ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம்,
சட சட வென ஜன்னல் கண்ணாடியில் மழைச்சாரல் விழும் சப்தம் கேட்டதும்…உறக்கம் கலைந்து விழித்த ராஜகோபாலன் அட….காலங்கார்தால என்னதிது…..மழையா…? என்று போர்வையை உதறி எழுந்தார்..வீடு வெறிச்சென்று சமையல் அறையில் சப்தமின்றிப் பாலைவனம் போலிருந்தது ! .அதைத் தொடர்ந்து மின்வெட்டும் கூடவே வந்ததும், அலுப்பு தான் வந்தது அவருக்கு….நாலு தூத்தல் போட்டால் போதும் கரண்டுல கையை வைக்க இவங்களுக்கு ஒரு சாக்கு…..என்று அங்கலாய்தபடியே….வாசல் கதைவத் திறந்தார். இதமான குளிர்காற்று லேசான சாரலோடு முகத்தைத் தடவியது.சூரியன் மேகத்தை விலக்கி பூமியை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் இந்த வீட்டில் இருள் சூழ்ந்திருந்தது ஏனோ?
இளங்காலைப் பொழுது……வாசல் முழுதும் பவளமல்லிகைப் பூக்கள் கோலம் போட்டிருந்தது…..மழை, வாசல் தெளித்துக் கொண்டிருந்தது. இதையெல்லாம் ரசிக்கத் தெரியுமா அவருக்கு… யாரு கேட்டா இந்த மரத்தை…..இத்தனைப் பூக்களைப் பூக்கச் சொல்லி…? வீணாகக் குப்பை தான்….தினம் தினம்…பால்காரன், பேப்பர்காரன், காய்கறிகாரின்னு மிதியடி பட்டு…..கடைசில குப்பைக் குவியலாய்…காம்பவுண்டு சுவர் ஓரமா குமிஞ்சுடும்.அப்பறம் அந்த சருகுக்கு நெருப்பு வெச்சு வீட்டுக்குள்ளே புகை நுழையும்.யாருக்கு வேண்டும் இந்த மரம்….வெட்டிப் போடு என்றது அவர் மனம்.
சில இடங்களில் இறைவன் படைத்த புனித மலர்கள் பூஜைக்குப் போகாமல் எந்த பயனுமின்றி பாழாகி, சருகாகி விடுகின்றன….அது, இறைவனின் கோபத்தில் மலருக்குச் சாபமா..? மரத்துக்குச் சாபமா ?
இதுவே சுலோச்சனாவா இருந்திருந்தால் கதையே…வேற…..முதல் நாள் இரவே பெரிய பிளாஸ்டிக் விரிப்பை விரித்து வைத்து பூக்களைத் தரையில் விழ விடாமல் அப்படியே அள்ளித் தொடுத்து மாலையாக்கி சுவாமிக்குப் போட்டு அழகு பார்ப்பாள்….ஒருமணி நேரத்தில் வாடிவிடும் பூவுக்கு ரெண்டு மணி நேரம் மெனக்கிடுவாள். சுலோ…குழந்தை போல, பூவிலிருந்து…. புயல் வரைக்கும் ரசிப்பவள்..ஒவ்வொரு விஷயத்தையும் மனசுக்குள் ஆராய்ந்து சிந்தித்து அந்தந்த க்ஷணத்தில் வாழ்பவள். அதனால் தானோ என்னவோ…எமன்…இவளது அருமை தெரிந்து எனக்கு வேண்டும் என்று வலைவீசி தூக்கிப் போனான். அவள் போனதில் இருந்து வீட்டின் ஒவ்வொரு இடமும் அவனைத் தவிர அவளைத் தேடிக் கொண்டே இருப்பது போலிருந்தது அவருக்கு. அவள் போன பிறகு அங்கு சுவாமிக்கு எந்த அலங்காரமும் இல்லை.
அவள் இருந்தபோது இருந்த சொகுசெல்லாம் போய் இப்போது தனக்கு வேண்டியதைத் தானே செய்து கொள்ளும் போது மட்டும் மனைவி சுலோச்சனா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்து மனதைப் பிசையும். தொட்டதுக்கெல்லாம் என் கையையே எதிர்பார்த்துண்டு இருக்கேளே…..ஒருநாள் நான் இல்லாமல் போனால் தெரியும் அருமை….! அதுவும் சரி தான்…வாழ்ந்த காலம் முழுதும் அவள் தனக்காக இல்லாமல்,வாழ்ந்ததெல்லாம் இவருக்காகவே….இவர் “சுலோ…”.என்று உறுமி(எள்ளி)னால் அவள்….என்னனா……என்று எண்ணெயாக நிற்பாள்.. இல்லாவிட்டால் அன்று இவர் துர்வாசர் அவதாரம் தான் எடுப்பார். அப்பறம் கேட்கவே வேண்டாம்….அமர்க்களம் தான். வீடு ரெண்டு படும்.குழந்தை பிரதீப் கூட வாயே திறக்காமல் அம்மாவிடம் செய்கையால் தான் பேசுவான் அப்பாவின் கோபம் மேல அவனுக்கு அவ்வளவு பயம்.
தனக்கு அவள் எந்த விதத்திலும் சமம் இல்லாதவள் என்ற அவரது நினைப்பில் அவளை சமயம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டி உதாசீனப் படுத்துபவர்….இத்தனைக்கும் காரணம் சுலோ… அவரைவிட அனைத்திலும் இரண்டு மடங்கு உயர்ந்தவள் என்று புரிந்து அதனால் வந்த தாழ்வு மனப்பான்மை தான். அவளுக்கும் ஒரு மனம் இருக்கும், அதிலும் ஆசாபாசங்கள், விருப்பும் வெறுப்பும் இருக்கும் என்ற எண்ணம் சிறிதும் இன்றி….அவரது தேவைகளைப் பூர்த்தி செய்யும் பெண் இயந்திரமாய் தான் அவளை அவர் இயக்கிக் கொண்டிருந்தார். அவள் ஏதாவது பேச வாயெடுத்தால் போதும்….”நீ வாயை மூடு…உனக்கெல்லாம் இதைப் பத்தி ஒண்ணும் தெரியாது..”.என்று அடக்கி விடுவதில் கெட்டிக் காரர்.அதை மீறி அவள் ஒரு வார்த்தை பேச முடியாது. அந்த இடத்தில் முற்றுப் புள்ளி வைத்து தனக்குத் தெரிந்ததையும் தெரியாத மாதிரி அழித்து விட்டு அவருக்காக அவர் சொல்வதை ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டிருப்பாள்… அவரது திருப்திக்காக.
அவரது ஒவ்வொரு மறதிக்கும், தேடலுக்கும், சந்தேகத்துக்கும், கேள்விக்கும்…..சுலோச்சனா தான் ஒரே வடிகால்.
அவரைப் பொறுத்தவரை வீட்டு நிர்வாகத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை….கணவனின் தேவைகள் குழந்தையின் தேவைகள் எல்லாத்துக்கும் ஏக போக உரிமை இவளுக்குத் தான் எழுதி வெச்சிருக்கு என்பது போல விட்டேத்தி ராஜகோபாலன் வீட்டிலும் ராஜாங்கத்தோடு “கெத்தாக” இருப்பார். சம்பாதிக்க ஆஃபீஸ் போனோமா…. வீட்டுக்கு மாதச் செலவுக்குன்னு தான் நினைக்கும் ஒரு தொகையைக் கொடுத்தோமா…அது பத்தும் பத்தாதுன்னெல்லாம் வாய் திறந்து ஒண்ணும் கேட்கப் படாது… மீறி கேட்டுட்டால் அவ்ளோ தான்….ஏய்….என்ன வாய் நீள்றது…? இந்தா… இங்க வா..அத இப்படிக் குடு…போ…போயி உன் பொறந்தாத்துல வாங்கிண்டு வந்து செலவு பண்ணிக்கோ” ன்னு தலையில் குண்டைப் போடும் அவரிடம் எந்த வாக்குவாதம் செல்லுபடியாகும்? சுலோ….இதை நன்கு புரிந்து கொண்டவள். அதனால் தான் இருப்பதையே கணக்கில் வைத்துக் கொள்ளாமல்…தனக்காகும் செலவையும் தன் மகன் பிரதீபுக்கு என எண்ணி எண்ணி எடுத்து வைப்பாள்.
சுலோ….. மனசுக்குள் ….அவர் மனச கோபம் தான் ஆளறது…கோபம் ஆளும் மனசுக்குள்ளே வேற எந்த நல்ல குணம் குடி இருக்கும்…எல்லாம் வெளில காத்துண்டிருக்கும்….எப்போ கோபம் வெளில போகும் நாம் எப்போ உள்ளே போகலாம்னு….ஒரு நடை கோபம் வெளில போக விட்டால் தானே….மத்ததெல்லாம் உள்ளே வர வழி கிடைக்கும்….பகவானே…இவரோட கோபத்தை வெளி நடத்து….ன்னு வேண்டிக் கொள்வாள்.
சொந்த வீடும், அரசாங்க வேலையும், உயர்ந்த சம்பளமும் தந்த கர்வத்தில் இவர் வீட்டில் பண்ணும் அதிகாரம் தூள் பறக்கும். சாப்பிடும் போது காலாட்டீண்டு சாப்பிடும்போது பரிமாறிக்கொண்டே ” ஏன்னா….சித்த காலாட்டாம சாபிடுங்கோ…..வீடே ஆடிப் போயிடும்…” இவள் சொன்னது தான், உடனே அடுத்த ….அரை மணி நேரம் காதுகூசக் கதாகாலட்சேபம்…. நடந்ததில்…சிவ..சிவான்னு காதைப் மூடிண்டு அறைக்குள் போனவளை…. கன்னத்தில் அறைந்து இழுத்து வருவார். என்ன…நீ…ரொம்ப நல்லவளோ….கொழுப்பெடுத்த குந்தாணி…அவனது வார்த்தையில் கூனிக் குறுகி போவாள் இவள். மனைவி என்ற பதவிக்கு அவள் கண்ட அர்த்தம் வேறு என்று தெரிந்ததும் பிரதீபுக்காக பொறுத்துக் கொண்டாள்…..குழந்தையை படிக்க வைத்து நல்ல இடத்தில் வேலையில் வைக்கணும்..அவன் இங்கயே இவரோட நிழலில் இருந்து இப்படி ஒரு ராட்சஷனாகக் கூடாது…..கண் காணாமல் கடல் கடந்து போகணும்…..இந்த எண்ணம் தீவிரமாக அதையே மகனின் மனதிலும் விதைத்தாள்.
“நன்னாப் படி….கண் காணாமல் கடல் தாண்டி போய்டு…எங்களையும் எப்பவாவது வந்து பார்த்துக்கோ… நீயும் நிம்மதியா இரு…..அப்பாக்கு ஆபீஸ் டென்ஷன் ஜாஸ்தி…நீ இதெல்லாம் கண்டுக்காதே..நமக்கு இதெல்லாம் புதுசில்லை..என்று ஏதோ சொல்லி மகனிடம் அவரை விட்டுக் கொடுக்காமல் பூசி வைப்பாள்.பிரதீப்பின் படிப்புக்கும், மேல் படிப்புக்கும், வங்கிக் கடனுக்கும், அமெரிக்கா போக நகைக் கடன் அது இது என்று…அவரோட அத்தனை எதிர்ப்பையும் போராடி போராடி…மகனின் எதிர்காலம் சிறக்க அலைபாய்ந்தவள்.
பிரதீப்பின் படிப்பும் முடிந்து, வேலையும் கிடைத்து அமெரிக்கா செல்ல இன்னும் இரண்டே மாதங்கள் இருக்கும் நேரத்தில் தான் வீட்டில் அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது. யாரும் எதிர்பாராதது. அனைவருக்கும் அதிர்ச்சியானது.சுலோச்சனாவின் மரணம். போனவள் சந்தோஷமா சுமங்கலியாப் போய்ச் சேர்ந்தாள்.இப்போது ராஜகோபாலன் மனைவியை இழந்த விதவன் !
தனக்கு வந்திருந்த ரத்தக் கொதிப்பையும், சக்கரை நோயையும் அடக்கி வைக்கப் போராடிக் கொண்டிருந்தவள்
யோகா, குண்டலினி தியானம் என்று கற்று வீட்டில் தினமும் பயிற்சி செய்து வந்தவள் அன்றும் வழக்கம் போல “ஜலந்தர பந்தம்” செய்யும் போது மீண்டும் தியானத்திலிருந்து எழாமல் சரிந்தவள் சுதந்திரமாக வானம் நோக்கி மீளாத பறவையாக பறந்து விட்டாள். அந்தந்த க்ஷணத்தில் வாழ்ந்தவளின் உயிர்ப்பறவை நிமிடத்தில் இறக்கை விரித்து உடல் உதறிப் போனது. அந்தத் தெருவே ஸ்தம்பித்துப் போனது. அவள் போன கையோடு கூடவே அவரோட கம்பீரம் “பெரிய டாடா” சொல்லிட்டு அவரை விட்டுப் போனது. அதன் பின்பு மெல்ல மெல்ல பல்லு பிடுங்கின பெட்டிப் பாம்பு மாதிரி…. வீட்டுக்குள் முடங்கினார் ராஜகோபாலன். கர்வம் கற்றுத் தராத பாடத்தைக் காலன் கற்றுத் தருவான்….ஆனால் என்ன…. காலதாமதமாகும், அவ்வளவு தான்.
வழக்கம் போல் தான் நினைத்தது போலவே…பால்காரனும் விறுவிறுவென்று பூக்கள் மேல் நடந்து வந்து பால் பாக்கெட்டை பையில் போட்டுவிட்டு பூவாவது….. மண்ணாவது…… என்ற போக்கில் தன் வேலையில் கண்ணாக நடந்து சென்றான்.மழை “ஜோ”வென்று அவன் முதுகைப் பதம் பார்த்தது. சூடாக இன்ஸ்டன்ட் காஃபி போட்டு எடுத்து வந்த அவருக்கு சுலோச்சனா ஆற்றி ஆற்றித் தரும் நுரை ததும்பிய டிகிரிக் காஃபியின் மணம் நெஞ்சுக்குள் பரவியது. ச்சே..கடங்காரி…கடைசில சொன்னபடியே செய்து விட்டாள்..இப்போ யார் சூடா காஃபி தருவது காலையில்? எல்லாத்துக்கும் இப்படி என்னைத் திண்டாட வைத்து விட்டு போயிட்டியே….ஹாலில் “சருகாகிய மலர்” உரமாகிப் போன மலர்மாலையின் நடுவே மௌனமாகச் சிரித்தபடியே சட்டத்துக்குள் அடங்கிப் போன சுலோச்சனாவைப் பார்த்தபடியே தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டார்.
மாங்கு மாங்கென்று ருசியாய்ச் சமைத்து கொடுப்பவள் ஒரு வார்த்தை நன்னாயிருக்குன்னு சொல்வாரோ எனக் காத்திருந்து மாலையில் அவர் வந்ததும் எதிர்பார்போடு அவர் முகம் பார்த்தால்….”மனுஷன் திம்பானா இதை….தூக்கி குப்பையில் கொட்டு….இன்னைக்கு வெளில சாப்டுட்டேன்….திறந்தே பார்க்காத டிஃபன் டப்பாவைப் பார்த்ததும் இவளுக்கு பொங்கி வரும் அழுகையை உள்ளுக்குள் அடக்குவாள் ஃபிரிட்ஜ், டைனிங் டேபிள் தான் இதற்குச் சாட்சியாக நிற்பது போலிருக்கும் அவளுக்கு. ஒன்றா….. இரண்டா….வீட்டின் ஒவ்வொரு மூலையும் ஏதோ ஒரு நிகழ்வைப் பதிந்து வைத்துக் கொண்டு காத்திருந்தது அவரைத் துரத்த. காலை தான் செய்த ஓட்ஸ் கஞ்சியை வைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் உட்கார்ந்ததும்….” என்னடி சமையல் இது….மனுஷன் திம்பானா இத…”என்று தன் குரல் எதிரொலியாக தன் தோளருகில் கேட்க சுலோவின் பரிதாபமான முகம் கண்முன்னே வர…அவரது ஆக்கிரமிப்பு,அதிகாரம், அடக்குமுறை….அனைத்தும் திட்டம்போட்டு அவரைப் பார்த்து எதிர்த்து நிற்பது போலிருந்தது அவருக்கு.
ஒவ்வொரு பொங்கல் பண்டிகை வரும்போதும் கடைசியாக சுலோ ஆசையாய் செய்து வைத்த சக்கரைப் பொங்கலில் தான் கோபத்தோடு கரண்டி கரண்டியாய் உப்பை அள்ளிப் போட்டு கலந்து வைத்து….அவள் அப்படியே
வெண்கலப் பானையோட உப்புப் பொங்கலைக் கொட்டியதும்….. இனிமேல் இந்தாத்தில் பொங்கல் பண்டிகையே வராது….என்று அழுகையூடே சொன்னதும் தான் நினைவுக்கு வரும். அன்று அவள் சொன்னது …அப்படியே நடந்து விடும் என்று யாருக்குத் தெரியும்…?ஆனால் அந்தக் காட்சி மட்டும் இவரது மனசுக்குள் ஒவ்வொரு பொங்கலின் போதும் நிழற் படமாய் வந்து குத்திவிட்டுப் போகும்.
மனைவி என்று ஒருத்தி இருந்தவரை அவள் அருமை தெரிய வில்லை…..எடுத்ததற்கெல்லாம் குத்தலும் குதர்க்கமுமாகப் பேசிய நாக்கு….! இப்போ சண்டை போடக் கூட துணைக்கு வீட்டில் பெண்டாட்டி யில்லாமல் அல்லாடும்போது தான் விரக்தியின் விளிம்பில் தன் வாழ்க்கை உருண்டு கொண்டிருப்பது புரிந்தது அவருக்கு. அவருக்கு இப்போ இருக்கும் ஒரே துணையும் தூணும் தாயற்ற மகன் பிரதீப் தான்.
அமெரிக்காவில் இருந்தாலும் வாரா வாரம் இரண்டு நாட்கள் ஸ்கைப்பில் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப் பேசிக் கொள்ளும்போது வீடே கல கல வென்று இருக்கும். அம்மா அந்த வீட்டில் சந்தோஷமா இல்லையே என்று மகன் மனதிலும்…இப்போ….சுலோ அருகில் இல்லையே பிரதீப்போட பேச….என்று ராஜகோபாலன் மனதிலும் எண்ணம் தோன்றும்.நேற்று மாலையில் ஸ்கைப்பில் தன்னோடு பேசும்போது…பிரதீப் சொன்னதை நினைத்துப் பார்த்தார்.
“என்னப்பா நீங்க.. ரொம்ப மெலிஞ்சு போயிட்டேளே…..நேக்கு உங்களைப் பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு…நானும் யோசிச்சுண்டே இருக்கேன்…என்ன பண்ணலாம்னு….?
நீ சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ……என்று பெரிசா சிரிச்சார் ராஜகோபாலன்…
அப்பா…..ஜோக் இல்லை…நிஜம்மா எனக்கு எப்பவும் உங்க கவலை தான்…நீங்க வேணா என்னோட இங்க வந்துடுங்கோளேன்…..
வேற பேசு பிரதீப்…..எனக்கு இந்த வீட்டை விட்டு எங்கயும் வர முடியாது…வந்தா…வாழவும் தெரியாது…..!இந்த காத்தும், தண்ணியும் தான் என்னை இன்னும் சந்தோஷமா வாழ வெச்சுண்டு இருக்கு….நீ எப்போ ஆஃபீசுக்கு கிளம்பணும்?
இன்னும் அரை மணியில் கிளம்பணும்பா.
அங்க இருக்கறதுக்கும் இங்க இருக்கறதுக்கும் எவ்ளோ வித்தியாசம் தெரியுமா…? இங்கல்லாம் யாரும் உட்கார்ந்து அரட்டை அடிச்சுண்டு இருக்க மாட்டா…எல்லாருமே ஏதோ ஒரு வேலையை செய்துண்டு சுறுசுறுப்பா… இருப்பா..வீண் பேச்சு….வெட்டி அரட்டை….இதெல்லாம் கிடையாது….எவ்ளோ விசாலமான மனசு தெரியுமா…இங்க இருக்கறவாளுக்கு…நேக்குப் பிடிச்சிருக்குப்பா….நான் இங்க தான் இருக்க ட்ரை பண்ணுவேன்…அதான் நீங்களும் இங்க என்னோடயே…என்று ஆரம்பிக்க…
என்னடா…அடியைப் பிடிடா பாரதபட்டான்னு….ஆரம்பிச்ச இடத்துக்கே வரயா…? நீ ஆயிரம் சொல்லு…நான் இந்தாத்த விட்டு ஒரு அடி எடுத்து வைக்க மாட்டேன்….சொல்லிட்டேன். நீ போனியா…அங்கியே இருக்கிறா…நான் ஒண்ணும் சொல்லலை..அது உன் சுதந்திரம்…படிக்க வெச்சேன்…நன்னாப் படிச்சே…இது வரை உன் விருப்பப் படி தான் எல்லாம் நடக்கிறது…நீ என்னை வற்புறுத்தாதே…எனக்கு பழைய சாதம் ஒரு பிடி மாவடு ரெண்டு இருந்தால் எதேஷ்டம்..!
போதும் உன் அமெரிக்க புராணம்…கொஞ்சம் பொறந்த ஊரையும் நினைச்சுக்கோ….இப்போ தானே ரெண்டு வருஷமா அங்கே இருக்கே…அதுக்கு முன்னால எந்தத் தண்ணி குடிச்சே….?
அப்பாவின் இந்த ஒரு வார்த்தைக்கு அப்படியே பெட்டிப் பாம்பு போல அடங்கிப் போவான் பிரதீப்.
நீங்க உடம்பப் பார்த்துக்கோங்கோ.பிரதீப் அப்படியே ஸ்கைப்பை விட்டு விட்டு வேக வேகமாகக் கிளம்பிக் கொண்டிருந்தான்…அவன் அங்கும் இங்கும் நடந்து நடந்து செய்யும் வேலைகள் எல்லாம் இவர் இங்கிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார். அமெரிக்காவில் இருந்தாலும் இங்கிருந்தே மகனை தினமும் கொஞ்ச நேரமாவது இப்படிப் பார்ப்பதில் ஒரு திருப்தி இவருக்கு.
திடீரென பிரதீப் உதயமாகி..இப்போ நான் கிளம்பறேன்…பை..பை…என்றதும் ..சுவ்வவ்வ்வ்வ்…..ன்னு ஸ்கைப் அணைந்து போனது..வீடே திடீரென வெறிச்சென ஆனது போலிருந்தது ராஜகோபலனுக்கு.
நாளைக்கு பொழுது விடிஞ்சதும்…..முதல் வேலையா…இவனோட ஜாதகத்தை எடுத்து பெண்ண தேடும் படலம் ஆரம்பிக்க வேண்டியது தான். எண்ணியபடியே படுக்கச் சென்றார்.
இதோ….. இன்று மறுபடியும் மாலையில் பார்க்கலாம்.என்று எண்ணும் போது..அவனுக்கும் வயசாறது…இங்க…என் கடமைன்னு ஒண்ணு இருக்கே…இன்றாவது முதல்ல அவனுக்கு கல்யாணத்துக்கு மகனின் ஜாதகத்தைத் தேடி எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.காலனி பிராமண இளைஞர் சங்கம் வரைக்கும் போய் இந்த மாச காயத்ரில விளம்பரம் கொடுத்துட்டு வந்துடலாம்ன்னு கிளம்பினார்.கூடவே…….அவன்ட இதோ நோக்கு பெண்ண பார்க்க ஆரம்பிச்சுட்டேன்னு நான் சொல்ல ஆரம்பித்தால் தான் அவன் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு தெரியும்….எனக்குத் தான் இங்க ரிடையர்ட் லைஃப் சும்மா இருக்கேன்..
வெய்யில் முகத்தில் சுளீர் என்று அடிக்க அங்கிருந்த ஆட்டோவுக்குள் ….”எஸ்.எஸ்.காலனி போப்பா….அப்பப்பப்பா…..என்ன வெய்யில் என்ன வெய்யில்….கார்த்தால மழை பெய்தா மாதிரியா இருக்கு,,,,
அதுக்குள்ளே வெய்யிலைப் பாரு”….என்று சலித்தபடியே ஏறி அமர்ந்தார்.
எங்க சாமி….எஸ் எஸ் காலனில….
பொன்மேனி நாராயணன் தெரு…பிள்ளையார் கோயில் பக்கத்துல…பிராமண…சொல்வதற்
குள்ளாக
ஆங்….தெரியும்…தெரியும்…..நூறு ரூபாய் ஆகும்…வெய்டிங் வேணுமா சாமி….கொண்டாந்து விடறேன்….
தெரியலப்பா….முதல்ல அங்க கொண்டு போய் விடு….அப்புறம் சொல்றேன்.
தார் ரோட்டில் அந்த ராஜ தேசிங்கு ஆட்டோ வீறுகொண்டு நெளிந்து வளைந்து புகுந்து பறந்தது.
ஆட்டோகார்…..கொஞ்சம் மெதுவாப் போப்பா…எனக்கு ..ஒண்ணும் அவசரமில்லை….மெதுவாப் போனாப் போதும்..
இப்படிப் பறக்காதே….காலம் கேட்டுக் கிடக்கு….நாம ஒழுங்காப் போனாக் கூட அவனவன் வந்து மோதித் தள்ளிட்டு போயிடறான்…இதுல கண்ணு மண்ணு தெரியாம ஒட்டணுமா? எனக்கு இப்போ தான் அறுபது வயசு முடிஞ்சிருக்கு….இன்னும் கொஞ்ச காலம் இங்க இருக்கணும்…..உயிரைக் கையில் பிடிச்சுண்டு தடா தடன்னு ஆட்டோவின் வேகத்தில் வார்த்தைகளும் அதிர்ந்தன.
சாமி…என்ன கல்யாணம் கட்டிக்க போறீங்களா…..? புது மாப்பிள்ளைக் கணக்கா பேசுறீங்க…..என்று திரும்பிப் பார்த்து ஒரு அக்மார்க் சிரிப்பு சிரித்தான்.அவன் கணக்கில் அவன் பெரிய ஜோக் அடித்தது போல….அவனது பல்வரிசை முகத்தில் மின்னலடித்து விட்டு மறைந்தது.
இந்த ஆட்டோவில் ஏறினது என் முட்டாள்தனம்….வாயைப் பாரு….வாயை…..பெரியவா சின்னவா ன்னு ஒண்ணும் கிடையாது….என்ன ஜென்மங்களோ….இவ்ளோ சொல்றேனே….கொஞ்சமாவது கேட்கிறானா பாரு…..ஏய்…கொஞ்சம் மெதுவாத் தான்…ஓட்டேன்….பா..!
வந்த்ருச்சு சாமி……எறங்குங் ….. எறங்குங்… …நம்ம கிட்ட ஒண்ணும் ஆகாது…நம்ம வண்டி எப்பவும் சேஃப்டி பாண்டிமுனி பார்த்துக்குவாரு..!
நூறு ரூபாய்த் தாளை எடுத்து அவன் கையில் கொடுத்து விட்டு….தப்பித்தோம்…பிழைத்தோம்னு…மூச்சு விட,
வெய்டிங் போட்டு கூட்டிட்டு போறேன் சாமி…..வரீங்களா…?
நீ….வேண்டாம் போப்பா…..நான் வேற பார்த்துக்கறேன்…
அடுத்த நொடியில் அவன் விர்ரெனப் பறந்தான். அந்த வேகத்தைப் பார்த்து நல்ல வேளை…ஒரு நிதானம் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது….கோணா…. மாணா…கோவிந்தான்னு ஓட்டிட்டு வந்துட்டு…சேஃப்டி பத்தி பேசறான் கடன்காரன்….சங்கத்துக்குள்ளே நுழைந்ததும்….
வாங்கோ மாமா…..என்ன விஷயமா வந்த்ருக்கேள்…யாருக்காவது சமஷ்டி பண்ணனுமா? உள்ள வந்து உட்காருங்கோ.. சொன்னவள் அவரை நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள்.
அவளுக்கு ஐம்பத்தைந்து வயதுக்குக் குறைவில்லாமல் இருக்கும்…..அசப்பில் பார்த்தால் நம்ம சுலோ மாதிரியேன்னா இருக்கா….அவரால் எழுந்த நினைவை தடுக்க முடியவில்லை.
காரணமே இல்லாமல்…ஆட்டோக்காரன் ….”.கல்யாணம் கட்டிக்க போறீங்களா…..? புது மாப்பிள்ளைக் கணக்கா பேசுறீங்க…” எதிரொலித்தது. ச்சே…ச்சே…என்ன எண்ணம்…இது…நேரம் காலம் இல்லாமல்….மனசைத் திருப்ப முகத்தைத் திருப்பி மணியைப் பார்த்தார். அதன் கீழே மாட்டியிருந்த ஆதி சங்கராச்சாரியார் படத்தைப் பார்த்தார்….மதுரை மீனாக்ஷி அம்மன் பச்சைப் பட்டுப் புடவையில் கொஞ்சும் கிளியைக் கையில் பிடித்தபடியே…புன்னகைத்துக் கொண்டிருந்தாள்…என்ன அழகு…என்ன அழகு…மனம் தொழுதது.
அந்தப் பழங்கால பெண்டுலம் ஆடி ஆடி….நேரம் பத்து ஆனதை கணீர்… கணீர்…என்று அடித்து தனது கடமையைச் செய்தது..
என்ன யாருமில்லையா…என்றபடியே….பையிலிருந்த பிரதீப்பின் ஜாதகத்தை வெளியே எடுத்தபடியே..தொண்டையை கனைத்தபடி கேட்க…
உள்ளிருந்து வந்தவள்…”இந்தாங்கோ தூத்தம் சாப்பிடுங்கோ….” என்றபடியே சுவிட்சைத் தட்டி மின்விசிறியை சுழல விட்டபடியே…..மேனேஜர் பேங்க் வரைக்கும் போயிருக்கார்….இப்போ வந்துடுவார்…சித்த இருப்பேளா….என்று கேட்க……
அவள் தந்த பானைத் தண்ணீர் தொண்டைக்கு இதம் தர….காற்று வேற வேகமாக வீச….மனதுக்குள் இவ ரொம்ப நல்லவளா இருக்காளே….அப்படியே சுலோ மாதிரி….அவள் தான் நான் எங்கே வெளில போயிட்டு வந்தாலும் முதல்ல ஓடி வந்து ஜலம் தந்து ஃபேன் போடுவாள்….”மீண்டும் இதென்ன நினைப்பு”ன்னு தட்டி விட்டவர்…
ரொம்ப தேங்க்ஸ்…என்று ..டம்ப்ளரை கொடுக்க…
அங்கேயே வையுங்கோ….மாமா…என்றவள் மறுபடியும் உள்ளே சென்று விட்டாள்.
ராஜகோபலனுக்கு அவளது உருவம் மனதில் பதிந்து மறைய மறுத்தது. மனதில் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டார்.மனதில் சலனம் வந்து எட்டிப் பார்த்தது.
வாசலில் ஸ்கூட்டர் வந்து நிற்கும் சப்தம் கேட்டதும்….இதோ வந்துட்டார்…என்று மீண்டும் அவளது தரிசனம்…அவருக்கு திருப்தியாக கிடைத்தது.
அந்த மேனேஜர்..நாற்பது வயதில் துடிப்பாக….பட படவென உள்ளே வந்து …ராஜி.மாமி …யார் இவர்…?.என்ன ஏதுன்னு…. கேட்டு உடனே….அனுப்பறதில்லையா.? எத்தன நாழியாறது…வந்து….? எத்தனை சொன்னாலும் புரிஞ்சுக்காமல் நம்ம கழுத்த அறுக்க…இங்க நீங்க தண்டத்துக்கு.. ஆ…ஊன்னா… நேக்கு யாருமே இல்லை என் ஆத்துக் காரார் வேற ஒருத்தியோட சேர்ந்துண்டு என்னைத் துரத்திட்டார்….ஆனா நான் அவர மட்டும் மனசில நினைச்சுண்டு வாழறேன் ன்னு சொல்லி வரவாட்ட எல்லாம் சொந்தக் கதை சொல்லி அழுதுட்டுப் போக ஒரு இடம்…! இந்த சீனு மாமாவச் சொல்லணும்…அவருக்குத் தான் இளகின மனசு… இப்படி வரவாளை எல்லாம் வேலைக்கு சேர்த்துப்பார்…நேக்கு இல்ல..ஓடிப் .போய் குடிக்க தூத்தம் கொண்டாங்கோ…அந்த மேனேஜர் தன்னோட பந்தாவை இவரண்ட காமிச்சுண்டிருந்தார். இல்லாட்டா…அந்த இடத்தில் வேற யார் இருக்கா……இதைப் பார்க்க.
ராஜகோபாலனுக்கு…அந்த ராஜி மாமியைப் பார்க்கப் பாவமாய் இருந்தது….இல்ல… அவங்க என்கிட்டே எந்தக் கதையும் சொல்லலைன்னு அந்த மேனேஜரிடம் சொல்ல வேண்டும் போலிருந்தது. தூரத்தில் கலங்கிய கண்களோடு நின்றிருந்தவளைப் பார்த்ததும் அவள் மேல் ஒரு மதிப்பு வந்தது இவருக்கு. இவ்வளவு வைராக்கியம் இருக்கும் பெண்ணாக அவளை அவர் எதிர்பார்க்கவில்லை. அவரது சபலம்,சலனம் எல்லாம் அவரைத் தட்டி விட்டுப் போனது போலிருந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்…
நீங்க கோச்சுக்காதேங்கோ…அவாள….நான் என்னோட பையனுக்கு காயத்ரி மாத இதழ் ல வரன் பதிய வந்தேன்…
இந்தாங்கோ ஜாதகம்…ஏற்கனவே விண்ணப்பம் அந்தம்மா கொடுத்தாச்சு …அதை நான் பூர்த்தி பண்ணியாச்சு….எவ்ளோ பணம் கட்டணும்னு சொல்லுங்கோ கட்டறேன்….என்றவரை…
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…வெறும் சந்தா தான்….அந்த மாமிட்ட கொடுத்து ரசீது வாங்கிண்டு போங்கோ…
மாமி…மாமி…இருமுறை அழைத்தும் ஆள் அரவமில்லாததால்….கொஞ்சம் சத்தம் போட்டு அழைத்தார் மேனேஜர்…
“அம்மா….ராஜ சுலோச்சனா….” இங்க வந்து ஒரு ரசீது போட்டுக் கொடுத்துட்டு போ….
ராஜகோபலனுக்கு ஏனோ தூக்கி வாரிப் போட்டது….மனசை அடக்கிக் கொண்டு…வந்த .வேலையை முடித்துக்
கொண்டு, என் மகனுக்கு நல்ல வரனா அமைச்சுத் தாருங்கோ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்
அந்தக் கொளுத்தும் வெய்யிலில் கூட நிதானமாக அந்த மேனேஜர் அந்த மாமியைப் பற்றி சொல்லி கொண்டிருந்ததை பற்றி நினைத்தபடியே நடந்து சென்றார். முதன் முதலாக கணவனால் கைவிடப் பட்ட ஒரு பெண்ணின் நிலைமை எவ்வளவு பரிதாபமானது என்பதைப் உணர்ந்து கொண்டார். அதே சமயம்…தன்னை உதாசீனப் படுத்தியவரைக் கூட இன்னும் நினைத்துக் கொண்டே வாழறேன் என்று சொன்ன வார்த்தைகள் இவரின் மனக் கதவை இடித்தது. பெண்கள் புரியாத புதிராக இருந்தாலும் பெண்களின் மனம் ஒரு பிருந்தாவனம்.
ஏனோ சுலோச்சனாவை மனம் நினைத்தது.அவளைப் புரிந்து கொண்டு ஒரு நாள் கூட அவளோடு பொறுமையா பேசவே இல்லையே…என்று பதபதைத்தது…. நான் எவ்வளவு பெரிய கிராதகன், கோபக்காரன், என் கோபமே என்னை ஆட்கொண்டு என்னை எப்படி ஆட்டி படைத்திருக்கு…….இப்போ இந்த மேனேஜரைப் பார்த்ததும் தான் புரிகிறது…ஒரு பெண்ணிடம், தன் மனைவியிடம் ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று. இந்த நிலையைத் தான் கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்……ன்னு சொல்வாளோ…யோசிக்க யோசிக்க விஷயங்கள் வந்து கொண்டே இருந்தது….அப்போ…இத்தனை வருடங்கள் என் இதயம் மூடியாக் கிடந்தது. அவருக்கே ஆச்சரியம்.சுலோ… ஆசைப்பட்ட படியே…கோபம் தொலைந்த இதயத்தில் அன்பு, பாசம்,கருணை,பக்தி,என்று நல்லன எல்லாமே வந்து குடி கொண்டது.
என்னிடம் என்ன பொறுப்பு இருந்தது…என்ன செய்தேன் அவளுக்கு? பின்பு எந்த உரிமையில் அவளை நான் இந்தப் பாடு படுத்தினேன்…மீண்டும் அந்த நாளை வா என்றால் வருமா? சுலோ…சுலோ….என்று கரடியாய்க் கத்தினாலும் என்னன்னா…ன்னு ஓடி வருவாளா..? என் வறட்டு கௌரவத்தில் இன்று நினைத்தால்…! நான் செய்த தவறுக்கெல்லாம் மன்னிப்பு அவளிடம் தான் கேட்கணும்….அவள் மன்னித்தால் தான் உண்டு..என்னை எந்த தெய்வமும் மன்னிக்காது. என் சுலோச்சனா இறைவன் எனக்கு அளித்த பிருந்தாவனம்…அதைப் புரிந்து கொள்ளாமல் நானே பாலைவனமாக்கி கொண்டேனே…என்று உணர்ந்த பொது அவரையும் மீறி அவர் மேல் அவருக்கே கோபம் எழுந்தது.
ச்சே…ச்சே….உன்னால் தான் உனக்கு வாக்கப் பட்ட அப்பாவி சுலோ மனசுக்குள் புழுங்கி புழுங்கிச் செத்தே போனாள்…..என்று அவர் மனம் அவரை இடித்தது.நான் ஆண் என்பதைத் தவிர எந்த விதத்தில் எனக்கும் அவளுக்கும் வேறுபாடு. என்னால் என்னை நம்பி வந்தவளைக் கூடவா நேசித்து பாதுக்காக இயலவில்லை. ஒரே இதயத்தை எத்தனை முறை கொன்றிருக்கிறேன் பாவி நான். என் மனசாட்சி கேட்கும் கேள்விக்குக் கூட என்னால் பதில் சொல்லத் தெரியலையே….வழி நெடுக பாவ மன்னிப்பு கேட்பது போல தான் செய்த தவறுகள் அத்தனையும் தன்னோடு பின் தொடர்ந்து ஒவ்வொன்றாக உதிர்ந்து கொண்டே வந்தது. வாழ்ந்த காலங்கள் முழுதும் விலகியிருந்த மனைவி சுலோச்சனா சட்டென அவர் மனதை மீண்டும் நிறைத்துக் கொண்டாள்.
கூடவே இருந்த போது வாழ்வில் அர்த்தமில்லை….இன்றோ…கண்ணருகில் இல்லாதவள் நெஞ்சம் முழுதும்….புகுந்து கொண்டு…இத்தனை ஆண்டுகள் எனக்காக தனது வாழ்கையை,வாழ்நாள் முழுதையும் அர்பணித்தவள் எந்த அடையாளமும் வைக்காமல் பறந்து விட்டாள், அவளது நினைவாக அவள் வலம் வந்த இந்த வீடு தான்.. ஒரே ஞாபகச் சின்னம். சுலோச்சனா….இனியாவது எஞ்சியிருக்கும் என் வாழ்நாளை உனக்காக நீயாகவே……வாழ்வேன் நீ வாழ்ந்த இந்த வீட்டில் இனி என் மூலமாக நீயே சுதந்திரமாக வலம் வரப் போகிறாய்.
எண்ணியபடியே பவளமல்லி மரத்தடியில் பிளாஸ்டிக் விரிப்பை விரித்து விட்டு உறங்கச் சென்றார்.
மறுநாள் விடியற்காலை புரிந்து கொண்ட மரம் போல அவளுக்காக மலர்களை உதிர்த்து விட்டுக் அவளின் வரவுக்காகக் காத்திருந்தது. ராஜகோபாலன் பவ்யமாக மலர்களை குவித்து அள்ளும் அழகைப் பார்த்த பால்காரன் பார்வையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது.
“இறைவன் படைத்த உலகில்
எல்லாம் மனிதன் ஆளுகின்றான்…
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்..
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை…
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை…
இரண்டு மனிதர் சேர்ந்தபோது
எண்ணம் வேறாகும்…”
சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் ஒலித்த பாடலைக் கேட்டபடியே மலர்களை மாலையாக்கி கொண்டிருந்த அவரின் மனம் முழுதும் பரவசத்தில் புது மனிதனாக உணர்ந்தார்.
மனைவியின் படத்தை துடைத்து சுத்தம் செய்து தொடுத்த மலர்மாலையை படத்துக்குப் போட்டு அழகு பார்த்தவர் கண்களில் முதல் முறையாக முத்தாகக் கண்ணீர் ததும்பி நின்றது. மீளாத பறவையாய் சிறகு விரித்தவள் அவரது இதயத்திலேயே அமைதியானாள்.
- மீளாத பிருந்தாவனம்..!
- குணங்குடியாரின் படைப்புலகமும் பதிப்பு வரலாறும்
- எனக்கு வந்த கடிதம்
- லாஜ்வந்தி (உருது மூலம்: சர்தார் ரஜீந்தர் சிங் பேடி)
- காத்திருப்பு
- என் காவல் சுவடுகள் – புத்தக மதிப்புரை.
- நட்ட ஈடு
- சிறிய பொருள் என்றாலும்…
- நகரமும் நடைபாதையும்
- கம்பனின் காவியம்” இன்றும் என்றும் காலத்தை வென்று வாழும்! ஏன்?”
- மணக்கால் எஸ் ரங்கராஜன் – ஆவணப்படம் வெளியீடு அழைப்பிதழ்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -3
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 21
- முள்வெளி அத்தியாயம் -17
- கல்வியில் அரசியல் -1
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 28) இரவிலும், பகலிலும்
- தாகூரின் கீதப் பாமாலை – 22 எவளோ ஒருத்தி ?
- அறுபது வருடங்களுக்கு முந்திய ஒரு கணம்
- நினைவுகளின் சுவட்டில் (93)
- பொன்னாத்தா அம்படவேயில்ல…
- பிரபஞ்சனின் “ மரி என்கிற ஆட்டுக்குட்டி “ ஒரு மீள் பார்வை
- 100 கிலோ நினைவுகள்
- 2015 ஆண்டில் பரிதி மண்டலம் கடந்து புதுத் தொடுவான் உளவப் போகும் நியூ ஹொரைசன் விண்கப்பல் !
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 34
- வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு
- பில்லா -2 இருத்தலியல்
- உய்குர் இனக்கதைகள் (2)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-10)
- பஞ்சதந்திரம் தொடர் 52 சமயோசித புத்தியற்ற குயவன்
- இழப்பு
- மதநிந்தனையாளர்கள் என்று பெயர் சூட்டி அப்பாவிகளை கொல்லும் பாகிஸ்தான் கலாச்சாரம்