விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து

This entry is part 37 of 43 in the series 24 ஜூன் 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை

 

குளிரக் குளிர வாரணாசியில் பொழுது விடிந்து கொண்டிருந்தது. அடை அடையாக அப்பிய பனி மூட்டம் இப்போதைக்குக் கலைகிற உத்தேசம் இல்லை என்கிறது போல் ஸ்நானக் கட்டங்களை மூடி மறைத்தது.

 

ஓடியும் தேங்கியும் ஒடுங்கியும் விரிந்தும் கடந்த கங்கா நதிப் பிரவாகத்தை அது கீழிறங்கித் தொட்டு,  கவிந்த படிக்கே விடியும் பொழுது.

 

பஞ்ச பஞ்ச உஷத் காலத்தில் பூவாடையும் பிணவாடையும் மக்கிய இலையும் சோற்றுப் பிண்டமும் ஊறின தண்ணீரின் ஊசிப் போன கவிச்சி வாடையும் அரைத்த சந்தனத்தில் குங்குமமும் துளசி இலைகளும் கலந்த பவித்ரமான பச்சை வாடையும் வழியெல்லாம் கழித்து வைத்த ஆண்பிள்ளை மூத்திர வாடையுமாக நாசியிலும் மனதிலும் நிரம்பும் புனிதமான துர்க்கந்தம் அது.

 

பகவதிக்கு புனிதம் மட்டும் போதும். கந்தத்தை லட்சியம் செய்யாமல் சஞ்சரிக்க மூக்கும் மனதும் காலகாலமாகப் பழகி விட்டது.

 

அவளும் பிள்ளை சாமாவும் அவளுக்குப் பிறக்காவிட்டாலும் புத்திரனாகிப் போன மருதையனும் வாரணாசி வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. துலாக் கட்டங்களில் தேங்கி நிற்கிற கங்கா ஜலமாக மனசில் என்னென்னமோ அலையடித்து அங்கேயே நிற்கிறது. அதெல்லாம் கலங்கினால் அதற்கும் காசி வாசனை வந்துவிடலாம்.

 

நான் சொல்றது சரிதானே விசாலம் மன்னி?

 

அவள் பிரியத்தோடு இருள் பிரிய ஆரம்பித்த தண்ணீர்த் தடங்களின் மீது பார்வை பதித்துக் கேட்டாள்.

 

நீ சொன்னது எது தெற்றிப் போச்சு இது தெற்ற என் குழந்தே? காசிக்கும் ஒரு கந்தம் உண்டு. கேட்டியோடி பொண்ணே. மூத்ரம் ஒழிச்சு வச்சு வருத்தினதில்லே அது. அதோ அங்கே விசுவநாத சுவாமி அம்பலத்திலே சங்கு முழக்கி காற்றை சுத்தப்படுத்தறா பாரு அங்கே இருந்து தொடங்கற நிர்மால்ய தர்சன நெடி.

 

விசாலம் மன்னி சிரித்தாள். ஸ்தாலி செம்பில் ரெண்டே எலும்பாக இருந்தாலும் அவளுக்கு சிரிக்கவும் எப்போதும் போல பிரியத்தை எந்த நாழியும் உழக்கும் இல்லாமல் எடுத்து அளந்து அளந்து வழிய விடாமல் நிறைக்கவும் தெரியும். பகவதியோடு அவளும் காசிக்கு வந்துவிட்டாள்.  மற்ற யாரும் நம்பினாலும் நம்பாவிட்டாலும்.

 

மூணு வாரம் லீவு சாங்க்ஷன் செஞ்சிருக்கார் துரை. அம்மாவை காசிக்குக் கூட்டிண்டு போய்ட்டு வரணும்னு கேட்டு வாங்கினேன்.

 

சாமா ஒரு சனிக்கிழமை பகலோடு வீட்டுக்கு வந்து தகவல் சொன்னபோது பகவதிக்கு சிரிப்பாக இருந்தது. மூணு வாரத்தில் வாரணாசி போய் திரும்பி வேறே வர முடியுமா என்ன?

 

சங்கரன் கல்யாணமான புதிதில் சொன்னதில்லையா? அவன் அப்பாவும் அவளுடைய மரியாதைக்கும் ப்ரீதிக்கும் உரிய மாமனாரான சுப்பிரமணிய அய்யரும் மாமியார் கல்யாணி அம்மாளும் இன்னும் நித்ய சுமங்கலி சுப்பம்மா போல ஏகப்பட்ட பந்து ஜனங்களும் காசிக்குப் போய்த் திரும்பி வர கிட்டத்தட்ட ஒரு மண்டலம், நாற்பத்தைந்து நாள் தேவையாக இருந்தது என்று.

 

பதினைந்து நாளில் அதில் பாதி தூரத்தில் தென்காசிப் பட்டணத்துக்கு வேணுமானால் போகலாம்.

 

அம்மா, நீ இன்னும் பழைய நாள்லேயே இருக்கே. ரயிலும் மோட்டார் காரும் தேசம் முழுக்க ஓடிண்டு இருக்கப்பட்ட காலம் இது. பத்தே நாள் போதும் போக வர. இருந்தாலும் அவ்வளவு தூரம் போய் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் முடிக்காமல் வர முடியாது இல்லியா? அதான் போனாப் போறதுன்னு கூடவே ஒரு வாரம் லீவை நீட்டிச்சாச்சு.

 

சாமா நினைத்த காரியத்தை சாதித்த திருப்தியோடு அன்றைக்கு மதியம் மூணு மணிக்கு இலை போட்டு, மீந்து போயிருந்த சாதத்தையும் காய்கறியையும் புளிக்க ஆரம்பித்திருந்த தேங்காய்த் துவையல் சகிதம் ரசித்துச் சாப்பிட்டான். ஊசலும் ஒரு ருசி என்று அதுக்கு நியாயமும் கற்பித்தான் பெண்டாட்டியிடம்.

 

மனம் றெக்கை கட்டி உற்சாகத்தில் பறந்தால் எல்லாமும் எல்லோரும் எந்த விரோதமும் இல்லாமல் பிரியத்துக்கு உரியதாகி விடுகிறது. மோருஞ்சாதம் சாப்பிட்டு அலம்பிய கையோடு டிக்ரி காப்பி வேண்டும் என்று அடம் பிடித்து சாப்பிட்ட போதே அந்த அலாதி ஆனந்த மனநிலை பகவதிக்கு மட்டுப் பட்டுவிட்டது.

 

சாமா பெண்டாட்டி மட்டும், ஆபீஸ்லே எதையோ பார்த்து பயந்திருக்கார். மசூதியிலே ஊதணும் என்று திரும்பத் திரும்பச் சொல்ல அதற்கும் சிரித்தான் சாமா.

 

ஏண்டா சாமா, நீ பெலவான் தான். அதியுன்னதமான புத்திசாலி தான். என் பிள்ளையாச்சே. போறது. அது மட்டும் போறுமோ எங்க ரெண்டு பேரையும் காசிக்குக் கூட்டிண்டு போய்த் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கறதுக்கு?

 

பகவதி கேட்டபடி சாமா பெண்டாட்டியைப் பார்த்தாள்.

 

இவளும்  நம்மோட காசிக்கு வரப்போறான்னு யார் சொன்னா?

 

சாமா மர்மமான புன்னகையோடு சொன்னான்.

 

வீட்டுக்காரி ரெண்டு மாசம் தஞ்சாவூரில் அவள் பிறந்த வீட்டில் சீராடி விட்டு வரப் போகிறாளாம்.

 

காசிக்கு ரெண்டே டிக்கெட் தான் இங்கே இருந்து. மூணாவது ராஜக்ரஹம்.

 

அவன் பக்கத்து வீட்டுப் பக்கம் கையை உயர்த்திக் காட்டினான்.

 

மருதையனும் நம்மோட வர்றான்.

 

பகவதியின் முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி தெரிந்தது. சாமாவால் சமாளிக்க முடியாததைக் கூட மருதையன் சமாளித்து விடுவான். வாய் சாலகமும் உடம்பு பெலமும் அதிகம். ராஜ வம்சமாச்சே.

 

வீட்டை ரெண்டு மாசம் பூட்டி வைத்துவிட்டு இப்படி வீட்டோடு கிளம்புகிறது தான் அவளுக்குப் பிடிக்கவில்லை. கேட்டால் அதற்கும் ஏதாவது ஏற்பாடு வைத்திருப்பான் சாமா. கிளம்பும்போது தன்னாலே தெரியப் போகிறது.

 

நடுவில் ஒரு வாரம் சாமா மாமானார் வீட்டுக்குப் பெண்டாட்டியைக் கொண்டு விடப் போவதில் கழிந்து போனது. தனியாகக் கொட்டக் கொட்ட அந்தப் பெரிய காரைக் கட்டிடத்தில் இருக்கவும் பிடிக்காமல் படுக்கவும் பிடிக்காமல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாள் பகவதி. சங்கரன் நினைப்பு ஒவ்வொரு நிமிஷமும் அவளை ஆக்கிரமித்துக் கொண்டே இருந்தது. அந்த வீட்டின் ஒவ்வொரு அணுவிலும் அவன் கலந்து போய் இன்னும் தீர்க்கமாக சுவாசித்துக் கொண்டிருக்கிறான். கண்ணுக்குத் தெரியாவிட்டால் என்ன?

 

மருதையன் அந்த ஒரு வாரமும் வேண்டாம் வேண்டாம் என்று பகவதி மறுத்துப் பார்த்தாலும் கேட்காமல் உடைய சேர்வார் ஊருணிக்கரை குண்டு ராயர் ஹோட்டலில் அவளுக்குச் சாப்பாடு எடுத்து வந்து விட்டான். சாமா தான் போகும்போது அப்படிச் செய்யச் சொல்லிவிட்டுப் போனதாகச் சொன்னான்.

 

அம்மாவுக்கு அடுப்பு பக்கம் போய் சமைக்க முடியாதுடா இனிமே. ராயன் கடையிலே காலையிலே நாலு இட்லி, கெட்டி சட்னி, மதியத்துக்கு சாதம், ரெண்டு காய்கறி, சாம்பார். சாம்பாரை வீட்டுக்குக் கொண்டு வந்ததும் ஒரு மூடி எலுமிச்சம்பழம் பிழிஞ்சுடுடா. காரம் இவளுக்குத் தாங்காது. ராத்திரி கோதுமை உப்புமா கிண்டித் தர ராயன் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லி ஏற்பாடு செஞ்சிடு.

 

பாரு இதான் உலகம். நான் உலகத்திலேயே பெரிய சாம்ராஜ்யமான அரசூர் பூமண்டல்த்து சக்கரவர்த்திகள். பிரக்யாதியான காலேஜ் வாத்தியார். என்ன பிரயோஜனம்? ஊருணிக்கரை குண்டுராயன் கடையிலே உன் பெயர் தான் செல்லுபடியாகும். நாலு இட்லி வாங்கக் கூட சப் கலெக்டர் உத்தரவுன்னாத்தான் ராயன் குடுகுடுன்னு குடுமியை முடிஞ்சுக்கிட்டு அக்கறையா செய்வான்.

 

மருதையன் தான் இப்படி சாமாவிடம் சொன்னதையும் பகவதியிடம் பகிர்ந்து கொள்ள மறக்கவில்லை. அவனுக்கும் அவள் அம்மாதான். இத்தனை வயசிலும் சர்வமானதையும் சொல்லிப் போட வேண்டும் என்று மனம் துடிக்கிறது என்றான் கூடவே. பகவதி நெகிழ்ந்து தான் போனாள். ராயன் கடை இட்லி கூட அவளுக்கு அப்புறம் பிடித்துப் போய்விட்டது.

 

சாமா தஞ்சாவூரில் இருந்து திரும்பி வருவதற்குள் போட் மெயிலில் பட்டணம் போக மூணு டிக்கட் ரெண்டாம் கிளாஸில் எடுத்து வைத்து விட்டான் மருதையன். அவன் முதல் வகுப்பு கூட எடுக்கத் தயார்தான். வெள்ளைக்காரத் துரைகளும் துரைசானிகளும் சஞ்சரிக்கிற இடம் அது. காகிதத்தால் பின்னால் துடைத்துப் போட்டுத் திரிகிற கூட்டம் என்று பகவதி கருதுகிறபடியால் ஒரு ராத்திரி முழுக்க அங்கே பிரயாணம் செய்ய வேண்டி இருந்து ஆகாரம் கழிக்கவோ, பச்சைத் தண்ணீர்  குடிக்கவோ கூட அவளால் முடியாது.

 

அவளோடு மலையாளக் கரைக்குப் போனபோது இவ்வளவு மடி ஆசாரம் பார்க்கிறவளாக இல்லை பகவதி. அப்போது என்றால் அவனும் இன்னும் கொஞ்சம் பலமாக வற்புறுத்துவான். வயசாகிறதே. அம்மாவுக்கு மட்டுமில்லை, மருதையனுக்கும் தான். அவள் ராயர் ஹோட்டலில் இருந்து எடுப்புச் சாப்பாடுக்கு ஒத்துக்கொண்டதே பெரிய விஷயம்.

 

ரயிலுக்குக் கட்டி எடுத்துப் போகவாவது உப்புமா கிண்டுகிறேனே என்றாள் பகவதி. ரெண்டு பிள்ளைகளும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தார்கள். பேச்சே இல்லாமல் ஏதோ சம்பாஷணை.

 

உப்புமா எல்லாம் வேணாம் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள்.

 

காரைக்குடி ஸ்டேஷன்லே பிரமாதமா சாப்பாடு கிடைக்குமே சாமா? செட்டியார் திருப்பத்தூர்லேருந்து நேரே இங்கே வர்ற ரயில் பாதையைத் திருப்பி செட்டிநாடு வழியாச் சுத்தி வளைச்சுக் கொண்டு வந்தது நமக்கெல்லாம் அந்த சுகத்தைத் தரத்தானே?

 

மருதையனும் சாமாவும் ஏக காலத்தில் சிரித்தபடி மிட்டாய்க்காகக் காத்திருக்கும் குழந்தைகளைப் போல் பகவதியைப் பார்க்க அவள் நான் காசிக்கே வரலை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விட்டாள்.

 

ஆக, குண்டு ராயன் ஹோட்டல் இட்லி தான் காசிப் பிரயாணிகளோடு கூட போட்மெயில் ஏறியது. அது பகவதிக்குப் பழகி, விரோதம் இல்லாத விஷயமாக இந்த ஒரு வாரத்தில் மாறிவிட்டதால் பிரச்னை இல்லை.

 

விஸ்ராந்தியாக ஆளுக்கு ஒரு முழு சீட்டில் படுத்து சிரம பரிகாரமாக ரயில் ஆட்டத்தோடு நல்ல உறக்கத்தில் இருந்தபோது சங்கரனை நினைக்காமல் இல்லை பகவதி. அவனோடு காசிக்குப் போகக் கொடுத்து வைக்கத்தான் இல்லை.

 

நான் இருந்தா நீ காசிக்கு எதுக்குப் போகணும்?

 

சங்கரன் சீண்டினான். அவள் கண் கலங்க எழுந்து உட்கார்ந்தபோது தஞ்சாவூர் வந்திருந்தது. அப்புறம் அவள் சாமாவையும் மருதையனையும் தூங்க விடவில்லல.

 

அவர்கள் ரெண்டு பேரும் அந்த நடு ராத்திரியில் தஞ்சாவூர் காப்பியும் வாசனை விடயமும் நல்ல பூவன் பழமுமாக ஆர்வமாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க, வாஞ்சையோடு பார்த்தபடி இருந்தாள் பகவதி. காசி போகாவிட்டால் கூட வேண்டாம் பரவாயில்லை. இப்படியே மனதில் எந்த விதமான பாரமும் இல்லாமல் நகர்ந்தபடிக்கே உயிரை விட முடியும் என்றால் அவள் சரி என்று சொல்லி விடுவாள். நகரணும். அது முக்கியம். நகர்ந்தபடியே தான் மூச்சு நிக்கணும்.

 

அவர்கள் இருந்த கம்பார்ட்மெண்டில் கூட்டமே இல்லாத தினம் வேறே. வடக்கே சூலம் எல்லாம் பார்க்காமல் டிக்கெட் எடுக்க ஊரில் இருக்கப்பட்டவர்கள் எல்லாம் மருதையனா என்ன? ஆனாலும் அவன் மேல் பகவதிக்குக் கோபம் இல்லை. சூலமும் பில்லியும் எல்லாம் கங்கைத் தண்ணீரில் அடித்துப் போகட்டும். முடிந்தால் பகவதியையும் கூடவே சங்கரனையும் அது இழுத்துப் போய் வங்காள விரிகுடாவில் சேர்த்து விடட்டும். அங்கேயிருந்து? நிச்சயமில்லை. சங்கரன் பார்த்துக் கொள்வான்.

 

அம்மா பாடுங்க. நீங்க பாடி நாங்க கேட்டு வருஷக் கணக்காச்சு. பாடுங்கம்மா,

 

அவள் பாடினாள். குரல் நடுங்கப் பாடினாள். என்ன பாட்டு? பெண்ணு பார்க்க வந்தபோது சங்கரன் உறவில் ஒரு சுமங்கலிக் கிழவி பாடினாளே அதே பாட்டு தான். வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து.

 

கனாக் கண்டேன் கனாக் கண்டேன் என்று மனசு கரைந்து உருகி அவள் பாடி முடிக்க, கண் திரும்பச் சுழன்று கொண்டு உறக்கம் வந்தது. கண் இமைகள் பிடிவாதமாகக் கவிந்து கொள்ள மனதில் அந்த மாப்பிள்ளை வீட்டுக் கிழவி இன்னும் உற்சாகமாகப் பாட ஆரம்பித்தாள். அவள் குரல் இன்னும் அப்படியே தான் இருந்தது.

 

கனாக் காணுங்க அம்மா. பட்டணம் வர நேரம் இருக்கு.

 

அவன் சொல்வதற்கு முன்னாடியே அவள் உறங்கி இருந்தாள்.

 

எழுந்தபோது பட்டணம் வந்திருந்தது. வண்டி இறங்கி டிராமில் நீலகண்டன் வீட்டுக்குப் போகலாம் என்று உத்தேசம் செய்து வைத்திருந்த சாமாவுக்கு ஆச்சரியமாக அவர்களைக் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு மோட்டார் கார் ரயிலடியிலேயே அதுவும் ரெயில் வந்து நின்ற முதலாவது பிளாட்பாரத்தை ஒட்டியே காத்துக் கொண்டிருந்தது.

 

மெட்றாஸ் யூனிவர்சிட்டியிலே என் சிநேகிதன் பிலாசபி புரபசரா இருக்கான்னு சொன்னேனே. அவனுக்கும் நுங்கம்பாக்கம் தான் ஜாகை. உன்னைக் கேட்காமலே அவன் காருக்குச் சொல்லி வச்சுட்டேன்.

 

பாரு, ராஜா எங்கேயும் ராஜா தாண்டா. உன் சொல்லுக்கு இருக்கப்பட்ட மரியாதை மத்தவாளுக்கு உண்டோ?

 

பகவதி சொன்னது தத்துவார்த்தமாக இல்லாவிட்டாலும் மருதையனுக்குப் பிடித்திருந்தது. வயசுதான் மனுஷர்களை அவர்களின் இஷ்டமானதை, ஒவ்வாததை எல்லாம் எவ்வளவு சுலபமாகப் புரட்டிப் போடுகிறது. அப்பார் மாதிரி அரண்மனையை மேய்த்துக் கொண்டு இருந்திருக்கலாமோ?

 

கிறுக்குத்தனம் என்று தலையை அசைத்து இன்னொரு முறை சிரித்தான். சாமாவுக்கு இதில் இருக்கிற ஹாஸ்யம் புலப்பட்டதுபோல் அவனும் சிரித்தபடியே வண்டி இறங்கினான்.

 

அவர்கள் நீலகண்டன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது கையில் உலோகச் சொம்பு ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒரு இளம் வயசுக்காரன் படியேறிக் கொண்டிருந்தான்.

 

வா வா பகவதி. யாத்திரை சுகமா இருந்ததோ?

 

விசாலாட்சி மன்னி பகவதியை விசாரித்தது அவளுக்கு ஸ்பஷ்டமாகக் கேட்டது.

 

காசிக்கு என்னையும் கூட்டிண்டு போயிடுடீம்மா. என்ன சரியா?

(தொடரும்)

Series Navigationநிதர்சனம் – ஒரு மாயை?இசைக்கலைஞர்களைக் கொலை செய்யும் பாகிஸ்தான் கலாசாரம்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *