மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32

This entry is part 3 of 32 in the series 1 ஜூலை 2012

36.  குதிரை லாயத்தை ஓட்டியிருந்தது சிறை. அருகிலேலேயே தொழுவமும், குதிரைகள் லாயமும் இருக்கவேண்டும். சிறைச்சாளரத்தின் வழியே உள்ளே விழுந்திருந்த ஒளித்துண்டில், விலங்குகளுக்காக இடப்பட்ட மட்டைக்கோரை, கமரிப்புல், அறுகம் புல், சாமை, கொள் தப்பித்த துகள்கள் மின்மினிப்பூச்சிகள்போல பறந்தன. குதிரைகளின் பொதுவான கனைப்பு, நகைப்பதுபோன்ற கனைப்பு, மூக்கின் சீறல், கால்களை இடம் மாற்றிவைக்கும் குளம்பொலி; பசுக்களின் சந்தோஷம் ‘ம்மா’, கதறல்; கன்றுகளின் கூவல்; எருதுகளின் உக்காரம்; அவற்றின் வாடை; துர்க்கந்தம் சர்வமும் சிறைக்குள் இவன் மிச்சம் வைத்த இடத்தை ஆக்ரமித்திருந்த.ன.

இரண்டு நாழிகைக்குமுன்பு முன்கைகளை கயிற்றில் பிணைத்து உத்தரத்தில் தொங்கவிட்டு கசையாள் கொடுத்த கசையடிகளிலொன்றால் அரைஞான் கயிறு தெறித்து விழுந்தது. இவனை நிர்வாணமாகவே இழுத்துவந்து சிறையில் போட்டிருந்தனர். நேற்றிலிருந்து ஒருமிடறு தண்ணீருக்குக்கூட வழியில்லை. அவனது கூட்டாளிகள் சிலருக்கு நேர்ந்ததுபோல இவன் மார்பில் முளை அறைந்து வீதியில் போடவில்லை என்றவகையில் சிறிது சந்தோஷம். முத்திரைச்சாவடியில் வைத்து தூக்கிலிடுவார்கள். இறந்த பிறகு தலையைக்கொய்து சந்தைவாசலில் ஈ மொய்க்க இரண்டொரு நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கென்றிருக்கும். செத்த பிறகு என்ன செய்தாலென்ன, அந்த மட்டில் புண்ணியம் செய்திருக்கிறான்.

தீட்சதர் குடும்பம் இல்லையென்றானபிறகு பிழைப்புத் தேடி கால்போனபோக்கிலே நடந்தான். வடக்கில் வெகுதூரம் வந்தபிறகு தில்லைபோலவே கோபுரங்களும் விமானங்களும் கண்ணிற்பட்டன. தங்கிவிட்டான். திருவண்ணாமலை வந்த பிறகு தேசம்மாவிடம் சொல்லிக்கொண்டு வந்திருக்கலாமோவென்று புத்தியில் உரைத்தது. ஒன்றிரண்டு தினங்கள் பெண்டாட்டி, பிள்ளைகுட்டிகளைப்பற்றிய சஞ்சலம், அடுத்துவந்த தினங்களில் அதுவும் இல்லையென்றாயிற்று. திடீரென்று புறப்பட்டு சிங்கபுரம். அங்கும் விவசாய காரியம் பார்ப்பதென்று அலைந்து பட்டினி கிடக்கவேண்டியிருந்தது. இவனையொத்த மனிதர்களிருவர் கண்ணிற்பட்டனர். வயிற்றுப்பிழைப்புக்காக வழிப்பறியில் இறங்கினான். முதலிற் சங்கடமாக இருந்தது. குதிரைபோட்டுக்கொண்டு குடியானவர்களிடத்தில் தீர்வை வசூலிக்கும் அரசாங்கத் தண்டல்காரர்களும் செய்வது அதைத்தானென்று கூட்டாளிகள் தெரிவித்தது நியாயமாகப் பட்டது.

– ஹி..ஹி.. நகைக்கும் குரல். நேற்றிலிருந்தே குதிரைக்கனைப்பதுபோல அச்சிரிப்பு விட்டுவிட்டு எதிர்சிறையிலிருந்து வருகிறது. உட்கார்ந்தபடியே இரு கைகளையும் தரையிலூன்றி கால்களை நீட்டினான். கால்களிரண்டும் சிறைக்கதவைத் தொட, அதில் அழுந்த ஊன்றினான். அதிகச் சிரமமின்றி முன்னால் நகர்ந்து இரும்புக்கம்பிகளில் முகத்தை ஊன்றி எதிர்ப்பக்கம் பார்க்க முடிந்தது. அரை இருட்டில் எதிர்க்கரையிலிருந்த மனிதனை விளங்கிக்கொள்வது மிகுந்த சங்கடத்தைத் தந்தது. முகமெங்கும் தாடியும் மீசையும். கூர்மையான கண்கள். போதிய வெளிச்சம் இல்லாதிருந்தபோதும் கபில நிறத்திலிருந்த கண்மணிகளில் நீலக்கங்குகள். தலைமயிரும் முகமயிரும் நரைக்காதிருந்தது. இளம் வயது பிள்ளையாகத்தான் இருக்கவேண்டும். பாவம் ! யார் பெற்ற பிள்ளையோ, நோஞ்சானாக இருந்தாலும் எத்தனை களையுடனிருக்கிறான். எங்கே எதைத் திருடினானோ?

– ஹி.. ஹி..

எதிர்ச்சிறையிலிருந்து வெளிப்பட்டிருந்தது. குரல். சிறைக்கம்பிகளில் முகத்தைப் புதைத்து அடைபட்டிருந்த மனிதனை மறுபடியும் பார்க்கவேண்டும் போலிருந்தது. அந்த முகம்,  ஆண்டை வீட்டு அம்மா முகம்போலிருந்தது.

– ஹி..ஹி.

– இம்முறை அதிக நேரம் பிடிக்கவில்லை. சுணக்கமின்றி குரலை அடையாளப்படுத்த முடிந்தது.

– அய்யோ! சாமீ நீங்களா? எதனாலே? ஏனிப்படி? யாராச்சும் வாங்களேன்.. சிறைக்கதவை ஓங்கி உதைவிட்டான். பதிலில்லை என்றவுடன் முழுப்பலத்தையும் பிரயோகித்து கால்களை நன்கு மடக்கி எந்துவதுபோல தொடர்ந்து உதைத்தான்.

காவலர்கள் ஓடிவந்தார்கள்; ஏய் தள்ளிப்போ”, – வேல் கம்பை ஒருவன் கம்பி இடுக்கில்கொடுத்து அவன் மார்பில் குத்தி இழுத்தான். மார்ச்சதை கட்டைவிரல் பரப்பிற்கு சிதைந்தது. மறுநாள் காலை முத்திரைசாவடியில் தூக்கிலிடும்வரை மூர்ச்சையாகிவிழுந்த தொப்புளான் எழுந்திருக்கவில்லை.

37. இளவேனிற்காலம் வெப்பம் கடுமையாக இருந்தது. விடிந்து நான்கு நாழிகைகள் ஆகியிருந்தன. முற்றத்திலிருந்து செண்பகம் இல்லத்திற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீரர்களின் காலடியோசைகள் இடைவிடாமல் வந்தன. தேவையின்றி அவ்விடத்தில் வீரர்களை வைத்திருக்கவேண்டாமென்று அவர்கள் தலைவனிடம் கூறவேண்டுமென செண்பகம் நினைத்தாள். சாளரங்களைத் திறந்ததும் தென் திசைக்காற்று கூடத்திற்குள் நுழைந்தது. திரைச்சீலைகளின் விளிம்புகள் நீரின் சிற்றலைகள்போல அசைந்தன. மதலை மாடத்தை நோக்கி நடந்தபோது ஒலாந்துகாரர்கள் நாயக்கருக்கு வெனிஸ் நகரத்திலிருந்து வந்ததென்று அன்பாக அளித்திருந்த கண்ணாடியில் தம் முகத்தைப்பார்த்தாள். செல்வத்தின் மினுமினுப்பு முகத்திலும் தெரிந்தது. இளம்பிராயத்தைக் காட்டிலும் வனப்பு கூடியிருந்தது. நாயக்கர் செண்பத்தின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை விருந்துண்ண வருவதாகத் தகவற் சொல்லியிருந்தார்.

அதிகாலையிலேயே அடுமகளிர் இருவர் உலைவைத்திருந்தார்கள். பழங்கலத்தில் அரிசி இருக்கிறதா எனப்பார்த்தபொழுது இல்லாதிருப்பது தெரியவந்தது. பொறுப்பிலிருந்தவளை பணியைவிட்டு நீக்கினாள்.  குதிரிலிருந்து நெல்லெடுத்து அடிமைப்பெண்களை வரவழைத்து உரல் குந்தாணி உலக்கை மூன்றையும் தாழ்வாரத்திற்குக்கொண்டுவரச்செய்து அரிசி குற்ற ஏற்பாடு செய்தாள். குற்றியது புடைத்தானதும் முதல் காரியமாக நிணம் பெருத்த சோற்றுணவு தயாரானது.  மாங்காயும், வடதேசத்து மிளகாய் வற்றலும் பிசைந்து புளிக்குழம்பும், நாயக்கர்கள் விரும்பிச்சாப்பிடும் குளத்தில் பிடித்த குரவை மீன் குழம்பும், வராகநதியில் உள்ளூர் செம்படவர்கள் பிடித்த வரால்மீன் அவியலும் நன்றாகாவே வந்திருந்தன. கொழுப்புகூடிய மான், வெள்ளாட்டுக்கிடாய் இறைச்சியை நிரம்ப நெய்பெய்து வறுத்தும் பொரித்தும் வைத்திருந்தாள். அறுகீரை தொகையலும், வெல்லப்பாகு பணியாரமும், பால்கலந்த பாயாசமும் முத்தாய்ப்பாகக் காத்திருந்தன. கள்ளும், தஞ்சாவூரிலிருந்து வரவழைத்திருந்த வெற்றிலையையுங்கூட மறக்காமல் எடுத்துவைத்திருந்தாள்.

நாயக்கர், செண்பகம் இருவருமே சந்தோஷத்திலிருந்தார்கள். சந்திரகிரியில் விஜயநகர மன்னர் வெங்கடபதி தமது மூத்ததாரத்தின் மகனென்று நம்பிக்கொண்டிருந்த செண்பகத்தின் குமாரனான சிக்கம நாயக்கனுக்கு கூடிய சீக்கிரம் முடி சூட்டக்கூடும் என்ற செய்தி கிருஷ்ணபுரம், மதுரை, தஞ்சாவூர் நாயக்கர்களிடையே பேச்சாக இருந்தது. சக்கரவர்த்தி வெங்கடபதி கடந்த சில தினங்களாக  படுத்த படுக்கையாக இருக்கிறாரென்றும் எதுவும் நடக்கலாமென்றும் இராகவ ஐயங்காரின் விசேட ஒற்றன் இரண்டு தினங்களுக்கு முன் செய்தி கொண்டுவந்திருந்தான். செண்பகத்திற்கு தனது மனோரதம் இத்தனைச் சீக்கிரம் ஈடேறுமென நினைத்து பார்த்ததில்லை.

வெளியில் மனிதர் அரவம் கேட்டது. வேகமாய் நடந்து சென்று மாடத்தை எட்டிப்பார்த்தாள் நாயக்கர்  பல்லக்கிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார். பல்லக்கு காவிகள் ஒதுங்கி நின்றிருந்தார்கள். செண்பகத்திற்குப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வேகமாய்ச் சென்று கதவைத் திறக்கவும், நாயக்கர் கம்பீரமாக உள்ளே நுழைந்தார். செண்பகம் பவ்யமாக தண்டனிட்டாள்.

– தாங்கள் திருவுள்ளம்கொண்டு எமதில்லத்தில் எழுந்தமைக்கு நான் முற்பிறவியில் பாக்கியம் செய்திருக்கவேணும்.

– இவ்விடமும் அதுவேதான். சர்வமும் கமலக்கண்ணியின் கிருபை. உமது கடாட்சத்தால் கிருஷ்ணபுரம் மேன்மை அடைந்ததெனச் சொல்லவேணும். தேவியின் தயவு இல்லையேல் இதுபோன்ற சித்துகள் நடக்குமா?  என்றைக்கு செய்தி கிடைத்ததோ அன்றே கொண்டாட வேண்டுமென்று நினைத்தேன். இராகவ ஐயங்காருக்கும் இதில் பங்கிருக்கிறது. நாராயணா! எல்லாம் தயவப்பா வடக்கே பார்த்து தலைக்குமேலே கைகளை உயர்த்திக்கும்பிடுபோட்டார். வா! இப்படி என் அண்டையில் உட்கார். உமக்கு என்னவேண்டும் தயங்காமல் கேள்..

– பகற்போதில் நான் கமலக்கண்ணியென்பது தேவரீருக்கு நினைவிருக்கட்டும். இவ்விவகாரத்தில் உங்களை விட சந்தோஷப்படுபவள் இந்த அபாக்கியவதிதான். இக்கடனை ஏழேழு சென்மமெடுத்தாலும் என்னால் அடைக்க முடியாது. கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள, சீலைதலைப்பை எடுத்து ஒற்றினாள்.

– அழாதே பெண்ணே! எமக்கு செய்யவேண்டியது நீ ஒன்றே ஒன்றுதான். கிருஷ்ணமணி தீபிகையை சுணக்கமின்றி எழுதி கொடுத்தாயானால் அரங்கேற்றிவிடலாம். இதைக்காட்டிலும் வேறுவகையில் எமது அபிலாஷைகளை உம்மால் பூர்த்திசெய்துவிடமுடியாது.

– இரண்டொரு தினங்களில் உமது மனோரதம் நிறைவேறும். நமது சிக்கம்ம நாய்க்கன் முடிசூடும் நாளன்று அவன் முன்னிலையிலே சந்திரகிரியில்வைத்து இந்நூலை அரங்கேற்றுவேன், சந்தோஷம்தானே?

– நன்றாகசொன்னாய், எமக்கும் இதில் பூரண சம்மதம். சீக்கிரம் இலையைப் போடு, எனக்கு அகோரப்பசி, உணவு முடித்து சாவாதானமாகப் உரையாடுவோம்.

அடிமைப் பெண்ணொருத்தி குறுக்கிட்டாள்.

– அம்மா! நமது சக்கரவர்த்தியின் ராஜகுரு அனுப்பிய ஆளொருவன், சந்திரகிரியிமிருந்து ஓலையொன்றை கொண்டுவந்திருக்கிறான்.

– அவனை உள்ளே அனுப்பு- நாயக்கரிடமிருந்து கட்டளை வந்தது. .

பணிப்பெண் வணங்கி வெளியேறினாள். அடுத்த சில நொடிகளில் வீரனொருவன் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். இராயரை வணங்கி கைவசமிருந்த ஓலையைக் கொடுத்தான். வாசித்த நாயக்கரின் முகம் கறுத்துப்போனது.

– ஏன் என்ன நடந்தது? யாரிடமிருந்து ஓலை?

– வெங்கடாம்பா தமையன் ஜெகராயரிடமிருந்து வந்திருக்கிறது. இறக்கும் தறுவாயிலிருந்த மகாராயர் வெங்கடபதி தமது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். சிக்கம நாயக்கனுக்கு முடி சூட்டாமல் தமது சகோதரன் மகன் ஸ்ரீ ரங்கனுக்கு பட்டம் சூட்டியிருக்கிறார்

– பிறகு

– நம்முடைய ஜெகராயர் விடுவதாக இல்லை, சிக்கம நாய்க்கனை பதவில் அமர்த்தியே தீருவேன் என சபதம் செய்திருக்கிறாராம். நமது ஒத்துழைப்பை கோருகிறார்.  தஞ்சை நாயக்கருக்கும், மதுரை நாயக்கருக்கும் உடனடியாக நாம் ஓலைகள் எழுதவேண்டும்.

( தொடரும்)

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19நினைவுகளின் சுவட்டில் (91)
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *