விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு

This entry is part 21 of 32 in the series 1 ஜூலை 2012

1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை

 

விசாலம் மன்னி அதற்கு அப்புறம் பகவதி கூடவே தான் இருக்கிறாள்.

 

சூனிய மாசம்னாலும் அமிர்தமான மாசம். நேரம். நல்ல நாளும் பெரிய நாளுமா அத்தை வந்திருக்கா. வந்தேளா, குளிச்சேளா சாப்பிட்டேளான்னு பக்ஷமா நாலு வார்த்தை பேசாமா, ஏழுகிணறு நாயுடு கொண்டு வந்து கொடுத்த சொம்பைக் கட்டித் தூக்கிண்டு அலைஞ்சாறது.

 

பகவதி அத்தை வீட்டுக்கு வந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டே வீட்டுக்காரனைப் பற்றிக் குறைப்பட்டுக் கொள்ள நீலகண்டன் பெண்டாட்டி மறக்கவில்லை.

.

பாவம். அவ சாதுப் பொண்ணு. இந்த நீலகண்டன் அவளைப் படுத்தற பாடு இருக்கே. நச்சு நச்சுன்னு அதைக் கொண்டாடீ இதைக் கொண்டாடீன்னு பிடுங்கிண்டே இருப்பான்.

 

விசாலம் வீட்டுக்குள் இருந்து பகவதி மட்டும் கேட்க சேதி சொன்னாள். சுபாவமாகப் பகவதி தலை ஆட்டிக் கொண்டாள், மருதையன் அவளை ஒரு வினாடி அதிசயமாகப் பார்த்து விட்டு காப்பி குடிக்க ஆரம்பித்தான்.

 

விசாலம் மன்னி கள்ளக் குரலில் தொடர்ந்தாள்

 

எதை எங்கே வச்சான்னு ஞாபகம் கிடையாது. பிருஷ்டம் மறந்தவன்னு சொல்வாளே நம்ம பக்கத்திலே.

 

அரசூரில் அதையே அழுத்தம் திருத்தமாக குண்டி மறந்தவன் என்று சொல்வது வழக்கம். நினைக்கும்போதே பகவதிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்து விட்டது. வலுக்கட்டாயமாக அடக்கப் புரை ஏறி இருமலில் முடிந்தது.

 

சரி, கிடக்கு விடு அதை. சமையல்கட்டுலே இந்த பிராவஸ்யம் புதுசா என்ன மாற்றி வச்சிருக்கே?

 

பகவதி சமையல் கட்டுக்குள் நடப்பதை யோசனையோடு பார்த்த நீலகண்டன் சாமாவிடம் சொன்ன்னது அவள் காதில் விழத் தவறவில்லை.

 

இந்தக் கலசத்துலே என்ன வேணும்னாலும் இருக்கட்டும். நாயுடு பிள்ளை சொன்னான். இதை கங்கையிலே விட்டா நன்னா இருக்கும்னு அவன் அப்பன் நினைவு தப்பறதுக்கு முந்தி பினாத்திண்டே இருந்தானாம். நீ ஒரு காரியம் பண்ணேன் சாமா.

 

காரியம் பண்ணத்தானேப்பா காசிக்குப் போறேன்.

 

சாமா சிரிக்க, பகவதிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

 

நீங்க இருந்தா நான் காசிக்கு எதுக்கு இப்படி கர்மம் தொலைக்க வரணும்?

 

அங்கே இல்லாத சங்கரனை அவள் ஏக்கத்தோடு கேட்க, அங்கே இல்லாவிட்டாலும் இருந்த விசாலாட்சி அவளை ஆசுவாசப் படுத்தினாள்.

 

மாப்பிள்ளை நல்ல கதிக்குப் போயிருக்கார். நீ ஒண்ணும் கவலைப் படாதே. விதிச்சது அவ்வளவுதான்னு இருக்கப் பழகிண்டவள்தானே நீ. என்னை மாதிரி அடஞ்சு கிடந்து காலாகாலத்துக்கும் கஷ்டப் படற துக்கமெல்லாம் உனக்கு சர்வ நிச்சயமா விதிக்கலை பகவான்.

 

காசியிலே எதை எதையோ விடறதோட இந்தக் கலசத்தையும் போட்டுட்டு வந்துடேன்.

 

நீலகண்டன் சாமாவைக் கேட்டுக் கொண்டான்.

 

பகவானே பகவானே.

 

விசாலாட்சி சந்தோஷமாக பகவதி காதில் சொன்னாள். இனிமேல் அவளுக்கு எந்த விசனமும் இல்லை. பகவதி பார்த்துக் கொள்வாள். பாத்துப்பே இல்லியோ பகவதிக் குட்டி?

 

தீர்ச்சயாயும் மன்னி.

 

காசி சங்கரனுக்கு மட்டுமில்லை விசாலம் மன்னிக்கும் இன்னொரு கதவைத் திறக்கப் போகிறது.  ரௌராவாதி நரகம் எல்லாம் கிடையாது. சுவர்க்கம் தான் இனிமேல் கொண்டு.

 

உடம்பு எரிந்து சாம்பலாகிறது. உசிர் மட்டும் தான் வெளியேறிப் பறக்கிறது. சுவர்க்கமும் நரகமும், சுகமும் வலியும் ஆனந்தப் படுவதும் அழுது புலம்புவதுமெல்லாம் ஆத்மாவுக்கு ஏது? யமபடனும் தேவாதி தேவனும் எல்லாம் ஒரு சௌகரியத்துக்காக பிடித்து வைத்த வெல்லப் பிள்ளையாரா? யார் சௌகரியத்துக்கு?

 

பகவதிக்குப் புரியவில்லை. எதுக்குப் புரியணும்? அதது அததுக்கு விதிக்கப்பட்ட மாதிரி இருந்து விட்டுப் போகட்டும். அவளுக்கு எந்த விரோதமும் இல்லை.

 

அம்மா, இந்தக் கலசத்தை எடுத்துப் போய் கங்கையிலே விட்டுடலாமா? சாஸ்திர சம்பிரதாயப்படி உங்களுக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லியே?

 

சாமா அவளைக் கேட்டது காதில் விழத் திரும்பினாள்.

 

இல்லேன்னு சொல்லுடி குழந்தே. தயவு பண்ணி, இந்த பிராந்து பிடிச்ச மன்னிக்காக ஒரு வார்த்தை சொல்லுடியம்மா. வேறே எதுவும் வேண்டாம். என்னை ஒண்ணுமில்லாம ஆக்கிடு. பிச்சை கேட்கறேண்டி. பிச்சை.

 

விசாலம் குரல் உடைந்து அழ பகவதியின் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது.

 

கண்ணைப் புடவைத் தலைப்பால் துடைத்தபடி தலையை ஆட்டினாள்.

 

உன்னோட இஷ்டம் தாண்டா சாஸ்திரமும் சம்பிரதாயமும். நீ தீர்மானிச்சிருந்தா அரசூர்லே உடைய சேர்வார் ஊருணிக் கரையிலும் கங்காதேவி கரைபுரண்டு ஓடுவா. அப்பாவை அங்கேயே கடைத்தேத்தி இருந்தாலும் எனக்கு நிம்மதிதான். காசியிலே அவருக்காக காரியம் செய்யும்போது நம்ம குடும்பத்திலே, வெளியே வேறே நல்ல ஆத்மாக்களும் சாந்தியாகட்டும் ஏண்டியம்மா, ஒரு கூடை பெல்லாரி வெங்காயம் வாங்கி வச்சிருக்கியே. யாருக்கு இதெல்லாம்?

 

பகவதியின் கடைசி கேள்வி நீலகண்டன் பெண்டாட்டிக்கு. காசிக்குப் போகிற மனுஷர்கள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பதை அவள் என்ன கண்டாள்?

 

வெங்காய வாடையே படாமல் பட்டணத்தில் நாலு நாள் தங்கி விதவிதமாக அம்பலப்புழை பாயசமும் ஆலப்புழை ஆகாரமுமாக கை சலிக்காமல் சமைத்துப் பரிமாறக் கைகாட்டி, உப்பைக் கொண்டா, புளியைக் கரை, காப்பித்தூளை புதுசா அரைச்சுக் கொடு என்று தினுசு தினுசாக ஆணை பிறப்பித்து வேலை வாங்கி பகவதி அந்த வீட்டை நிர்வகிக்க ஆரம்பித்து விட்டாள். அதிலே எல்லோருக்குமே சந்தோஷம் தான். முக்கியமாக மருதையனுக்கு. அம்மா கவலை மாற இதுவும் ஒரு வழி போலிருக்கு.

 

பட்டணத்தில் ரெயில் ஏறும்போது நீலகண்டன் வீட்டுக்காரி ஸ்டேஷன் வரை வந்து சகல ஆகாரமும் பான பதார்த்தமும் கொடுத்து அனுப்பினபோது, ரெயிலடி என்று கூடப் பார்க்காமல் பகவதியின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து குலுங்கக் குலுங்க அழுதாள்.

 

எங்கம்மா வந்து இருந்துட்டுப் போற மாதிரி இருக்கு. இன்னும் நாலு நாள் இருக்கக் கூடாதா?

 

வாஞ்சையோடு அவளைத் தழுவி ஆசிர்வாதம் செய்தபோது விசாலம் மன்னியும் சேர்ந்து கொண்டாள். பகவதியோடு கூட தூரதேச பயணம் போகிற சந்தோஷம் அவளுக்கு,

 

அந்தப் பயணம் முழுக்க விசாலம் பகவதியோடு பேசிக் கொண்டேதான் வந்தாள். அவளுடைய சந்தோஷம் பகவதியையும் தன்வசமாக்கிக் கொண்டது. ரெண்டு எலும்பாக மட்டுமில்லாமல் ஒரு சரீரமாக இருந்திருந்தால் சாமாவையும் மருதையனும் அவள் இதேபடிக்கு உற்சாகப்படுத்தி யாத்திரையை இன்னும் சுகானுபவமாக ஆக்கி இருப்பாள்.

 

என்ன, பட்டணத்துலே சமையல் கச்சேரி நடத்தினதை நினைச்சுக்கறியா? இல்லே அந்த ஒரு வீசை பெல்லாரி வெங்காயத்தை என்ன செஞ்சிருப்பான் நீலகண்டன்னா? வெங்காயத்தை எல்லாம் தினசரி தின்னு தீத்தாச்சு. அக்கம் பக்கத்துலே தானமாக் கொடுத்தாறது இப்போ.

 

விசாலம் லகு வார்த்தை சொல்லியபடி தினத்தை ஆரம்பித்து வைத்தாள். காசி வந்து ஒரு வாரம் ஆகியும் அவள் வாய் ஓயாமல் பேசுவது நிற்கவே இல்லை.

 

பனி மூட்டம் விலகி சூரியன் தூரத்தில் கங்கைக் கரையை பிரகாசிக்கச் செய்திருந்த திவ்ய நேரம் அது. பகவதி குளிக்கக் கிளம்ப வேண்டியதுதான்.

 

மருதையனும் சாமாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். எழுப்பலாமா?

 

ராத்திரி தாமசமா படுத்துது இல்லியா இந்த ரெண்டு பிள்ளையும்? அதான் சரிக்கு ஒரு உறக்கம். புலர்ச்சை ஆகியும் அடிச்சுப் போட்ட மாதிரி அப்படி அசதியாக்கும்.

 

விசாலம் அவர்களை எழுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

 

ஒரு மணி நேரம் நேரம் கடந்து குளிக்கப் போனாலும் ஸ்நான கட்டம் திறந்துதான் இருக்கும், அதுக்கென்ன கதவும் பூட்டும்? காலாகாலமாகக் கல்லில் பாளம் அடித்துப் பதிந்தது பதிந்தபடி கிடக்கும் படிகளுக்கு அப்புறம் பிரவகித்து ஓடிக் கொண்டே இருக்கும் கங்கை இருக்கும்வரை எப்போது வேணுமானாலும் குளிக்கலாம்.

 

விடிகாலை நேரத்தில் தெருவோடு ஊர்வலமாக ஒரு சின்ன கும்பல் ஊர்ந்து போனது.

 

ராம் நாம் சத்ய ஹை. ராம் நாம் சத்ய ஹை.

 

ராத்திரி செத்துப் போன யாரையோ எரிக்கத் தூக்கிப் போகிறார்கள். பகவதி படுத்தபடி போகிறது யார் என்று பார்த்தாள்.

 

அது நானாக்கும் என்றாள் விசாலாட்சி. இல்லே நான் தான் என்றாள் பகவதி.

 

அச்சானியமா சொல்லாதேடி. நீ இன்னும் நூறு வருஷம் இருக்கணும்.

 

எதுக்கு? பெல்லாரி வெங்காய சாம்பார் விளம்பி சகலரையும் சந்தோஷப்படுத்தவா?

 

பகவதி எழுந்தாள். பாழாய்ப் போன நாக்கு சூடும் ருஜியுமாக ஒரு வாய் காப்பிக்கு ஏங்குகிறது. இங்கே காப்பித்தூள் கண்ணில் படவில்லை. தேத்தூள் தான் எதேஷ்டமாக, கள்ளிச் சொட்டு மாதிரி பாலோடு கிடைக்கிறது. கொஞ்சம் பொறுத்தால் வடக்கத்தி பால்காரன் பைஜாமா மாட்டிக் கொண்டு வந்து நிற்பான்.

 

காப்பியும் டீயும் குடித்து வேளாவேளைக்கு அரிசிச் சாதமும், நெய் மினுக்கும் சப்பாத்தியும் பருப்புக் கூட்டும் சாப்பிட்டு உடம்பை வளர்க்கவா காசிக்கு வந்தது?

 

கொஞ்சம் காலாற நடந்துட்டு வந்தா நன்னாயிருக்குமே மன்னி.

 

தனியா எங்கேயும் போக வேண்டாம்னு உன் பிள்ளை சொல்லியிருக்கானே, மறந்துட்டியா?

 

தனியாவா? நானா? நீங்களும் தானே கூட இருக்கறதா ஏற்பாடு? அப்புறம் அவர் வேறே இதோ கூடவே வரார். காப்பி இல்லேன்னு முகம் வாடித்தான் இருக்கு மனுஷருக்கு. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ.

 

எழுந்தாச்சா? இன்னுமா ஆகலே?

 

சட்டென்று தமிழ்க் குரல் உரக்க வந்தது. கெச்சலாக, பஞ்ச கச்சமும், மேலே கம்பளிச் சட்டையுமாக புரோகிதர் வாசலுக்கு வந்து குரல் கொடுத்தார். இந்திக்காரன் தமிழ் பேசுகிற சாயலில் அவர் குரல் இருந்தது.

 

வந்துட்டான் குடுமிக்காரன். எல்லோரையும் கட்டித் தூக்கி கைலாசம் அனுப்பிட்டுத்தான் இவன் கொல்லைக்குப் போவான்.

 

விசாலம் மன்னி சாதாரணமாகக் குரலில் தென்படாத சிடுசிடுப்போடு சொன்னாள். அவளுக்குக் கூட எகத்தாளமும் இகழ்ச்சியாகவும் பேச வரும் என்று தெரிய பகவதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

மருதையன் புரோகிதன் குரல் கேட்டதுமே எழுந்து உட்கார்ந்து விட்டதுமல்லாமல் சாமாவையும் உலுக்கி எழுப்பினான்.

 

டிபுடி கலெக்டர் சாமிகளே, கொஞ்சம் எழுந்து அருள் புரியணும். அய்யர் வந்து நின்னுட்டார். அமாவாசை காத்துக்கிட்டிருக்காம். சொல்லச் சொன்னார்.

 

நாலு தடவை உலுக்கி, முகத்தில் கொஞ்சம் பலமாகத் தட்டி, உதிர்ந்தது போக மிச்சம் லவலேசம் இருக்கப்பட்ட தலைமுடியைப் பிடித்து ஜாக்கிரதையாக இழுத்து ஒரு வழியாக சாமாவை எழுப்பி உட்கார்த்தினான் மருதையன்.

 

ஈஷ்வர் சாமிகளே.

 

ஈசு வாத்தியார் எனப்படும் ஈஸ்வர சாஸ்திரிகளான இங்கே இருக்கப்பட்டவர்களுக்கு ஈஷ்வர் பண்டிட் ஆன மனுஷர் ஓணான் போல தலையை உள்ளே நுழைத்து போலியே மஹாராஜ் என்றார்.

 

கலெக்டர் ஐயா இன்னும் அரை மணி நேரத்துலே உம்ம கொட்டகையிலே ஈர வேட்டியோட உக்காந்திருப்பார். நீர் கிளம்பி இடத்தை சுத்தம் செய்து வையும்.

 

பகவதி சும்மா இருடா என்று அவனை கோபமே வராமல் கோபித்தாள்.

 

அம்மா, தேத்தண்ணி போடுங்க. பால் விடிகாலையிலேயே கொண்டு வந்து கொடுத்துட்டான். உள்ளே பாத்திரத்துலே மூடி வச்சிருக்கேன் பாருங்க. குளிர்லேயும் பனியிலேயும் உறைஞ்சு கட்டியா இருந்துது. இப்ப சரியான பதத்துக்கு வந்திருக்கும்.

 

அட படுபாவி. பால் வந்தாச்சுன்னு சொல்லிட்டு தூங்க மாட்டியோ.

 

கையை ஓங்கிக் கொண்டே சமையல்கட்டுக்குப் போனாள் பகவதி. கீகடமான இடத்தில் நாலு பாத்திரமும் தகர டப்பாவில் டீத்தூளும் சக்கரையும். வென்னீரைக் கொதிக்க வைத்து விட்டு டப்பாவைத் திறந்தாள்,.

 

இன்னும் ஒரு நாள் தான் டீத்தூள் வரும்.

 

போதும். எதேஷ்டம்.

 

விசாலமோ சங்கரனோ சொல்லவில்லை. பகவதி தான் சொன்னாள். போதும் என்றால் போதும்தான். முகத்தில் தீர்மானம் தெரிந்தது.

 

என்ன விசாலம் மன்னி, சரிதானே?

 

விசாலம் மன்னிக்குக்கூட மௌனமாக இருக்கத் தெரியும்போல.

 

(தொடரும்)

 

 

Series Navigationகல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -3 நிறைவுப் பகுதி)பத்தாவது சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *