ஜென் தத்துவம் சார்ந்து எழுந்ததுதான் ஹைக்கூ என்று சொல்கிறார்கள். ஜப்பானியத் துறவிகள் எழுதியவை அவை என்றும் ஒரு வரலாற்றுக் குறிப்பு உண்டு. அவர்கள் இயற்கையை மட்டுமே பாடினார்கள் என்பது, கற்று தெளிந்த உண்மை.
ஜென் என்னும் gene (மரபணு) பல கல் தாண்டி, எப்படி தமிழன் உடலுக்குள் புகுந்தது என்பது ஆய்வுக்கான விசயம். இன்னும் சொல்லப் போனால் குருவை மிஞ்சிய சிஷ்யனைப் போல், தமிழ் கவிஞர்கள்தான் இப்போதெல்லாம் ஜப்பானியர்களை விட அதிகம் எழுதுகிறார்கள். இந்த விசயத்தில் ஜப்பானியன் சப்பாணி ஆகிவிட்டான் என்று கூட சொல்லலாம்.
நமது கவிஞர்கள் இயற்கையை பாடுவதை ஒரு மரியாதைக் காக கொஞ்ச காலம் செய்து வந்தார்கள். இப்போதும் புதிதாக ஹைக்கூ எழுதுபவர்கள்கூட இயற்கையிலிருந்துதான் ஆரம்பிக் கிறார்கள். அவர்களைப் பொருத்த வரை அதுதான் பிள்ளையார் சுழி. கொஞ்சம் தேர்ச்சி பெற்ற பிறகு, அவர்கள் கோடுகளைத் தாண்டிக், கோலங்கள் போட ஆரம்பித்து விடுவார்கள்
சமூக அவலங்கள், அரசியல், காமம், நிர்வாகம், பொதுத் துறை என திருக்குறள் ரேஞ்சுக்கு அவர்கள் போக ஆரம்பித்திருக்கிறார்கள். யாராவது ஹைக்கூக்களைக் தொகுக்கும்போது திருக்குறள் போன்றே அதிகாரங்களை பட்டியலிட்டு அது தொடர்பான ஹைக்கூக்களை அதனடியில் சேர்த்தால், ஹைக்கூ சாகாவரம் பெறும். கூடவே அரசுரிமையும் பெற்று விட்டால், சகாய விலைக்கு சகட்டு மேனிக்கு அச்சிட்டுக் கொள்ளலாம்.
ஒரு அடி, இரண்டடி, மூன்றடி என்று ஏற்கனவே சங்க இலக்கியங்களில் பாடல்கள் காணப்படுகின்றன. ஆனால் அவையனைத்தும் ஏதோ ஒரு மரபைச் சார்ந்த விசயமாக இருக்கிறது. இன்றைய அவசர உலகில் அறுசீர் விருத்தமும் எண்சீர் விருத்தமும் கற்க ஆளுமில்லை, நேரமுமில்லை. வருத்தங்கள் பெருகிய உலக வாழ்வில் விருத்தங்களுக்கு இடமேது? மரபைத் தாண்டி, அதை மறுதலித்து புதுக்கவிதை தோன்றியது போல், புதுக்கவிதையின் ஒரு கிளைபோல் ஹைக்கூ தோன்றியிருக்க வேண்டும். வானம்பாடி கவிஞர்கள் எல்லாம் புதுக் கவிதை மரபு, பரம்பரை என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மரபுக் கவிஞர்கள் இவர்கள் மீது வைத்த விமர்சனங்களை எல்லாம், இவர்கள் இப்போது புதுக் கவிஞர்கள் மீது குறிப்பாக, ஹைக்கூ கவிஞர்கள் மீது வைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் வெட்ட வெட்ட துளிர்க்கும் செடி போல், ஆங்காங்கே புது புது பதியன்கள் போடப்பட்டு, ஹைக்கூ எல்லைகளை விரித்துக் கொண்டே போகிறது என்பதே நிசம்.
சிங்காரத் தோட்டமாய் காட்சியளிக்கும் ஹைக்கூ மண்டலம் ஒரு பருந்துப் பார்வையில் தான் அப்படியான ஒரு தோற்றத்தைத் தருகிறது. ஒரு தோட்டக்காரனைப் போல, ஒரு இயற்கை விஞ்ஞானியைப் போல கொஞ்சம் நெருங்கி நுண்ணி ஆராய்ந்தால், களையெடுக்கப் படவேண்டிய, ஏகப்பட்ட காளான்கள் இருப்பது புரியும். நல்ல கடலைகளுக்கு நடுவே ஒரு சொத்தைக் கடலை வாயையே கெடுத்து விடுவது போல் இவை சில கவிஞர்களால், ஆர்வக் கோளாறால் புனையப் பட்டு வசதி இருப்பின், புத்தகமாகவும் வெளிவந்து விடுகின்றன. பிறகு அவை எடை போடப்பட்டு, எடைக்கு போடும் அளவிற்கு போவது ஹைக்கூவின் நிகழ்கால சோகம்.
ஹைக்கூ ஆதரவாளர்கள், ஏன் காதலர்கள் என்று கூட சொல்லலாம், இன்னமும் ஐந்தாறு கவிஞர்களைப் பற்றித்தான் சிலாகித்து பேசுகிறார்கள். ஆனாலும் இதில் கவிஞர்களைக் குறை சொல்லி பயனேதுமில்லை. சிற்றிதழ்கள் இந்தத் தவறு நிகழ்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆரம்பக் கட்டங்களில் புதிய சிற்றிதழ்கள் பக்கங்களை ரொப்ப வழியற்று, இக்குப்பைகளை நிரப்பி, பம்மித் திரிகின்றன. ஆனால் படைப்பாளிகள் வட்டம் அவற்றுக்குப் பெருகப் பெருக, அவர்களது அஞ்ஞானம் விலகி ஓரளவு தெளிவு ஏற்படுகிறது. புதிதாக ஹைக்கூ எழுதும் கவிஞன் தன் கவிதையை அச்சில் பார்த்ததும், அளவில்லா ஆனந்தம் அடைகிறான். வசனத்தைக் கூறு போட்டு அகநானூறு புறநானூறு என எழுதிக் கிழிக்க ஆரம்பித்து விடுகிறான்.
சில மாடுகள் விலகி மேய்ந்தாலும், மந்தை போன வழி அழியாத தடமாக ஆகிப்போவது போல் ஹைக்கூவில் தடம் பதித்த சிலர் பற்றியே இக்கட்டுரை.
இன்னமும் அமுதபாரதியின் ஒரு ஹைக்கூ பற்றியே கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வேறு காரணமும் இருக்கிறது. அறிவு ஜீவி சுஜாதா வெகு சன பத்திரிக்கைகளில் இதைக் கோடிட்டு காட்டியதும் ஒரு காரணம். ஆனந்தவிகடனில் நான்கு வரி வராதா ( மூன்று வரி ஹைக்கூ + கவிஞர் பெயர் ) என்று நூல் வெளியிட்டவுடன் அவருக்கு அனுப்புவதை தலையாயக் கடமையாகக் கொண்டோர் பலர் இங்கிருக்கின்றனர். அவரும் சலித்துக் கொண்டு இரண்டு வரி எழுதிவிட்டு சுளையாக சன்மானம் பெற்றுக் கொண்டுவிடுகிறார். புளகாங்கிதம் அடைந்த கவிஞன், சேட்டுக் கடையில் மீட்க முடியாமல் கிடக்கும் மனைவியின் வளையலையும், புறாக் கூண்டு அறையில், பாதி இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும், மீதமாகிப் போன நூல்களையும் மறந்து, இன்ப லாகிரியில் மூழ்குகிறான்.
ஒரு கேள்வியை உள்ளடக்கி நிற்கும் அமுதபாரதியின் ஹைக்கூ, கவிதைதானா என்றே எனக்குச் சந்தேகம் வருகிறது. வழக்கில் இருக்கும் ஒரு சாதாரண விசயத்தை இவ்வளவு தூரம் பெரிது படுத்தியிருக்க வேண்டாமோ என்றும் தோன்றுகிறது.
மு. முருகேஷ் கொஞ்சம் வித்தியாசமானவர். ஹைக்கூவைத் தாண்டி ஏதேதோ செய்ய நினைக்கிறார் என்றாலும் ஹைக்கூவை வைத்தே அவரது பெயர் இன்றளவும் கவிஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அவரது ஆடையில்லா சிறுவர்கள்/ ஈசல் பிடிக்கிறார்கள் / மேலெல்லாம் சிறகுகள் என்ற கவிதை ஒரு சோகத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது. இதில் இவர்களது வறுமையும் பட்டினியும் கூட இழையாக தென்படுகிறது.
வலம்புரி லேனா என்றொரு கவிஞர் சில ஹைக்கூ கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தெறிப்பாக சில கவிதைகள் தேறுகின்றன. வெயிலில்/ உருகினான்/ஐஸ் வியாபாரி என்றொரு கவிதை கண்ணில் பட்டது. இதிலும் ஒரு சமூகப் பார்வை இருப்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். வேறெங்கோ சுற்றி சுழன்றாலும் எப்போதாவது நிதானப் பார்வை கிடைக்கப் பெற்று ஒளிந்திருக்கும் கவிதை ஊற்று பீறிப் புறப்பட சில நல்ல கவிதைகளையும் கவிஞர்கள் எழுதி விடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
வதிலை பிரபாவின் ஒரு கவிதை என்னை நிரம்பக் கவர்ந்தது. ஈரப்பசை உள்ளீர்க்க / ஈரத்துணி உலரும் / பசியாறும் சிறுவன். ஹைக்கூ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் ஒரே வார்த்தை இரு வரிகளில் வரக்கூடாதாம். இங்கே முதல் இரண்டு வரிகளில் ஈர என்ற வார்த்தை வருகிறது. ஆனாலும் பசிக்கொடுமை அழகாக படம் பிடித்துக் காட்டும் இந்தக் கவிதை ஹைக்கூவாக இல்லாமல் போனால்தான் என்ன?
இராம. பிரபுவின் கேட்பாரற்று ததும்புகிறது / மதுக்கடை நெரிசலில் / மெல்லிய இசை என்ற கவிதையில் விசேசமே ததும்புகிறது என்ற வார்த்தைதான். ஏற்ற இறக்கத்தோடு பரவும் இசை ஒரு தளும்பல் என்ற வர்ணிப்பு புதுமையான ஒன்று. ஆனாலும் இந்தத் தளும்பலை கவனிப்பார் இல்லாமல் மதுக்கோப்பைகளின் தளும்பல்களில் அதிக கவனம் செலுத்துவோர் பற்றியதான விமர்சனமாக நிற்கிறது இந்தக் கவிதை. மூன்றாவது முற்றிலும் புதிதான ஒன்றை, எதிர்பாராத ஒன்றைச் சொல்ல வேண்டும் என்ற விதியின் படி பார்த்தால் இதை ஹைக்கூ எனச் சொல்லலாமா? சாட்டையை எடுப்பதும், ஓங்குவதும், பின் உடலில் சுரீர் என அடிப்பதுமான பாணியே ஹைக்கூ என்று ஒரு விஞ்ஞானக் கவிஞர் சொன்னார். ஆனாலும் மேற்சொன்ன கவிதையில் சாட்டையெல்லாம் இல்லை. ஒரு நையாண்டி ஒரு புலம்பல் ஒரு விமர்சனம் என்ற நோக்கிலே கவிதை பயணப்படுகிறது.
அன்பாதவனின் ஒரு கவிதை மயானக் காட்சியை கண் முன்னே நிறுத்துகிறது. பனி இரவு / எரியும் சிதை / குளிர் காயும் வாழ்க்கை. ஒரு துக்க சம்பவம், வெட்டியான் வாழ்வில் அன்றாட நிகழ்வாக போனதில், பிணம் எரியும் நெருப்பு கூட, அவனை விலக்குவதில்லை என்பது ஒரு புதிய சிந்தனை.
ஹைக்கூ தொடர்பாக பல நூல்கள் வெளியிடப்பட்டுவிட்டன. சிறந்த சிறுகதைகளை தொகுத்து வெளியிடும்போது ஏற்படும் சிக்கல்கள் ஹைக்கூக்களை தொகுக்கும்போதும் ஏற்பட்டு விடுகிறது. தொகுப்பில் காணப்படும் கவிதைகள் பல ஹைக்கூக்களே அல்ல என்ற கூக்குரல்கள் ஹைக்கூவல்களாக வெளிவருகின்றன.
இந்தக் கட்டுரையில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் கவிதைகள் பற்றியும் எதிர்வினைகள் வரலாம். ஆனாலும் இது ஒரு தனித்த பார்வையே. ஒரு பெருங்கடலாக ஹைக்கூ வியாபித்திருப்பது எந்தளவு உண்மையோ அதே போல் ஒரு பார்வைக்கு முத்தாகத் தெரிபவை இன்னொரு பார்வைக்கு கூழாங்கல்லாகத் தெரியலாம். இதில் வாசக அணுகுமுறையில் வேற்றுமை என்ற ரசாயனம் விளையாடுகிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் புதிதாக எழுது முனைவோருக்கு எது நல்ல ஹைக்கூ கவிதை என்று இந்தக் கட்டுரை அடையாளம் காட்ட பயன்படுமானால், இதன் நோக்கம் நிறைவேறிற்று என்றே பொருள்.
—–
- முள்வெளி அத்தியாயம் -15
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 19
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 32
- நினைவுகளின் சுவட்டில் (91)
- ஏகாலி
- சித்திரவதைக் கூடத்திலிருந்து
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -1
- தமிழிலக்கியத்தை பிரெஞ்சுமொழியினருக்கு அறிமுகப்படுத்த
- “ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)
- சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு
- தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-8)
- காலணி அளவு
- ஹைக்கூ தடங்கள்
- உள்ளோசை கேட்காத பேரழுகை
- பஞ்சதந்திரம் தொடர் 50 -அடைந்ததை அழித்தல்
- துரத்தல்
- ஏழாம் அறிவு….
- கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு
- பத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா
- அஞ்சுவன்னங்களும் அரபுக் குதிரைகளும்
- சின்னஞ்சிறு கிளியே…!
- துருக்கி பயணம்-8 – இறுதிப் பகுதி
- மணமான அந்தப் பெண்களின் பெயரில்…
- திண்ணைப் பேச்சு – புத்தகங்களிற்கு எதிரான போர்
- ஒரு வெளிர் நீல நிறப் புள்ளி : பூமி மீது ஓர் அன்னியப் பார்வை
- குழந்தைகள் நலனைப் பலி கொடுக்கும் மதவாதக் கலாசாரம்
- அன்பிற்குப் பாத்திரம்
- அண்டவெளிச் சிமிழ் கையாட்சி இணைப்புக்குப் பிறகு சைன விண்வெளி விமானிகள் பூமிக்கு மீட்சி
- ஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்