இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
கவிஞர்களின் வரலாற்றோடு இணைந்த பெரியார்கள்
இருகவிஞர்களின் வாழ்க்கையுடன் பல பெரியார்களின் பெயர்களும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இருபெருங் கவிஞர்களின் வாழ்வில் பங்கு கொண்ட அத்தகைய பெரியார்களின் வாழ்வு வாராற்றுச் சுவடுகளாக அமைந்து அவ்வக் கால வரலாற்றை நமக்குப் புலப்படுத்துவதாக உள்ளன.
மகாகவியின் வரலாற்றோடு பல பெரியார்களுடைய பெயர்கள் இணைந்துள்ளன. அவர்கள் பல துறைசார்ந்த பெருமக்களாவர். அவர்களுள் சிலர் பாரதியின் கவிதையாக்கத்திற்கு ஊக்கம் நல்கினர். சலர் அவருடைய பாடல்களிலே தமக்கிருந்த ஈடுபாட்டினை வெளிப்படையாக எடுத்துக் கூறினர்.
நாட்டுப்பற்று மிகுந்த பாரதியாரைத் தமிழகத்தின் ‘ரவீந்தரநாதர்’ என்று அழைத்தனர். பாரதியின் இந்நாட்டுப்பற்று இந்தியத் திருநாட்டின் விடுதலைப் போராட்ட கால அரிசியலில் சுடர் விட்டு விளங்கியது. கவிஞரின் அரசியல் வாழ்வுடன் பலர் தொடர்வு கொண்டிருந்தனர். வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, வ.வெ.சு ஐயர், வி.கிருஷ்ணசாமி ஐயர், வி. சக்கரைச் செட்டியார் ஆகியோர்அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் அனைவரும் பாரதியாரின் அரசியல் நேர்மையினையும், அற்பமான சலுகைகளுக்கு ஆசை கொள்ளாத் தன்மையினையும் கொள்கைத் துணிவினையும் பல முறை குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.
பாரதியாருடன் அரசியல் கூட்டங்களிலும் பாரதி மறைந்து வாழ்ந்த போதும் உடனிருந்த வி. சர்க்கரைச்செட்டியார் என்பவர் பாரதியின் அரசியல் நேர்மையை,
‘‘பாரதியார் பேச்சில் சங்கோசமும், கண்களில் ஒளியும், அபிநயங்களில் சிரத்தையின்மையும் கொண்டவர். அவர் வாக்கியங்களை மிகத் துணிவுடனும், தாட்சண்ணியமின்றியும் வெளியிடுவார். அவர் உலகில் வதிபவரெனினும் அவரை இவ்வுலத்தவரென்று கூறல் பொருந்தாது. ஏனெனில், இவ்வுலகின் நிலையற்ற சுகபோகங்களுக்கு ஆசை கொண்டிருப்பின் அவர் அதிக மனோரம்மியமான ஸ்தானங்களில் அமர்ந்திருக்கக்கூடும். பிற்காலத்தில் அவருக்கேற்படவிருந்த துரதிர்டங்களெல்லாம் நடைபெறாமலிருந்திருக்கக் கூடும்’’
என்று தாம் எழுதிய ‘ராஜீய வாழ்வு’’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.
இவரைப் போன்றே வ.வெ.சு ஐயர் பாரதியின் வரலாற்றில் மறக்க முடியாதவராக விளங்குகிறார். அக்காலத்தில் கடற்கரையில் வ.வெ.சு.ஐயரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடிய கூட்டங்களில் பாரதியார் தமது பாடல்களைப் பாடுவது வழக்கமாக இருந்தது. அத்துடன் நண்பர்களாக இவர்கள் இருவரும் கடற்கரையிலேயே அமர்ந்து பேசும்போதும் பாரதியார் தாம் இயற்றிய கவிதைகளைப் பாடிக் கட்டுவது வழக்கம். இந்நிகழ்வுகளைச் சர்க்கரைச் செட்டியார் தம்முடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தக்கது.
மேலும் வ.வெ.சு. ஐயர் பாரதியின் கண்ணன் பாட்டிற்கு,
‘‘கவிதையழகை மாத்திரம் அனுபவித்துவிட்டு இந்நூலின் பண்ணழகை மறந்துவிடக்கூடாது. இதிலுள்ள பாட்டுக்களில் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையா யிருக்கின்றன. கடற்கரையில் சாத்தியமான சாயங்கால வேளையில் உலகனைத்தையும் மோகவயப்படுத்தி நீலக்கடலையும் பாற்கடலாக்கும் நிலவொளியில் புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலிலுள்ள பாட்டுக்களை மாணிக்கங்களாக மதிப்பர்’’
என்று எழுதிய முன்னுரை இருவருக்கும் இருந்த தொடர்பினையும், இணக்கத்தினையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
மகாகவியின் சரித்திரச் சுருக்கத்தை எழுதிய சோமசுந்தர பாரதியாருக்கு மகாகவியுடன் நெருங்கிய நட்பு இருந்தது. தமக்கும், மகாகவி பாரதியாருக்கும் இருந்த தொடர்பினை,
‘‘இப்பெரியார் ஜீவியத்தில் ஒரு பகுதி எழுதுவதற்கும் நான் உரியனென்று இவர் மனைவியார் விரும்பியது ஒருவாறு பொருந்துவதாகும். உற்ற சுற்றத்தில் புறம்பே இளமைப் பருவத்து இவரோடு நெருங்கிப் பழகிய பலருள்ளும் விரும்பத்தகும் இவர் இனிய குணங்கள் பலவற்றை அறிதற்குதவுங் காலத்தானும் அணிமையானும் நான் சிறிது அதிக உரிமை பாராட்டற் கிடமுண்டு’’
என்று குறிப்பிடுகின்றார். மகாகவியின் வரலாற்றுடன் சோமசுந்தர பாரதியாருக்கு இருந்த தொடர்பினை இப்பகுதி நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது.
மகாகவி பாரதியின் கவிதைகளிலே ஈடுபட்டு அவருடைய ஊக்கத்தினாலே பிற்காலத்தில் சிறந்த கவிஞனாக உருப்பெற்ற இளைஞர் கனகசுப்புரத்தினம். இவர் பாரதியின் ஆசியையும் ஊக்குவிப்பையும் பெற்றுப் பாரதிதாசன் எனப் பிற்காலத்தில் தம்முடைய பெயரையும் மாற்றிக் கொண்டார். பாரதியின் வீறுநடையும் சமூக நோக்கும் பாரதிதாசனிடம் வந்து சேர்ந்தன. தந்தைப் பெரியார் தொடங்கிய சுய மரியாதைக் கழகம் பின்னர் திராவிடக் கழகம் ஆகியவற்றின் சமூகச் சீர்திருத்தக் கோட்பாடுகள் பாரதிதாசனை ஈர்த்தன. பாரதி இந்தியா முழுவதையும் பின்னணியாகக் கொண்டு இச்சீர்திருத்தங்களை விரும்பினார். பாரதிதாசனுக்கோ தமிழ் நாட்டிலேயே இச்சீர்திருத்தங்கள் நடைபெற வேண்டுமென விருப்பம்.
பாரதியாரின் காலத்தில் வாழ்ந்தவர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. இவர் பாரதியின் கவிதைகளின் பண்புகளை,
‘‘படித்தறியா மிகஏழைக் கிழவ னேனும்
பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னாகில்
துடித்தெழுந்து தன்மெலிந்த தோளைத் தட்டித்
தொளைமிகுந்த கந்தலுடை வரிந்து கட்டி
எடுத்தெறிய வேண்டுமிந்த அடிமை வாழ்வை
இக்கணமே என்றார்ந்த நிற்பானாகில்….’’
என்று எடுத்துரைக்கின்றார். இதே காலத்தில் வாழ்ந்த தேசிக விநாயகம்பிள்ளை,
‘‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா – அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
அதைக்கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா – அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா’’
என்று பாரதியின் பாட்டானது எவ்வாறு பட்டிக்காட்டான் ஒருவனையும் ஈர்த்தது என்பதைப் பாடுகின்றார்.
இலங்கையைச் சேர்ந்த சி.வை.தாமோதரம்பிள்ளையின் தமிழ்த் தொண்டு குறித்து தமிழுலகம் நன்கு அறியும். பாரதியும் இதனை நன்கு அறிந்திருந்தார். தம்முடைய சின்னச் சங்கரன் கதையில் தாமோதரம்பிள்ளை பதிப்பித்த கலித்தொகை பற்றி பாரதியார் குறிப்பிடுகின்றார். தாமோதரம் பிள்ளையின் பதிப்புத் தொண்டினைத் தொடர்ந்து செய்து புகழீட்டியவர் உ.வே.சாமிநாதையராவார். உ.வே.சா.அவர்களுக்கு, ‘‘மஹாமஹோபாத்தியாய’’ பட்டம் கிடைத்தபொழுது அவரைப் பற்றிச் சென்னை பிரஸிடென்ஸி கல்லூரியில் பாரதி சொற்பொழிவாற்றியபோது,
‘‘பல்வகை தானங்களிலே நல்லறிவுத் தானமே விசேஷமுடையதென்று மேலோர் சொல்வார்கள். அழிந்துபோன ஆலயங்களை மறுபடி புதுக்கிக் கட்டிப் பிரதிஷ்டை புரிந்தோர், நெடுங்காலமாக, நின்றுபோன அன்ன சத்திரங்களுக்கு மறுபடியும் உயிரளிப்போர், வறண்டு மண்ணேறிப்போய்க் கிடக்கும் தடாகங்களை மறுபடி வெட்டி நலம்புரிவோர் என்னும் பல வகையாரினும் மங்கி மறைந்து போய்க் கிடக்கும் புராதனப் பெருங்காவியங்களைப் பெருமுயற்சி செய்து திரும்ப உலகத்திற்கு அளிக்கும் பெரியோர்கள் புண்ணியத்திற்குக் குறைந்தவர்களல்லர். மேலும் புகழ் நிலைக்குத் தன்மையில் மற்றோரைக் காட்டிலும் இவரே சிறந்தவராவார். பிரம்மஸ்ரீ உ.வே.சாமிநாத ஐயர் மேற்கூறப்பட்ட பெருந் தருமத்தை நன்கு புரிந்தவர். சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பழந்தமிழ் நூல்களை இன்று நம்மவர் கற்றுக்களிப்பது சாமநாத ஐயருடைய கருணை மிகுதியாலல்லவோ?’’
என்று பாராட்டினார்.
பாரதியார் பதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் இயற்றிய படைப்புகளிற் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மூன்றும் குறிப்பிடத்தக்கவை. அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் ஆகியோரின் சிறப்பான தொடர்பு பாரதியாரின் தத்துவ நாட்டத்தையும் ஞானத்தையும் ஊக்கின. புதுவையில் புகுந்த பாரதி வீரராகப் புகுந்து ஞானியாக அங்கிருந்து வெளியேறினார் என அறிஞர்கள் குறிப்பிடுவர். பாரதியாருக்கும் அரவிந்தருக்கும் இருந்த தொடர்பினைக் கவியோகி சுத்தானந்த பாரதியார்,
‘‘அரவிந்தர் பாரதியார் கவிதைகளைப் போற்றினார். புதி புதிய எண்ணங்களை அள்ளிக் கொட்டுவதில் அரவிந்தருக்கு நிகரில்லை. அவர் கருத்துக்கள் பாரதி வாக்கில் உருக்கொண்டன’’
என்று கூறியுள்ளார். பாரதியினுடைய கண்ணன் பக்தி அரவிந்தராலேயே ஊக்கம் பெற்றதெனக் கூறுவர். புதுச்சேரியில் பாரதியாரும், அரவிந்தரும் வேத நூல்களைச் சேரந்தே பயின்றனர். பல கருத்துப் பரிமாற்றங்கள் அப்போது நிகழ்ந்தன. பாரதியார் பகவத்கீதையைத் தமிழிலே மொழிபெயர்த்த பின்பே அரவிந்தர் அதனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். புதுவைக்கு அரவிந்தர் வந்தபின் பாரதியார் வாழ்வில் இலக்கிய ஆக்கப் பணிகள் பெருகத் தொடங்கின. பாரதியினுடைய வரலாற்றினை எழுதுபவர் எவருமே அவருக்கும் அரவிந்தருக்கும் இருந்த தொடர்பினைக் குறிக்காது இருக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியின் குருமார்கள் என்னும் வரிசையில் குள்ளச்சாமிக்கு முக்கிய இடம் கொடுத்துள்ளார். பஞ்சத்திலும் பதைபதைப்பிலும் பதற்றமடையும் பாரதிக்கு ஆத்மசாந்தி அளிப்பதிலே குள்ளச்சாமி பெரும்பங்கு வகித்தார். ஒன்றும் மேற்பட்ட இடங்களிலே குள்ளச்சாமி புகழ் பாரதியாரால் பாடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.
பாரதியின் இளவயதுக் கவிதைச் சித்துக்கள் நெல்லையப்பக் கவிராயர் வீட்டிலேயே நடந்தன. நெல்லையப்பக் கவிராயர் வீட்டில் கூடும் வித்துவான்களுடன் பாரதி தொடுத்த தமிழ்ப் போர்களுக்கு அளவில்லை. இச்சந்தர்பங்களில் பல வித்துவான்களின் கர்வத்தினைப் பாரதி அடக்கியதுமுண்டு. இங்ஙனம் நடந்த ஒரு நிகழ்வினைப் பாரதி வரலாறு எழுதிய சோமசுந்தர பாரதியார்,
அப்போது ஸீனியர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தவரும், தமிழ்ப் பழக்கமுள்ள சோணாசலம் பிள்ளையவர்களின் குமாரருமாகிய காந்திமதிநாத பிள்ளையென்றவர்கள் முருகதாச சுவாமிகளின் பழக்கமுள்ளவரும் விசேஷ தமிழ்ப் பயிற்சியுள்ளவர்களு மாயிருந்தார்கள். அது பற்றி அடிக்கடி பாரதியாரும் நானும் அவர்கள் வீட்டிற்குப் போவதுண்டு. ஒரு சமயம் பலர் கூடியிருக்கும்பொழுது கூடியவர்கள் எல்லாருள்ளும் இளையரான பாரதியாரை அடக்க நினைத்துக் காந்திமதிநாத பிள்ளையவர்கள், ‘‘பாரதி சின்னப்பயல்’’ என்ற கடையடியைக் கொடுத்து அதை வைத்து ஒரு வெண்பாவைப் பூர்த்தி செய்யும்படி நமது புலவரைக் கேட்டார். அவர் சொல்லி வாய் மூடுமுன் கேட்டவர் வியக்க, கந்திமதி நாத பிள்ளை தலைகுனிய அங்குள்ள யாவரும் இவர் என்ன சொல்லப் போகின்றாரென்று யோசித்துக் கொண்டிருக்கும்போரே தனக்குக் கொடுத்த அடியைக் கடையடியாக வைத்து வெண்பாவைப் பூர்த்தி பண்ணினார். அதன் மூன்றாமடியின் இறுதி, ‘‘காந்திமதிநாதனை’’ என்று வைத்து, ‘‘காந்திமதி நாதனைப்பா ரதி சின்னப்பயல்’’ என்று பாட்டை முடித்தார். அனைவரும் அதிக ஆச்சரியம் அடைந்தார்கள்’’
என்று குறிப்பிடுகின்றார். இங்ஙனம் நெல்லையப்பக் கவிராயருடனும் பிறருடனும் பாரதிக்கு நெருங்கிய தொடர்பு பல படிகளிலே அமைந்திருந்தது.
பாரதி ஒரு மகாகவி. அந்த மகாகவி உருவாகப் பலருடைய தொடர்பு இன்றியமையாததாகும். அம் மகாகவியினாலே பலர் உருவாக்கப்பட்டார்கள். இன்னும் உருவாக்கவும் படுவார்கள். இவ்வகையில் பாரதியின் வரலாற்றுடன் பல பெரியார்கள் இணைவுற்றிருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது நோக்கத்தக்கது.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் வாழ்வும் பலருடன் பின்னிப் பிணைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த கவிஞர் பலரின் தொடர்பால் கவிஞராக உருவாக்கப்பட்டார். பட்டுக்கோட்டையில் வாழ்ந்து வந்த அணைக்காடு டேவிட்டின் நட்பாலும், தொடர்பாலும் பட்டுக்கோட்டையாருக்கு முதலில் திராவிட இயக்க ஈடுபாடு ஏற்படுகிறது. இவ்வியக்க ஈடுபாட்டாலும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், தோழர் ப.ஜீவானந்தம் ஆகியோரின் நட்பாலும் பட்டுக்கோட்டையாருக்குத் தமிழுணர்வு உறுதி பெற்றது எனலாம்.
மக்கள் கவிஞர் வாழ்ந்த காலத்தில் பட்டுக்கோட்டையிலும் அவர் பிறந்த ஊரான செங்கம் படைத்தான் காட்டிலும் வாழ்ந்த மக்கள் மூட நம்பிக்கையிலும், சாதி-மத-பேத உணர்வுகளிலும் மூழ்கியிருந்தனர். பட்டுக்கோட்டையில் திராவிட இயக்கத்ன் பெருந்தூண்களில் ஒருவராக விளங்கிய பட்டுக்கோட்டை அழகர்சாமி பட்டுக்கோட்டையில் பகுத்தறிவுக் கொள்கைளை மிகத் தீவிரமாகப் பரப்பிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அணைக்காடு டேவிட் என்பவரும் பட்டுக்கோட்டையில் திராவிடக் கொள்கைகளைப் பரப்புவதில் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருந்தார். தமிழர்களின் வாழ்க்கைக்குத் தடைக்கற்களாக இருந்தவற்றை யெல்லாம் அவர் சாடினார். பகுத்தறிவுக் கொள்கைக்காகத் தன் உடைமை யெல்லாம் இழந்து, இறுதி வரை அவ்வியக்கத்திற்காக உழைத்து வந்தார். அணைக்காடு டேவிட்தான் பட்டுக்கோட்டையாருக்கு நேரிடையாகப் பகுத்தறிவுக் கொள்கைகளை உணர்த்தியவர் ஆவார். அணைக்காடு டேவிட்டின் வழிகாட்டுதலும், பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நாவன்மையும் பட்டுக்கோட்டையாருக்குப் பகுத்தறிவுக் கொள்கைக்கு ஆற்றுப்படுத்தியது.
இதனை, ‘‘அண்ணன் கணபதிசுந்தரமும், பட்டுக்கோட்டையாரும், பகுத்தறிவு இயக்க மேடைகளில் பலமுறை பாடியுள்ளார். தொடக்க காலத்தில் நான் பேசும் கழகக் கூட்டங்களில் சின்னஞ்சிறு பையனாக வந்து கூட்ட ஆரம்பத்தில் அருமையான பாடல்களைப் பாடுவார்’’ என்ற அறிஞர் கலைஞரின் கூற்றுத் தெளிவுபடுத்துவதாக உள்ளது.
‘தான் பிறந்த சமூகத்தில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளையும் ஆசார அனுஷ்டானங்களையும் கிண்டல் செய்து பல பாடல்களைத் தன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பாடிக்காட்டிக் கிண்டல் செய்யும் பழக்கம் உடையவர் கவிஞர்’’ என்று திரு.ஆ.மு. பழனிவேல் கூறுவதும் எண்ணத்தக்கது.
பெரியார் ஈ.வெ.ராவின் இயக்கக் கொள்கைளில் கவிஞர் பிற்காலத்தில் மாறுபாடு கொண்டவராக இருந்தாலும் தந்தைப் பெரியார் மீது மக்கள் கவிஞர் பெரும் மதிப்புக் கொண்டிருந்தார். இதனை,
‘‘முடிகள் நரைத்தாலும் மூளைநரைக்காமல்
முன்னேறி வந்தவரே- ஐயா – உங்கள்
பொன்மேனி வாழியவே
. . … . . . . . . . . . . . . . .
காலம் தெரிஞ்சி அதை விடுதலை செய்த
பை வாழ்க – ஐயா
பை வாழ்க’’
என்று 1960-இல் வெளிவந்த ஆளுக்கொரு வீடு என்ற படத்தில் வரும் பாடல் நன்கு உணர்த்துகிறது. இப்பாடலில் வரும் ‘ஐயா’, ‘விடுதலை’ ஆகிய சொற்கள் பெரியாரையே உணர்த்துகின்றன.
பொதுவுடைமை இயக்கத் தோழர்களின் நட்பு
கவிஞர் வாழ்ந்த காலமும், அவர் சார்ந்திருந்த சமுதாய அமைப்பும், நிலவிய சூழலும் கவிஞரை மெல்ல, மெல்லப் பொதுவுடைமை இயக்கத்தின் மீது திருப்பியது. தியாகி சிவராமனுடனும், வாட்டக்குடி இரணியனுடனும் கவிஞர் சேர்ந்து விவசாயிகளை ஒன்று திரட்டி, நில முதலைகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். இதன் காரணமாக அரசால் பொதுவுடைமை இயக்கம் தடை செய்யப்பட்டது. இயக்கத்தின் முன்னணி வீரர்கள் தலைமறைவாக இருந்து கொண்டு இயக்கப்பணி ஆற்றினர்.
பட்டுக்கோட்டையில் நிலவுடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதால் சிவராமனையும், இரணியனையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். இவர்களோடு தோளோடு தோன் றின்று பட்டுக்கோட்டையார் விவசாயி சங்கத்தில் ஈடுபட்டிருந்ததால் பட்டுக்கோடடையாரும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். அக்கண்காணிப்பிலிருந்து சிறிது காலம் தப்ப முயன்ற பட்டுக்கோட்டையார் தனது அண்ணனுடன் சென்னை சென்று திரைத்துறையில் முயற்சி செய்தார். கிட்டாததால் திரும்பவும் தனது ஊருக்கே மீண்டார். இங்ஙனம் தீவிர பொதுவுடைமைவாதியாக மக்கள் கவிஞர் செயல்பட்டார். மேலும் சக்தி கிருஷ்ணசாமியின் நாடக சபாவில் கவிஞர் சேர்ந்து நடித்தபோது டி.கே.பாலச்சந்திரன் உள்ளிட்டோருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டையார் திரைத்துறையில் நுழைந்து பாடல்கள் எழுதியபோதும் பொதுவுடைமைத் தோழர்களுடன் நட்புக் கொள்வதைத் தொடர்ந்தார். தோழர் மாயாண்டிபாரதி இவருடன் ஆழ்ந்த நட்புக் கொண்டிருந்தார். மகா கவியைப் போன்றே மக்கள் கவிஞரும் இசையோடு பாடல்களைப் பாடுவார். மகாகவியின் நண்பர்கள் கேட்டு மகிழ்வதைப் போன்றே மக்கள் கவிஞர் பாடுவதை அவரது தோழர்கள் கேட்டு மகிழ்வர்.
ஒருமுறை நண்டு செய்த தொண்டு எனும் கதைப்பாடலை ஜனசக்தியில் வெளியிட வேண்டும் என்று கவிஞர் விரும்பியதால் இராயப்பேட்டையில் அந்தோணித் தெருவில் இருந்த ஜனசக்தி அலுவலகத்திற்குக் கவிஞர் சென்று திரு.கே.முத்தையா அவர்களையும், திரு. மாயாண்டி பாரதியையும் சந்தித்து அக்கவிதையை வெளியிடுமாறு வேண்டினார். அப்போது நிகழ்ந்ததை, ‘‘இந்தக் கவிதையைப் பாட்டாகப் பாட முடியுமா என்று கேட்டேன். முடியும் பாடிக்காட்டுகிறேன் என்று சொல்லி மேஜைமேல் தாளம் போட்டுப் பாடினார். ஆகா நல்லா இருக்கு நல்லா இருக்கு என்றேன். அவ்வளவுதனான் பாட்டை நிறுத்தி போடுங்கண்ணே போடுங்கண்ணே’ என்றார். போடலாம் என்றேன். நண்டு செய்த தொண்டு ஜனசக்தியில் வந்தது. கவிஞருக்குப் பரம திருப்தி’’
என்று திரு.மாயாண்டிபாரதி கூறுவது கவிஞரின் பாடல்பாடும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இன்னொரு முறை தாளத்திற்கேற்ப எழுதிய பாடலைத் திரு. மாயாண்டிபாரதியிடம் பாடிக்காட்ட முயன்றார் கவிஞர். அப்போது கவிஞரும் மாயாண்டிபாரதியும் இராயப்பேட்டையில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் சன்னதித் தெருவில் தான் வசித்து வந்தார்கள். அமுதவல்லி எனும் படத்திற்கு ஆடைகட்டி வந்த நிலவோ எனும் அழகிய பாட்டைத் தாளத்திற்கேற்ப எழுதியிருந்தார். அதனை அவரிடம் பாடிக் காட்டியதை,
‘‘ஒரு பக்கம் கல்யாணசுந்தரம் இன்னொரு பக்கம் கணபதிசுந்தரம். இரண்பேரும் சூழ்ந்து கொண்டு படத்துக்கு எழுதியிருந்த பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். கல்யாணம் பாடுவார். கணபதி மேல்தாளம் போடுவார். நல்லா இருக்கும். என் கருத்தைக் கேட்பார்கள். அருமையாக இருக்கு அருமையா இருக்’கு. ஏழை மக்களை நல்ல இழுக்கும் என்பேன். பூரித்துப் போவார்கள். அண்ணன் சொன்னால் சரி என்பார்கள். அதுதான் ஆடை கட்டி வந்த நிலவோ என்ற பாட்டு அமுதவல்லிப் படத்துக்கு எழுதப்பட்டது பாட்டும் தாளமும் ஜமாய்த்தன’’(மக்கள் கவிஞர் மணிவிழா மலர், ப., 7)
என்று நினைவு கூறுகிறார். இந்நிகழ்வு தோழர் மாயாண்டிபாரதியுடன் மக்கள் கவிஞர் கொண்டிருந்த அண்ணன் தம்பி என்ற மேம்பட்ட உறவினைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பாரதிதாசனாரின் மாணவர்
பாண்டிச்சேரியில் நாடக சபா நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, கவிஞர் பாரதிதாசனைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை கல்யாணசுந்தரத்திற்க ஏற்பட்டது. அண்ணன் கணபதியிடம் சொல்லிப் பாரதிதாசன் படத்தை வரைந்து வாங்கிக் கொண்டார் பன்னிரண்டு மாம்பழங்களையும் வாங்கிக் கொண்டு பாரிதிதாசனைச் சந்தித்தார். படத்தையும் பழங்களையும் அளித்தபோது பாரதிதாசன் உணர்ச்சிப் பெருக்கில் தழுவிக் கொண்டு கல்யாணசுந்தரத்தின் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதுமுதல் பாரதிதாசனோடு கல்யாணசுந்தரத்திற்கு உறவு ஏற்பட்டது’’ (பெ.மணியரசன் மக்கள் கவிஞர் பொன்விழா மலர், ப.,15)
1952-ஆம் ஆண்டு கடும்புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடற்கரை ஊர்களெல்லாம் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடலோரமாக இருந்த சங்கம்படைத்தான்காடும் பாதிப்புக்குள்ளாகியது. இதனால் பட்டுக்கோடடையாரின் வீடும் பெரிதும் பாதிப்படைந்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டையார் பாரதிதாசனைச் சந்திக்கப் புதுவைக்குச் சென்றார். ஏற்கனவே பட்டுக்கோட்டை அழகிரிசாமியால் ஒருமுறை கவிஞரை பாரதிதாசனாரிடம் அறிமுகம் செய்திருந்ததால் புரட்சிக்கவிஞர் பட்டுக்கோட்டையாரைத் தம்முடன் தங்கியிருந்து குயில் இதழை வெளியிடும் பணிகளில் ஈடுபடுமாற கேட்டுக் கொண்டார். பட்டுக்கோடடையாரும் பாரதிதாசனாரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு அங்கேயே தங்கினார்.
இயல்பாகப் பொங்கிவரும் கவிதையுணர்வு பெற்ற மக்கள் கவிஞரின் கவித்திறன் பாவேந்தரின் நட்பால் மேலும் மேம்பட்டது. பாவேந்தரின் கவிதைகள் பட்டுக்கோட்டையாரின் சமூகப் பார்வையைக் மேலும் கூர்மையாக்கியது. பாரதிதாசனாரின் மாணவராக இருந்தபோதுதான் பட்டுக்கோட்டையார் நல்ல கவிதைகளை எழுதி பாவேந்தரின் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவிஞருக்குப் பாட்டுத்திறனை நன்கு வளர்க்க உதவிய பாரதிதாசனார் திரையுலகில் மக்கள் கவிஞர் நுழையக் காரணமாகவும் இருந்தார் என்பது நோக்கத்தக்கது. இதனை,
‘‘அப்பொழுதெல்லாம் மாடர்ன் தியேட்டரில் வசனம், பாடல் ஆகிய பணிகளில் பாரதிதாசன் ஈடுபட்டிரந்தார். கல்யாணசுந்தரத்தையும் பாட்டெழுதுவதற்காக மாடர் தியேட்டருக்கு அழைத்துச சென்று ஈடுபடுத்திவிட்டார் பாரதிதாசன். பின்னர் பாரதிதாசனுக்கு மாடர்ன் தியேட்டர்சாருடன் பிணக்கு நேர்ந்து திரும்பிவிட்டார். அவரோடு கல்யாணசுந்தரமும் புறப்பட்டுவிட்டார். ஆனால் பாரதிதாசன் கல்யாணசுந்தரத்தை வாஞ்சையோடு தட்டிக் கொடுத்து, ‘‘நீ முன்னேற வேண்டியவன். பொறுத்துக்கோண்டு இங்கேயே இருடா’’ என்று சொல்லிவிட்டுப் பாண்டிச்சேரி திரும்பினார். (மக்கள் கவிஞர் மணிவிழா மலர், ப.,16)
என்ற அறிஞர் மணியரசனாரின் கூற்று தெளிவுறுத்துகின்றது.
பாரதிதாசனாரின் இந்த உதவியால்தான் பட்டுக்கோட்டையார் மாடர்ன் தியேட்டரில் முதன்முதலாகப் படித்த பெண்(1951) எனும் படத்திற்குப் பாட்டு எழுதினார். ஆனால் பட்டுக்கோடடையார் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் மகேஸ்வரியே ஆகும்.
பட்டுக்கோட்டையாரின் கவிதை வளர்ச்சிக்கும், திரைப்பட நுழைவுக்கும் பல்லாற்றானும் பாரதிதாசனார் துணைபுரிந்ததால்தான் ‘பாரதிதாசன் வாழ்க’ என எழுதும் வழக்கத்தை மக்கள் கவிஞர் கைக்கொண்டார். மேலும் புரட்சிக் கவிஞரிடத்தில் அளவற்ற மதிப்புக் கொண்டிருந்ததால்தான் மக்கள் கவிஞர் பாரதிதாசனார் தலைமையில் தன் திருமணத்தையும் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எங்ஙனம் பாரதியிடம் இருந்த பல்வேறு பண்புகள் பாரதிதாசனாரிடம் இருந்ததோ அதே போன்று பாவேந்தரிடம் இருந்த பெரும்பாலான பண்புகளும் பட்டுக்கோட்டையாரிடம் மிகுந்திருந்தன எனலாம். பாவேந்தரைப் போன்றே சமூக அவலத்தை தம் கவிதை வாளால் மக்கள் கவிஞர் வெட்டி அகற்றிட முனைந்தார்.
தோழர் ஜீவாவுடன் கொண்ட நட்பு
பட்டுக்கோட்டையார் ஜீவா அவர்களைத் தனது உடன் பிறந்த மூத்த சகோதரராகவே கருதினார். ஜீவா அவர்களும் தனது உடன் பிறந்த இளைய சகோதரராகவே உரிமையுடன் மக்கள் கவிஞருடன் பழகிவந்தார். இதனை,
‘‘அண்ணன் தம்பி போல பழகி வந்தாங்க. அடிக்கடி எங்க வீட்டுக்கு ஜீவா வருவாரு. சிலநாள் அவருடன் கே. முத்தையாவும் வருவாரு. யாரு வந்தாலும் எங்க வீட்ல இருந்த முதல் அறையிலதான் காத்திருப்பாங்க. ஆனா ஜீவா மட்டும் உரிமையோடு வீட்டுக்குள்ள வந்திருவாரு. கவிஞர் இறந்த பின்னால நாங்க இங்க வந்திட்டோம். பட்டுக்கோட்டைக்கு கூட்டத்திற்கு வந்திருந்த ஜீவா ரத்தினம் பிள்ளையைக் கூட்டிக்கிட்டு இங்க வந்து எங்களப் பாத்திட்டுப் போனாரு. அதுதான் நான் அவரக் கடைசியாப் பார்த்தது’’(கே.ஜீவபாரதி, காலமறிந்து கூவிய சேவல், பக்., 120-121)
என்ற மக்கள் கவிஞரின் துணைவியாரின் கூற்றும்,
‘‘ஒரு முறை ஜீவா வீட்டிற்குக் கவிஞர் சென்றிருக்கிறார். வீட்டிற்குள் சத்தம் கேட்கிறது. ஜீவாவும் அவர் மனைவியும் ஆவேசமாகப் பெசிக் கொள்கிறார்கள். நீண்ட நாட்களாக ஜீவாவிடம் அவர் மனைவி பட்டுப்புடவை கேட்டிருக்கிறார். அதை வாங்கிக் கொடுக்காததால் வந்த சத்தமே இது. இதைப் புரிந்து கொண்ட கவிஞர் மறுநாள் ஜீவா வீட்டிற்குப் பட்டுப்புடைவையுடன சென்றிருக்கிறார். அந்தளவிற்கு ஜீவா மீது கவிஞருக்கு அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் உண்டு’’ (மேலது நூல், பக்., 134-135)
என்ற மக்கள் கவிஞரின் தோழர் எம்.மாசிலாமணியின் கூற்றும் தெளிவுறுத்துவனவாக உள்ளன.
ஜீவாவும் கவிஞருக்கு வேண்டிய நூல்களை வாங்கி வந்து கொடுப்பார். மக்கள் கவிஞர் அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார். ஜீவா அவர்கள் தன்னைத் தம்பி என்று அழைப்பதையே மக்கள் கவிஞர் விரும்பினார். இதனை,
‘‘நான் உடல்நலக் குறைவால் சமீபத்தில் குற்றாலம் சென்றிருந்தேன். திரும்பி வரும்போது ‘குற்றாலக் குறவஞசி’ ஒன்று வாங்கி வருமாறு கவிஞர் கடிதம் எழுதினார். வாங்கி வந்தேன்.அந்த புத்தகத்தில் ‘அன்புத் தம்பி கவிஞர் கல்யாணசுந்தரத்திற்கு’ என்று எழுதினேன். அது கண்ட அவர் ‘‘நான் என்ன கவிஞர் ஆகிவிட்டேனா?’’ என்று கேட்டது அவரது அசாத்திய தன்னடக்கதைத்ததான் காட்டுகிறது’’ (காலம் அருளிய கவிஞன் (கட்டுரை) ஜீவானந்தம், தாமரை, அக்டோபர், 1960)
என்ற ஜீவாவின் கூற்றுத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது.
கவிஞர்கள் பாராட்டிய மக்கள் கவிஞர்
மக்கள் கவிஞர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த கவிஞர்களும் அவரை மனமாறப் போற்றிப் புகழ்ந்தனர். ஒருமுறை கவியரசு கண்ணதாசன் சொந்தப்படம் எடுக்க நினைத்து அதில் தன்னைப் போன்ற பிற கவிஞர்களின் பாடலும் இடம்பெற வேண்டுமென நினைத்து அன்றைய திரைத்துறையில் பெரிய கவிஞர் எனப் போற்றப்படும் ஒருவரிடம் ஒரு பாடல் எழுதித்தரச் சொல்ல அவரும் அதற்கு நேரமில்லை. ஏற்கனவே நான் எழுதின பல பாடல்கள் உஎள்ளன. அதைத் தருகிறேன். ஏதாவது ஒன்றைப் பொறுக்கித் தேர்ந்தெடுத்துக் கொள் எனக் கூறிவிட இது கவியரசுக்குப் பெரும் அவமானமாகப் போய்விடவே சரி அப்புறமாக வருகிறேன்! என வெளியே வந்தாராம். பின்னொருநாளில் கவியரசு பட்டுக்கோட்டையாரிடம் சென்று கேட்க, உடனே கவிஞர் தயக்கமின்றிப் பாடல் எழுதிக் கொடுத்துவிட்டார். இதுபற்றிக் கண்ணதாசன் கூறும்போது என் தம்பி பட்டுக்கோட்டையாரின் பண்பு அந்தத் தலைக்கனம் பிடித்த கவிஞனுக்குச் சிறிதும் இல்லையெனக் குறிப்பிட்டாராம். அதனால் தான் மக்கள் கவிஞர் இறந்தபோது,
‘‘சின்ன வயது மகன்! சிரித்த முகம் பெற்ற மகன்!
அன்னை குணம் படைத்தஅழகு மகன் சென்றானே!
கன்னல் மொழி எங்கே? கருணை விழி எங்கே?’’
என்று அழுதழுது இரங்கற்பா எழுதி அதனைத் ‘தென்றல்’ நாளிதழில் கண்ணதாசன் வெளியிட்டார். இஃது மக்கள் கவிஞரின் மீது கவியரசிற்கு இருந்த அன்பினை வெளிப்படுத்துகிறது.
அதைப்போன்றே அப்போது திரையிசைத் துறையில் வாத்தியார் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட உடுமலை நாராயண கவியிடம் ஒருவர் பட்டுக்கோட்டையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோது, அதற்கு அவர், ‘‘அவன் கோட்டை! நான் பேட்டை’’ என்று குறிப்பிட்டார். இது ஒன்றே மக்கள் கவிஞரின் மாண்பினை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. இதுபோன்று கவிஞரின் வளர்ச்சிக்கு உதவி கவிஞரின் வரலாற்றோடுப் பின்னிப் பிணைந்த பெரியார்கள் பலராவார். பட்டுக்கோட்டையார் மக்கள் கவியாக மலர்வதற்குப் பலரும் பலவகையில் உதவி அவரின் வாழ்க்கை வரலாற்றுடன் இணைந்துள்ளனர். அரசியல் இயக்க வரலாறும் திரைத்துறையின் வரலாறும் கவிஞரின் வரலாற்றுடன் இணைந்து விளங்குவது நோக்கத்தக்கது. மக்கள் கவிஞரின் கவிதை மகா கவியின் கவிதை போன்று பலரை உருவாக்கியது. பலரையும் உருவாக்கி வருகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
—————–
- நினைவுகளின் சுவட்டில் – 94
- சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 35
- மாமியார் வீடு
- கல்வியில் அரசியல் பகுதி – 2
- BAT MAN & BAD MAN பேட் மேனும், பேட்ட் மேனும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)
- பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.
- ‘பினிஸ் பண்ணனும்’
- பூமிதி…..
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -4
- குடத்துக்குள் புயல்..!
- தஞ்சை பட்டறை செய்தி
- முள்வெளி அத்தியாயம் -18
- குற்றம்
- தாகூரின் கீதப் பாமாலை – 23 பிரிவுக் கவலை
- சிற்றிதழ் வானில் புதுப்புனல்
- உய்குர் இனக்கதைகள் (3)
- வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- ஓரு கடிதத்தின் விலை!
- பதிவர் துளசி கோபால் அவர்களின் “என் செல்ல செல்வங்கள்” : புத்தக விமர்சனம்
- தில்லிகை
- கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி
- தாவரம் என் தாகம்
- நகர்வு
- பிறை நிலா
- உலராத மலம்
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)
- கற்பித்தல் – கலீல் கிப்ரான்
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-11)
- திருப்பதியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்களின் சந்திப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்
- பஞ்சதந்திரம் தொடர் 53
- அப்படியோர் ஆசை!
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது