பஞ்சதந்திரம் தொடர் 51 – கெடுவான் கேடு நினைப்பான்

This entry is part 41 of 41 in the series 8 ஜூலை 2012

ஏதோ ஒரு கிணற்றில் கங்கதத்தன் என்ற பெயருடைய தவளையரசன் இருந்தது. அது ஒருநாள் தன் உறவினர்களால் துன்புறுத்தப்பட்டு, கிணற்றில் தொங்கிய வாளியில் ஏறி படிப்படியாக வெளியே வந்து சேர்ந்தது. ‘’இந்த உறவினர்களுக்கு தீங்கு செய்வதற்கு என்ன வழி?

ஆபத்து வந்தபோது உதவி புரிகிறவனுக்கும், கஷ்ட தசையை எள்ளி நகையாடுகிறவனுக்கும் உதவி புரிந்தால் மனிதன் மறுபிறப்புப் பெறுகிறான்.

என்றொரு பழமொழி உண்டு என்று எண்ணமிட்டது. இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கருநாகம் புற்றில் நுழைவதைத் தவளையரசன் பார்த்துவிட்டது. அதைக் கண்டதும் தவளைக்கு மீண்டும் யோசனை ஓடிற்று. ‘’இந்தப் பாம்பை கிணற்றுக்குக் கூட்டிக் கொண்டு போய் எல்லா உறவினர்களையும் ஒழித்துவிடுகிறேன்.

கொடியவனைக் கொண்டே கொடிய விரோதிகளை அறிவாளிகள் நிர்மூலமாக்குகின்றனர். வந்த ஆபத்தை இன்பமாக மாற்றுகின்றனர். முள்ளைக் கொண்டுதான் முள்ளை எடுக்க வேண்டும்.

என்றொரு பழமொழி உண்டு’’ என்று முடிவுசெய்து, புற்றின் வாய்க்கருகில் போய், ‘’வா, பிரியதரிசனனே, வெளியே வா!’’ என்று கூப்பிட்டது. அதைக் கேட்ட பாம்பு, ‘’யார் என்னைக் கூப்பிடுவது? நான் கேட்பது பாம்பின் குரலல்ல, அது என் ஜாதியைச் சேர்ந்தாக இருக்காது. மற்றபடி இந்த உலகில் வேறு யாரோடும் எனக்குத் தொடர்பு கிடையாதே! ஆகவே, இங்கேயே இருந்துகொண்டு கூப்பிடுவது யார் என்று கண்டுகொள்கிறேன். ஏனென்றால்

குணமும், குலமும், விலாசமும் என்னவென்று தெரிந்து கொள்ளாமல் ஒருவனுடன் சேரக்கூடாது என்று பிருகஸ்பதி சொன்னார்.

அல்லவா? ஒருவேளை மந்திரவாதி மூலிகை வைத்தியன் யாராவது வந்து என்னைக் கூப்பிட்டுக் கட்டிப்போடப் பார்க்கிறானா? அல்லது யாராவது வஞ்சம் தீர்க்க எண்ணங்கொண்டு தன் நண்பனுக்காக என்னைக் கூப்பிடுகிறானா?’’ என்ற பாம்பு கேட்டது.

‘’நான் தவளையரசன். என் பெயர் கங்கதத்தான். உன் நட்பைப் பெற உன்னிடம் வந்திருக்கிறேன்’’ என்றது தவளை. ‘’அது நம்ப முடியாத பேச்சு. நெருப்போடு புல் ஒன்று சேருமா?

யாரால் தனக்கு மரணம் ஏற்படுமோ அவனைக் கனவில் கூட ஒருவன் ஒருபோதும் நெருங்குவதில்லை. அப்படியிருக்க நீ ஏன் இப்படிப் பிதற்றிக்கொண்டிருக்கிறாய்?’’
என்றது பாம்பு. ‘’நீ சொல்வதும் உண்மைதான். நீ எனக்கு இயற்கைப் பகைவன்தான். இருந்தாலும்கூட, அவமானமடைந்து நான் உன்னிடம் வந்திருக்கிறேன்.

எல்லாம் நாசமாகிவிட்டு உயிருக்கும் சந்தேகம் ஏற்படும் போது பகைவனை வணங்கி உயிரையும் பொருளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

என்று சொல்லப்படுகிறது’’ என்றது தவளை.

‘’அவமானப்படுத்தியது யார்?’’ என்றது பாம்பு. ‘’என் உறவினர்கள்தான்’’ எறது தவளை. ‘’நீ எங்கே இருக்கிறாய்? ஏரியிலோ? கிணற்றிலா? ஏதாவது குளம் குட்டையிலா?’’ என்று கேட்டது பாம்பு. ‘’நான் ஒரு கிணற்றிலிருக்கிறேன்’’ என்றது தவளை. ‘’கிணறா? அங்கே நான் வரமுடியாதே! வந்தாலும் தங்க முடியாதே! நான் எங்கே தங்கி உன் உறவினர்களைக் கொல்வது? நடக்கிற காரியமாயில்லை, நீ போய்விடு. ஏனெனில்,

உனக்கு உடல்நலனில் அக்கறையிருந்தால் எந்த உணவு இறங்குமோ எதை ஜீரணிக்க முடியுமா அதைச் சாப்பிட்டு ஜீர்ணம் செய்!

என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்’ என்றது பாம்பு.

‘’நீ என்னோடு வா, நீ வந்து சேருவதற்கு ஒரு சுலபமான வழியைக் காட்டுகிறேன். அங்கே நீர்மட்டத்திற்குமேல் ஒரு நல்ல வளை இருக்கிறது. அங்கு வந்து இருந்துகொள். பிறகு என் உறவினர்களைத் தீர்த்துக் கட்டுவது உனக்கு விளையாட்டுப் போலத்தான் இருக்கும்’’ என்றது தவளை.

அதைக்கேட்டு பாம்பு யோசிக்கத் தொடங்கியது. ‘’நானோ கிழவன். எப்பொழுதாவது ஏதாவது ஒரு எலி எனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ, எப்படிக் கண்டேன்?

ஆயுளும் பலமும் குன்றி, நண்பர்களும் மனைவியும் இன்றி இருக்கும் அறிவாளி மிகச் சுலபமான உபாயமுள்ள வாழ்க்கையைத் தொடங்குகிறான்.

என்று சொல்வது நியாயந்தானே!’’ என்று நினைத்து நிச்சயித்துவிட்டு, ‘’கங்கதத்தனே, அப்படியானால் அங்கே நாம் போவோம். நீ முன்னே போ’’ எனறது பாம்பு.

“பிரியதர்சனனே, உன்னைச் சுலபமான வழியாக அழைத்துப் போய் நீ தங்கும் இடத்தைக் காட்டுகிறேன். ஆனால் ஒன்று. நீ என் குடும்பத்தை விட்டுவைக்க வேண்டும். நான் யாரைக் காட்டுகிறேனோ அவர்களை மட்டுமே நீ தின்ன வேண்டும் என்றது’’ தவளையரசன்.

‘’நீதான் என்னுடைய நண்பனாகிவிட்டாயே! உனக்குப் பயமெதுவும்
வேண்டியதில்லை. உனக்கு எது இஷ்டமோ அதைத்தான் நான் செய்வேன்’’ என்றது பாம்பு. பிறகு அந்தப் பாம்பு புற்றிலிருந்து வெளியே வந்து தவளையை அணைத்துக்கொண்டு தவளையோடு கிணற்றுக்கு புறப்பட்டுப் போயிற்று. கிணற்றுக் கரைக்கு வந்ததும், ராட்டினத்தில் கட்டியிருந்த வாளியின் வழியாக தவளையோடு பாம்பு சென்று தவளையின் வீட்டை அடைந்தது. பிறகு தவளை பாம்பைக் கூட்டிச் சென்று வளையில் இருக்கச் செய்து தன் உறவினர்களைக் காட்டிற்று அவற்றையெல்லாம் பாம்பு ஒவ்வொன்றாக விழுங்கியது. பாக்கி உறவினர்கள் யாரும் இல்லாமற்போகவே தவளையின் நண்பர்களில் சிலவற்றை பயமும் நயமும் காட்டி நம்பவைத்துத் தின்று விட்டது. பிறகு தவளையரசனைப் பார்த்து, ‘’நண்பனே, ஒன்றுகூடப் பாக்கி வைக்காமல் உன் எதிரிகள் எல்லோரையும் தீர்த்துவிட்டேன். ஏதாவது தின்னக்கொடு. நீதானே என்னை இங்கு அழைத்து வந்தாய்!’’ என்றது. ‘’ஒரு நண்பன் செய்ய வேண்டியதை நீ செய்து முடித்தாயிற்று. இனி நீ அதே வாளி வழியாகப் போய்விடு!’’ என்றது தவளையரசன். ‘’நீ சொல்வது ரொம்பத் தப்பு. நான் எப்படி என் வீட்டுக்கு திரும்ப முடியும்? என் புற்றில் யாராவது அன்னியர்கள் நுழைந்து கொண்டிருப்பார்களே! நான் இங்கேயே இருக்கிறேன். உன் குடும்பத்தினரில் ஒவ்வொரு தவளையாகத் தின்னக் கொடு. கொடுக்காவிட்டால் எல்லாவற்றையும் தின்றுவிடுவேன்’’ என்றது பாம்பு.
இந்தச் சொற்களைக் கேட்டதும் தவளையரசனுக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது; அது யோசிக்கத் தொடங்கியது: ‘’என்ன காரியம் செய்து விட்டேன்! இந்தப் பாம்பை அழைத்து வந்து விட்டேனே! இனி இதன் பேச்சை நான் மறுத்தால் எல்லாவற்றையும் தின்றுவிடுமே!

தன்னைவிட அதிக பலமுள்ள விரோதியை யார் நண்பனாக்கிக் கொள்கிறானோ அவன் விஷத்தைத் தானே குடிக்கிற மாதிரிதான். அதில் சந்தேகமில்லை.

என்று சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனவே என் நண்பர்களை ஒவ்வொன்றாக இதற்குத் தருகிறேன். ஏனெனில்,

எல்லாவற்றையும் பறித்துக்கொள்ள வல்லமை பெற்றிருக்கும் விரோதிக்கு அறிவாளிகள் சிறிது தானம் அளிததுத் திருப்திப்படுத்துகின்றனர். வாடவாக்னிக்கு (சமுத்திரத்தைப் பற்றிய தீக்கு) கடல் கொஞ்சம் நீர் கொடுத்து அதைத் தணியச் செய்திருக்கிறதில்லவா?

என்றொரு பழமொழி உண்டு. மேலும்,

எல்லாம் நாசமாகிவிடக்கூடிய நிலைமை ஏற்படும்பொழுது அறிவாளிகள் அதில் ஒரு பாதியைக் கைவிடுகின்றனர். மறு பாதியைக் ª££ண்டு மேலும் காரியம் பார்க்கலாம் அல்லவா? எல்லாமே நாசமானால் அதைச் சகிக்க முடியாது.

சொற்ப லாபத்துக்காகப் புத்திசாலிகள் அதிகமான பொருளை நாசமாக்க மாட்டார்கள். சொற்பப் பொருளைக் கைவிடுவதின் மூலம் அதிகமான பொருளைக் காத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

என்றும் சொல்லப்பட்டிருக்கிறது’’ என்றவாறு தவளையரசன் யோசித்து முடிவுசெய்து ஒரு நாளைக்கு ஒரு தவளையாகப் பாம்புக்கு தந்தது. தவளையரசன் தந்ததை சாப்பிட்டதோடு நில்லாமல் அந்தப் பாம்பு தவளைக்குத் தெரியாமலே மற்ற தவளைகளையும் தின்று வந்தது.

அழுக்குப் படிந்த துணியை உடுத்திக் கொண்டால் கண்ட இடத்திலெல்லாம் நீ எப்படி உட்காருகிறாயோ, அதே போல் ஒரு நற்குணம் போய்விட்டால் மற்றவையும் அத்துடன் போய்விடுகின்றன.

என்கிற பேச்சு மிகவும் சரியே.

ஒருநாள் அந்தக் கருநாகம் தவளை அரசனின் மகனாகிய கனகதத்தன் என்ற தவPஐயைத் தின்றுவிட்டது. அதைக் கண்டதும் தவளையரசன் உச்சகுரலில் அழுது புலம்பியது. மனைவி கணவனைப் பார்த்து,

துராக்கிருதமாகச் சுற்றத்தாரைச் சாகச் செய்தவனே, ஏன் அழுகிறாய்? சுற்றத்தாரின் சாவுக்கு அழாத நீ உன்னை எப்படிக் காத்துக்கொள்வாய்?

எனவே, இங்கிருந்து போய்விடுவதற்கு இன்றைக்கே வழி தேடு, அல்லது அதைக் கொல்வதற்காவது ஒரு உபாயம் செய்!’’ என்றது.

நாளடைவில் பாம்பு எல்லாத் தவளைகளையும் தின்றுவிட்டது. தவளையரசன் மட்டுமே மிஞ்சியது. அந்நிலைமையில் பாம்பு தவளையரசனிடம், ‘’நண்பனே, எனக்குப் பசியாயிருக்கிறது. தவளைகள் எல்லாம் தீர்ந்துவிட்டன. ஏதாவது தின்னக் கொடு. நீதானே என்னை இங்கே கூட்டிவந்தாய்? என்று சொல்லியது. நான் இருக்கும்வரை சாப்பாட்டு விஷயத்தில் உனக்குக் கவலையே வேண்டியதில்லை. நீ என்னைப் போகவிட்டால் நான் போய் மற்ற கிணறுகளில் இருக்கும் தவளைகளும் நம்பி இங்கு வரும்படி செய்கிறேன்’’ என்றது தவளையரசன். ‘’நீ எனக்குச் சகோதரன் மாதிரி. உன்னை நான் சாப்பிடக்கூடாது. நீ சொன்னபடி செய்தால், எனக்கு ஒரு தந்தைபோல் ஆகிவிடுவாய்’’ என்றது கருநாகம்.

இப்படி ஒரு உபாயத்தைக் கையாண்டு தவளையரசன் கிணற்றிலிருந்து வெளியே தப்பிச் சென்றது. அது திரும்பிவரும் என்ற ஆசையோடு தவளையை எதிர்பார்த்தபடியே பாம்பு அதைக் கிணற்றுக்குள்ளே கிடந்தது. பிறகு ரொம்பநாள் கழித்து, அதே கிணற்றில் வேறொரு வளையில் இருந்த ஒரு பல்லியைப் பார்த்துப் பாம்பு ‘’சிநேகிதியே, எனக்கு ஒரு சிறு உதவி செய். உனக்குத் தவளையரசனை ரொம்பக் காலமாகத் தெரியும். அது எங்காவது ஒரு நீர்நிலையில் இருந்து கொண்டிருக்கும். நீ அதனிடம் போய், ‘வேறு தவளைகள் வராமற்போனால் போகட்டும். நீயாவது சீக்கிரமாகத் திரும்பிவந்து சேர். நீ இல்லாமல் என்னால் இங்கு இருக்க முடியாது. உனக்கு நான் ஏதாவது தீங்கு செய்தால் இந்தப் பிறப்பில் நான் செய்த புண்ணியம் எல்லாம் உன்னைச் சேரட்டும்’ என்று நான் சொன்னதாகச் சொல்!’’ என்று சொல்லிற்று.

பாம்பு சொன்னபடி பல்லி வேகமாகச் சென்று தவளையரசனைக் கண்டது. ‘’நண்பனே, உன் நண்பன் பிரியதர்சனன் (பாம்பு) நீ வரும் வழியைப் பார்த்தபடியே காத்திருக்கிறது. எனவே, சீக்கிரமாகத் திரும்பிப்போ. அது உனக்கு ஏதாவது தீங்கு செய்தால் தன் புண்ணியத்தையெல்லாம் அதற்கு ஈடாக வைக்கிறது. ஆகவே நீ பயப்படாமல் வா’’ என்று தவளையிடம் பல்லி சொல்லிற்று. அதைக் கேட்ட தவளையரசன்,

பசித்தவன் எந்தப் பாவச் செயலையும் செய்வான். நலிந்தவன் தயையில்லாதவனாக ஆகிறான். அன்பே! கங்கதத்தன் மீண்டும் கிணற்றுக்கு வரமாட்டான். என்று பிரியதரிசனனிடம் சொல்!

என்று சொல்லி பல்லியை அனுப்பி வைத்தது. ஆகவே, ஏ துஷ்ட முதலையே, நானும் தவளையரசனைப் போல் உன் வீட்டுக்கு ஒருநாளும் வரமாட்டேன்’’ என்றது குரங்கு.

அதைக் கேட்ட முதலை, ‘’நண்பனே, நீ அப்படிச் செய்வது சரியில்லை. எப்படியாவது என் செய்ந்நன்றி கொன்ற தோஷத்தை விலக்குவதற்காக என் வீட்டுக்கு வா! இல்லாவிட்டால் உன் வாயிற்படியிலேயே பட்டினி கிடந்து உயிரை விடுவேன்’’ என்றது. அதற்குக் குரங்கு ‘’மூடனே, ஆபத்தை நேரில் கண்டும்கூட அங்கே போய் லம்பகர்ணன் கொலையுண்டதே, அதைப் போலத்தான் நானும் என்று எண்ணிவிட்டாயா, என்ன?’’ என்று பதிலளித்தது.

‘’யார் அந்த லம்பகர்ணன்? ஆபத்தை நேரில் கண்டும் அது எப்படிச் செத்தது? சொல்’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லத் தொடங்கியது:

சுயபுத்தி இல்லாத கழுதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்றிருந்தது. அதன்பெயர் கராலகேசரன், அதை எப்பொழுதும் பின்தொடர்ந்து வரும் தூசரகன் என்ற ஒரு நரி அதனிடம் வேலையாளாக இருந்து வந்தது.

ஒருநாள் அந்தச் சிங்கம் ஒரு யானையோடு சண்டையிட்டது. அந்தச் சண்டையிலே சிங்கத்துக்கு பலமான காயங்கள் பல ஏற்பட்டுவிட்டன. அதனால் ஒரு அடிகூட சிங்கம் நகர முடியாமற் போயிற்று. சிங்கம் நடக்க முடியாமற் போகவே, நரி உண்ண வழியின்றி பசியால் மெலிந்து போயிற்று. ஒருநாள் நரி சிங்கத்தைப் பார்த்து, ‘’அரசே, நான் பசியால் வாடுகிறேன். ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. தங்களுக்கு எப்படி நான் சேவை செய்வது?’’ என்றது. ‘’தூசரகனே, ஏதாவது ஒரு மிருகத்தைத் தேடிக் கூட்டிவா. நான் எப்படி இருந்தாலும் அதைக் கொல்கிறேன்’’ என்றது சிங்கம்.

மிருகத்தைத் தேடிக்கொண்டு நரி போயிற்று. அருகிலுள்ள ஏதோ ஒரு கிராமத்துக்கு வந்து சேர்ந்தது. அங்கே குளத்தங்கரையிலே ஒரு கழுதை முட்களுள்ள துர்வாப்புல் நுனிகளை ஆவலோடு மேய்ந்துகொண்டிருந்தது. அதன் பெயர் லம்பகர்ணன். அந்தக் கழுதையை நரி கண்டதோ இல்லையோ, உடனே அதை நெருங்கி ‘’நமஸ்காரம், மாமா. நமஸ்காரம்! உங்களைப் பார்த்து ரொம்ப நாளாயிற்று. எதனால் இப்படி இளைத்துப் போயிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டது.

‘’நான் என்ன செய்யட்டும், மருமகனே? அந்த வண்ணான் கொஞ்சம்கூடத் தயை காட்டாமல் என்மேல் பாரத்தைப் போட்டு வாட்டி வதைக்கிறான். ஒரு பிடி புல்கூடப் போடுவதில்லை. புழுதிபடித்த இந்தத் துர்வாப் புல் நுனிகளை மட்டுமே தின்றுவருகிறேன். அதனால் என் உடம்பில் புஷ்டியேயில்லை’’ என்றது கழுதை.

’அப்படியானால், மாமா, நீங்கள் என்னோடு வந்து விடுங்கள். பச்சைக்கல் மாதிரி புல் வளர்ந்து கிடக்கிற ஒரு அழகான இடம் நதிக்கரையில் இருப்பது எனக்குத் தெரியும். அங்கே வந்து விடுங்கள். நீதி நிறைந்த பேச்சுக்களைப் பேசிக்கொண்டு சுகமாக ஜீவிக்கலாம்’’ என்றது நரி. ‘’மருமகனே, உன் பேச்சு சரிதான். ஆனால் கிராமத்திலுள்ள சாதுவான பிராணிகளைக் காட்டு மிருகங்கள் கொன்றுவிடுமே! அந்த அழகான இடத்தால் நமக்கு என்ன லாபம்?’’ என்று கழுதை கேட்டது. ‘’அப்படிச் சொல்லாதீர்கள். என் கைவல்லமையால் அந்த ஜாகையை நான் காத்து வருகிறேன். வேறு யாரும் அதில் நுழைவதில்லை. மேலும், அங்கே மணமாகாத மூன்று பெண் கழுதைகள் இருக்கின்றன. உன்னைப்போல் அவற்றையும் வண்ணார்கள் துன்புறுத்தி வந்தார்கள். இப்போத அவை புஷ்டியடைந்து யௌவனத்தின் வேட்கையால் பீடிக்கப்பட்டு என்னிடம் ‘மாமா, நீ ஏதாவது ஒரு கிராமத்துக்குப்போய் எங்களுக்குத் தகுந்த ஒரு கணவனை அழைத்துவா’ என்று சொல்லின. அதனால் நான் உன்னை அழைத்துப்போக நான் வந்தேன்’’ என்றது நரி.

நரியின் பேச்சைக் கேட்டதும் அந்தக் கழுதை காமவசப்பட்டுப் போயிற்று. ‘’நண்பனே, அப்படியானால் சரி சீக்கிரமாக அங்கே போய் சேருவோம். நீ முன்னால் நட’’ என்று அந்தக் கழுதை சொல்லிற்று.

பெண்ணே! நீ ஒரே விஷம் என்றோ ஒரே அமுதம் என்றோ, சொல்லிவிட முடியாது. உன்னைச் சேர்ந்தால் வாழ்வு கிடைக்கிறது, உன்னைப் பிரிந்தால் சாவு கிடைக்கிறது.

என்று சொல்லியிருப்பது சரிதான்.

அந்தக் கழுதை நரியோடு புறப்பட்டுப் போய் சிங்கத்தினருகில் வந்து சேர்ந்தது. அந்தச் சிங்கம் ஒரு முட்டாள் சிங்கம். பாய்ந்து கொல்லும் தூரத்தில் கழுதை நெருங்கித்தான் நின்று கொண்டிருந்தது. இருந்தபோதிலும் கழுதையைக் கண்டதிலே சிங்கத்துக்கும் மிதமிஞ்சிய சந்தோஷம் ஏற்பட்டுப் போனதால், அது பாய்ந்த பாய்ச்சலில் கழுதையைத் தாண்டிச் சென்று அப்பால் விழுந்தது. இதைக் கண்டதும், கழுதை இடி விழுந்ததோ என்று எண்ணிற்று. ‘’என்ன இது? என்ன இது?’’ என்று ஆச்சரியப்பட்டது. விதிவசமாக ஒரு காயமும் படாமல் கழுதை எப்படியோ தப்பித்துப் போய் விட்டது. திரும்பிப் பார்த்தபோது சிங்கத்தின் ரத்தச் சிவப்பேறிய கொடிய பயங்கரமான கண்களைக் கழுதை கண்டதும் பயத்தால் நடுநடுங்கிப் போய் ஒரே ஓட்டமாகத் தன் ஊருக்கு ஓடிவிட்டது.

அப்போது நரி சிங்கத்திடம், ‘’என்ன இது? உன் பராக்கிரமத்தைப் பார்த்துவிட்டேனே!’’ என்று சொல்லிற்று. சிங்கம் ஆச்சரியப்பட்டுப் போய், ‘’நான் என்ன செய்யட்டும். அப்போது பாய்வதற்கு நான் தயாரில்லை. என் பாய்ச்சலில் சிக்கிய எந்த யானையாவது என்னிடமிருந்து தப்பியதுண்டா?’’ என்றது. ‘’சரி மறுபடியும் பாய்வதற்கு இப்பொழுதே தயாராக நில்லுங்கள். அதை மறுபடியும் உங்கள் அருகில் அழைத்து வருகிறேன்’’ என்றது நரி. ‘’என்னை நேரில் பார்த்தவன் யாராவது மறுபடியும் திரும்பி வருவானா? ஆகவே, வேறு ஏதாவது மிருகத்தைக் கூட்டிவா?’’ என்றது சிங்கம். ‘’அதைப்பற்றி உங்களுக்கு ஏன் கவலை? அந்த விஷயத்தில் நான் உஷாராகத்தான் இருக்கிறேன்’’ என்று நரி பதிலளித்துவிட்டு கழுதை போன வழியிலேயே தானும் சென்றது. பழைய இடத்திலேயே கழதை மேய்ந்து கொண்டிருப்பதை நரி கண்டது. நரியைப் பார்த்த கழுதை, ‘’என்ன, மருமகனே! வெகு அழகான இடத்துக்குத்தான் என்னை அழைத்துப் போனாய், போ! நல்ல காலம். நான் எப்படியோ விதிவசமாகப் பிழைத்துக்கொண்டேன். மிகவும் பயங்கரமாயிருக்கிறதே, அது என்ன மிருகம், சொல்! இடிபோல் இருந்ததே அது? அதன் அடிக்குத் தப்பிவிட்டேன்’’ என்றது.

நரி சிரித்துக்கொண்டே, ‘’மாமா அது ஒரு பெண் கழுதை. அதற்குக் காமம் முற்றிப் போனதால் உன்னைக் கண்டதும் ஆசையோடு அணைத்துக் கொள்ள எழுந்தது. உனக்கோ ஒரே வெட்கம். ஓடிப்போனாய். ஓடுகிற உன்னைப் பிடிப்பதற்காக அது கையை நீட்டியது. விஷயம் வேறொன்று மில்லை. ஆகவே, நீ வா. உனக்காக அது பட்டினி கிடந்து உயிரைவிட முடிவு செய்து, ‘எனக்கு லம்பகர்ணன் கணவனாக ஆகாவிட்டால் நான் நெருப்பிலோ நீரிலோ விழுந்துவிடுவேன்; அல்லது விஷத்தைக் குடித்துவிடுவேன். எப்படியானாலும் சரி, அதைப் பிரிந்திருக்க என்னால் முடியவே முடியாது’ என்று சொல்லிவிட்டது. ஆகவே அதன்மேல் இரக்கம் கொண்டு அங்கே வா, இல்லாவிட்டால், ஒரு பெண்ணைக் கொன்ற பாவம் உன்னைச் சேரும். மன்மதனுக்கும் கோபம் உண்டாகும்.

சகல நன்மைகளும் அளிப்பவள் பெண். பெண்ணே மன்மதனின் வெற்றிக்கு முத்திரை. புத்தியில்லாதவர்கள் யாராவது பெண்ணை வெறுத்து, சொர்க்கத்தையும் முக்தியையும் விரும்பிச் செல்வார்களேயானால், அந்த தோஷத்துக்காக மன்மதன் அவர்களை அடித்துவிடுகிறான். சீக்கிரத்திலே சிலர் நிர்வாணமாக்கப்படுகின்றனர். சிலர் தலை மொட்டையடிக்கப் படுகின்றனர். சிலர் சடைதரிக்க வேண்டியதாகிறது. சிலர் மண்டை ஓடுகளை மாலையாக அணியும் காபாலிகர்களாக ஆக்கப்படுகின்றனர்.

என்று சொல்லப்படுகிறது.

நரியின் பேச்சைக் கழுதை நம்பிவிட்டது. மறுபடியும் அது நரியோடு போயிற்று.

அறிந்து தெரிந்திருந்தும் மனிதன் கெட்ட காரியத்தைச் செய்கிறான். இதற்குக் காரணம் விதிதான். இந்த உலகில் இழிசெயலை விரும்பிச் செய்கிறவன் யாராவது உண்டா? என்ற வாக்கில் நியாயம் இருக்கிறது.

இதற்கிடையே அந்தப் போக்கிரி நரி சொன்ன பற்பலவிதமான வாதப் பேச்சுகளைக் கேட்டு கழுதை ஏமாந்து போய் மறுபடியும் சிங்கத்தின் அருகில் வந்து நின்றது. முன்பே சிங்கம் பாய்வதற்குத் தயாராகத் தயாராக இருந்தது அல்லவா? எனவே அது கழுதையை உடனே கொன்றது. பிறகு சிங்கம் அதற்கு நரியைக் காவல் வைத்துவிட்டு குளிப்பதற்காக ஆற்றுக்குப் போயிற்று. பேராசையுள்ள நரி அந்தக் கழுதையின் காதுகளையும் நெஞ்சையும் தின்று விட்டது. குளித்துவிட்டு விதிப்படி எல்லா காரியங்களையும் முடித்துக்கொண்டு சிங்கம் திரும்பியது. கழுதைக்குக் காதுகளும் நெஞ்சும் இல்லாமலிருப்பதைப் பார்த்துவிட்டது. உடனே சிங்கம் கோபம் நிறைந்த உள்ளத்துடன், ‘’பாவியே, இந்தத் தகாத காரியத்தை ஏன் செய்தாய்? இதன் காதுகளையும் நெஞ்சையும் தின்று எச்சிலாக்கிவிட்டாயே’’ என்று நரியைப் பார்த்துக் கத்தியது.

மிகுந்த வணக்கத்துடன் நரி, ‘’அரசே, அப்படிச் சொல்லாதீர்கள். இதற்குக் காதுகளும் நெஞ்சும் பிறவியிலிருந்தே கிடையாது. அவை இருந்திருந்தால் இது எப்படித் தானே இங்கே வந்து உங்களை நேரில் பார்த்துப் பயந்து ஓடிப்போய் மறுபடியும் திரும்பி வந்திருக்க முடியும்?

அது வந்து, பார்த்து, போயிற்று. பயங்கரமான உன்னைப் பார்த்தும் யார் ஓடி மறுபடியும் வந்தானோ அவன் காதுகளும், ஹிருதயமுமற்ற மூடனே.

என்று சொல்லப்படுகிறது.

நரியின் வார்த்தையால் நம்பிக்கையடைந்த சிங்கம், உணவை அதனுடன் பகிர்ந்துகொண்டு சந்தேகமற்ற மனதுடன் சாப்பிட்டது.

அதனால்தான் ‘நானும் லம்பகர்ணனென்ற கழுதையில்லை’ என்று சொன்னேன். மூடனே! என்னை ஏமாற்றப் பார்த்தாய். ஆனால், யுதிஷ்டிரரைப் போல் உண்மையைச் சொல்லி அதை வீணாக்கிக் கொண்டாய். இவ்விதம் சரியாகத்தான் சொல்லப்படுகிறது:

சுயநலத்தைவிட்டு எந்தப் போக்கிரி மந்த புத்தியுடன் உண்மை பேசுகிறானோ அவன் யுதிர்ஷ்டிரனைப்போல் சுயநலத்தை நிச்சயம் அடைவதில்லை.

என்றது குரங்கு.

‘’அது எப்படி?’’ என்று முதலை கேட்க, குரங்கு சொல்லிற்று:

Series Navigationசுப்புமணியும் சீஜிலும்
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Comments

  1. Avatar
    jeyanthip says:

    Hi Madam,
    பஞ்சதந்திரம் தொடர் Part 50 is not available, will you please publish it or send me to my mail id.
    Your story is very interesting.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *