முள்வெளி அத்தியாயம் -19

This entry is part 19 of 35 in the series 29 ஜூலை 2012

மனநல மருத்துவர் டாக்டர் சிவராம் ‘க்ளினிக்’கில் மிகவும் பொறுமை இழந்தவளாகக் காத்திருந்தாள் மஞ்சுளா. முதல் ‘பேஷன்ட்’ வர இரண்டு மணி நேரமானது. இரண்டாவது ஆள் வெளியே வந்தால் தான் டாக்டரை சந்திக்க இயலும். அவன் உள்ளே போய் அரை மணி நேரம் ஆகிறது. காத்திருப்போருக்காக அவர்கள் வைத்திருந்த பல பத்திரிக்கைகள் மருத்துவர் எழுதும் மனநலம் பற்றியவை. ஒரு ‘ஃபிலிம் ஃபேரோ’ , ‘ஃபேஷன் மேகஸைனோ’ இல்லை.

ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியாக அந்த ஆள் வெளியே வந்ததும் மஞ்சுளா உள்ளே நுழைந்தாள்.

“பேஷன்ட் ராஜேந்திரன் வரலியா மேடம்?”

“எப்படி ஸார் வருவாரு? நான் யூ எஸ் ஏ போயிருந்தப்போ பத்திரமா இருக்கட்டுமேயின்னு அவுங்க அம்மா கிட்டே விட்டுட்டுப் போனேன். அவங்க காலமாயிட்டாங்க. சொத்தக்காரங்க இங்கே ஒரு ஹோம்ல அட்மிட் பண்ணியிருந்தாங்க. நீங்க அந்த ஹோம்ல அவுருக்குச் செக் அப் கூடப் பண்ணியிருக்கீங்க”

“யா. ஐ ரிமெம்பர். ஹீ ஈஸ் எ ரைட்டர். இப்போ எப்பிடி இருக்காரு?”

“ரெண்டு நாளா அவரை அந்த ஹோம்லயிருந்து காணும் டாக்டர்..” மஞ்சுளா விம்மியபடியே ” என் பேமிலியிலே இந்த மாதிரி ஒரு மென்டல் பேஷன்ட் டார்ச்சர் யாருக்கும் இல்லே” தொடர்ந்து அழுதாள்.

சில நொடி மௌனத்திற்குப் பின் டாக்டர் “மேடம். அவர் மறுபடி கிடைச்சப்புறம் அந்த ஹோம்ல விடாதீங்க.. தே யார் நாட் ஈவன் கிவிங் ஹிம் பென் அன்ட் பேப்பர்…”

“டாக்டர். அவுரு ஏதோ புக்கர் அவார்டு வாங்கின மாதிரி பேசாதீங்க.. அவுரு நார்மலே ஆகலியே”

“மிஸஸ் மஞ்சுளா … நார்மல்ஸின்னு நாம் நினைக்கிறது சிலது இருக்கு. ஆனா அந்த யார்ட் ஸ்டிக்கில அடங்காததாலேயே ஒருத்தரை நாம் அப்நார்மல்ன்னு சொல்ல முடியாது. ஹீ ஈஸ் ஒன்லி டிப்ரஸ்ட்.. மே பீ க்ரானிகல்லி டிப்ரஸ்ட்…”

“ஸார்… நான் கேள்விப்பட்ட வரைக்கும் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்தா நார்மல் ஆவாங்களாமே?”

“நோ மேடம். இது ராங் நோஷன். வயலன்ஸ் அன்ட் மிஸ்பிஹேவியர் இருந்தா மட்டும் தான் அதை அட்மினிஸ்டர் பண்ணுவோம். ராஜேந்திரனுக்கு அது தேவைப்படாது. மோர் ஓவர் அது அவுருக்குள்ள இருக்கிற க்ரியேட்டிவிட்டியை அழிச்சிடும்”

“ஐ டோன்ட் கெட் யூ”

“மேடம் வித் அவுட் க்ரியேட்டிவிட்டி ஹி வில் பி எ வெஜிடபிள். அந்த மாதிரி ஸ்டேட்ல ஒருத்தரால ரொம்ப நாளு உயிர் வாழவும் முடியாது. அவரோட ஒரிஜினாலிடி அன்ட் இன்டிவிடுவல் க்யாரக்டரை ரெஸ்டோர் பண்றதுதான் எங்க டியூட்டி. அவர் பெரிய ரைட்டர் இல்லேன்னு நீங்க மென்ஷன் பண்ணினீங்க. இன் ஃபேக்ட் அவரோட ஸ்டேட் ஆஃப் மைன்ட அனலைஸ் பண்றதுக்கு அவரோட போயம்ஸ் ரொம்ப் ஹெல்ப் ஃபுல்லா இருந்தது. ஒன் ஆஃப் மை க்ளாஸ் மேட்ஸ் தமிழ் ப்ரொஃபெஸர். அவரு போயம்ஸை படிச்சிட்டு வெரி க்ரியேட்டிவ் அன்ட் மாடர்ன் ரைட்டிங்னு ஃபீல் பண்ணினாரு..”

“அவுரப் போல ஒருத்தரு காணாமப் போனா ஆஸ் அ ஒயிஃப் நான் எந்த அளவு ஆன்க்ஷியஸா இருப்பேன்னு யோசிச்சிப் பாருங்க டாக்டர்”

“ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட்”

**__
**__**
**
மதியம் மணி நான்கு. ” அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு. நெறைய மார்க் வாங்குற பொண்ணு. இது ஃபர்ஸ்ட் டைம்ங்கிறதுனால உன்னை வார்னிங்கோட விடறேன். அவங்க அப்பா கிட்டே சொன்னேன் அவுரு போலீஸுல சொல்லி உன் பெண்டை நிமித்திடுவாரு”.

விவேகானந்தனுக்கு ஆத்திரம் அடி வயிற்றில் உஷ்ணமாய்த் திமிரியது. “அடிப்பாவி.. எத்தன லுக் விட்டுறுப்ப… சைக்கிள்ள உன் ஃப்ரண்ட்ஸை விட்டுட்டு எத்தனை நாள் எங்கூடப் பேசிக்கிட்டே சைக்கிள் ஓட்டியிருக்கே. உங்க வுட்டுல நான் உன்னக் கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்தப்போ என் கன்னத்தில அடிச்சிருக்கலாமே. நாந்தானேடி நிறுத்திட்டு நவுந்தேன். அப்பிடியே கவ்வி முத்தம் குடுத்தியேடி”

“என்னடா.. இடிச்ச புளி மாதிரி உக்காந்திருக்கே… ” பிரின்ஸிபால் குரல் உயர்ந்தது. “உங்க அப்பாவை வரச் சொல்லு. அவரு காரன்டி கொடுத்தா இனிமே நீ ஸ்கூலுக்கு வரலாம்.”

“அப்பா சின்ன வயசிலயே இறந்துட்டாரு. அக்காவ வரச் சொல்லுறேன்”

“ஏன்? அம்மா வரமாட்டாங்களா?”

“அம்மா… ஹார்ட் பேஷன்ட்.. அவங்களால வர இயலாது.. அக்காவை வரச் சொல்லுறேன் மேம்..”

“உன்ன மாதிரி இன்னும் ஒரு பையன் இருந்தாப் போதும். நான் ஹார்ட் பேஷ்ன்ட் ஆயிடுவேன். இன்னொரு முறை இந்த மாதிரி எதாவது நடந்தது.. டிஸி கொடுத்திடுவேன். கெட் லாஸ்ட்..”

‘பிரின்ஸி ரூமி’ லிருந்து வெளியே வந்ததும் தன்னையுமறியாமல் ‘மொபைலை’ எடுத்துப் பார்த்தான். இதனால் தானே இத்தனை தொல்லையும். ‘சைக்கிள் ஸ்டாண்ட்’டை நோக்கி நடக்கும் போது இன்றைக்கு ‘ட்யூஷன்’ போக வேண்டாம் என்று தோன்றியது. அதே சமயம் வேறு எங்கே போவது என்று தெரியவில்லை.

பள்ளி நுழைவாயிலைக் கடந்து வெளியே போகும் போது ‘மச்சி’ என்ற குரல் கேட்டது. ‘கார்த்திக், ரமேஷ் ,க்ருஷ்ணா’ மூவரும் காத்திருந்தார்கள். இவர்களும் ட்யூஷனுக்குப் போகவில்லை என்பது நிம்மதியாக இருந்தது.

‘அடையார் பேக்கரி’ போகலாம் மச்சான்’ என்றான் ரமேஷ். பாவி ஒரு நாளும் கையிலிருந்த பணத்தை எடுத்து மற்றவர்களுக்காக செலவு பண்ண மாட்டான். ஒருவனுக்கு அடிபட்டால் எல்லோரும் உற்சாகமாகி விடுகிறான்களோ ?

அடையார் பேக்கரியில் நான்கு பேரும் ஒன்றாக அமர இடம் கிடைக்க சற்று நேரம் ஆனது. அவர்களது பள்ளி மாணவிகள் சிலரும் இருந்தார்கள். யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு விஷயம் தெரியுமோ என்று உதறலாக இருந்தது.

இடம் கிடைத்து அமர்ந்ததும் ரமேஷ் ‘என்ன மச்சான் சாப்பிடறே? என்றான். பொதுவாக இப்படி உபசிரிப்பெல்லாம் இருக்காது. இருக்கிற பணத்தில் என்ன கிடைக்குமோ அதைத் தான் சாப்பிடுவார்கள்.

“இப்ப என்ன ஆயிடுச்சுன்னு நீ இவ்ளோ அப்செட்டா இருக்கே? பிரின்ஸி அவுங்க ட்யூட்டியைப் பண்ணிட்டாங்க. உன்னைப் பத்தி போட்டுக் கொடுத்தது அவதான். இப்போ வேற எந்த கர்லும் பாயும் எஸ்எம்எஸ் பண்ணிக்கலே? இல்லே அதை நிறுத்தத்தான் முடியுமா?” என்றான் கார்த்திக்.

விவேகானந்தன் அடக்க முடியாமல் அழுது விட்டான்.

“டேய்.. மச்சான். எதுக்குடா அழறே? ” என்றான் கிருஷ்ணா. “நம்போ எல்லாம் ஆம்பளடா…அழக் கூடாது..” என்று ஒரு ‘டிஷ்யூ பேப்பரை’ எடுத்துக் கொடுத்தான்.

“முதல்ல இந்த எஸ்எம்எஸ் எல்லாத்தையும் படி.” என்று ரமேஷ் தனது ‘மொபலை’க் கொடுத்தான்.

“நீதான் எல்லா ஆண்களிலும் ஹாண்ட்ஸம்”

“மீசை வை. நீ இன்னும் ஸ்மார்ட்டாக இருப்பாய்”

“வரும் ஞாயிறு வீட்டில் தனியாகத் தான் இருப்பேன். போன் செய்து விட்டு வா”

விவேகானந்தனால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. அதிர்ச்சியுடன் ரமேஷைப் பார்த்தான்.

“என்னடா பாக்கறே. எல்லாம் அவ அனுப்பி வெச்சது தான். நம்பரை வேணுமின்னா செக் பண்ணிக்க. அடுத்த முறை அவ எவனையாவது மாட்டி விடட்டும். இதை அவளோட அப்பன் கிட்டேயே காட்டிடுவேன்.”

**__
**__**
**
‘விடலை’ என்னும் கதையைப் படித்த லதா காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் யாரையாவது நடிக்க வைக்க வேண்டுமென்று நினைத்தாள். ‘சின்னஞ்சிறுக்கிளியே’ பாட்டைப் பாடுவதற்கு ஒரு பாடகரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
**__
**__**
**
தொப்புள் கொடியில் இழையோடிய
காற்று இறுகி
உருகிக்
கண்ணிகளாகி
உன் வீட்டுக் கதவை
ஊடுருவியது சங்கிலியாய்

விஷம் கூட
கைகொடுக்காமற்
கைவிட்ட பின்
வலிகளின் முன்
நிராயுதபாணியாயிருந்த
உன்னை எளிதாய்
பிணைத்த

மலர்ச்சரத்துள்
மறைந்திருக்கும்
நூலின்
வலிமையை நீ
எப்போதும்
குறைத்தே
மதிப்பிட்டாய்

கத்தியை
அணிந்திருப்பதும்
உருவுவதும்
சுழற்றுவதும்
தவறென்ற
போதனைகளின்
சூட்சமத்தை நீ அறியவில்லை

தூக்குக் கயிறு
மட்டுமே அஞ்சப்படும்
என்றும்
உனக்கு போதிக்கப் பட்டது

Series Navigationகல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)நித்தானே நெவில் தினேஷின் “ மீல்ஸ் ரெடி “
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *