தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்”

ருத்ரா

Spread the love

 

மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்
மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம்
ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?என்று
குழந்தைப்பூவுக்கு பூச்செண்டு
கொடுத்த புனிதனே!ஜனாதிபதி
உன் கவிதைக்குழந்தைக்கு
விருது என்று கொடுத்தார்
ஒரு கிலு கிலுப்பையை!
அத்தனயும்
எத்தனை வரிகள் உன் வரிகள்.
அத்தனையும்
உன் எழுத்துக்குள் இனித்த வலிகள்.

கவிதை எனும் உலகக்கோளத்தின்
பூமத்திய ரேகை
சிறுகூடல் பட்டியின் வழியாக‌
அல்லவா ஓடுகிறது.

“உலகம் பிறந்தது எனக்காக”
என்றாயே
நீ எதைச்சொன்னாய்?
தமிழ் எனும் சொல்லின்
ஈற்றெழுத்தின் தலையில்
ஒரு புள்ளி வைத்தாயே
அதைத்தானே சொன்னாய்?

“இரவின் கண்ணீர் பனித்துளி” என்றாயே
அந்த வைரத்துளியே உனக்கு “பொற்கிழி”.

“சிலர் அழுதுகொண்டே சிரிப்பார்.
சிலர் சிரித்துக்கொண்டே அழுவார்”
என்று நீ எழுதுவதற்கு
அந்த “நடிப்பு இமயத்தின்”
முகத்தையல்லவா காகிதம் ஆக்கிக்கொண்டாய்.

“சட்டி சுட்ட தடா”என்றாய்.
அதில் “ஜென்”ஆழ்ந்து அமர்ந்து
ஒளி வீசியதை
ஒளித்து வைத்து விளையாடினாய்.

“எறும்புத்தொலை உரித்துப்பார்க்க‌
யானை வந்ததடா..என்
இதயத்தோலை உரித்துப்பார்க்க‌
ஞானம் வந்ததடா..”
வந்தது யானையா? “ஜென்னா?”

“வீடு வரை உறவு..”
சித்தர்களின் எழுதுகோலை நீ
இர‌வ‌ல் வாங்கியிருக்க‌லாம்.
ஆனாலும் உன்
உயிரைத்தான் அதில்
உமிழ்ந்திருக்கிறாய்.

“சென்ற‌வ‌னைக்கேட்டால்
வ‌ந்து விடு என்பான்.
வ‌ந்த‌வ‌னைக்கேட்டால்
சென்றுவிடு என்பான்.”
ம‌னப்புண்ணில் ஒரு காக்கையை
உட்கார்த்தினாய்
கொத்தி கொத்தி அது
உன் எழுத்தைக்கீறிய‌தா?
அத‌ன் உள் குருதியை
கொப்ப‌ளிக்க‌ வைத்த‌தா?

மெல்லிசை ம‌ன்ன‌ர்க‌ள்
உன் வ‌ரிக‌ளைக்கொண்டு
உணர்ச்சியின்
க‌வ‌ரி வீசினார்க‌ள்.

“கூந்த‌ல் க‌றுப்பு குங்கும‌ம் சிவ‌ப்பு”
அப்புற‌ம் ஓட‌த்தான் போகிறேன்
இப்போது கோடு காட்டுகிறேன் என்றாய்.
ஏனெனில்
க‌விதை ப‌டைப்ப‌த‌னாலேயே
நீ ஒரு க‌ட‌வுள் என்று
பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்திக்கொண்டாயே.

உன் எழுத்துக்குள்
முட்டி நிற்கும் எரிம‌லை லாவா அது?
எந்த‌ “த‌ல‌ப்பா”வுக்கும்
த‌லை வ‌ண‌ங்கா த‌மிழ்ப்பா அது.

கோப்பையில் குடியிருப்ப‌தை
ஆடிப்பாடி பெருமித‌த்தோடு சொன்னாய்.
குடித்த‌து நீயாய் இருக்க‌லாம்
அப்போது உன் த‌மிழையும்
ருசித்த‌து அந்த‌ “உம‌ர்க‌யாம் கோப்பை”.

உனக்கு ஒரு இர‌ங்க‌ற்பா பாட‌
என்னை யாரும் அழைக்க‌வில்லை.
இருந்தாலும்
“தெனாவெட்டாக‌” கூறிக்கொண்டேன்.
நீ இற‌ந்தால் அல்ல‌வா
இர‌ங்க‌ற்பா பாட‌ வேண்டும்.

உன‌க்கு இர‌ங்க‌ற்பா பாடிய‌வ‌ர்க‌ள்
எத்த‌னையோ பேர்!
அப்போது உன் பூத‌ உட‌ல்
திடீரென்று காணாம‌ல் போய் விட்ட‌து
என்று எல்லோரும் ப‌த‌றிப்போனார்க‌ள்.

என்ன‌ ஆயிற்று.
ஒன்றுமில்லை
அங்கு இர‌ங்க‌ற்பா பாடிய‌வ‌ர்க‌ள்
யாருமில்லை.
நீயே தான்.

உன் உயிரின் “அக‌ர‌ முத‌ல‌” வை
அந்த‌ அக்கினியில் நீயே ஆகுதி ஆக்க‌
விரும்பிய‌ உன் இறுதி ஆசை அது.

அர்த்த‌முள்ள‌ இந்தும‌த‌ம் என்று
எத்த‌னை வால்யூம்க‌ளை எழுதி
உன‌க்கு சிதையாக்கிக்கொண்டாய்.

அப்போதும் அந்த‌ தீயில்
நீ ஒலிக்கிறாய்.

“நான் நாத்திக‌னானேன் அவ‌ன் ப‌ய‌ப்ப‌ட‌வில்லை”
நான் ஆத்திக‌னானேன் அவ‌ன் அக‌ப்ப‌ட‌வில்லை”

நீ ஒரு அப்ப‌ழுக்க‌ற்ற‌ க‌விஞ‌ன்.
க‌விதை உன்னில் புட‌ம் போட்டுக்கொண்ட‌து.
நீ க‌விதையில் புட‌ம் போட்டுக்கொண்டாய்.
க‌விஞ‌ர்க‌ள் பேனாவை எடுக்கும்போதெல்லாம்
க‌ர்ப்ப‌ம் த‌ரிக்கிறாய்.
நீ இல்லை என்ற‌ சொல்லே
இங்கு இல்லை.
நீ காலம் தீண்டாத கவிஞன்.

===================================================ருத்ரா

Series Navigationநினைவு“செய்வினை, செயப்பாட்டு வினை“

3 Comments for ““கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்””

 • a.v.david says:

  malaysia mannil, thinam thinam kaadril kalanthu , seviyil riinggaram idum namam kannaathaasanthaan.iravil avarin paadalthan manathukku nimmathi.ponnana varikal:unakku kizhe iruppavar kodi ninaiththu paarththu nimmathi naadu.arputhamaana vaira varikal.nandri nanbare.vaazhththukkal.THEDUVEN UNGKALIN PENA MAIYAI.

 • RUTHRAA (E.PARAMASIVAN) says:

  DEAR A.V.DAVID

  ஆம்.நண்பரே!
  மனிதன்
  வைரங்களையெல்லாம்
  வெளியே எறிந்து விட்டு
  கூழாங்கற்களைத் தான்
  மடி நிறைய‌
  கட்டிக்கொண்டு அலைகிறான்.

  அதனால்
  இந்த பிரபஞ்சம் முழுதும்
  ஏதோ தேடும்
  ஏதோ ஒரு வலி….
  இன்னும் அவனுக்கு
  மரத்துப்போய் தான் இருக்கிறது.

  கண்ணதாசன்
  “மனிதன் என்பவன்…”
  என்று கடற்கரை வெளியில்
  தேடுகிறான்.

  மெல்லிசை மன்னர்கள்
  மணல் துளிகளில்
  அந்த வெளிச்சத்தை
  வைர ஒலிகளாக்கி
  தேன் சாரல் தூவுகிறார்கள்.
  அந்த தேன் அழுது கொண்டே
  இனிக்கிறது.

  “மனம் இருந்தால்
  பறவைக்கூட்டில்
  மான்கள் வாழலாம்”..
  நீங்கள் தொட்டுக் காட்டியதில்
  ஒட்டிக்கொண்டிருக்கும்
  உயிர்ப்பசை
  அந்த சிறுகூடல் பட்டியின்
  புல்லிலும் புழுவிலும
  அசைகிறது.

  அந்த மின்னல் தான்
  எல்லா நிப்புமுனையிலும்
  வந்து முட்டிக்கொண்டு நிற்கிறது.

  உங்கள் வரிகளுக்கு
  மிக்க நன்றி நண்பரே

  அன்புடன்
  ருத்ரா

 • punai peyaril says:

  நீ காலம் தீண்டாத கவிஞன்—> சொற்குற்றமில்லாவிடினும், பொருட்குற்றம் உள்ளது. நான் சொன்னால் டென்ஷன் ஆவார். யாராவது புரிய வையுங்கள் இவருக்கு…


Leave a Comment

Archives