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), இன்பியல் நாடகங்கள் (Plays Pleasant), துன்பியல் நாடகங்கள் (Plays Unpleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House), ஆயுத மனிதன் (ஊழ் விதி மனிதன்) (The Man of Destiny) (1898), மிஸிஸ் வார்ரனின் தொழில் (Mrs. Warren’s Profession) (1893) போன்றவை.  ஐம்பது ஆங்கில நாடகங்கள் எழுதிய பெர்னாட் ஷாவுக்கு 1925 இல் இலக்கிய நோபெல் பரிசு அளிக்கப்பட்டது.

 

மேடம் மோனிகா வார்ரன் நாடகத்தைப் பற்றி :

[தமிழில் எழுதப் பேசும் வசதிக்காக பெர்னாட் ஷாவின் நாடகப் பெயர்கள் சிலவற்றை நான் எளிதாய் மாற்றி இருக்கிறேன்.]

பெர்னாட் ஷா நாடகத்தின் அடிப்படைக் கருத்து இதுதான் :  ஏழ்மையாலும், சமூகப் புறக்கணிப்பாலும், தனிப்படுவ தாலும், இல்லாமையாலும், வேலையின்மையாலும் சில மாதர் பரத்தையர் தொழில் சிக்கிக் கொள்கிறார் என்பதாக பெர்னாட் ஷா தன் நாடக முன்னுரையில் கூறுகிறார்.  மிஸிஸ் மோனிகா வார்ரன் ஒரு நடுத்தர வயது மாது.  உயர்தரப் பரத்தையர் மாளிகையை மேற்குடிச் செல்வந்தருக்கும், சமூகச் செல்வாக்கு மாந்தருக்கும் நடத்தி வரும் உரிமையாளி. நளினமும், நாகரீகமும் கவர்ச்சி மேனியும் கொண்டவள். மோனா லிஸா போன்று பார்க்க ஓர் அழகிதான். அவளுக்கு விவியன் என்றொரு வாலிபப் புதல்வி. மகள் கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பட்டதாரி. அவளது கல்லூரிப் படிப்புக்குத் தொடர்ந்து பணத்தை அனுப்பிய அவளது அன்னை எப்படிப் பணம் சம்பாதிக்கிறாள் என்று தெரியாமல் இருக்கிறாள்.  அந்த இரகசியம் தெரிந்ததும் விவியன் வெகுண்டு, வெடித்து அன்னையைத் திட்டி அறவே வெறுக்கிறாள்.  தாய் சிறு வயதில் வறுமைப் பிடியில் பட்ட துயர்களைக் கூறிப் பரத்தையர் தொழிலில் தான் தள்ளப் பட்ட காரணத்தை விளக்குகிறாள்.  மகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தர்க்கத்தின் முடிவில் உடன்பட ஒருவரும் இயலாது இருவரும் தாம் விரும்பும் தனித்தனிப் பாதையில் போகிறார்.  மோனிகா தன் பரத்தையர் தொழிலைத் தொடர்கிறாள்.  தாயைப் போல பிள்ளை என்பார் சிலர். ஆனால் விவியன் ஒரு விதி விலக்கு மங்கை.  அவள் அன்னையைப் போலின்றி ஒரு கௌரவத் தொழிலில் உழைத்துச் சம்பாதிக்க ஈடுபடுகிறாள்.

மிஸிஸ் வார்ரனின் தொழில் நாடகத்துக்குத் தடை உத்தரவு

1893 இல் எழுதிய பெர்னாட் ஷாவின் நாடகம் 1925 ஆண்டுவரை அடுத்தடுத்துத் தடை செய்யப்பட்டு இங்கிலாந்தில் அரங்கேறாது முடங்கியே மூலையில் கிடந்தது. பிரிட்டனின் அக்கால அரங்க மேடை அதிபரரான லார்டு சேம்பர்லின் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” நாடகத்தை எந்த நகரிலும் அரங்கேற்றக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார்.  காரணம் அந்த நாடகம் பரத்தையர் தொழிலைப் பற்றிக் காட்டி ஆடவரையும், மாதரையும் இழிவு செய்கிறது.  பரத்தையர் தொழில் நாட்டில் ஊன்றி வளர்வதற்கு மூல காரணமே சமூகம் தான் என்பது நாடகக் காட்சியாக வெளியாவது அப்போது வரவேற்கப் படவில்லை.  1902 ஆண்டில் லண்டனில் உள்ள “நியூ லிரிக் கிளப்” தன் உறுப்பினர் மட்டும் பார்க்க அந்த நாடகம் முதலில் அரங்கேறியது.  1905 இல் நியூ யார்க்கில் “மிஸிஸ் வார்ரன் தொழில்” நாடகம் முதன்முதல் அரங்கேறிப் பாதியில் போலீசார் குறுக்கிட்டு நடிகர் குழுவினர் கைது செய்யப் பட்டனர். பொதுநபர் ரசிக்க 1925 ஆண்டில்தான் அதை லண்டன் நாடக அரங்குகள் மேடையில் காட்ட முன்வந்தன.

 

பரத்தைமைத் தொழில் (Prostitution) பற்றி பெர்னாட் ஷாவின் கருத்துகள்

பெர்னாட் ஷா 1893 இல் “மிஸிஸ் வார்ரனின் தொழில்” என்னும் நாடகத்தை எழுதினார்.  அது பரத்தைமைத் தொழலில் ஈடுபட்டு ஊதியம் சம்பாதிக்கும் மிஸிஸ் வார்ரனைப் பற்றியது. அந்த வெறுப்புத் தொழிலில் கிடைத்த பணத்தை மகளுக்குத் தெரியாமல் சேர்த்து மகளைப் பட்டப் படிப்பில் ஏற்றி வளர்த்த நிகழ்ச்சியே நாடகத்தின் ஆணிவேராய் அமைந்துள்ளது.  இறுதியில் அதை அறிந்து கொண்ட மகள் ஆவேசம் கொண்டு அன்னையைப் பிரிவதே நாடக உச்ச முடிவாக எழுதப்பட்டுள்ளது.

மிஸிஸ் வார்ரன் உட்பட பரத்தைமைத் தொழிலில் பங்கு கொண்ட மற்றவரும், அவளது ஆசை நாயகரும் கண்ணியமாக காட்சி அளித்துப் போவதாய் பெர்னாட் ஷா காட்டி இருக்கிறார்.  இந்த கசப்பு நாடகத்தை தடை செய்யத் தகுதியுள்ள ஆபாச நடைப் போக்குகள், முரண்பாடுகள் எதுவும் வசனங்களில் இல்லை.  பரத்தைமை பற்றிய ஆபாசக் காட்சிகள், அமங்கலச் சொற்கள், அதிர்ச்சி வரிகள் எவையும் நாடகத்தில் எங்கும் காணப் படவில்லை. நாடக வசனங்களை இரட்டைப் பொருளில் பெர்னாட் ஷா எழுதி இருப்பது திறமையான நவீன நடைப் போக்காக திகைக்க வைக்கிறது.

பரத்தையர் தொழில் மாளிகை வைத்து நடத்தும் மிஸிஸ் வார்ரன் முரண்பாடு நாடகத்தை பெர்னாட் ஷா எழுதியதின் நோக்கம் என்ன ?  பரத்தைமைத் தொழிலின் மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட நெறிகள் அல்ல !  ஆடவரின் ஆதிக்க வன்முறை வெறிகள் அல்ல !  வறுமை, ஏழ்மை, பசி, பட்டினி, தனிமை, வேலையின்மை, சமூகப் புறக்கணிப்பு, முறிந்த குடும்பம், வன்முறைக் கற்பழிப்பு, கட்டாயத் தொழில் அழுத்தம் போன்ற சமூக இடை யூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் தள்ளி விடுகின்றன என்று பெர்னாட் ஷா தன் நாடக முகவுரையில் கூறுகிறார்.

**********************

 

நாடக  உறுப்பினர்

1. மேடம் மோனிகா வார்ரன் [Mrs. Kitty Warren] (45 வயது)

2. மிஸ் விவியன் வார்ரன் – [Ms. Vivie Warren] மோனிகாவின் ஒற்றை மகள் (வயது : 22)

3. பாதிரியார் சாமுவெல் கார்டுநர் [The Rev. Samuel Gardner] (வயது : 52)

4. பிராங்க் கார்டுநர் [Frank Gardner], விவியனின் காதலன் & சாமுவெல் பாதிரியாரின் மகன் (வயது : 20)

5. வில்லியம் பவல் [Praed] (நடுத்தர வயது) : மேடம் மோனாவின் கூட்டாளி

6. ஜார்ஜ் வாலஸ் (Sar George Crofts) (50 வயது) : மேடம் மோனாவின் தோழன்.

************************

மேடம் மோனிகாவின் வேடம்

(Mrs. Warren’s Profession)

நான்கு அங்கங்கள்

(முதலாம் அங்கம்)

அங்கம் -1 பாகம் -4

 

இடம்:  ஹாஸ்லிமியர், ஸுர்ரி, இங்கிலாந்து

நடந்த ஆண்டு : 1893

காலம் :  வேனிற் காலப் பிற்பகல்

அரங்க அமைப்பு:  தோட்டத்தில் அமைந்திருக்கும் வேனிற் குடில் மாளிகை. பின்புலத்தில் மரம் செடிகள் நிறைந்த ஒரு குன்று.  மரம் ஒன்றில் ஒரு சைக்கிள் சாத்தப்பட்டிருக்கிறது.  மர நிழலில் கட்டியுள்ள ஒரு தூரியில் இள நங்கை ஒருத்தி கையில் புத்தகத்தைப் படித்த வண்ணம் ஒருபுறம் சாய்ந்து முகமத்தைக் காட்டிப் படுத்திருக்கிறாள்.  குடிசையின் பின்புறத்திலிருந்து ஒரு நடுத்தர வாலிபர் (Praed] இளமாதை நோக்கி வருகிறார்.  வழி தவறிய வாலிபர் வாசல் அருகில் நின்று இள நங்கையிடம் பேசுகிறார்.  வாலிப கோட் சூட் அணிந்து குறுந்தாடியோடு காணப் படுகிறார்.  இள நங்கையின் வயது 20 மேல் இருக்கலாம். கவர்ச்சி அழகி, உறுதியான உடற்கட்டு, எடுப்பன தோற்றம். நளினமோடு பேசும் நடுத்தர வகுப்பு மங்கை. கணிதம்,விஞ்ஞானம் படித்த கல்லூரிப் பட்டதாரி. வில்லியமும், விவியனும் உரையாடிக் கொண்டு வரும் போது தாய் மோனிகாவும் அவளது நெடுங்கால நண்பர் ஜார்ஜ் வாலஸும் வருகிறார்கள்.  விவியனைச் சந்தித்த வாலஸ் அவள் தன் மகளோ வென்று சந்தேகப் படுகிறார்.

(சென்ற வாரத் தொடர்ச்சி)

(அப்போது தாய் மிஸிஸ் மோனிகா வார்ரன் வருகிறாள்.  அவளைத் தொடர்ந்து அவளது நெடுங்கால நண்பன் ஜார்ஜ் வாலஸ் பின்னால் நுழைகிறான். மோனிகாவுக்கு 40 அல்லது 45 வயதிருக்கும்.  எழிலுடன் எடுப்பாக இருக்கிறாள். கவர்ச்சியான படாடோப உடை அணிந்து அலங்காரத் தொப்பி வைத்துள்ளாள். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை. செல்வச் செருக்கு வனப்பு மேனியில் மிளிர்கிறது. பின்னால் வரும் ஜார்ஜ் வாலஸ் சற்று வயதானர். 50 வயது. பெரும் செல்வந்தர். நல்ல உயரம், தோற்றம். சற்று கொடூர முகம். சோக முகம்)

மிஸ். விவியன்:  ஈதோ என் தாயே வருகிறாள்.  ஆனால் அவள் கூட வரும் அந்த முதியவர் யார் ?  வாருங்கள் அம்மா நலமா ? மிஸ்டர் வில்லியம் பவல் உங்களுக்காக இங்கு அரை மணிநேரம் காத்திருக்கிறார் !

மிஸிஸ் மோனிகா வார்ரன்: எனக்காக எப்போதும் பலர் காத்திருக்கிறார், இராப் பகலாய் ! வீணாக அரை மணிநேரம் எனக்காக நீ காத்திருப்பது உன் மீதுள்ள தவறு வில்லியம். நான் பகல் 3 மணி ரயிலில் வருவது உனக்குத் தெரியும். (விவியனைப் பார்த்து)  தலையில் உன் அலங்காரத் தொப்பி வை, விவியன் !  வெயில் மண்டையைச் சூடாக்குது. ஓ ! உனக்கு அறிமுகம் செய்ய மறந்து விட்டேனே !  இவர்தான் ஜார்ஜ வாலஸ் !  என் நெடுங்கால நண்பர் !  ஜார்ஜ் !  இவள் என் குட்டி மகள் !

ஜார்ஜ் வாலஸ்:  (முக மலர்ச்சியின்றி)  இளநங்கையின் அழகிய கரத்தைக் குலுக்கலாலா ?  என் கரம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும், என் நெடுங்காலத் தோழி மகளின் கையைக் குலுக்க.

மிஸ். விவியன்:  (வாலஸை மேலும் கீழும் பார்த்து) நிச்சயம் கை கொடுப்பேன் ! (கையை நீட்டிக் குலுக்கும் போது வாலஸ் கரத்தை பலமாக அழுத்துகிறாள். வாலஸ் கண்கள் பிதுங்கும்படி.)  உள்ளே வருகிறீரா ?  அல்லது நானிரண்டு நாற்காலிகள் கொண்டு வரவா ?  (வீட்டு முன் சென்று இரு தோட்ட நாற்காலிகளைத் தூக்கி வருகிறாள்.)  உட்காருங்கள் மர நிழலில்.

மிஸிஸ். மோனிகா வார்ரன்:  என்ன ஜார்ஜ் !  என்ன நினைக்கிறாய் என் மகளைப் பற்றி ?

 

ஜார்கஜ் வாலஸ்:  தாயைப் போல பிள்ளை !  நல்ல வனப்பு !  வலுத்த குதிரை போல் உடம்பு !  கைப்பலம் அதிகம் !  (தன் கையைத் தடவுகிறார்) நல்ல சுறு சுறுப்பு ! மோனிகா !  பார் தொழிலில் உன்னை மிஞ்சி விடுவாள் !

மிஸிஸ் மோனிகா வார்ரன்:  விவியன் !  நாற்காலியை வாலஸ் போட்டுக் கொள்வார்.  நீ இங்கு வா !

மிஸ் விவியன்:  (ஒவ்வொரு கையிலும் நாற்காலியுடன்)  இதோ ! போட்டு அமருங்கள். (வாலஸைப் பார்த்து) டீ போட்டுக் கொண்டு வரவா ?

மோனிகா:  விவியன் !  தொண்டை வரட்சி எனக்கு. எல்லாருக்கும் போட்டுக் கொண்டு வா டீ !

மிஸ். விவியன்:  (ஓடிய வண்ணம்)  கொண்டு வருகிறேன். உட்காருங்கள் மர நிழலில் !

(எல்லாரும் நாற்காலியில் அமர்கிறார்)

மோனிகா:  வில்லியம் பார் வாலஸை !  வாலிபராய் இருந்த வாலஸ் இப்போது மிக வயோதிகராய்த் தெரிகிறார். (வாலஸ் நரம்புத் தளர்ச்சியுடன் தடுமாற்றத்தில் விழிக்கிறார்)  மூன்று வருடமாய் என் வாலிப மகளைக் காட்டச் சொல்லி வற்புறுத்தினார் வாலஸ் !  இதோ அழைத்து வந்துள்ளேன். அவளோடு பேச வேண்டாமா ?

வில்லியம்:  (தயக்கமுடன்) மோனிகா ! நீ தவறாய் எடுத்துக் கொள்ளா விட்டால் நான் இதைச் சொல்லலாமா ?  விவியன் ஒன்றும் பேபி அல்ல மோனிகா !  அவளுக்கு ஓர் தனித்த சுயத்துவம் வந்துவிட்டது.  அவளொரு வாலிப மாது.  இளமங்கை இல்லை.

மோனிகா:  கேளுங்கள் இந்த வேடிக்கை வாசகத்தை !  இங்கே பேசி வில்லியத்தை நன்றாக ஏமாற்றி இருக்கிறாள் என் மகள் !

வில்லியம்:  மோனிகா !  நீ விவியனை இன்னும் ஒரு சின்னஞ் சிறு பெண்ணாக நடத்துவது அவளுக்குப் பிடிக்க வில்லை தெரியுமா ?

மோனிகா:  வில்லியம் மேலும் பேசாதே.  என் மகளை எப்படி நான் நடத்த வேண்டும் என்று நீ எனக்குச் சொல்லாதே !  (வாலஸ் காதுக்குள் முணுமுணுத்து)  இன்று என்ன வாயிற்று இந்த வில்லியத்துக்கு ?

வாலஸ்:  மோனிகா !  உன்னைப் பற்றித் தெரியும், உன் மகளைப் பற்றி எனக்குத் தெரியாது ! ஆனால் வில்லியத்தைப் பற்றிச் சிறிது தெரியும். இப்படி எல்லாம் என்னிடம் கேட்காதே.

மோனிகா:  (கோபத்துடன்) இன்று உன் போக்கே சரில்லை.  இரயில் பயணத்தின் போது மகிழ்ச்சியாய் இருந்தாய் !  என் மகளைப் பார்க்க விரும்பினாய் !  இப்போது பார்த்த பிறகு ஏன் சோகமாய் இருக்கிறாய் ? ஏதோ பறி கொடுத்தவன் போல் பதறிக் கொண்டிருக்கிறாய் !  இங்கிருப்பது பிடிக்க வில்லை என்றால் போய்விடு !

 

மோனிகா:  (வில்லியத்தைப் பார்த்து) விவியனைப் பற்றி நீ வேறென்ன நினைக்கிறாய் ?

வில்லியம்:  மோனிகா கண்மணி !  விவியன் ஓர் அறிவாளிப் பெண். அவளை நீ மதிப்புடன் நடத்த வேண்டும்.  அவள் சொல்வதைக் கவனித்துக் கேள்.

மோனிகா:  (வியப்புடன்)  என்ன ?  மகளை நான் மதிப்புடன் நடத்தவா ?  அவள் இன்னும் எனக்கு பேபி விவியன்தான்.  என் செல்ல மகள் !

(அப்போது விவியன் வெளியே வருகிறாள்)

விவியன்:  அம்மா !  வீட்டுக்குள் வாருங்கள். டீ தயராகி விட்டது.  விருந்தினருக்கு இனிப்புத் தின்பண்டம் என்ன வெல்லாம் மேஜையில் வைக்கலாம் ?

மோனிகா:  மன்னிக்க வேண்டும், மகள் அழைக்கிறாள்.  நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள்.  டீ தயாராகி விட்டது.  அழைக்க வருகிறேன். (உள்ளே போகிறாள்)

வாலஸ்:  வில்லியம் சற்று எழுந்து நடப்போமா ?  உம்மை ஒன்று முக்கியமாகக் கேட்க வேண்டும் தாயும் மகளும் இல்லாத போது !

(தோட்டத்தில் எழுந்து நடக்கிறார்கள்)

வில்லியம்:  என்ன ரகசியம் கேட்கப் போகிறீர் ?

வாலஸ்:  எனக்கின்று விவியனைப் பார்த்த பிறகு ஒரு சந்தேகம் வந்து விட்டது ?  மோனிகா உன்னிடம் எப்போதாவது சொல்லி இருக்கிறாளா, விவியனின் தந்தை யாரென்று ?

வில்லியம்:  ஒருபோதும் சொல்லிய தில்லை !

வாலஸ்:  உனக்கு யாராக இருக்குமென்று தெரிகிறதா ?

வில்லியம்:  இல்லை !  நான் அதைப் பற்றி நினைக்க வில்லை.

வாலஸ்:  எனக்குத் தெரியும், அது என் யூகமே,  அவள் சொல்லி இருந்தாலும் நீ மறைக்கலாம்.  நான் தினமும் சந்திக்கப் போகும் இவளுடைய பூர்வீகக் கதையை நாம் தெரியாமல் இருப்பதா ?

வில்லியம்:  தெரிந்தால் என்ன ?  தெரியா விட்டால் என்ன ?

வாலஸ்:  அப்படிச் சொல்லாதே வில்லியம் !  மோனிகா உனக்கும் தோழி, எனக்கும் தோழி.  அவளுடைய அருமை மகளின் தந்தை யாரென்று தெரியாமல் இருப்பதா ?

 

வில்லியம்:  வாலஸ் !  நீ சொல்வதைப் பார்த்தால் உனக்குத் தெரியும் போல் எனக்குத் தெரியுது.

வாலஸ்:  விவியனின் அழகில் கவரப் பட்டேன் நான் !

வில்லியம்:  (அதிர்ச்சியோடு) என்ன ?  அவள் இன்னும் ஒரு சிறு மங்கைதான். வாலிப மாது என்று நான் சொன்னாலும்.

வாலஸ்:  அந்த மாதிரி மோகம் இல்லை எனக்கு.  அதிர்ச்சி அடையாதே !  எனக்குப் புதிராய் உள்ளது.  ஒரு வேளை விவியன் என் மகளாய் இருப்பாளோ ? அப்படி ஓர் உணர்ச்சி.  அவள் தோற்றம், முகம், அசைவுகளில் ஓர் ஒற்றுமை !

வில்லியம்:  அட கடவுளே !  அப்படியும் இருக்குமா ? வேடிக்கையாய் இருக்கிறது கேட்க !  படித்து பட்டம் பெற்ற வாலிபப் பெண் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்று உன் மனைவிக்குத் தெரியமா ஜார்ஜ் ?

 

(தொடரும்)

***************

தகவல் :

Based on The Play : Mrs. Warren’s Profession By : George Bernard Shaw, – Plays Unpleasant) (1958)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) http://en.wikipedia.org/wiki/Mrs._Warren’s_Profession

(f) http://www.enotes.com/mrs-warrens-profession

(g) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(h) BBC DVD Video Limited – Bernard Shaw’s Mrs. Warren’s Profession Released in August 2006 (109 minutes)

(i) A Guide to the Plays of Bernard Shaw By : C.B. Purdom (1964)

(j) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

(k) http://www.online-literature.com/george_bernard_shaw/mrs-warrens-profession/

 

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 31, 2012)

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)நான் செத்தான்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *