ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!

author
0 minutes, 7 seconds Read
This entry is part 16 of 28 in the series 3 ஜூன் 2012


“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” – திருவள்ளுவர்

இந்த ஜூன் மாதம், சென்னை நகரம் நான்காவது முறையாக  தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (Lesbian, Gay, Bisexual, Transgender) ஆதரிக்கவும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் எங்களின் பாலின மற்றும் பாலியல் வெளிப்பாட்டையும் அவற்றின் பன்மையையும் கொண்டாடுவதே ஒரு மாத காலம் நடைபெறவிருக்கும் இவ்விழாவின் நோக்கம்.

இந்தியாவில் முதல்முறையாக 1999 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் வானவில் விழா கொண்டாடப்பட்டது. தற்போது பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, கோயம்பத்தூர், தில்லி, கொல்கத்தா, மும்பை, பூனே, திருச்சூர் என்று ஒன்பது நகரங்களில் வானவில் விழா கொண்டாடப்படுகிறது.

பல நிறுவனங்களும், குழுமங்களும், அமைப்புகளும் ஒன்றாக இணைந்து, இந்த ஜூன் மாதம், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கான கலை விழா,  மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் திரைப்பட விழா,  மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் பெற்றோர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி, எங்களை விட்டு பிரிந்த எம் சமூக நண்பர்களுக்கு நினைவஞ்சலி போன்ற பல நிகழ்சிகளை திட்டமிட்டுள்ளன. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அமையவிருப்பது — சென்னை நகர வரலாற்றில் நான்காவது முறையாக மெரீனா கடற்கரையில் ஜூன் 24 ஆம் தேதி நடக்கவிருக்கும் சென்னை வானவில் பேரணி. இந்த நிகழ்சிகள் பற்றிய விவரங்களை http://chennaipride.net இணையதளத்தில் காணலாம்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” என்ற வள்ளுவரின் வாக்கியத்தை நாங்கள் இங்கு நினைவுகூர்கிறோம். ஆண்-பெண் உறவுகள் என்கிற ஏற்றுக்கொள்ளப்பட்ட விழைவுகளுக்கும், பாலின அடையாளங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் வெளியே நிற்பவை எங்களுடைய காதல், அன்பு மற்றும் அடையாளங்கள். இவை சமூகத்தால், ‘இயற்கைக்குப் புறம்பானவை’ என்றும் ‘வெளிநாட்டு இறக்குமதிகள்’ என்றும் தூற்றப்படுகின்றன. ஆனால் இந்தக் காதல்களும், அடையாளங்களும் எங்களுக்கு இயற்கையானவை. நம்முடைய பண்பாட்டிலும் தொன்றுதொட்டு இருந்து வருபவை.

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலியல் மற்றும் பாலின வரையறைகளுக்குள் அடங்காதவர்கள் என்ற காரணத்தால், எங்களது மனித உரிமைகள் மறுக்கப்படுவது அநீதி.

இந்த வானவில் விழாவில் –

– ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர் நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “18 வயதை எட்டிய இருவர் விருப்பதுடன் ஈடுபடும் பாலியல்  உறவு குற்றமல்ல” என்று தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். இந்தத் தீர்ப்பை நிலைநிறுத்தி, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின், அடிப்படை மனித உரிமைகளை பாதுகாத்து, அவர்களும் எல்லோரையும் போல, சுதந்திரமாகவும் கௌரவத்துடன் சம உரிமைகளோடும் வாழ உடனடியாக வழி செய்யுமாறு, இந்திய உச்ச நீதி மன்றத்தை வேண்டுகிறோம்.

–  பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், உடல்நலம், சமூக சம உரிமை, புறக்கணிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவது போன்ற முக்கியமான அணுகுமுறைகளில், மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை சேர்க்க பரிந்துரை செய்த இந்திய திட்டக் குழுவை நாங்கள் மனமாரப் பாராட்டுகிறோம். இந்த பரிந்துரைகளை செயல்பாடுகளாக மாற்றி, கல்வி, உடல்நலம், சட்டப் பாதுகாப்பு, சமூக வளம் போன்ற துறைகளில் எங்களை இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

–    அரவானிகள் நல வாரியத்தின் திட்டங்களையும் பணிகளையும் மீண்டும் தொடங்கி அவற்றில் மேலும் முன்னேற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இந்த நல வாரியம் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் தமிழகத்தில் முதன் முதலில் துவங்கப்பட்ட ஒன்று. தமது பாலின வெளிப்பாட்டின் காரணமாகவோ, பாலியல்பின் அடிப்படையிலோ ஒதுக்குதலுக்கும் வன்முறைக்கும் உள்ளாகும் சிறுபான்மையினர் அனைவரையும் உள்ளடக்கும் விதத்தில் இந்த நல வாரியத்தின் பணிகளை அமைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

–    சமீபத்தில் கேரளத்தில் கொலை செய்யப்பட்ட மரியா/ அனில் என்ற சமூக ஆர்வலர் உட்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைக்கு உட்படுத்தப்படும் பாலின- பாலியல் சிறுபான்மை மக்களை நாங்கள் இத்தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களை இழந்தமைக்கான எங்களது துயரத்தை வெளிப்படுத்துகிறோம். மக்களின் பாதுகாப்பிற்கென உள்ள அமைப்புகளாகிய காவல் துறை, நீதித் துறை, குடும்பங்கள் போன்றவையே இத்தகைய வன்முறையை நிகழ்த்துகின்றன என்பது வருத்தத்திற்குரியது. இதற்கான தீர்வுகள் விரைவில் வேண்டும். கடந்த ஆண்டில் மட்டுமே பாலின மற்றும் பாலியல் சிறுபான்மையினர் பலர் உரிய காரணங்களின்றி அடிக்கடி கைது செய்யப்பட்டிருப்பதை அரசு மற்றும் பொது மக்களின் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

–    எல்லோருக்கும் அவரவர் வசதிக்கேற்ற அவரவர் தேவைக்குரிய மருத்துவ வசதி கிடைக்கப்பெற வேண்டும். மருத்துவர்களும் மன நல நிபுணர்களும் மருந்துகள் மூலமோ அல்லது மின் அதிர்வு சிகிச்சை முறைகள் மூலமாகவோ வேறு அறிவியல் ஆதாரமற்ற முறைகள் வழியாகவோ பாலியல்பை மாற்றி அமைக்க முயல்வது தடுக்கப்பட வேண்டும். மாறுபட்ட பாலீர்ப்பையும் பாலின வெளிப்பாட்டையும் கொண்டவர்கள் நட்புணர்வு மிகவும் குறைந்த சமூதாயத்தில் வாழ வேண்டியுள்ளது. இதனால் எங்களது அன்றாட வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளா வேண்டியுள்ளா சவால்களையும் மன உளைச்சல்களையும் எதிர்கொள்வதற்கு எங்கள் குழுக்களின் ஆதரவும், நிபுணர்களின் ஆதரவும் எங்களுக்குத் தேவைப்படுகிறது.

–    எங்களுடைய வெளிப்பாடுகளையும் விழைவுகளையும் இயற்கையானவை என புரிந்துகொள்ளுமாறு எங்களது குடும்பங்களைக் கேட்டுக்கொள்கிறொம்.  நடை உடை மூலமாகவோ, எங்களுடைய காதலர்களை நாங்கள் தேர்வு செய்யும் விதத்திலோ வெளிப்படும் எங்களுடைய தேர்வுகளை மதியுங்கள். ஆண்-பெண் திருமண உறவுகளில் எங்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஈடுபட எங்களைக் கட்டாயப்படுத்தாதீர்கள்.

–    மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட மாணவர்களுக்கு ஒதுக்குதலும் வன்முறையும் அற்ற கல்விச் சூழலை ஏற்படுத்தித் தருமாறு கல்வி நிலையங்களைக் கேட்டுக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பாலின வெளிப்பாடும் பாலியல்பும் எத்தகையதாக இருப்பினும், அவர்களைத் துன்புறுத்துபவர்களின் செயல்பாடுகள் உரிய முறையில் கண்டிக்கப்படவும் தண்டிக்கப்படவும் வேண்டும்.

–    எங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் பொழுது நேர்மையுடனும், முழு தகவல்களுடனும் செயல்படுமாறு ஊடக நண்பர்களிடம் விண்ணப்பிக்கிறோம். எங்களுடைய வாழ்க்கைகள் இருட்டடிப்புச் செய்யப்படாமலும் கேலிச் சித்தரிப்புகள் ஆக்கப்படாமலும் இருக்கும் விதத்தில் எழுதுங்கள். சினிமாத் துறை எங்களை நகைப்புக்கு உரியவர்களாகவே சித்தரித்து வருகிறது. அதை மாற்றி உண்மைகளைப் பிரதிபலிக்குமாறு கேட்டுக்கொள்கிறொம்.

–    அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு மத்தியில் வேறுபாடுகளை மதித்து நடத்தல் குறித்த விவாதங்களையும் பயிற்சிகளையும் ஏற்பாடு செய்யுமாறு இந்த நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறோம். நடத்தப்படும் விதம், வழங்கப்படும் சலுகைகள், பொதுவான அலுவலக சூழல் ஆகியவற்றில் பாலினம் மற்றும் பாலியல்பு குறித்த ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது.

–    எங்களுடைய போராட்டங்களுக்குப் பலர் துணையாக இருந்து வருகிறார்கள். மற்ற சமூக/ மக்கள் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள்; தங்களுடைய அன்பையும் அரவணப்பையும் நெகிழச் செய்யும் விதங்களில் வெளிப்படுத்தியுள்ள பெற்றோர்கள்; ஆதரவுடனும் புரிதலுடனும் செயல்படும் ஆசிரியர்கள்; எங்களை மதிப்புடன் நடத்தி உகந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவ மற்றும் மனநலத் துறை நண்பர்கள்; தங்களது ஆதரவை வெளிபடையாகத் தெரிவித்திருக்கும் பிரபலங்கள்; எங்களுக்கு மதிப்பிட முடியாத உதவியை வழங்கும் வழக்கறிஞர்கள்; உண்மையுடனும் நுண்ணுணர்வுடனும் எங்கள் பிரச்சனைகளை உலகிற்குக் கொண்டு செல்லும் ஊடக நண்பர்கள் பலர் – அனைவருக்கும் இந்த நேரத்தில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்!

அன்புடன்,
சென்னை வானவில் கூட்டணி

http://chennaipride.net

 

Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-4)எஸ்.எழிலின் “ மனங்கொத்திப்பறவை “
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *